Wednesday, October 20, 2010

கடன் வாங்கலாம் வாங்க - 4

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)    இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! )

கான மயிலாட!
கடன் வந்து நிழலாட!
வாங்கியவன் கொண்டாட!
கொடுத்தவன் திண்டாட!
கடனே கேட்காதே!


விடுமுறையில் ஊருக்கு செல்வதற்கு முடிவு செய்து விட்டால் நம்மிடம் என்ன சேமிப்பு இருக்கிறதோ ( சேமிக்க முடியவில்லை என்று புலம்புவது புரிகிறது. ஏன்? திட்டமிடுவதில்லை? ) அல்லது இருக்கும் கையிருப்புக்குள் சென்று வர முயற்சி செய்வதில்லை. நண்பர்களிடமோ, கம்பெனியிடமோ, கடன் அட்டையிடமோ கடனுக்கு விண்ணப்பித்து பணத்தை பெற்று நீங்கள் வாங்கிச் செல்லும் பொருள்களால் குடும்பத்தில் யாராவது சந்தோஷம் என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லை நீங்கள்தான் நான் கடன் வாங்கி பொருள்கள் வாங்கி வந்துள்ளேன் என்று சொன்னதுண்டா? பிறகென்ன யாருக்காவது சரியாக பொருள்கள் கொடுக்கவில்லை, கொண்டு வந்த பொருட்கள் சரியில்லை என்ற புலம்பல்தான். இந்த மனக்குறை ஒருபக்கம் மறுபக்கம் குடும்பத்தை பிரிந்த கவலை இரண்டையும் சுமந்து மீண்டும் திரும்பி இந்த பாலை வெயிலுக்கு வந்து விடுகிறோம்.

இதற்கிடையில் கடன் கொடுத்தவரின் நிலைதான் பரிதாபம். பணத்தையும் கொடுத்து விட்டு எப்பொழுது கொடுத்த கடன் திரும்ப வரும் என்று வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். கடன் வாங்கியவரோ கொடுத்தவருக்கு எந்த தேவையுமில்லை என்ற நினைப்பில் தன்னுடைய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இப்பொழுது சிலரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.

ஒரு சகோதரர் அவர் நண்பருக்கு பல தடவை (கடன் கொடுத்து)உதவி செய்கிறார்.

வல்ல அல்லாஹ் கடன்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறான்:

ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும். எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். (அல்குர்ஆன்: 2:282)

வாங்கியவர் எதற்காக என்ன தேதியில் வாங்கினோம் என்று எதுவும் எழுதி வைத்துக்கொள்வதில்லை. ஆனால்  கொடுத்தவர்தான் எழுதி வைத்துக்கொள்கிறார். கடன் வாங்கியவர் திருப்பி கொடுக்க  வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அடிக்கடி விடுமுறையில் ஊருக்கு போகும்பொழுதெல்லாம் கடன் கொடுத்தவரையும் (நண்பராக இருப்பதால்) அழைத்துக்கொண்டு நகைகள், துணிகள் வாங்கிக் கொண்டு ஊர் சென்று வருகிறார். பழகி விட்டோமே எப்படி கேட்பது என்று கொடுத்தவர் கேட்பதற்கு தயங்குகிறார் (லூசா நீ என்று கடன் கொடுத்தவரைப்பார்த்து கேட்க தோன்றுகிறதா?). கடன் வாங்கியவருக்கு வரவேண்டிய தயக்கம் கொடுத்தவருக்குத்தான் பெரும்பாலான இடங்களில் வருவதை பார்க்க முடிகிறது. சில வருடங்கள் ஆன பிறகு கொடுத்த கடனை நண்பனிடம் திருப்பி கேட்கிறார். வாங்கியவர் கூறும் வார்த்தையை கவனியுங்கள்: ஏன் நான் கடனை திருப்பித்தரமாட்டேனா? அல்லது ஓடிவிடுவேனா? ஏன் என் மீது நம்பிக்கையில்லையா? நான் உனக்கு எவ்வளவு தரவேண்டும் என்ற கணக்கை காட்டு என்று கடன் வாங்கியவர் கொடுத்தவர் போல் கோபப்படுகிறார். (இதில் கடன் வாங்கியவர் குறித்து வைத்துக்கொள்வதும் இல்லை, கெடுத்தவர் எந்த தேதியில் எதற்காக கொடுத்தோம் என்று தெளிவாக கூற வேண்டுமாம்??? ) இவர்களைப் போன்றவர்களுக்கு மீண்டும் கடன் கொடுக்க மனம் வருமா?

நபி(ஸல்) அவர்கள் இப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பவர்களைப் பற்றி அறிவிப்பதை பாருங்கள்:

எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி  அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி, எண்: 2387)


இரண்டாவது சகோதரரைப்பற்றிப்பார்ப்போம்: அவர் வேலை செய்யும் கம்பெனி வெளியில் வேலை செய்து கொள்ளும்படி கூறி விடுகிறது. ஊருக்கு போக முடிவு செய்கிறார். போய் விட்டு வந்து வேலை தேட வேண்டுமாம். இந்த சூழ்நிலையில் துணிமனிகள் வாங்கி போக வேண்டுமாம். ஊரில் துணிகள் கொடுக்காவிட்டால் நன்றாக (மதிப்பு?) இருக்காதாம், கடன் வாங்குகிறார். கொடுத்தவரிடம் எப்பொழுது திருப்பி கொடுப்பேன் என்ற எந்த வாக்குறுதியும் கிடையாது. திரும்பி வந்து வேலை தேடிக்கொண்டு இருக்கிறார். கடன் கொடுத்தவர் நிலைதான் இப்பொழுது பரிதாபம். ஏன்? வேலைக்குச் சேர்ந்து, அவர் பிரச்சனைகள் அனைத்தும் முடியும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால்  வேலையே கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில் எப்படி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. இவர் வாங்கிய கடன் அவசியத்திற்குத்தானா? இல்லை என்பது புரிகிறது. இப்படிப்பட்ட சகோதரர்களுக்கு மீண்டும் கடன் கொடுத்து உதவி செய்ய மனம் வருமா?

மூன்றாவது சகோதரர் ஊருக்கு செல்ல முடிவு செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்து அதே கம்பெனியில் வேலையை தொடர முடியாத நிலை தெரிந்திருந்தும் கடன் வாங்கிச் செல்கிறார். இவருக்காக சில சகோதரர்கள் ஜாமீன் போடுகிறார்கள். ஊர் போய் வந்த பிறகு கடன் கொடுத்தவர்களிடம் அவருடைய நிலையை எடுத்துச் சொல்லி இத்தனை மாதங்களில் தருகிறேன் என்று சொல்லலாம். ஆனால் எதுவுமே சொல்லாமல் இருக்கிறார். ஜாமீன் கையெழுத்து போட்டவர்கள் நிலைதான் பரிதாபம். ஏன்? வாக்குறுதியை காப்பாற்றுவார் என்று நினைத்தார்கள். இதுபோன்ற சகோதரர்களுக்கு ஜாமீன் போடவோ, கடன் கொடுத்து உதவவோ நமக்கு மனம் வருமா?

நண்பர்கள் இப்படி என்றால் ஒரு அக்கா தங்கை கடன் கொடுத்த விபரத்தை பார்ப்போம்: தன் உடன் பிறந்த அக்கா மகன் வெளிநாடு செல்வதற்காக பணத்திற்கு சிரமபடுவதை பார்த்து தன்னிடம் உள்ள பணத்தை சகோதரிக்கு கடனாக கொடுக்கிறார். விஸாவுக்கு முயற்சித்து விஸா வரவில்லை. அவர் மகன் பயணம் போகவில்லை. பணம் கட்டிய இடத்திலிருந்து  ஒரு வருடம் கழித்து பணம் வாங்கப்படுகிறது. ஆனால் இந்த கடனை அடைக்காமல் இருக்கிறார். அக்காவிடம் எப்படி கேட்பது அவராக தரட்டும் என்று (சில வருடங்கள்)  காத்திருக்க அந்த அக்காவோ வெளிநாட்டில் இருக்கும் தன் கணவரிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என்று சொல்லாமல் நகை வாங்கி வாருங்கள் என்று சொல்கிறார். மேலும் தன் வீட்டை கட்டுவதற்கு பேங்கில் கடன் வாங்கி வீட்டை கட்ட ஆரம்பித்து விட்டார். தங்கைக்கு கோபம், பார்த்தார் வீடு கட்டிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் அக்காவிடம் பணத்தை திருப்பி கேட்காமல் இருந்தால் நம் பணம் வர வாய்ப்பே இருக்காது என்று நேரடியாக கேட்க தயங்கி வேறு ஒரு சகோதரியின் மூலம் சொல்லி பணத்தை வாங்கி விடுகிறார். கடன் கொடுத்ததால் அவர்களுக்குள் மனஸ்தாபம்.

மேற்கண்ட நால்வரின் மூலம் கிடைக்கும் படிப்பினை என்ன சொல்கிறது - கடன் கொடுத்தால் இப்படியெல்லாம் கஷ்டப்பட நேரிடுமா? என்று நினைக்க தோன்றுகிறது. மார்க்கம் அறிந்தவர்களும், அறியாதவர்களும், கடனைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது என்று அறியாமல் இருப்பது தெளிவாகிறது.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆ செய்யும் போது, இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான் என்று பதிலளித்தார்கள்.   (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூல்:புகாரி, எண்: 2397 )

கடன் வாங்கக் கூடாது என்ற உறுதியுடன் இது போல் நாமும் அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும். அடுத்த தொடரில் இன்னும் எத்தனை வழிகளில் கடன் வாங்கப்படுகிறது என்று பார்ப்போம்.

அன்பு வாசக நெஞ்சங்களே! தாங்களும் கடன் கொடுத்து வாங்கியிருப்பீர்கள் வித்தியாசமான அனுபவங்கள் தங்களிடம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இன்ஷாஅல்லாஹ் வளரும்..
-- அலாவுதீன்.S.
  Source :http://adirainirubar.blogspot.com/2010/10/4.html

Tuesday, October 19, 2010

தமிழக சட்ட மேலவை தேர்தல்: ஆலிம்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு!

தமிழக சட்டமன்றத்தில் சட்ட மேலவை அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.
விரைவில் சட்ட மேலவைக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இத்தேர்தலில் தமிழகத்தில் உள்ள பட்டதாரிகளும் (பட்டம் பெற்று மூன்று ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும்) தங்களது சார்பாக சில உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க உரிமை பெற்றுள்ளனர்.
அப்ஸலுல் உலமா பட்டம் பெற்ற ஆலிம்களும், M.A. (அரபிக்) பட்டம் பெற்ற பட்டதாரி ஆலிம்களும் தேர்தலில் வாக்களிக்க தகுதியுள்ளவர் ஆவர்.
இது சம்பந்தமான அரசு அறிவிப்பை கீழே வாசியுங்கள்.


நீங்கள் அப்ஸலுல் உலமா பட்டம் பெற்றிருந்தாலோ அல்லது வேறு ஏதாவது டிகிரி பெற்றிருந்தாலோ தேர்தலில் வாக்களிக்க வேண்டுமெனில் உங்கள் பகுதியில் உள்ள தாசில்தார் அலுவலகத்தை அணுகி இதற்கான விண்ணப்பத்தை பெற்று, அதை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்துக் கொடுத்தால் நீங்களும் சட்ட மேலைவைத் தேர்தலில் வாக்களிக்க முடியும். உங்களது சார்பாக ஒருவரை சட்ட மேலவைக்கு தேந்தெடுக்க முடியும்.
இத்தகவலை உங்களைச் சார்ந்தவர்களுக்கு மின்னஞ்சல் / வலைப்பூ / இணையதளம் / செய்தி ஊடகம் / தொலைகாட்சி / சொற்பொழிவு / நிகழ்ச்சி / தொலைபேசி / தொலைநகல் வாயிலாக தெரிவியுங்கள்.
நன்றி! வஸ்ஸலாம்.
தகவல் உதவி: கோவை மவ்லவீ அ. அப்துல் அஜீஸ் பாகவீ & காயல்பட்டினம் மவ்லவீ சுல்தான் சலாஹுத்தீன் மழாஹிரி
பரங்கிப்பேட்டை மவ்லவீ அஃப்ழலுல் உலமா
அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,

Source : http://lalpetexpress.com/?p=700&cpage=1#comment-93

TCN கார்ட்டூன் : தவறாக உபயோகப்படுதப்பட்ட தர்ம சொத்துக்கள்

தவறாக உபயோகப்படுதப்பட்ட  தர்ம  சொத்துக்கள். 
கடவுள், மதம் என்ற பெயரால் தங்கள் வசம் ஒப்புவிக்கப்பட்ட தர்ம சொத்துக்களை ஆநாவசியமான முறையில் துஷ்பிரயோகம் செய்து வருபவர்களும் உண்டு. அவர்கள் அரசு  பார்வையிலிருந்து தப்பித்தாலும் இறைவன் பார்வையிலிருந்து தப்பிக்க முடியாது .
 
Photo source : http://twocircles.net/2010oct18/tcn_cartoon_corrupted_charities.html

Monday, October 18, 2010

கொடிது.. கொடிது.. வறுமை கொடிது!

 இந்திய முஸ்லிம் சமுதாயம் இன்று! - சவால்களும் தீர்வுகளும்! (தொடர்-6)

கட்டுரைத் தொடரில் இது வரை...

"கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் பிற சமுதாயத்தினரைக் காட்டிலும் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் இஸ்லாமிய சமுதாயத்தை முன்னேற்றுவதற்கு கல்வியிலும் வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு கொடுக்கப்பட வேண்டும்" என சச்சார் கமிஷன், ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் ஆகியவை பரிந்துரைத்திருக்கின்றன.  ஆனால், இடஒதுக்கீடு என்பது வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கும் 95 சதவிகித இஸ்லாமிய சமுதாயத்தின் ஒரு சிறு பகுதியினருக்கு மட்டுமே பலனளிக்கக்கூடியது!

நலிவடைந்த சமுதாயத்தினரை பொருளாதாரத்தில் தன்னிறைவுப் பெற்றவர்களாக மாற்றுவதற்கு இஸ்லாம் வழங்கும் தீர்வு ஜகாத்!


ஆனால், ஜகாத்தினால் ஏற்படவிருக்கும் நன்மைகளை சமுதாயம் முழுமையாக பெற்றுக் கொள்ள வேண்டுமானால் ஜகாத்தை முறையாக ஒரு பொது நிதியில் சேகரித்து பங்கிடுவதற்கு ஒரு கூட்டு அமைப்பை ஏற்படுத்துவது  இன்றைய சூழலில் சமுதாயத்திற்கு இன்றியமையாதது. 

கருத்து வேறுபாடுகளும் இயக்கச்சண்டைகளும் மலிந்திருக்கும் இன்றையச் சூழ்நிலையில் ஜகாத்தை முறையாகச் சேகரித்து வினியோகம் செய்ய மாநில அளவிலாவது ஓர் ஒருங்கிணைந்த அமைப்பை ஏற்படுத்துவது சாத்தியமா என்ற கேள்வி எழுவது இயல்பானதுதான். அதற்கான பதில், மனமிருந்தால் மார்க்கமுண்டு!
oOo
இனி..,

இஸ்லாமிய சமுதாயத்தினரிடம் ஒரு பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தவும் பிற சமூகங்களுடன் ஒப்புநோக்கையில் இஸ்லாமிய சமுதாயம் குறிப்பிடத்தக்க அளவில் சமூக முன்னேற்றத்தை அடையவும் ஒருங்கிணைந்த ஜகாத் அமைப்பு கவனம் செலுத்த வேண்டிய முக்கியமான மூன்று அம்சங்கள்:

  1. வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் மக்களின் அடிப்படைத்தேவைகளை நிறைவு செய்தல்
  2. அவர்களை பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்களாக மாற்றுதல் மற்றும்
  3. கல்வி மேம்பாடு

கொடிது கொடிது வறுமை கொடிது!

வறியவர்களுக்கு கடனுதவி வழங்குவதற்காக 'கிராமிய வங்கி'  (Grameen Bank) என்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தியவர் பங்களாதேசத்தைச் சேர்ந்த பொருளியல் நிபுணர் முஹம்மது யூனுஸ்.  அவரது இந்த முயற்சிக்காக 2006-ஆம் ஆண்டு 'அமைதி'க்கான நோபல் பரிசும் அவருக்கு வழங்கப் பட்டது.  1970-களில் பங்களாதேசத்தில் நிலவிய கடும் பஞ்சமே முஹம்மது யூனுஸ் இத்திட்டத்தை தொடங்க மூலகாரணமாக இருந்தது.  அந்தக் கொடுமையான காலத்தைப் பற்றி அவர் தனது 'வறியவரின் வங்கியாளர்' (Banker to the Poor) என்ற நூலில் நினைவு கூர்கிறார்.
1974-இல் பங்களாதேசத்தை கடும் பஞ்சம் பீடித்துக் கொண்டது.  பொருளியல் துறைத் தலைவராக நான் பணியாற்றிக் கொண்டிருந்த சிட்டகாங் பல்கலைக்கழகம் நாட்டின் தென்கிழக்குக்கோடியில் அமைந்திருந்தது.  நாட்டின் வடபகுதியில் உள்ள குக்கிராமங்களில் நிகழும் பட்டினிச்சாவுகளைப் பற்றி செய்தித்தாள்களில் வெளியான தகவல்களை ஆரம்பத்தில் நாங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை.  ஆனால், பிறகு எலும்புக்கூடுகளைப் போன்ற மனிதர்கள் தலைநகர் டாக்காவின் ரயில் நிலையங்களிலும் பேருந்து நிலையங்களிலும் தென்பட ஆரம்பித்தார்கள்.  துளித்துளியாக வந்து கொண்டிருந்தவர்கள் வெகு விரைவிலேயே பெருவெள்ளமாகிப் போனார்கள்.  எங்குப் பார்த்தாலும் பட்டினி மக்கள்!  பெரும்பாலும் அசைவற்று அமர்ந்திருக்கும் அவர்கள் உயிருடன்தான் இருக்கிறார்களா என்பதைத் தெரிந்துக் கொள்வதுகூட கடினமாக இருந்தது.  அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இருந்தார்கள்;  ஆண்கள், பெண்கள், குழந்தைகள்!  வயோதிகர்கள் சிறுவர்களைப் போலவும் சிறுவர்கள் வயோதிகர்களைப் போலவும் இருந்தார்கள்."

கடும் பசியில் இருந்த அம்மக்கள் எந்த ஒரு கோஷத்தையும் எழுப்பவில்லை.  நன்றாக உண்டு, தூங்கி எழுந்து கொண்டிருந்த எம்மைப் போன்ற நகர மக்களிடம் அவர்கள் எந்த ஒரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை.   மாறாக, அவர்கள் சாவை எதிர்நோக்கி எங்கள் வீட்டு வாசல்களில் அமைதியாக படுத்துக் கிடந்தார்கள். 

சாவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளன.  ஆனால் பட்டினியால் சாவது என்பது ஏற்றுக்கொள்ளப்படவே முடியாத ஒன்று!  அது 'ஸ்லோ மோஷனில்' நிகழ்கிறது.  வாழ்விற்கும் சாவிற்கும் இடையிலான இடைவெளி வினாடிக்கு வினாடி குறைந்துக் கொண்டே வந்து ஒருநேரத்தில் இவ்விரண்டையும் வேறுபடுத்திப் பார்க்க முடியாமலாகி விடுகிறது.  தூக்கத்தில் நிகழ்வதைப்போல உணரவே முடியாத நிலையில் மிக அமைதியாகச் சாவு அவர்களைத் தழுவிக் கொள்கிறது. 

இத்தனையும் வேளாவேளைக்கு அவர்களுக்கு ஒரு கைப்பிடிச்சோறு கூட கிடைக்காததுதான் காரணம்.  எல்லா வளங்களும் கொட்டிக்கிடக்கும் இந்த உலகில், அதன் விசித்திரங்களைக் கொஞ்சமும் புரிந்து கொள்ள முடியாத ஒரு பச்சிளங்குழந்தை பாலுக்காகக் கதறி அழுகிறது.  அது கிடைக்காமலேயே தூங்கியும் விடுகிறது.  அடுத்தநாள் உயிர்வாழத் தேவையான சக்தி அதற்கு இல்லாமல் போய்விடலாம்.
ஆம்... வறுமை மிகவும் கொடியது!  சமுதாயத்தில் ஒரு பங்கினர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கும்போது 'எனக்கு அதனால் பாதிப்பில்லை என்பதால், நான் ஏன் அதைப் பற்றி கவலைப்பட வேண்டும்?' என யாரும் ஒதுங்கியிருக்க முடியாது. வறுமையை ஒழிப்பதற்காகத் திட்டங்கள் தீட்டாத நாடுகளே இல்லை எனும் அளவிற்கு அது உலக நாடுகள் அனைத்தின் கவனத்தையும் பெற்றுள்ளது.  'வறுமையை ஒழிக்க வேண்டும்' என்ற நோக்கம் என்னவோ சிறப்பானதுதான். ஆனால், அதற்காகச் செயல்படுத்தப்படும் திட்டங்கள் எதிர்பார்க்கும் அளவிற்கு பயனளிக்குமா என்பது பெரிய கேள்விக்குறி என பொருளியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.

முஹம்மது யூனுஸ் சொல்கிறார்:
தான-தருமங்கள் செய்வதுதான்  வறுமையால் வாடுபவர்களுக்கு உதவுவது என்பதாக நாம் பெரும்பாலும் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.  வறுமை ஏற்படுவதன் காரணங்களை அலசி ஆராய்ந்து அதற்குத் தீர்வு கண்டுபிடிக்க வேண்டும் என்ற பொறுப்பை தவிர்ப்பதற்காக நாம்தான் தருமங்கள் செய்கிறோமே என்ற மேலோட்டமான எண்ணத்தில் நமது பொறுப்பை, கடமையை உதறித் தள்ளி விடுகிறோம்.  வறியவர்களுக்கு உதவுவதற்காக அல்லாமல் நம் மனசாட்சிக்கு சின்ன ஒரு திருப்தி ஏற்படுவதற்காகவே நாம் தருமங்கள் செய்கிறோம்.  

தருமங்கள் செய்வது வறுமை எனும் பிரச்னைக்குத் தீர்வு ஆகாது.  மாறாக, அது வறுமையை இன்னும் அதிகரிக்கவே உதவும்.  தருமங்கள் வறியவர்களின் சுய முயற்சிகளை முடக்கி, தன் சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படாமலேயே தடுத்து விடுகின்றன.

(கட்டாயத்) தானங்கள் யாவும் (அடிப்படை வசதிகள் இல்லாத) வறியவர்களுக்கும் (போதிய பொருள் வசதி இல்லாத) ஏழைகளுக்கும் அதனை வசூலிக்கும் பணியாளர்களுக்கும் உள்ளங்கள் தேற்றப்பட வேண்டிய(புதிய)வர்களுக்கும் அடிமைகளு(டைய விடுதலை)க்கும் (மீளாக்) கடனில் மூழ்கியவர்களுக்கும் அறப்போராளிகளுக்கும் வழிப்போக்கருக்கும் (மட்டுமே) உரியவையாகும்.  இது அல்லாஹ்வால் விதிக்கப்பட்ட கடமையாகும்.  அல்லாஹ் நன்கறிந்தோனும் ஞானம் நிறைந்தோனும் ஆவான்.  (குர்ஆன் 9:60)
'வறியவர்' என்பவர் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றிக்கொள்ள வசதியற்றவர்களும் 'ஏழை' என்போர் ஏதோ சிறிது பொருள் இருந்தாலும், தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் போதுமான அளவுக்கு வருமானம் இல்லாதவர்களையும் குறிக்கும்.  இந்த இரு பிரிவினருமே ஜகாத் பெறத் தகுதியுடையவர்கள்.

வறுமையை ஒழிப்பதற்கான சிறந்த வழி அது ஏற்படுவதற்கான மூல காரணங்களை அலசி ஆராய்ந்து அதற்கான தீர்வுகளை கண்டுபிடிப்பதில்தான் இருக்கிறது.  சமுதாயத்தின் எல்லா தரப்பினரின் கூட்டு முயற்சி இதற்குக் கட்டாயம் தேவை.  அப்படி இல்லாமல் அவரவர் தனித்தனியே தான தருமங்கள் செய்துக் கொண்டிருந்தால் வறுமையை ஒழிக்க முடியாது.  அது போலவே, ஒருங்கிணைந்த ஜகாத் வினியோகம் அல்லாமல் தனிநபர்கள் தாங்களாகவே ஜகாத்தை வினியோகம் செய்து கொண்டிருப்பதும் வறுமைக்கான தீர்வு ஆகாது.

வறுமையால் வாடுபவர்களில் பலர் மக்களிடம் தங்கள் குறைகளைக் கூறி யாசகம் கேட்பதில்லை.  தனிநபர்கள் தாங்களாகவே பொருளுதவி செய்ய முன்வந்தாலும் அதை ஏற்றுக் கொள்ளவும் அவர்கள் தயக்கம் காட்டுவர்.  அவர்களின் தன்மானத்திற்கு எந்த பங்கமும் நேரிடாமலும், 'தானம் கொடுத்தவர்களுக்கு நாம் கடமைப்பட்டு விட்டோம்' என்ற தாழ்வு மனப்பான்மை ஏற்படாத அளவிலும் அவர்களுக்கு உதவிகள் செய்யப்பட வேண்டும்.  அத்தகையோருக்கு ஒரு பொதுவான ஜகாத் அமைப்பின் மூலம் உதவிகள் செய்வதே சரியான முறையாகும்.

உழைப்பதில் ஆர்வம் இருந்தும் வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர்களுக்குத் தகுந்த வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கலாம்.  சிறுதொழில்களைத் தொடங்கி நடத்த பயிற்சிகளும் முதலீட்டு உதவிகளும் அளிக்கப்படலாம்.  உழைக்க முடியாத நிலையில் உள்ள முதியோர், நோய்வாய்ப்பட்டோர் ஆகியோருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்கான நிதியுதவி மாதாமாதம் வழங்கப்படலாம்.

தொடர்ந்து அலசுவோம் இன்ஷா அல்லாஹ்...
Source : http://www.satyamargam.com/1562கொடிது.. கொடிது.. வறுமை கொடிது!

Sunday, October 17, 2010

நம்மூரில் காணாமல் போன பழக்க,வழக்கங்கள்.

உலகை நவீன தொழில் நுட்பமயம் ஆட்டிப்படைத்து ஆட்சி செலுத்தி வருவதை நாம் அறிவோம். அதன் தாக்கம் பெருநகரங்கள் முதற்கொண்டு, சிற்றூர்கள் மற்றும் கிராமப்புறங்களிலும் படிப்படியே சென்றடைவதை நாம் பல விசயங்களில் பார்த்து வருகிறோம். அதன் சாரமாக நம்மூரில் காணாமல் போன சில பழக்க, வழக்கங்களை இங்கு முடிந்த வரை ஒன்றன்பின் ஒன்றாக வரிசைப்படுத்தலாம் என்று விரும்புகிறேன்.


1. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கும் இரவு நேரங்களில் பள்ளிகளின் பாங்கு கொடுத்த பின் அடிக்கப்படும் நஹராக்களின் ஒலி இன்று பெரும்பாண்மையான பள்ளிகளில் 'இன்வெண்ட்டர்' வந்த பிறகு கேட்க முடியவில்லை.

2. வீட்டின் பல விசேச தருணங்களில் மற்றும் சம்மந்தி வீட்டாரை சந்தோசப்படுத்த வீட்டிலேயே ஆள் வைத்து அல்லது ஆள் வைக்காம‌ல் மாவு இடித்து சுட்டுத்த‌ர‌ப்ப‌டும் பூவ‌டை, நானா ஹ‌த்த‌ம், அரிய‌த‌ர‌ம், குழ‌ல் ப‌ணியான், பூவந்தி, முட்டாசு, மைசூர் பாக்கு, வெங்காய‌ப்பணியான், சாதா ஹ‌ல்வா, பீட்ரூட் ஹ‌ல்வா போன்ற‌வைக‌ள் இன்றும் வீடுக‌ளில் உண்டாக்க‌ப்ப‌டுகின்ற‌ன‌வா என்று தெரிய‌வில்லை. (பெண் வீட்டாரை வ‌த‌க்காம‌ல் இப்ப‌ழ‌க்க‌த்தை விட்டு விட்டோம் என்று அறிய‌ப்ப‌ட்டால் மிக‌ ச‌ந்தோச‌ம் தான். அத‌ற்காக‌ ந‌ம் எல்லோரையும் ப‌ட்டினி போட்டு விடாதீர்க‌ள் என்று யாரும் கேட்க‌ மாட்டீர்க‌ளே?)

3. சிறுவ‌ர்க‌ளாக‌ இருந்த‌ நாம் விளையாடி க‌ழித்த‌ ப‌ளிங்கு, ப‌ட்ட‌ம், ப‌ம்ப‌ர‌ம், பேபே, தொட்டு விளையாட்டு, க‌ண்டு விளையாட்டு, தேர்த‌ல் வாக்கெடுப்பு, க‌யிறு ர‌யில் வ‌ண்டி, நொங்கு கோம்பை வ‌ண்டி, ட‌ய‌ர் வ‌ண்டி, அட்ட‌பில்லு போன்ற‌ விளையாட்டுக்க‌ள் பெரும்பாலும் ஒழிந்து விட்ட‌ன‌. எல்லாம் க‌ம்ப்யூட்ட‌ர், செல்போன் ம‌ய‌மாகி விட்ட‌ன‌.

4. க‌லியாண‌ம் முடிந்து ஒரு வார‌ம் அல்ல‌து ப‌த்து நாட்க‌ள் மாப்பிள்ளையுட‌ன் கூட‌ வ‌ந்து மூன்று வேளையும் ஒரு க‌ட்டு க‌ட்டிவிட்டு (சாப்பாடு) பெண் வீட்டாரின் மறைமுக வதுவாப்பேரு (பத்வா)எடுத்துச்செல்லும் மாப்பிள்ளை தோழ‌ன்மார்க‌ள் சாப்பாடு இன்று ஓரிரு நாட்க‌ளிலே முடிந்து விடுவ‌து ஒரு ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் தான். அல்ஹ‌ம்துலில்லாஹ்.. முற்றிலும் ஒழிக்க‌ப்ப‌ட‌வேண்டிய‌ ஒன்று.

5. பெரிய‌வ‌ர் முத‌ல் சிறிய‌வ‌ர் வ‌ரை ந‌ம‌தூர் குள‌ங்க‌ளில் குளிப்ப‌து, கும்மாள‌ம் அடிப்ப‌து குறைந்து அல்ல‌து ம‌றைந்து விட்ட‌து.

6. ஒன்றுமேயறியாத ப‌டித்துக்கொண்டிருக்கும் சிறுவ‌ர்க‌ளைப்பிடித்து அவ‌ர்க‌ளுக்கு வ‌ருங்கால‌த்தில் திரும‌ண‌ம் முடிக்க‌ இருக்கும் பெண்ணை முடிவு(அசைன்) செய்து 'நிக்காஹ்' என்னும் திரும‌ண‌ முன் உறுதி ஒப்ப‌ந்த‌ம் செய்து வைப்ப‌து இப்பொழுது குறைந்து அல்ல‌து ம‌றைந்து விட்ட‌தாக‌ க‌ருதுகிறேன்.

7. சிறுவ‌ர்க‌ளுக்கு 'சுன்ன‌த்' செய்ய‌வ‌த‌ற்கு முன் வீட்டில் வ‌ச‌தி வாய்ப்புக‌ள் இருக்கிற‌தோ இல்லையோ அல‌ங்கார‌ வாக‌ன‌ ப‌வ‌னி தெருதோறும் பைத்துச‌பா இசை முழ‌ங்க‌ வ‌ருவ‌து இப்பொழுது முற்றிலும் குறைந்து விட்ட‌தாக‌ க‌ருதுகிறேன். ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் தான் மாஷா அல்லாஹ்.

8. வீடுகளின் முற்றத்தில் உரலை வைத்து நான்கு புற‌மும் புட‌வையை சுவ‌ராக‌ எழுப்பி ந‌டுவில் சிறுவ‌ர்க‌ளை உட்கார‌ வைத்து அவ‌ர்க‌ள் க‌த‌ற‌, க‌த‌ற‌ நாசுவ‌னை வைத்து 'சுன்னத்' செய்யும் முறை இப்பொழுது முற்றிலும் இல்லை என‌ க‌ருதுகிறேன்.

9. புதிய‌தாக‌ வெளிநாடு ப‌ய‌ண‌ம் செய்ய‌ இருக்கும் ந‌ப‌ர்க‌ளின் வீட்டில் ச‌ல‌வாத்நாரியா ஓதி நார்சா கொடுக்கும் வ‌ழ‌க்க‌ம் நின்று போய் விட்ட‌தாக‌ க‌ருதுகிறேன். (வீட்டுக்கு வ‌ருகிற‌வ‌ர்க‌ள் ந‌ன்றாக‌ மூக்குபிடிக்க‌ உண்டு செல்வார்க‌ள். பாவ‌ம் ச‌புராளி சைத்தான் கோளாறு உள்ள‌வ‌ன் போல் காட்சி த‌ருவான்).

10. இக்கால பெண்கள் அவர்கள் சிறுமிகளாக இருக்கும் பொழுது விளையாடிக்களித்த கலச்சிக்காய், சில்கோடு, பல்லாங்குழி, புளியங்கொட்டை, கொலெகொலெயா மந்திரிக்கா நரிநரியா சுத்திவா விளையாட்டுக்கள் எல்லாம் கண்மாசியா (முற்றிலும்) காணாமல் போய் விட்டது இக்கால சிறுவர், சிறுமியரிடம்.

11. நமது வீட்டில், குடும்பத்தில், தெருவில் யாரேனும் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டால் நமதூர் ரயிலடி (ரயில்வே ஸ்டேசன்) வரை ஆண்களும், பெண்களும் புடைசூழ வந்து ஹாஜிகளுக்கு மாலை அணிவித்து பைத்து ஓதி புனித பயணத்தை சிறப்புடன் இறைவன் கிருபையில் முடித்து வீடு வந்து சேர து'ஆச்செய்து அனுப்பியது இப்பொழுது இருக்கிறதா? அல்லது இல்லாமல் போய் விட்டதா? தெரியவில்லை. (எப்படி இருக்கும்? கம்பன் எக்ஸ்பிரஸ் தான் கண்மாசியாக்காணாமல் போய் விட்டதே....)

12. இப்பொழுது நமதூரில் மாணவ, மாணவியர் எல்லாம் வண்ண,வண்ண சீருடை அணிந்து பள்ளிக்கூடம் சென்று வருகின்றனர். பார்ப்பதற்கே மனதிற்கு சந்தோசமாக இருக்கின்றது. நாம் படிக்கும் காலத்தில் பத்தாம் வகுப்பு வரை கலர் வேட்டியும், பதினொன்றாம் வகுப்பிலிருந்து வெள்ளை வேட்டியும் உடுத்தி வர பள்ளி நிர்வாகமே அனுமதித்திருந்தது. அதை இப்பொழுது நினைத்தாலே வெட்கமாக இருக்கிறது. (இப்பொழுது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் குடியுரிமை பெற்றிருக்கும் நம்மூர்க்காரர்களின் பள்ளிப்பருவ புகைப்படங்களை குடியுரிமை வழங்கிய அந்நாட்டு அதிகாரிகள் பார்க்க‌ வாய்ப்பு கிடைத்தால் கொடுக்கப்பட்ட அக்குடியுரிமையை அவர்கள் திரும்பப்பெற்றுக்கொண்டாலும் பெறலாம். அவ்வளவு அழகாகவும், நாகரீகமாகவும் இருக்கும். (சிலர் பழைய ஊதா தொப்பியுடனும் காட்சியளிப்பர்).

13. வீட்டினருக்கு தெரியாமல் கள்ளத்தனமாக‌ பார்த்துவந்த‌ (ஜெக்கரியா, நியூ சினிமா திரையரங்குகள்) சினிமாவும், குடித்த ஒட்டு பீடியும் பெரும்பாவமாக கருதப்பட்ட காலம் அது. தொலைக்காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும் வீட்டை சைத்தான் குடிவந்த வீடாக பேசப்பட்ட நேரம் அது. அக்காலத்துடன் ஒப்பிடும் பொழுது இன்றோ எல்லை மீறிய பாவங்கள் பரவலாக நடந்துவருவதை காணாமல் இருக்க முடியவில்லை.

14. வீட்டில் நடை பெற இருக்கும் கலியாண வைபவங்களுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வீட்டின் பெரியவர்கள் ஒன்று கூடி (டீ, மிக்ஸர், பனியான் துணையுடன்)பத்திரிக்கைகள் எழுதி முதலில் அயல்நாடுகளில் இருக்கும் உறவினர்களுக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டு, பிறகு உள்ளூர் உற்றார், சுற்றத்தாருக்கு அனுப்பப்படும். இக்காலத்தில் அவைகளெல்லாம் குறைந்து அல்லது மறைந்து வாய்க்கூப்பாடு, டெலிபோன் கூப்பாடு, ஈமெயில் கூப்பாடு, சாட்டிங் கூப்பாடு, இன்டர்நெட் கூப்பாடு என்று பரிணாம வளர்ச்சி பெற்று விட்டது. இதை தொழிலாக செய்து வந்தவர்களுக்கு பேரிடியாக அமைந்தது. எப்படி குதிரை வண்டிகளெல்லாம் ஆட்டோக்களாக பரிணாம வளர்ச்சி பெற்றதோ அது போல் தான் இதுவும்.

15. அன்று வீடுதோறும் தண்ணீர் நிறம்பிய கிணறுகள் இருந்தன‌. இன்று அவைகளெல்லாம் மறைந்து ஆழ்குழாய்க்கிணறுகளாக வந்து நம் வீட்டை ஆட்சி செய்வதுடன் குளங்களின் தண்ணீர் இருப்புக்கும் வேட்டு வைக்கிறது. அன்று கிணற்றில் பயன்படுத்தப்பட்ட வாளியும், கயிறும் அதன் இரும்பு சக்கரமும் விரைவில் அழிந்துபோன பொருட்களின் வரிசையில் அருங்காட்சியகத்தில் காணப்படலாம்.

16. ஒரு காலத்தில் நமக்கு வரும் சளித்தொல்லை, இருமல், காய்ச்சல், ஜலதோசங்களெல்லாம் ஆஸ்பத்திரி சென்று ஒரு ஊசி போட்டு வந்தால் அவை நம்மை விட்டு காணாமல் போய் விடும். ஆனால் இன்றோ எத்தனை ஊசி போட்டு வந்தாலும், மருந்து மாத்திரைகள் தின்றாலும் அவைகள் நம் அன்றாட வாழ்வில் தொட்டு விளையாட்டு விளையாண்டு வருகின்றன. (இக்கால மருந்துக்கு வீரியம் குறைந்து பக்க விளைவுகளை ஏற்படுத்தி விடுகின்றன என சொல்ல வந்தேன்).

17. அன்றாட சமையலுக்காக நம் வீட்டில் பயன்படுத்தப்பட்ட அலாயத்திக்காட்டு விறகுகளும், சைக்கிளின் பின் கேரியரில் கட்டி வாங்கி வந்த விறகுகடை சவுக்கு விறகுகளும் இன்று கலியாண வைபவங்களுக்கு மட்டும் பயன்படுத்தும் பொருளாக மாறிப்போனது. குறிப்பாக அலயாத்திக்காட்டு விறகுகள் இன்று அடியோடு இல்லாமல் போய்விட்டதாக கூறலாம். அன்று ஆடம்பரப்பொருட்களின் வரிசையில் பவனி வந்த கேஸ் அடுப்புகள் இன்று இல்லாத வீடுகளே இல்லை என்று கூறலாம்.

18. அன்று டி.வி.எஸ். 50 (மொபெட்) வைத்திருந்தாலே பணக்காரர்களின் வரிசையில் வலம் வந்தவர்கள் இன்று இன்னோவா இல்லை ஃபர்ச்சூனர் வைத்திருந்தால் மட்டுமே ஏதோ உப்புக்கு சப்பானி போல் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். பணங்காசுகள் பெருகி அதற்கு மதிப்பு இல்லாமல் போய் விட்டது என சொல்ல வந்தேன்...

19. ஒரு காலத்தில் நமதூர் ஜாவியாவில் பயான் முடிந்து இறுதியில் கொடுக்கப்படும் நார்சா சோறு ஆரம்ப காலத்தில் மண் சட்டியிலும், பிற‌கு சில்வர் கிண்ணத்திலும் இறுதியில் பிளாஸ்டிக் பைகளில் கொடுக்கப்பட்டு பரிணாம வளர்ச்சி அடைந்தது போல் இன்னும் பல பழைய பழக்க,வழக்கங்கள் நாகரீக உலகை காரணம் காட்டி நம்மைவிட்டு நலுவிச்சென்றுவிட்டன.

20. ஒரு காலத்தில் ட்ரங்கால் புக் பண்ணி டெலிபோனுக்காக காத்துக்கிடந்த நாம் இன்று எல்லோரின் கைககளிலும் செல்போன் துள்ளி விளையாடுவதை தவிர்க்க முடியவில்லை.

21. அன்புக்கடிதங்களும், ஆசை வாழ்த்துக்களும், மணியார்டருகளும் கொண்டு வந்து நம் வீட்டில் கொடுத்துச்சென்ற தபால்காரர்கள் இன்று இருக்கலாம். ஆனால் அப்பழக்க,வழக்கங்களெல்லாம் மலையேறி சென்று விட்டதாக அடித்தும் கூறலாம் அடிக்காமலும் கூறலாம். இதில் தோனா.கானா முறையும் அடங்கும்.

இன்னும் நம்மிடம் அன்றாட வாழ்வில் பின்னிப்பிணைந்திருந்த எத்தனையோ பழக்க,வழக்கங்கள் விஞ்ஞான மாற்றத்தை காரணம் காட்டி இன்று நம்மிடமிருந்து பிரியா விடைபெற்று சென்று விட்டன. அதில் சில எனக்கு ஞாபகம் உள்ளதை மேலே வரிசைப்படுத்தியுள்ளேன். மேற்கண்டவற்றில் யாரையும் புண்படுத்த வேண்டுமென்றோ அல்லது உட்கருத்து ஏதேனும் வைத்தோ எதுவும் எழுதப்படவில்லை.

இஸ்லாத்திற்கு முரணான‌ பல தீய பழக்க,வழக்கங்கள் நாளடைவில் நம்மை விட்டு காணாமல் போயிருந்தால் அதற்காக நாம் வருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. மாறாக சந்தோசப்பட வேண்டியது தான்.

விடுபட்ட பழக்க,வழக்கங்களையும், உங்கள் மேலான கருத்துக்களையும் இங்கு பின்னூட்டமாக இட்டு தொடர அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

பழைய ஞாபகங்களை ஓரளவு மறக்காமல் இங்கு வழங்க பேருதவி புரிந்த அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் என்று அவனிடம் பிரார்த்தித்தவனாக இக்கட்டுரையை நிறைவு செய்கின்றேன்.

வஸ்ஸலாம்.

-- மு.செ.மு. நெய்னா முஹம்மது
Source : http://adirainirubar.blogspot.com/2010/10/blog-post_18.html

ஒரு காதலி காதகியானாள்.

ஒரு காதலி காதகியானாள்.: "
அன்பேயென்றாள்
அரவணைத்தேன்
ஆருயிரேயென்றாள்
ஆட்டம் கொண்டேன்

அகிலமே நீதானென்றாள்
அடிபணிந்தேன்
உயிரே உனக்காகவென்றாள்
உருகி விட்டேன்

ஒருநாள் வந்து
ஓசையின்றி அழுதாள்
உதிர்ந்து விட்டேன்

அழுத முகத்தோடு
அழுத்தமான மனதோடு
அன்பே என்ற உதட்டால்
அண்ணா என்றழைத்தாள்

அழைத்த மறுநொடி
அடிதளம் அதிர அதிர
அதாளத்திற்குள் அழுத்தப்பட்டேன்
அண்ட சராசரம் அத்தனையும்
அப்படியே உரையக் கண்டேன்

அபூர்வமாய் தெரிந்த அவள்
அசிங்கமாய் தெரியக் கண்டேன்
அடுக்கடுக்காய் என் மனயேடு
அவளின் நினைவுகளை
அடிச்சுவடு தெரியாமல்
அழிக்கக் கண்டேன்

காதலல்ல காதலல்ல
அவள் என்மேல் கொண்டது
காதலல்ல
காதலின் பெயர்கொண்டு
காலமெல்லாம் எனை
கருகவைக்க வந்த
காதல் காதகி.

டிஸ்கி// பல இடங்களில் இதுபோன்று நடகிறது அதனால்
காதல்கள் கானலாகி போகிறது. சிலநேரம் கருகியும்போகிறது. உண்மைக் கதையை எழுத்தில் அறியும் சந்தர்ப்பம் அமைந்தால். அந்த ஏட்டின் வலியை என் கவிதையில் மூலம் இங்கு எழுதிக்கிறுக்கினேன்.

[சுஸ்கி//இது ஆண் பெண் இருவருக்குமானதுதான் அவரவர் படிக்கும்போது மாற்றி படித்துக்கொள்ள வேண்டும் ஜமால்காக்காவின் பின்னுட்டத்தால் வந்ததிந்த சுஸ்கி.. ஹா ஹா ஹா]

அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்.
நீங்கள் ஊக்கமென்ற கருத்தும், ஓட்டும் தந்தால்
இந்த நீரோடை நிரம்பி வழியும் கவிதைநீரால்.
Source : http://niroodai.blogspot.com/2010/09/blog-post_04.htmlஒரு காதலி காதகியானாள்.

Friday, October 15, 2010

கண்ணியம் காக்கப்பட வேண்டிய பள்ளிவாயில்கள்


    நீங்கள் ஒரு அரசனின் மாளிகைக்கு அழைக்கப்படுகிறீர்கள். நீங்கள் வீட்டிலிருந்த அமைப்பிலேயே சென்று விடுவீர்களா? அந்த அரசனின் மனம் கவரும் வண்ணம்  தூய்மையாக, இருப்பதிலேயே சிறந்த ஆடை அணிந்து, மணம் பூசிச் செல்வீர்கள். அங்கு சென்று அரசனின் வருகைக்காகக் காத்திருக்கும் நேரத்தில் அந்த அரண்மனையில் தடுக்கப்பட்டுள்ள அரட்டையை, கூட இருப்பவர்களோடும் கைத்தொலைபேசியிலும் சத்தமாக நிகழ்த்திக் கொண்டிருப்பீர்களா? அரண்மனைப் பாவனைக்காக வைக்கப்பட்டிருக்கும் பொருட்களை உங்கள் தேவைக்காக, நீங்கள் விரும்பியவாறு பயன்படுத்துவீர்களா? எதையும் செய்யமாட்டீர்கள். ஏனெனில், அரண்மனைக்குள் தடுக்கப்பட்டிருக்கும் இவை போன்றவற்றையெல்லாம் செய்தால் கிடைக்கும் அரசனின் கோபத்துக்கும் தண்டனைக்கும் பயந்து, மிகவும் அமைதியாகவும், அரசன் உங்களைக் காண்கையில் உங்களை அவன் நல்லவிதமாக எண்ணவேண்டுமெனவும் கண்ணியமாக நடந்துகொள்வீர்கள் அல்லவா?

    ஆனால், தற்காலத்தில் சர்வ வல்லமை மிக்க முழுப் பிரபஞ்சத்துக்கும் அரசனான, எல்லாப் புகழுக்குமுரிய எமது இறைவனான அல்லாஹ் தஆலாவின் மாளிகைக்கு அழைக்கப்படும் போது செல்லும் நாம், இறைவன் மீது எந்தவித அச்சமுமற்றவர்களாகவே அங்கு கால் பதிக்கிறோம். வுழூ செய்வதற்காக சேமித்து வைத்திருக்கும் தண்ணீரை நமது தேவை முடிந்தும் வீணடிப்பதோடு, தண்ணீர்க் குழாய்களையும் இஷ்டத்துக்குத் திறந்து வுழூச் செய்துவிட்டு அவற்றை ஒழுங்காக மூடாமலே சென்று விடுகிறோம். இகாமத் சொல்லப்படக் காத்திருக்கும் நேரம் வரை அம் மாளிகைக்குள் வீணான அரட்டையிலும், சிரிப்பிலுமே நேரத்தைக் கடத்துகிறோம். எமக்கு விரும்பிய விதத்தில் மின்சாரக் குமிழ்களை, மின்விசிறிகளை இயக்கிக் கொள்கிறோம். பின்னர் அவற்றை அணைக்க மறந்து அப்படியே விட்டுவிட்டுச் சென்று விடுகிறோம். இன்னும் தொழுகைக்காகக் கூட வராத சிலர், தமது அவசரத் தேவைக்காக கழிப்பறையை மட்டும் நாடி பள்ளிவாயிலுக்கு வந்து செல்வதைக் கண்டும் காணாதவர்களாக இருந்தும் விடுகிறோம். பிரயாணத்தினிடையில் அவ்வாறு வந்துசெல்லும் வெளியூராட்களை விட்டு விடலாம். ஆனால், அந்த ஒரு காரணத்துக்காக மட்டும் பள்ளிவாயிலை நாடி வரும் உள்ளூர் ஆட்களைத் தொழுகைக்காகத் தூண்டுவதுவும் நமது கடமையல்லவா?

    அண்மைக்காலங்களில் நிக்காஹ் பதிவுகள், இஃப்தார் நிகழ்வுகள் போன்றன பள்ளிவாயில்களில்தான் அனேகம் நடைபெறுகின்றன. மிகவும் நல்ல, நன்மையான விடயம் இது. ஆனால், இவ் வைபவங்கள் முடிந்த பின்னர் பார்த்தால், உணவுப் பரிமாற்றத்தின் போது எல்லோருக்கும் பகிரப்பட்ட சிற்றுண்டி மீதிகள், பேரீத்தம்பழ விதைகள், குடிபானத் துளிகள் போன்றன பள்ளிவாயிலின் தரையெங்கிலும் மற்றும் நில விரிப்பிலும் சிதறி இருக்கும். பள்ளிவாயில் சுத்திகரிப்பாளர் வந்து துப்புரவு செய்யும் வரைக்கும் பாதங்களில் ஒட்டியபடி எல்லா இடங்களுக்கும் பரவி, அவை ஈக்கள், பூச்சிகள் மொய்த்தபடியும் வாடையடித்தபடியும் அப்படியே கிடக்கும். நமது வீட்டிலென்றால் இப்படி அலட்சியமாக விட்டுவைப்போமா? உடனே அதைச் சுத்தம் செய்துவிட மாட்டோமா? ஆனால் பள்ளிவாசல் எனும்போது மட்டும் நமக்கு ஒரு அலட்சியமும் சோம்பலும் வந்துவிடுகிறது. நிகழ்வு முடிந்ததுமே சாப்பிட்டோம், குடித்தோமென அப்படியே வைத்துவிட்டு வந்துவிடுகிறோம். ஒவ்வொருவரும் தமது உணவின் மீதிகளை, வாழைப்பழத் தோல்களை, பேரீச்சம்பழ விதைகளைத் தாமே அகற்றிவிட்டால், அதற்கென வைக்கப்பட்டிருக்கும் குப்பைக் கூடைகளிலிட்டுவிட்டால், நமது இறைவனின் இல்லம் ஒரு சில நிமிடங்களிலேயே சுத்தமாகிவிடுமல்லவா? உணவு நிகழ்வுகளை பள்ளிவாயில்களில் ஏற்பாடு செய்பவர்களும் கூட, அந் நிகழ்வின் பின்னர் பள்ளிவாயிலை உடனே சுத்தம் செய்யும் நடவடிக்கை குறித்து முன்பே திட்டமிட்டுக் கொள்ளவேண்டும்.

    நம்மைக் கடந்துபோன இந்த வருட ரமழானின், இறுதிப் பத்து நாட்களின் பின்னிரவுகளில் அனேகமான பள்ளிவாயில்களில் நடக்கும் ஒரு நிகழ்வை இங்கு பகிர்ந்துகொள்ளவே வேண்டும். ரமழானின் இறுதிப் பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பதுவும், கியாமுல்லைல் தொழுகையும் பெரும் நன்மையைத் தேடித் தரும் விடயம்.

அப்துர்ரஹ்மான் இப்னு அப்தில் காரீ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.
நான் உமர்(ரலி) அவர்களுடன் ரமழான் மாதத்தின் ஓர் இரவில் பள்ளிவாசலுக்குச் சென்றேன். அங்கே மக்கள் பிரிந்து, பல குழுக்களாக இருந்தனர். சிலர் தனித்துத் தொழுது கொண்டிருந்தனர். அப்போது உமர்(ரலி) 'இவர்கள் அனைவரையும் ஓர் இமாமின் கீழ் திரட்டினால் அது சிறப்பாக அமையுமே!" என்று கூறிவிட்டு, அந்த முடிவுக்கு உறுதியாக வந்து, மக்களை உபை இப்னு கஅபு(ரலி) அவர்களுக்குப் பின்னால் திரட்டினார்கள். பின்னர், மற்றொரு இரவில் அவர்களுடன் நான் சென்றேன். மக்களெல்லாம் தங்கள் இமாமைப் பின்பற்றித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது உமர்(ரலி) 'இந்தப் புதிய ஏற்பாடு நன்றாக இருக்கிறது; இப்போது (இரவின் முற்பகுதியில்) நின்று வணங்குவதை விட உறங்கிவிட்டுப் பின்னர் (இரவின் பிற்பகுதியில்) வணங்குவது சிறந்ததாகும்!" என்று கூறினார்கள். மக்கள் இரவின் முற்பகுதியில் தொழுது வந்தனர். இரவின் கடைசி நேரத்தில் தொழுவதைக் குறித்தே இவ்வாறு உமர்(ரலி) கூறினார்.
(ஸஹீஹ் புகாரி - 2010)

    இவ்வாறு இஃதிகாப் இருந்தும், கியாமுல்லைல் தொழுதும் நன்மையைத் தேடிக் கொள்வதற்காக முன்வந்து ஊர் இளைஞர்கள் ரமழானின் இரவுகளில் பள்ளிவாயில்களில் ஒன்றுகூடுவது எவ்வளவு நல்ல விடயம்? ஆனால் இஃதிகாப் இருப்பதற்காகப் பள்ளிவாயிலுக்குச் செல்வதாக வீடுகளில் சொல்லிக் கொண்டு வரும் இளைஞர்களில் பலர், பள்ளிவாயில்களை படுத்திருப்பதற்கு மட்டுமே தேர்ந்தெடுத்திருந்ததையும் கடந்த ரமழானில் காண முடிந்தது. கியாமுல்லைல் தொழுகை நடந்து கொண்டிருக்கும்வேளை உறங்காது வெறுமனே படுத்திருக்கும் சில இளைஞர்கள் சத்தமாகச் சிரித்துக் கொண்டும், அரட்டையடித்துக் கொண்டும் தமது கைத்தொலைபேசிகளில் விளையாடிக் கொண்டிருப்பதையும், இன்னும் சில இளைஞர்கள் பள்ளிவாயிலுக்குள்ளேயே ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருப்பதையும் கண்ணுற்று, தொழுகைக்காக வந்திருந்த பெரியவர்கள் பலரும் தமது அதிருப்தியை வெளிக்காட்டினர்.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தனது நிழலைத் தவிர வேறு நிழலே இல்லாத (மறுமை) நாளில் தன்னுடைய நிழலில் அல்லாஹ் ஏழு பேருக்கு மட்டும் நிழல் கொடுப்பான். அவர்கள்: நீதிமிக்க அரசன். அல்லாஹ்வின் வணக்கத்தில் திளைத்திருக்கும் இளைஞன். பள்ளிவாசல்களுடன் பிணைக்கப்பட்ட இதயத்தை உடையவன். அல்லாஹ்வுக்காகவே நேசித்து, அவனுக்காகவே ஒன்றிணைந்து, அவனுக்காகவே பிரிந்த இருவர், அழகும் அந்தஸ்தும் உள்ள ஒரு பெண் தன்னை (தவறுக்கு) அழைத்தபோது 'நான் அல்லாஹ்வுக்கு பயப்படுகிறேன்' எனக் கூறியவன். தன்னுடைய இடக்கரத்துக்குத் தெரியாமல் வலக் கரத்தால் இரகசியமாக தர்மம் செய்பவன், தனித்திருந்து அல்லாஹ்வை நினைத்து கூர்ந்து (அவனுடைய அச்சத்தால்) கண்ணீர் வடித்தவன் ஆகியோராவர்.
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(ஸஹீஹ் புகாரி - 1423)

    நன்மை தேடுவதற்காகப் பள்ளிவாயில்களில் ஒன்று கூடும் நமது இளைஞர்கள் பலர், ஏன் தமது பொன்னான நேரங்களை வீண் விளையாட்டுக்களில் கழித்து, தொழுதுகொண்டிருக்கும்  மற்றவர்களுக்கும் இடையூறாக இருந்து, பெரியவர்களின் சாபங்களை அவர்களுக்கும், அவர்களது பெற்றோருக்குமாக வாங்கிச் செல்கின்றனர்?

    அடுத்ததாக நிக்காஹ், இஃப்தார் போன்ற நிகழ்வுகளின் போதும், தொழுகை இடைவேளைகளிலும் ஒன்று சேரும் நமது மக்கள் எழுப்பும் இரைச்சலை கண் மூடிக் கேட்டுப் பாருங்கள். ஒரு சந்தையிலோ, ஒரு பேரூந்திலோ இருப்பதைப் போல நம்மை அந்த இரைச்சல் உணரச் செய்யும். பள்ளிவாயில் நிர்வாக சபைக் கூட்டங்களின் போதும், விசாரணைக் கூட்டங்களின் போதும் இன்னும் பல ஒன்றுகூடல்களின் போதும் பள்ளிவாயில் இறைவனின் இல்லம் என்பதை மறந்து அங்கு ஒருவரையொருவர் சத்தமாக ஏசிக் கொள்வதுவும், அடித்துக் கொள்வதுவும் சர்வசாதாரணமாக நடக்கிறது.

    இங்கு அந்நிய மதத்தவர்களின் வாழ்க்கை நடைமுறைகளைக் கொஞ்சம் பார்ப்போம். ஒரு விகாரைக்கோ, கோயிலுக்கோ அவர்கள் செல்லும்போது வெண்ணிற ஆடைகளை அல்லது இருப்பதிலேயே தூய்மையான, ஒழுங்கான ஆடைகளைத்தான் அணிந்து செல்கிறார்கள். அவர்களது அப் புனித இடத்தின் எல்லைக்குள் பாதணிகளைக் கழற்றி விட்டுச் செல்லும் அவர்கள், வீண் அரட்டையிலோ, அங்குள்ள பொருட்களுக்கு சேதம் விளைவிக்கும் நடவடிக்கைகளிலோ ஈடுபடுவதை நாம் கண்டதில்லை. தனது ஆலயமொன்றைப் பேரூந்தில் கடந்து செல்லும்போதும் தனது ஆசனத்திலிருந்து எழுந்து நின்று மரியாதை செலுத்தும் பல சக மதத்தவர்களை நான் கண்டிருக்கிறேன். எமது பள்ளிவாயில்களை அவர்கள் நடந்து, கடந்து செல்ல நேரிட்டால் கூட,  கண்ணியமாகவும் அமைதியாகவும் அவ்விடத்தைக் கடந்து செல்கின்றனர்.

    சக மதத்தவர்கள் அவர்களது ஆலயங்களுக்கும் எமது பள்ளிவாயில்களுக்கும் வழங்கும் கௌரவத்தை, நாம் நமது பள்ளிவாயில்களுக்கு வழங்குகிறோமா? இஸ்லாமியனான ஒவ்வொரு தனி மனிதனும் அல்லாஹ் தஆலாவின் இறை இல்லத்திற்குரிய கண்ணியத்தை உணர்ந்து, அதற்கு மதிப்பளித்தால் மட்டுமே பள்ளிவாயிலுக்குரிய அமைதியையும் ஒழுங்கையும் கண்ணியத்தையும் பேண முடியும். சிந்திப்போம் சகோதரர்களே !

- எம். ரிஷான் ஷெரீப், இலங்கை

நன்றி
# அல்ஹசனாத் மாத இதழ், ஒக்டோபர் 2010

Source : http://rishanshareef.blogspot.com/2010/10/blog-post_15.html

LinkWithin

Related Posts with Thumbnails