Tuesday, October 5, 2010

காயல் நகர் எது? வரலாறு தரும் உண்மை! அதிரை ஹிதாயத்

காயல் நகர் எது? வரலாறு தரும் உண்மை! அதிரை ஹிதாயத்

நாம் முந்திய கட்டுரை தொடரில் "கலீபா அல்வாதிக் பெரும் கொடுமை இழைத்த பொழுது கெய்ரோ அருகில் முகத்தம் மலையடிவாரத்தில் வாழ்ந்து வந்த முஸ்லிம்கள் ஆண்கள்,பெண்கள்,குழந்தைகளுமாக 224 பேர் பக்ரீ குடும்பத்தை சேர்ந்த முஹம்மது கல்ஜி என்பாரின் தலைமையில் மரக்கலமேறி கி.பி.875ல் (கி.பி. 842ஆம் ஆண்டு என்ற கருத்தும் உள்ளது) இந்தியாவின் கீழ்க்கடற்கரையில் உள்ள ஒரு பகுதியில் வந்திறங்கினர். அந்த இடத்தை பழைய காயல் என்று வழங்கப்படுகிறது." என்று முடித்திருந்தோம்.

அந்த காயல் நகர் எதுயென்பதை இப்போது பார்போம்....

காயல் நகரிலிருந்துதான் அதிராம்பட்டினத்திற்கு முஸ்லிம்கள் குடியேறியதாக வரலாற்று வழிச்செய்திகள் கூறுகின்றன.

காயல் என்னும் ஊரிலிருந்துதான் குடியேற்றம் நிகழ்ந்தது என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை.

ஆனால், அது எந்த காயல் நகர் என்பது நாம் பல வரலாற்று நூல்களை படிக்கின்றபோது ஏற்படுகின்ற சந்தேகமாகும்.

இதுவே ஆய்வு செய்வதற்கு உந்து சக்தியாக அமைந்தது!

"திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டம் தாலுக்காவில் அட்ச ரேகை வடபால் 8.34 தென்பால் 78.8 ல் அமைந்துள்ள காயல்பட்டினம் என்னும் ஊர் பழைய காயலின்றும் வேறுபட்டதாகும்.

இதனை இம்பீரியல் கெஜட்டீர் ஆப் இந்தியா(தொகுதி 15 பக்கம் 195) காட்டுகின்றது.

தாமிரபரணிக்குத் தெற்கு, தூத்துக்குடியிலிருந்து 18 மைல் தெற்காம அமைந்துள்ள இவ்வூரினை காயல் என்னும் ஊராக கருதி மயங்குதல் கூடாது என்பதாக அதில் கூறப்பட்டுள்ளது."(1)

திருநெல்வேலி மாவட்டம் காயல்பட்டினம் உண்மையான காயல் நகர் இல்லை என்பதற்கு இதுவே போதுமான சான்றாகும்.

தமிழ்நாடின் தென்பகுதி ராமநாதபுரம் நகரிலிருந்து பத்து மைல் தொலைவில் 9‍-14-80-50-10 என்னும் அட்ச ரேகையில் அமைந்துள்ள(2) கீழக்கரைதான் உண்மையான பூர்வீக காயல் நகர் என வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன.

கீழக்கரைதான் காயல் என்றும் தென்காயல் என்றும் இருந்ததாக மதுரைத்தமிழ் சங்க புலவராக இருந்த செய்யது முகமது ஆலீம் புலவர் தமது மஜ்முஉல் முனாஜாத்(பக்கம்19) என்னும் நூலில் குறிப்பிடுகிறார்கள்.

இதுப்பற்றியே கீழக்கரையில் சீதக்காதி வள்ளல் கொலுவீற்றிருக்கின்ற காட்சியை நேரிற்கண்ட நொண்டி நாடக ஆசிரியர் அவரை காயற்றுரை செய்தக்காதி, காயல் நகரன், காயல் மன்னவன் செய்தக்காதி என்றெல்லாம் போற்றுகின்றார்.

தனிப்பாடல்களிலும் காயலாதிபனே, தென்காயற்பதியானே, காயல் துரை என்னும் தொடர்களையும் பார்கின்றோம்.(3)

சீதக்காதி என்ற செய்யது அப்துல் காதர் மரைக்காயர் அவர்கள் இன்றைய கீழக்கரையைச் சேர்ந்தவர்தான் என்பது கவனிக்கத்தக்கது.

ஆக, இன்றைய கீழக்கரைதான் பண்டைய காயல் நகர் என்பது திண்ணம்!

"பழைய காயல் துறையிலிருந்து கடல் விலகி சென்றதன் காரணமாக அத்துறை தன் சிறப்பினை இழந்த போது அங்கிருந்த மக்கள் வேறு ஊர்களுக்கு சென்று குடியேற தொடங்கினார்கள். பரங்கிப்பேட்டை,முத்துப்பேட்டை போன்ற இடங்களுக்கும் சென்றதுடன் தங்கள் பழம் பகுதியின் பெயரைக் கொண்ட புதிய ஊர்களாகிய பின்னைக்காயல், காயல்பட்டினம் ஆகிய ஊர்களையும் அமைத்தனர்.(4)

என்கிற வரலாற்று சான்றுகளிலிருந்து நமக்குள்ள பல சந்தேககங்களை நிவர்த்தியாக்கின்றன. பண்டைய காயலில் இருந்து வெளியேறிய முஸ்லிம்களே பல்வேறு கடற்கரை பட்டினங்களிலும் குடியேறினர் அவர்களில் சிலரே தங்களின் பழைய இருப்பிடத்தின் நினைவாக ஊர்கலையும் அமைத்து அதன் பெயர்களையும் சூட்டி மகிழ்ந்தனர். அந்த வகையில் உருவானதுதான் இன்றைய காயல்பட்டினமாகும்.

அதுப்போலவே காயலில் (கீழக்கரை) இருந்து வெளியேறிய மக்கள் அமைத்த ஊர்களில் ஒன்றுதான் அதிராம்பட்டினமாகும். அம்மக்கள்தான் அதிராம்பட்டினத்தின் முதல் குடிமக்களாவார்கள்.

உசாதுணை குறிப்புகள்:
(1) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 63
(2) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 26
(3) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 31,32
(4) வள்ளல் சீதக்காதியின் வாழ்வும் காலமும். பக்கம் 64

இன்னும் பல வரலாற்று குறிப்புகள்

ஏ.ஆர்.ஹிதாயத்துல்லாஹ் எழுதிய 'ஒரு பட்டினத்தின் கதை' புத்தகத்திலிருந்து
Source : http://adiraihistory.blogspot.com/2010/10/blog-post_03.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails