குவஹாத்தி:ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.ஆனால் என்ன பயன்? “ராணுவ உடையில் 30க்கும் மேற்பட்ட போடா வன்முறையாளர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தனர். எங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. எங்கள் கண் முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள். வீடுகளை தீயிட்டு கொழுத்தினார்கள். விவசாயப் பொருட்களை கொள்ளையடித்தார்கள். துப்பாக்கி முனையில் எங்களை நிறுத்தி இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என மிரட்டினார்கள். கொக்ராஜர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நயான் அலி(வயது 22) கூறுகிறார்.
