ப்ளாக்கர் நண்பன் Version 2.0
"ப்ளாக்கர் நண்பன்" வலைப்பூ உங்கள் அன்போடும், ஆதரவோடும் ஒரு வருடத்தைக் கடந்து இன்று இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. எல்லாப் புகழும் இறைவனுக்கே! இந்த இனிய தருணத்தில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன்.
பிரவுசிங் சென்டரில் தொடங்கிய எனது இணையப் பயணம், ஏர்டெல், ஏர்செல் என்று மொபைல் GPRS-ல் பயணித்து, இன்று சொந்த லேப்டாப்பில் ப்ராட்பேண்ட் இணைப்பில் தொடர்கிறது. ஏதோ ஒரு வாரஇதழில் ப்ளாக்கர் பற்றிய செய்தியை படித்துவிட்டு, முதன்முதலாக ஒரு ப்ளாக்கை நான் தொடங்கிய வருடம் 2003. அப்பொழுது (இப்பொழுதும் கூட!) சொந்தமாக எழுதும் அளவிற்கு அறிவு கிடையாது. என்னுடைய முதல் ப்ளாக்கே பதிவர்களில் அதிகமானோர் வெறுக்கும் Copy&Paste ப்ளாக் தான்.
அந்த ப்ளாக் நான் சார்ந்த மார்க்கம் தொடர்பானது. எப்பொழுதாவது சென்று அப்டேட் செய்து விட்டு வருவேன். பின்னர் 2006-ஆம் ஆண்டு ஜிமெயில் ஐடி கிடைத்ததும் அதிலேயே பதிவெழுத (அதாவது Copy&Paste செய்ய) ஆரம்பித்தேன்.
கணினியில் Programming Language-ஐ பொறுத்தவரையில், பதினோராம் வகுப்பில் படித்த HTML-ஐத் தவிர வேறு எதுவும் தெரியாது. பிறகு copy&paste தளமாக இருந்தாலும் அதனை அழகுப்படுத்துவதும், விளம்பரப்படுத்துவதும் எப்படி? என்று பல ஆங்கிலத் தளங்களில் கற்றுக் கொண்டு வந்தேன், இன்னும் கற்கிறேன்.
உண்மையை சொல்ல வேண்டுமெனில் இதுவரை கிட்டத்தட்ட ஐம்பது ப்ளாக் தொடங்கிவிட்டேன். அவற்றில் மூன்றைத் தவிர மற்றவைகளை Delete செய்துவிட்டேன். அதற்கு காரணம் என்ன எழுதுவது என்று தெரியாததுதான்.
கடந்த வருடம் எனது உறவினர் நீடூர் அலி அவர்கள் மூலம் தமிழ்மணம், தமிழிஷ்(தற்போதைய இன்ட்லி), இன்னும் சில வலைப்பூக்கள் அறிமுகமானது. பிறகு ஒரு நாள் “நாம் கற்றுக் கொண்ட ப்ளாக்கர் தொழில்நுட்பங்களையே பதிவிட்டால் என்ன?” என்று தோன்றியது. உடனே “ப்ளாக்கர் நண்பன்” என்று பெயரிட்டு இந்த வலைப்பூவை தொடங்கி ஒரு பதிவையும் எழுதினேன்.
பிறகு அடுத்தப் பதிவு எழுதுவதில் ஒரு சிக்கல். அது HTML Code-ஐ HTML ஆகக் காட்டுவது. HTML Code-ஐ கொடுத்தால், அது Code ஆக தெரியாமல் அதன் வெளியீடாக (Output) தெரிந்தது. அப்பொழுது அதனை சரி செய்ய முடியாததால் அப்படியே விட்டுவிட்டேன். காரணம் “Basically I Am சோம்பேறி!”.
பிறகு சகோதரி கண்மணி அவர்களின் பிலாக்கர் டிப்ஸ் என்ற தளத்தைக் காண நேரிட்டது. அதில் அவர் ப்ளாக்கர் தொழில்நுட்பத்தைப் பற்றி எழுதி வருகிறார். அந்த ப்ளாக்கை பார்த்ததும் தான் மீண்டும் பதிவெழுத வேண்டுமென்ற ஆசை வந்தது. மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, முன்சொன்ன HTML பிரச்சனையை சரிசெய்து பின் மீண்டும் பதிவெழுத தொடங்கினேன். மூன்றாவது பதிவிற்கு தான் முதல் பின்னூட்டமே கிடைத்தது.
பிறகு கிடைத்த பின்னூட்டங்களும், ஓட்டுக்களும் என்னை இன்னும் அதிகமாக எழுதத் தூண்டியது. நான் கற்றவைகளைப் பகிர்ந்துக் கொண்ட நான், தற்பொழுது பகிர்ந்துக் கொள்வதற்காகவே நிறையக் கற்கிறேன்.
