அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக! )
கான மயிலாட!
கடன் வந்து நிழலாட!
வாங்கியவன் கொண்டாட!
கொடுத்தவன் திண்டாட!
கடனே கேட்காதே!
விடுமுறையில் ஊருக்கு செல்வதற்கு முடிவு செய்து விட்டால் நம்மிடம் என்ன சேமிப்பு இருக்கிறதோ ( சேமிக்க முடியவில்லை என்று புலம்புவது புரிகிறது. ஏன்? திட்டமிடுவதில்லை? ) அல்லது இருக்கும் கையிருப்புக்குள் சென்று வர முயற்சி செய்வதில்லை. நண்பர்களிடமோ, கம்பெனியிடமோ, கடன் அட்டையிடமோ கடனுக்கு விண்ணப்பித்து பணத்தை பெற்று நீங்கள் வாங்கிச் செல்லும் பொருள்களால் குடும்பத்தில் யாராவது சந்தோஷம் என்று சொல்லி இருக்கிறார்களா? இல்லை நீங்கள்தான் நான் கடன் வாங்கி பொருள்கள் வாங்கி வந்துள்ளேன் என்று சொன்னதுண்டா? பிறகென்ன யாருக்காவது சரியாக பொருள்கள் கொடுக்கவில்லை, கொண்டு வந்த பொருட்கள் சரியில்லை என்ற புலம்பல்தான். இந்த மனக்குறை ஒருபக்கம் மறுபக்கம் குடும்பத்தை பிரிந்த கவலை இரண்டையும் சுமந்து மீண்டும் திரும்பி இந்த பாலை வெயிலுக்கு வந்து விடுகிறோம்.
இதற்கிடையில் கடன் கொடுத்தவரின் நிலைதான் பரிதாபம். பணத்தையும் கொடுத்து விட்டு எப்பொழுது கொடுத்த கடன் திரும்ப வரும் என்று வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும். கடன் வாங்கியவரோ கொடுத்தவருக்கு எந்த தேவையுமில்லை என்ற நினைப்பில் தன்னுடைய தேவைகளை மட்டும் நிறைவேற்றிக் கொண்டிருப்பார். இப்பொழுது சிலரின் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை பார்ப்போம்.
ஒரு சகோதரர் அவர் நண்பருக்கு பல தடவை (கடன் கொடுத்து)உதவி செய்கிறார்.
வல்ல அல்லாஹ் கடன்களை எழுதி வைத்துக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறான்:
ஈமான் கொண்டோரே! ஒரு குறித்த தவணையின் மீது உங்களுக்குள் கடன் கொடுக்கல் வாங்கல் செய்து கொண்டால், அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். எழுதுபவன் உங்களிடையே நீதியுடன் எழுதட்டும். எழுதுபவன் எழுதுவதற்கு மறுக்கக்கூடாது. (நீதமாக எழுதுமாறு) அல்லாஹ் அவனுக்குக் கற்றுக் கொடுத்தபடி அவன் எழுதட்டும். (அல்குர்ஆன்: 2:282)
வாங்கியவர் எதற்காக என்ன தேதியில் வாங்கினோம் என்று எதுவும் எழுதி வைத்துக்கொள்வதில்லை. ஆனால் கொடுத்தவர்தான் எழுதி வைத்துக்கொள்கிறார். கடன் வாங்கியவர் திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் அடிக்கடி விடுமுறையில் ஊருக்கு போகும்பொழுதெல்லாம் கடன் கொடுத்தவரையும் (நண்பராக இருப்பதால்) அழைத்துக்கொண்டு நகைகள், துணிகள் வாங்கிக் கொண்டு ஊர் சென்று வருகிறார். பழகி விட்டோமே எப்படி கேட்பது என்று கொடுத்தவர் கேட்பதற்கு தயங்குகிறார் (லூசா நீ என்று கடன் கொடுத்தவரைப்பார்த்து கேட்க தோன்றுகிறதா?). கடன் வாங்கியவருக்கு வரவேண்டிய தயக்கம் கொடுத்தவருக்குத்தான் பெரும்பாலான இடங்களில் வருவதை பார்க்க முடிகிறது. சில வருடங்கள் ஆன பிறகு கொடுத்த கடனை நண்பனிடம் திருப்பி கேட்கிறார். வாங்கியவர் கூறும் வார்த்தையை கவனியுங்கள்: ஏன் நான் கடனை திருப்பித்தரமாட்டேனா? அல்லது ஓடிவிடுவேனா? ஏன் என் மீது நம்பிக்கையில்லையா? நான் உனக்கு எவ்வளவு தரவேண்டும் என்ற கணக்கை காட்டு என்று கடன் வாங்கியவர் கொடுத்தவர் போல் கோபப்படுகிறார். (இதில் கடன் வாங்கியவர் குறித்து வைத்துக்கொள்வதும் இல்லை, கெடுத்தவர் எந்த தேதியில் எதற்காக கொடுத்தோம் என்று தெளிவாக கூற வேண்டுமாம்??? ) இவர்களைப் போன்றவர்களுக்கு மீண்டும் கடன் கொடுக்க மனம் வருமா?
நபி(ஸல்) அவர்கள் இப்படி திருப்பி கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் இருப்பவர்களைப் பற்றி அறிவிப்பதை பாருங்கள்:
எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனை திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகின்றானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான். (அறிவிப்பாளர் : அபூஹூரைரா(ரலி) நூல்: புகாரி, எண்: 2387)
இரண்டாவது சகோதரரைப்பற்றிப்பார்ப்போம்: அவர் வேலை செய்யும் கம்பெனி வெளியில் வேலை செய்து கொள்ளும்படி கூறி விடுகிறது. ஊருக்கு போக முடிவு செய்கிறார். போய் விட்டு வந்து வேலை தேட வேண்டுமாம். இந்த சூழ்நிலையில் துணிமனிகள் வாங்கி போக வேண்டுமாம். ஊரில் துணிகள் கொடுக்காவிட்டால் நன்றாக (மதிப்பு?) இருக்காதாம், கடன் வாங்குகிறார். கொடுத்தவரிடம் எப்பொழுது திருப்பி கொடுப்பேன் என்ற எந்த வாக்குறுதியும் கிடையாது. திரும்பி வந்து வேலை தேடிக்கொண்டு இருக்கிறார். கடன் கொடுத்தவர் நிலைதான் இப்பொழுது பரிதாபம். ஏன்? வேலைக்குச் சேர்ந்து, அவர் பிரச்சனைகள் அனைத்தும் முடியும் வரை காத்திருக்க வேண்டும். ஆனால் வேலையே கேள்விக்குறியாக இருக்கும் நேரத்தில் எப்படி கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று தெரியவில்லை. இவர் வாங்கிய கடன் அவசியத்திற்குத்தானா? இல்லை என்பது புரிகிறது. இப்படிப்பட்ட சகோதரர்களுக்கு மீண்டும் கடன் கொடுத்து உதவி செய்ய மனம் வருமா?
மூன்றாவது சகோதரர் ஊருக்கு செல்ல முடிவு செய்து விட்டு மீண்டும் திரும்பி வந்து அதே கம்பெனியில் வேலையை தொடர முடியாத நிலை தெரிந்திருந்தும் கடன் வாங்கிச் செல்கிறார். இவருக்காக சில சகோதரர்கள் ஜாமீன் போடுகிறார்கள். ஊர் போய் வந்த பிறகு கடன் கொடுத்தவர்களிடம் அவருடைய நிலையை எடுத்துச் சொல்லி இத்தனை மாதங்களில் தருகிறேன் என்று சொல்லலாம். ஆனால் எதுவுமே சொல்லாமல் இருக்கிறார். ஜாமீன் கையெழுத்து போட்டவர்கள் நிலைதான் பரிதாபம். ஏன்? வாக்குறுதியை காப்பாற்றுவார் என்று நினைத்தார்கள். இதுபோன்ற சகோதரர்களுக்கு ஜாமீன் போடவோ, கடன் கொடுத்து உதவவோ நமக்கு மனம் வருமா?
நண்பர்கள் இப்படி என்றால் ஒரு அக்கா தங்கை கடன் கொடுத்த விபரத்தை பார்ப்போம்: தன் உடன் பிறந்த அக்கா மகன் வெளிநாடு செல்வதற்காக பணத்திற்கு சிரமபடுவதை பார்த்து தன்னிடம் உள்ள பணத்தை சகோதரிக்கு கடனாக கொடுக்கிறார். விஸாவுக்கு முயற்சித்து விஸா வரவில்லை. அவர் மகன் பயணம் போகவில்லை. பணம் கட்டிய இடத்திலிருந்து ஒரு வருடம் கழித்து பணம் வாங்கப்படுகிறது. ஆனால் இந்த கடனை அடைக்காமல் இருக்கிறார். அக்காவிடம் எப்படி கேட்பது அவராக தரட்டும் என்று (சில வருடங்கள்) காத்திருக்க அந்த அக்காவோ வெளிநாட்டில் இருக்கும் தன் கணவரிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க வேண்டும் என்று சொல்லாமல் நகை வாங்கி வாருங்கள் என்று சொல்கிறார். மேலும் தன் வீட்டை கட்டுவதற்கு பேங்கில் கடன் வாங்கி வீட்டை கட்ட ஆரம்பித்து விட்டார். தங்கைக்கு கோபம், பார்த்தார் வீடு கட்டிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் அக்காவிடம் பணத்தை திருப்பி கேட்காமல் இருந்தால் நம் பணம் வர வாய்ப்பே இருக்காது என்று நேரடியாக கேட்க தயங்கி வேறு ஒரு சகோதரியின் மூலம் சொல்லி பணத்தை வாங்கி விடுகிறார். கடன் கொடுத்ததால் அவர்களுக்குள் மனஸ்தாபம்.
மேற்கண்ட நால்வரின் மூலம் கிடைக்கும் படிப்பினை என்ன சொல்கிறது - கடன் கொடுத்தால் இப்படியெல்லாம் கஷ்டப்பட நேரிடுமா? என்று நினைக்க தோன்றுகிறது. மார்க்கம் அறிந்தவர்களும், அறியாதவர்களும், கடனைப் பற்றி மார்க்கம் என்ன சொல்கிறது என்று அறியாமல் இருப்பது தெளிவாகிறது.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தொழுகையில் துஆ செய்யும் போது, இறைவா! பாவத்திலிருந்தும், கடனிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவார்கள். (இதைச் செவியுற்ற) ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடன் படுவதிலிருந்து இவ்வளவு அதிகமாக பாதுகாப்புத் தேடுவதற்குக் காரணம் என்ன? என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் மனிதன் கடன்படும் போது பொய் பேசுகிறான். வாக்குறுதி தந்து (அதற்கு) மாறு செய்கிறான் என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா(ரலி) நூல்:புகாரி, எண்: 2397 )
கடன் வாங்கக் கூடாது என்ற உறுதியுடன் இது போல் நாமும் அல்லாஹ்விடம் துஆ கேட்க வேண்டும். அடுத்த தொடரில் இன்னும் எத்தனை வழிகளில் கடன் வாங்கப்படுகிறது என்று பார்ப்போம்.
அன்பு வாசக நெஞ்சங்களே! தாங்களும் கடன் கொடுத்து வாங்கியிருப்பீர்கள் வித்தியாசமான அனுபவங்கள் தங்களிடம் இருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இன்ஷாஅல்லாஹ் வளரும்..
-- அலாவுதீன்.S.
Source :http://adirainirubar.
No comments:
Post a Comment