Wednesday, October 13, 2010

சென்னையில் இருந்து முதல் ஹஜ் குழு புறப்பட்டு சென்றது - மு.க.ஸ்டாலின் வழியனுப்பி வைத்தார்

சென்னயைில் இருந்து ஹஜ் பயணம் செல்லும் முதல் குழு புதன் கிழமையன்று புறப்பட்டுச் சென்றது. 460 பயணிகளுடன் சென்ற முதல் குழுவை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி.ஆகியோர் வழியனுப்பி வைத்தனர்.

முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை நிறைவேற்றுவதற்காக, சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 5022 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த புனித ஹஜ் பயணத்திற்காக 11 விமானங்கள் இயக்கப்படுகின்றன. முதல் விமானம் சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 460 பேர் சென்றனர்.

ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி, அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் ஆகியோர் சால்வைகளை தந்து புனித பயணம் சிறப்பாக அமைய வாழ்த்து கூறி வழியனுப்பி வைத்தனர். இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவரும், தமிழக ஹஜ் கமிட்டி தலைவருமான பிரசிடென்ட் அபூபக்கர், இந்திய குழு செயல் அலுவலர் டாக்டர் ஜாகீர் உசேன், தமிழக அரசு செயலாளர் அலாவுதீன் ஆகியோரும் அவர்களை வாழத்தி அனுப்பி வைத்தனர்.

பின்னர் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில், "புனித ஹஜ் பயணிகளை தமிழக முதல்வர் சார்பில் வாழ்த்தி வழியனுப்ப வந்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். தமிழகத்தில் இஸ்லாமிய மக்கள் தொகை அடிப்படையில் 2700 பேர் புனித ஹஜ் பயணத்திற்கு சென்றனர். இந்த பட்டியலை அதிகப்படுத்தி தரவேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் கலைஞர் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் 4241 பேர் செல்கின்றனர். ஹஜ் பயணிகள் எந்த வித சிரமமும் இன்றி புனித பயணத்தை நிறைவேற்ற தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன'' என்று கூறினார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails