அல்லாஹ்வின் திருப்பெயரால்...
அன்பார்ந்த சகோதர, சகோதரிகளே! ( அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) - இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
முதல் பாகத்தை படிக்காதவர்கள் படித்து விட்டு இந்த 2ம்தொடரை படிக்கவும். இரண்டாவது தொடர், வாசகர்களாகிய உங்களை சந்திக்க வந்து விட்டது. இனி தொடருவோம் வாருங்கள்:
வங்கி கடனும் மனிதர்களின் ஆசைகளும்

கார் கடன் - கார் நமக்கு வந்து விடுகிறது பணம் கட்ட தாமதமானால் காரும் பறிமுதல் செய்யப்படும்.
நகை கடன் தருகிறார்கள். நகையை குறிப்பிட்ட தவனைக்குள் மீட்க முடியாவிட்டால் நகையும் ஏலம்(பறி) போகும் அபாயம்.
இப்படி பல பெயர்களில் நூதனமான கடன் திட்டங்களை வங்கிகளும், தனியார் நிறுவனங்களும் கடன் வாங்கலையா? கடன் என்று (தள்ளுவண்டியில் காய்கறி விற்பவர் போல) தொடர்ந்து அறிவித்து (அலறி)க் கொண்டு இருக்கிறது. நாம் வாங்கும் கடன்கள் அனைத்தும் நம்மை வட்டி என்ற படுகுழியில் தள்ளி விடுகிறது. படுகுழியில் விழுந்தாலும் தட்டு தடுமாறி எழுந்து விடலாம். ஆனால் வட்டி என்னும் பாதாளத்தில் தவறி விழுந்தால் மீள்வது சிரமமே. கடன் கொடுக்கும் வங்கிகள், நிறுவனங்களின் சட்டதிட்டங்களின் படிவங்களை படிப்பதற்கு நம் கையில் ஒரு பூதக்கண்ணாடி இருக்க வேண்டும். கடன் கொடுக்கும் வங்கிகளின் இரட்டை நிலைப்பாடு கோடீஸ்வரனுக்கும் - சாமான்யனுக்கும் வித்தியாசப்படும். நம்மை கடனாளியாக்க துணைபுரியும் சாதனங்களில் தொலைக்காட்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு விளம்பரத்தை திருப்பி திருப்பி பார்க்கும்பொழுது அந்தப்பொருளை வாங்கியே ஆக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு நம்மை வலுக்கட்டாயமாக தள்ளிவிடுகிறது. (பயனுள்ள பொருட்கள் வாங்குவதில் பிரச்சனையில்லை) தேவையில்லாவிட்டாலும் கௌரவத்திற்காக கடன் வாங்கி தேவையற்ற பொருட்களை வாங்கி குவிப்பதில் நமக்கு ஒரு சந்தோஷம்.
கடன் அட்டை (Credit Card)
கடன் அட்டை வைத்திருப்பது கௌரவம் என்ற நிலைக்கு மனிதர்களை ஆளாக்கி விட்டது இந்த நவீன உலகம். வங்கிகளில் பணிபுரிபவர்கள் கேன்வாஸ் செய்கிறோம் என்ற பெயரில் உங்களுடைய சம்பளத்தை எங்கள் பேங்கில் டிரான்ஸ்பர் செய்யாமலேயே நாங்கள் கடன் தருகிறோம். (அதாவது உங்களை கடன்காரனாக்கி வட்டி என்ற கடலில் மூழ்கடித்து விடுவோம்) சம்பள சர்டிபிகேட் கொடுத்தால் போதும் என்று அவர்களின் விளக்கப்படிவத்தை தந்து விட்டு செல்கிறார்கள்.
முன்பெல்லாம் (கடந்த காலங்களில்) மனிதர்களின் மணிப்பர்சுகளில் பணமும் விசிட்டிங்கார்டுகளும் இருப்பதை பார்க்கலாம். ஆனால் இன்றோ கடன் அட்டை (Credit Card) வைத்திருப்பதுதான் கௌரவம் என்ற கலாச்சாரம் தற்பொழுது மக்களிடம் பரவி விட்டதால் அதிலும் பல வங்கிகளின் கடன் அட்டைகள் கலர் கலராக மணிப்பர்சுகளில். இப்பொழுதெல்லாம் பணம் வைத்திருப்பதையே கௌரவ குறைச்சலாக நினைக்கும் மக்கள் உருவாகிக்கொண்டு இருக்கிறார்கள். கடன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு வணிக நிறுவனங்கள் வழங்கும் சலுகை திட்டங்களோ கார்டை பயன்படுத்தியே ஆக வேண்டும் என்பது போல் இருக்கும்.
கடன் வாங்கக்கூடாது என்று உறுதியாக வாழும் மனிதர்களையும் வங்கியில் பணிபுரியும் கடன் அட்டை பிரிவு விற்பனை பிரதிநிதிகள் சந்தித்து கவர்ச்சிகரமான திட்டங்களை கூறி கடன் (பிறகு வட்டி) என்னும் வலையில் விழ வைத்து விடுகிறார்கள். கடன் அட்டையால் நமக்கு நன்மைகள் 5% அல்லது 10% இருக்கலாம் ஆனால் தீமைதான் அதிகமாக ஏற்படுகிறது. அது என்ன தீமை? நாம் கடைகளுக்கு சென்றால் பொருள்களை பார்த்து பார்த்து வாங்குவோம். அதிகமாக எடுத்து விட்டாலும் மணிப்பர்சில் இருக்கும் பணத்திற்குள் பொருள்களை எடுத்துக்கொண்டு மீதியை திருப்பி கொடுத்து விடுவோம். ஆனால் கடன் அட்டை கையில் இருக்கும்பொழுது நம்மிடம் கட்டுப்பாடு இருக்காது. தேவைக்கு மீறி பொருள் வாங்கும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் பணம் வங்கியில் செலுத்தப்படாத காரணத்தால் வட்டி நீளும் எதுவரை? வக்கீல் நோட்டீஸ் வரை....
இன்ஷாஅல்லாஹ் வளரும்...
Source : http://adirainirubar.blogspot.com/2010/10/2.html
No comments:
Post a Comment