by நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed.,.
இறைவன் தனது திருமறையிலே கூறுகிறான்:
மனிதர்களுக்காக
தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள்
இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை
விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை
கொள்கிறீர்கள். (3:110)
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்வின் வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி
நடப்பவனுக்கும் உவமை – ஒரு கூட்டத்தாரைப் போன்றதாகும். அவர்கள் கப்பலில்
(தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச்) சீட்டுக்
குலுக்கிப் போட்டார்கள். (அதன்படி) அவர்களில் சிலருக்குக் கப்பலின் மேல்
தளத்திலும் சிலருக்குக் கீழ்த் தளத்திலும் இடம் கிடைத்தது.
கீழ்த் தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது. (அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது).
அப்போது, கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் ‘நாம் (தண்ணீருக்காக) நம்முடைய
பங்கில் (கீழ்த் தளத்தில்) ஓட்டையிட்டுக் கொள்வோம்; நமக்கு மேலே
இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம்’ என்று பேசிக் கொண்டார்கள்.
அவர்கள் விரும்பியபடி செய்து கொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள்
விட்டுவிட்டால் (கப்பலில் இருப்பவர்கள்) அனைவரும் அழிந்து போவார்கள்.
(ஓட்டையிட விடாமல்) அவர்களின் கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின்
அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள். (அவர்களுடன் மற்ற) அனைவரும்
தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள்.
என நுஃமான் இப்னு பஷீர்(ரலி) அறிவித்தார். (நூல்: ஸஹீஹுல் புகாரி)
பொதுவாகவே முஸ்லிம்களாகிய நாம் நமது சொந்தப் பிரச்னைகளில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். பாபரி
மஸ்ஜித், இட ஒதுக்கீடு, போன்ற பிரச்னைகளுக்கு நாம் குரல் கொடுக்கிறோம்.
குரல் கொடுக்கத் தான் வேண்டும். உரிமைகளைப் பெற்றிடப் போராடித் தான் ஆக
வேண்டும்.
ஆனால் அது மட்டும் போதாது. பொதுவாக மக்கள் அனைவரையும் பாதிக்கின்ற
பிரச்னைகள் அனைத்துக்கும் நாம் குரல் கொடுத்துத் தான் ஆக வேண்டும். லஞ்சம்,
ஊழல், விலைவாசி, வறுமை, மது, போதைப் பொருட்கள், ஆபாசம், விபச்சாரம்,
வன்முறை, பெண்களுக்கெதிரான கொடுமைகள், குழந்தைகளுக்கெதிரான கொடுமைகள்,
இன்னும் இது போன்ற எல்லாவிதமான மக்கள் பிரச்னைகளுக்காகவும் நாம் குரல்
கொடுக்க வேண்டும்; மக்களின் அவலங்களைக் களைந்திட நம்மால் இயன்ற வரை களம்
இறங்கிப் பணியாற்றிட வேண்டும்.
இவை மட்டும் அல்ல. மன அழுத்தம், மனச்சோர்வு, தற்கொலை எண்ணம், முதியோர்
பிரச்னைகள், விவாகரத்து, குழந்தைகளைப் பாதிக்கும் மன நலப் பிரச்னைகள்,
குடும்ப வன்முறை, மாணவர்களைப் பாதிக்கின்ற பிரச்னைகள் போன்ற அனைத்து விதமான
பிரச்னைகள் குறித்தும் பொது அரங்குகளில் நாம் விவாதித்திட வேண்டும்.
பிரச்னைகளுக்கான சரியான தீர்வு குறித்து மற்றவர்களுடன் விவாதித்திட
வேண்டும். இஸ்லாம் – மேற்கண்ட பிரச்னைகள் அனைத்துக்கும் தருகின்ற நடைமுறைத்
தீர்வு குறித்து மக்களுக்குப் புரிய வைத்திட வேண்டும். இதில் நமது சமூக
அக்கரை வெளிப்பட வேண்டும். கிஞ்சிற்றும் உள் நோக்கம் இருந்திடக்
கூடாது. இதில் நாம் சுய நலம் இன்றி நேர்மையாகவும், மனத் தூய்மையுடனும்
நடந்து கொள்ள வேண்டும். இறைவன் ஒருவனின் திருப்திக்காகவே நமது ஒவ்வொரு
செயலும் அமைந்திட வேண்டும்.
மேற்கண்ட நபிமொழியின் கருத்து நமக்குச் சொல்கின்ற செய்தியை சற்று ஆழமாக சிந்தியுங்கள்:
பொதுப் பிரச்னைகளுக்காக நாம் குரல் கொடுக்காவிட்டால் – அதே பிரச்னைகளில்
நாமும் சிக்கிக் கொண்டு விடுவோம். மதுவும் போதைப் பொருட்களும் நம்
சமூகத்தையும் பாதிக்கும். விபச்சாரம் நம்மை மட்டும் விட்டு வைக்காது. விலை
வாசி நம்மையும் சேர்ந்துத் தான் வாட்டும். எல்லாப் பிரச்னைகளின் நிலையும்
அப்படித் தான்.
எனவே தேவை என்னவென்றால் – ஒரு புதிய தலைமுறை! இளைய தலைமுறை. தெளிவாக
சிந்திக்கின்ற தலைமுறை. தலைமைப் பண்புகளை வளர்த்துக் கொள்கின்ற ஒரு
தலைமுறை. உணர்ச்சி வசப்படாத ஒரு தலைமுறை. தொலை நோக்கு சிந்தனை கொண்ட ஒரு
தலைமுறை. இஸ்லாத்தைப் புரிந்து கொள்கின்ற ஒரு தலைமுறை. இஸ்லாத்தைப் பின்
பற்ற விரும்புகின்ற ஒரு தலைமுறை. மக்களைப் பற்றிக் கவலைப் படக்கூடிய ஒரு
தலைமுறை. தன்னம்பிக்கை கொண்ட ஒரு தலைமுறை.
ஆம்! அப்போது மட்டுமே கப்பல் காப்பாற்றப் படும்!
Source : http://meemacademy.com/?p=666
நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed.,
அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல்
(Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள
மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.
மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy)Please visit
:http://www.thegardenacademy.in/) எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி
நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்களின் அழைப்புகளை
ஏற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப்
(Human Resource Development) பயிற்சி அளித்து வருகிறார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
Jazakkallahu Hairan
No comments:
Post a Comment