Tuesday, October 26, 2010

இடங்களின் தேவை இறைவனுக்கு இல்லை.


God is Nothing but a projection of man on a cosmic screen.
- Julien Huxely

“இறைவன் என்பது பிரபஞ்சம் என்னும் திரையில் மனிதன் கற்பனை செய்து உருவாக்கிய ஓவியமாகும்” என ஐரோப்பாவின் முக்கியமான சிந்தனையாளர்களின் ஒருவரான ஜூலியன் ஹக்ஸ்லி என்பவர் தனது Religion without revelation, page 19.ல் எழுதியுள்ளதாக கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி எழுதிய “மதமும் அறிவியலும்” எனும் நூலிலில் குறிப்பிடுகின்றார். 


கலாநிதியவர்கள் சுட்டிக் காட்டுவதைப் போன்ற இறைமறுப்பு வாசகங்களை பல்வேறு வகையில் அடிக்கடி நாம் படிக்க நேருகின்றது.

“இறைவன் இருக்கின்றானா?
மனிதன் கேட்கின்றான்
அவன் இருந்தால் உலகத்திலே
எங்கே வாழ்கின்றான்?” என்பது போன்ற வாசகங்கள் பாடல் ரூபத்தில் போகிற போக்கில் நம் காதுகளில் விழுகின்றது.

நம்மைச் சுற்றி இப்படி பல்வேறு வகைகளில் இறைவனின் இருப்பைப் பற்றிய கேள்விகள் விதவிதமாக எழுப்பப்படுகின்றது.இறைவனைப் பற்றிய அறிவு ஒரு இறை நம்பிக்கையாளனின் முதல் கடமை என்ற வகையில் இறைவனின் இருப்பைப் பற்றிய தெளிவை ஆகுமான வழிகளில் குர்ஆன், ஹதிஸின் படி அறிய வேண்டியது நம் மீது கடமையாக இருக்கிறது. அந்த தெளிவைத் தேடும் சிறு முயற்சியாக இந்த கட்டுரை உங்கள் பார்வைக்கு வைக்கப்படுகின்றது. 

அல்லாஹ் இருந்தான். அவனோடு எந்த படைப்பும் (வஸ்துவும்) இருக்கவில்லை என்பது புகாரி ஷரீபில் உள்ள நபிமொழி. காலம், இடம் என்பதெல்லாம் அல்லாஹ்வால் படைக்கப்பட்டது. காலம், இடம் மட்டுமின்றி எந்த ஒரு படைப்பும் அவனை கட்டுப்படுத்துவது என்பது சாத்தியமே இல்லை. வரையறைகளுக்குட்பட்ட அனைத்தையும் படைப்பவன் அல்லாஹ்.
காலம், இடம் இவைகளால் கட்டுப்பட்டு, இடைவிடாமல் மாற்றங்களுக்குட்பட்டு வருவது சிருஷ்டிகளின் நிலை. இடைவிடாமல் நிலை மாறும் சிருஷ்டிகள் அனைத்துடனும் இருந்து அவைகளின் நிலைமாற்றங்களை படைத்து இயக்கி, வளர்த்து, வாழவைத்து வருபவன் அல்லாஹ். அதனால் காலம், இடம் என்பதை எல்லாம் படைப்பதற்கு முன்பு அல்லாஹ் எப்படி இருந்தானோ (ஹுவ அல் ஆன காமா கான) அந்த அவனது ஆதி நிலையில் எந்த மாற்றமும் இல்லை.

அர்ஷின் தேவை அல்லாஹ்வுக்கு இல்லை:
அல்லாஹ் அர்ஷில் இருக்கின்றான் என்பது மறுக்க முடியாத உண்மை. இதை மறுப்பது குர்ஆனை மறுக்கும் நிராகரிப்பில் முடியும். அதைப் போலவே அல்லாஹ் நம் பிடறி நரம்பை விட சமீபமாக இருக்கின்றான்(50:16) என்பதும், நீங்கள் எங்கே இருந்தாலும் அவன் உங்களுடனே இருக்கின்றான் (57:4) என்பதும் குர் ஆன் கூறும் உண்மைகள் என்பதை மறந்துவிட வேண்டாம். இதை மறுப்பவர்கள் கூறுவது என்ன? 

அல்லாஹ் அர்ஷில் மட்டும் தான் இருக்கின்றான். அவன் அங்கிருந்த வண்ணமே அனைத்தையும் கண்காணித்துக் கொண்டும், கவனித்துக் கொண்டும் இருக்கின்றான். அனைத்துமே அவனது ஞானத்திற்கும், பார்வை, மற்றும் செவிப்புலன்களுக்கும் உட்பட்டவைகள் தாம் என்பதாகும்.

இப்படி கூறுவதன் மூலம் அல்லாஹ்வை அர்ஷில் மட்டும் இருப்பவனாக வரையறை செய்வதாய் இருந்தால் பின் வரும் கேள்விகள் எழுகின்றது. 

அர்ஷு என்பது எவ்வளவு பெரியதாக இருந்தாலும் அதற்கும் மேல், கீழ், முன், பின், இடம், வலம் என்ற திசைகள், எல்லை, அளவு, இடம், வடிவம், காலம் இருக்கிறது. அப்படிப்பட்ட அர்ஷில் தான் அல்லாஹ் இருக்கின்றான் என்றால் அல்லாஹ்வுக்கும் எல்லை, திசை, அளவு, இடம், வடிவம் காலம் வகுத்து விட்ட குற்றம் நேரிடும். காலம், இடம், ஏன் எந்த ஒன்றுக்கும் கட்டுப்பட்டவன் அல்ல அல்லாஹ். இவைகளையும் இந்த வரையறைகளுக்குட்பட்ட அனைத்தையும் படைத்தவன் அல்லாஹ். 

அர்ஷும் படைக்கப்பட்ட ஒன்றுதான். அதனால் புதிதாக வந்தது தான். அவன் இருப்பதற்கு அர்ஷு என்பது தேவை என்றால் அர்ஷை படைப்பதற்கு முன்பு அல்லாஹ் எங்கிருந்தான்?

எவ்வளவு மகத்தானதாக இருந்தாலும் அர்ஷ் என்பதும் ஒரு சிருஷ்டிதான். புதிதாக படைக்கப்பட்ட அர்ஷு என்னும் ஒரு சிருஷ்டியுடன் இருக்கும் அல்லாஹ் மற்ற சிருஷ்டிகளுடன் ஏன் இருக்க முடியாது?

தன் இருப்பைப் பற்றி இறைவன் கூறுவதென்ன? அதைப் பற்றிய நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் விளக்கம் என்ன? அந்த விளக்கத்தைத் தங்கள் நம்பிக்கையாக்கிக் கொண்ட இறையியல் அறிஞர்களின் கருத்து என்ன? என்பதைச் சுருக்கமாக பார்ப்போம்:
فَأَيْنَمَا تُوَلُّواْ فَثَمَّ وَجْهُ اللّه (2:115)
كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ (55:26)
وَيَبْقَى وَجْهُ رَبِّكَ ذُو الْجَلَالِ وَالْإِكْرَامِ (55:27)
எங்குத் திரும்பினாலும் இறைவனின் திருமுகம் இருக்கின்றது (2:115) என்ற வசனமும், (பூமியாகிய) இதன் மேலுள்ள ஒவ்வொன்றும் அழியக்கூடியதே மிக்க கண்ணியமும், வல்லமையும் கொண்டவனான உம்முடைய ரட்ஷகனின்(ரப்பின்) முகமே நிலைத்திருக்கும்.(55: 26,27) என்ற வசனமும் கால, நேர, இடம் என்ற எல்லைகளுக்கு அப்பாற்பட்டவன், இன்னும் எந்தக் காலத்திலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் இருக்க கூடியவன் இறைவன். இடையில் தோன்றி இடையில் மறைவது என்பது படைப்பினங்களின் நிலை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது.
هُوَ الْأَوَّلُ وَالْآخِرُ وَالظَّاهِرُ وَالْبَاطِنُ وَهُوَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
அவனே துவக்கமானவன், முடிவானவன், வெளியானவன், உள்ரங்கமானவனாகவும் இருக்கின்றான், அவனே அனைத்து வஸ்த்துக்களையும் (சிருஷ்டிகளையும்) அறிகின்றான்.(57:3)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இந்த ஆயத்திற்கு இவ்வாறு விளக்கம் கூறுகின்றார்கள்.
"اللهم انت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وانت الظاهر فليس فوقك شيء وانت الباطن فليس دونك شيء"
(مسلم عن ابي هريرة رضي الله عنه)

இறைவா நீயே ஆரம்பமானவன் உனக்கு முன் எந்தச் சிருஷ்டியும் இல்லை. நீயே இறுதியானவன் உனக்குப் பின் எந்த சிருஷ்டியும் இல்லை. நீயே வெளியானவன் உனக்கு மேல் எந்தச் சிருஷ்டியும் இல்லை. நீயே உள்ரங்கமானவன் உன்னையன்றி எந்தச் சிருஷ்டியும் இல்லை. (முஸ்லிம் ஷரீப்)
அபூ மூசா அல்அஷ்அரீ (ரலி) என்ற நபித் தோழர் கூறியதாவது: நாங்கள் ஒரு போரில் (கைபரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது நாங்கள் ஒரு மேட்டின் மீது ஏறும் போதும், ஒரு கணவாயில் இறங்கும் போதும் உரத்தக் குரலில் ‘அல்லாஹூ அக்பர் (இறைவன் மிகவும் பெரியவன்)’ என்று கூறிக்கொண்டிருந்தோம். அப்போது எங்கள் அருகில் வந்த நபி (ஸல்) அவர்கள், மக்களே! உங்களை நீங்கள் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள் (மென்மையாக கூறுங்கள்) ஏனெனில் நீங்கள் காது கேளாதவனையோ, இங்கு இல்லாதவனையோ அழைக்கவில்லை. நன்கு செவியுறுபவனையும், (எல்லோரையும்) பார்ப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். உங்களில் ஒருவர் தனது வாகன ஒட்டகத்திற்கு எவ்வளவு நெருக்கமாக உள்ளாரோ அதை விட நெருக்கமாக நீங்கள் யாரை அழைக்கின்றீர்களோ அவன் இருக்கின்றான்” என்று கூறினார்கள்.

“தப்ஸீர் இப்னுகஸீர்” என்னும் திருக்குர்ஆன் விரிவுரையில் இறைவன் எங்கே இருக்கின்றான்? என்ற தலைப்பின் கீழ் புகாரி ஷரீஃபில் உள்ள இந்த நபிமொழியை இப்னு கஸீர் (ரஹ்) பதிவு செய்துள்ளார்கள். (பாகம் 1 பக்கம் 465-466)
எந்த ஒரு குறிப்பிட்ட இடத்தில் மட்டும் அல்லாஹ் இருக்கின்றான் என விளங்குவது தவறான கொள்கையாகும்.
எவர் அல்லாஹுத் தஆலாவை மேற்பக்கமாகவோ அல்லது கீழ்பக்கமாகவோ மட்டுப்படுத்துகின்றாரோ திட்டமாக அவர் காபிராகிவிட்டார் என்று இமாம் அபூஹனிபா(ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.(நுஜ்ஹத்துல் மஜாலிஸ் பாகம் 1 பக்கம் 6) 

அல்லாஹ்வை நெருக்கமாக விளங்குவது தான் நபி வழி நம்பிக்கை: திரும்பும் திசை எல்லாம் தன் திருமுகமிருப்பதாக இறைவன் கூறும்போது பெருமானார் அதற்கு மாற்றமான விளக்கம் கொண்டிருந்தார்கள் என எண்ணிப் பார்க்கக் கூட முடியாது. பெருமானார் (ஸல்) தங்கள் போதனையின் மூலம் அல்லாஹ்வை பிடரி நரம்பை விட சமீபமானவனாக காட்டித் தந்தார்கள் என்பதை மேலே கூறப்பட்டுள்ள நபிமொழிகளிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். மேலும் அல்லாஹ்வை தூரமாக விளங்குவது தான் இணைவைப்பின் பக்கம் அழைத்துச் செல்லும் தலைவாசல் என்பதையும் நாம் தெளிவாக விளங்க வேண்டும். 


குறைஷி காஃபிர்களின் அல்லாஹ்வை தூரமாக விளங்கி இருந்தார்கள்: அரபகத்தில் வாழ்ந்த நிராகரிப்பாளர்கள் அல்லாஹ்வை வெறுத்தவர்களுமில்லை. மறுத்தவர்களுமில்லை. அல்லாஹ்வை வணக்கத்திற்குரியவனாக விளங்கிருந்தார்கள் இன்னும் வணங்கியும் வந்தார்கள். பின் என்ன தவறு செய்தார்கள். காலம் காலமாய் நபிமார்களின் வழியாக வந்த இறைநெருக்கத்தைப் பற்றிய விளக்கமின்மையால் அல்லாஹ்வை தூரமாக விளங்கியிருந்தார்கள். அதனால் அல்லாஹ்வை வணங்குவதுடன் அல்லாஹ் அல்லாதவைகளையும் வணங்கி வந்தார்கள். அவர்கள் ஏன் அவ்விதம் வணங்கினார்கள் என்பதை விளக்கும் பின் வரும் இறைவசனமே இதற்கு சாட்சி.

எங்களை அல்லாஹ்வின் பக்கம் நெருக்கமாக்கி வைக்கும் என்பதற்காகவே தவிர (இவைகளை நாங்கள் வணங்கவில்லை)(39:3)

“நமது சகல கேடுகளுக்கும் மூலக்காரணம் இறைவனை விட்டுத் தூரமாகி கிடப்பதும், இறைவனல்லாதவற்றை பற்றிப் பிடித்து கொண்டிருப்பதுமேயாகும்” என சைய்யதினா முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) கூறுகின்றார்கள்.

நபிமார்களின் முக்கிய சேவையே இறை நெருக்கத்தை காட்டித் தந்து, மனிதர்கள் தங்களின் அனைத்து தேவைகளுக்கும் அவனையே முன்னோக்கி, அவனைக் கொண்டே வாழச் செய்வதேயாகும். ஆகவே, குர் ஆன், ஹதீஸ் அடிப்படையில் இறைவனின் நெருக்கம் (குர்பத், அக்ரபியத்) பற்றி முறையாக உணர்வது தான் நம் பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வாகும். உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ் அந்த பாக்கியத்தை வழங்குவானாக ஆமீன்.
ஒ.நூருல் அமீன்
by mail  from    nabineassn nabi

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails