சென்னை: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தமானது என்பது தொடர்பான வழக்கு அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்சில் கடந்த 61 ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த வழக்கில் என்ன தீர்ப்பு வழங்கப்படும் என்பதை நாடே பரபரப்பாக எதிர்பார்த்து வந்தது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 4 மணிக்கு அலகாபாத் ஐகோர்ட்டு லக்னோ பெஞ்ச் தீர்ப்பு வழங்கியது.
அயோத்தி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பினை ஆதரித்தும், எதிர்த்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தீர்ப்பு தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- நாட்டில் அமைதி காண்பது என்ற அடிப்படையில் இரு தரப்பினரும், திருப்தி அடையக்கூடிய தீர்ப்பு. இந்த தீர்ப்பில் குறை காண்பவர்கள், மேல்முறையீடு (அப்பீல்) செய்யவும் வழிவகுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியுள்ளார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்ட செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:- பிரச்சினைக்குரிய பாபர் மசூதியின் உரிமை தொடர்பான தீர்ப்பு, 60 ஆண்டுகளுக்குப் பிறகு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்டுள்ளது. நீதிபதிகள் யு.எஸ்.கான், சுதிர் அகர்வால் மற்றும் டி.வி. சர்மா ஆகியோர், சம்பந்தப்பட்ட நிலத்தை மூன்றாக பிரித்து, தொடர்புடைய 3 தரப்பினருக்கும் அளிக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளார்கள்.
நீண்ட காலமாக மதப்பிரச்சினைகளை உருவாக்கி வருவதும், தீயைப் போன்ற ஆபத்து மிகுந்ததுமான இந்த விவகாரத்தில், நீதிபதிகள் பாராட்டத்தக்க தீர்ப்பை அளித்திருக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன். சமாதான கதவை திறக்கும் வகையில் இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது. எனவே, இந்த தீர்ப்பினை சம்பந்தப்பட்ட தரப்பினர் அனைவரும் முழுமனதுடன் பாராட்டி ஏற்றுக் கொண்டு, ஒரு நல்ல முடிவு ஏற்படவும், ஒரு சிறந்த மதச்சார்பற்ற நாட்டுக்கான முன்னுதாரணமாக இந்தியா விளங்குவதற்கு வழிவகுக்கவும் வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
Source : http://www.inneram.com/2010100110936/tn-leaders-thoughts-about-ayodhya-judgement
No comments:
Post a Comment