Friday, October 29, 2010

பா.தாவூத்ஷா ஓர் அறிமுகம்

தஞ்சை மாவட்டம். கும்பகோணம் தாலுக்காவில் அமைந்துள்ள (நறையூர் எனும்) நாச்சியார்கோவிலைச் சேர்ந்தவர் பா.தா. என அழைக்கப்படும் பா.தாவூத்ஷா. இவர் 1885ஆம் ஆண்டு பிறந்தார். தமிழக மக்களிடத்து அதுவும் குறிப்பாய் தமிழக முஸ்லிம்களிடத்து கல்வியறிவு மிகவும் மங்கியிருந்த காலத்திலேயே B.A. பட்டம் படித்துத் தேறியவர். தமிழில் மதுரைத் தமிழ்ச் சங்கப் பரீட்சையில் முதல்வனாய்த் தேறி தங்கப் பதக்கம் பரிசு பெற்றவர். ஆகையினால் ஆங்கிலத்திலும், தமிழிலும் வல்லமை பெற்றிருந்தார்.

ஒன்பது ஆண்டுகள் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவர், 1921-ல் தன் சப் மாஜிஸ்திரேட் பதவியை இஸ்லாம் மீது கொண்ட பற்றினாலும், மெளட்டீகத்தில் மூழ்கிக்கிடந்த தமிழ் முஸ்லிம்களை தட்டி எழுப்பி தீன் அறிவை புகட்ட வேண்டிய கடமையினாலும், அப்பொழுது நிகழ்ந்து கொண்டிருந்த கிலாபத் புரட்சியின் போது ராஜினாமா செய்து விட்டு, மார்க்க சேவையே தனது வாழ்க்கை என நிர்ணயித்துக் கொண்டவர்.
துண்டுப் பிரசுரமாக 1919-இல் துவங்கிய அவரது இஸ்லாமிய ஊழியம்  எனும் மாதாந்திரப் பத்திரிகையாய் பரிணமித்து, அது மாதமிருமுறை இதழாகி, வார இதழாகி, வாரமிருமுறை இதழாகி, நாளிதழாகி ஏறக்குறைய 40 வருடங்கள் இஸ்லாமிய இதழ்களில் கொடிகட்டிப் பறந்த இதழ. தமிழக முஸ்லிம்கள் மத்தியில் ஒரு மாபெரும் கிளர்ச்சியையும், மன மாற்றத்தையும் நிகழ்த்தி சாதனை புரிந்தது ”தாருல் இஸ்லாம்”. அது ஒரு வரலாறு.
பா. தாவூத் ஷா
ஆங்கிலமும் தமிழும் “காபிர்“ மொழிகளாக தென்னகத்து மௌலவிகளாலும் ஆலிம்களாலும் பிரகடணப்படுத்தப்பட்டு, தமிழக முஸ்லிம்கள் குர்ஆன் கூறுவது இன்னது, நபி மொழி பகர்வது இன்னது என ஏதொன்றும் அறியாமல், அந்த மௌலவிகளும் ஆலிம்களும் கூறும் முற்றும் தவறான முறனான வியாக்கியானங்களில் தமதறிவை அடகிட்டிருந்த காலகட்டத்தில் குர்ஆனை தமிழ் மக்கள் தெள்ளு தமிழில் முறையாய் அர்த்தம் உணர வேண்டும் என தமிழிலேயே முதன் முறையாய் ”குர்ஆன் மஜீத்” பொருளுரையும் விரிவுரையும் எழுத ஆரம்பித்து, தனது மூத்த மகன் N.B.அப்துல் ஜப்பாருடன் அவர் சாதித்தது - அது ஒரு வரலாறு.
மேலும் தமிழக முஸ்லிம்களுக்காக தூய தமிழில், நாயகம் (ஸல்) அவர்களின் ஆதாரப்பூர்வ வரலாற்றை நாயக மாண்மியம் என எழுதி வெளியிட்டது, முதல் நான்கு கலீபாக்களின் வரலாற்றை ”குலபாஎ ராஷீதீன்” என நான்கு புத்தக தொகுப்பாய் எழுதி வெளியிட்டது, முதன் முதலாய் சஹீஹ் புகாரியிலிருந்து குறிப்பிட்ட ஹதீத்களை தமிழில் மொழிபெயர்த்து எழுதியது, ஏறக்குறைய 100 புத்தகங்கள், பற்பல கட்டுரைகள் என எழுதியது - அது ஒரு வரலாறு.
அல்லாஹ்வின் பேரருளால் இன்று தமிழக முஸ்லிம்கள் மத்தியில் கல்வியறிவு பரவலடைந்து, மார்க்க விஷயத்தில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்பட்டள்ளது. குர்ஆன், நபிகள் நாயகத்தின் (ஸல்) வரலாறு, ஹதீத் தொகுப்புகள் மற்றும் மாபெரும் இஸ்லாமிய கிரந்தங்களின் தமிழ் மொழிபெயர்ப்புகள் என வரத் துவங்கிவிட்ட நிலையிலுங்கூட இன்றும் மௌட்டீக மௌலவிகள் ஆலிம்கள் ஆகியோறால் நேர் மார்க்க முஸ்லிம்கள் மீது நிகழ்த்தப்பெற்று வரும் போரை காணும் இத்தலைமுறையினர் ஏறக்குறைய 100 ஆண்டுகளுக்கு முன்னர் துவங்கப்பெற்ற பா.தா.வின் இந்த விழிப்புணர்வு தொண்டு எத்தகைய கடுமையான சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து சாதனை புரிந்திருக்கும் என ஓரளவு யூகித்துக் கொள்ளலாம். எவ்வாறான போராட்டங்களையெல்லாம் கடந்திருக்கும் என புரிந்து கொள்ளலாம். அது ஒரு வரலாறு.
தற்கால தமிழக முஸ்லிம்கள் அறியாமல் போன, தமிழக முஸ்லிம்களின் இஸ்லாமிய மேன்மையே தனது வாழ்க்கையின் இலட்சியம் என வாழ்ந்து வறுமையில் உழன்று மறைந்த அந்தத் தூய இஸ்லாமியப் பெரியவர் பா.தா.வின் வரலாற்றுப் பதிவே இந்த இணையத் தளம். தற்கால தமிழக முஸ்லிம்களும் இனிவரும் காலத்தவரும் இப்படியொருவர் இருந்தார், இப்படியெல்லாம் உழைத்தார், இதோ இன்று மலரும் விழிப்புணர்வுக்கு வித்திட்டார் என அறிந்து கொள்ளட்டும் என்பதே இந்த இணையத் தளத்தின் நோக்கம்.
பா.தா.வின் மூத்த மகன் N.B.அப்துல் ஜப்பார் B.A., அவருடன் இணைந்திருந்து ஆற்றிய தொண்டும், எழுத்தாசிரியராய் அவர் சாதித்தனவும் தொகுக்கப்பட்டுள்ளது. அதுவும் தற்கால தலைமுறையினர் படித்தறிய வேண்டிய பதிவு.
எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் உழைப்பை ஏற்றுக்கொண்டு அவர்களின் மீது கருணை பொழிந்து மறுமையில் தக்க நற்கூலி வழங்குவானாக. ஆமீன்.


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails