Saturday, October 23, 2010

இந்தியாவில் ஆர்க்கிடெக்டுகளுக்கு வளமான எதிர்காலம் – Special Report

இனியவன்
 
இந்தியாவில் பல்கலைக் கழகங்களில் படித்துப் பட்டம் பெற்ற பட்டதாரிகளுக்கு உள்ள மிகப்பெரும் சவால் படிப்புக்கேற்ற வேலை கிடைப்பது தான். ஏனென்றால் ஒரு குறிப்பிட்ட துறையில் படிப்பவர்களை விட வேலைகள் குறைவாக இருப்பது தான். ஆனால் இந்தியாவில்  5 இலட்சம் ஆர்க்கிடெக்டுகள் தேவைப்படும் நிலையில் அதில் பத்தில் ஒரு பங்கு தான், அதாவது வெறும் 50 ஆயிரம் பேர் தான் ஆர்க்கிடெக்டுகளாக பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் தற்போது அதிகமாகக் கட்டப்பட்டு வரும் வணிக வளாகங்கள், கட்டிடங்கள் ஆகியவற்றோடு ஒப்பிடும் போது நாம் போதிய அளவு ஆர்க்கிடெக்டுகளை உருவாக்குவதில்லை என்று கூறுகிறார் ஆர்க்கிடெக்சர் கவுன்சிலின் தலைவரான விஜய் கிருஷ்ண சோஹானி. தேவை அதிகமாக இருந்த போதிலும் ஐ.டி அல்லது மெக்கானிகல், எலக்டிரிகல் இஞ்சினியரீங் போன்று இது அவ்வளவாக விரும்பிப் படிக்கப் படுவதில்லை.

இந்தியா முழுவதும் 170 ஆர்க்கிடெக்சர் கல்லூரிகளே உள்ளன. அவற்றில் அரசாங்க கல்லூரிகள் 23 மாத்திரமே. ஒரு வருடத்திற்கு சுமார் 3000 - 4000 நபர்கள் மாத்திரமே ஆர்க்கிடெக்டுகளாக வெளியேறுகின்றனர். ஒரு கோடி நபர்களுக்கு 5,450 ஆர்க்கிடெக்டுகளே உள்ளதாக சொல்கிறார் அண்ணா பல்கலைகழகத்தின் ஆர்க்கிடெக்சர் துறை டீன் மன்சிங் தேவதாஸ்.

மற்ற துறைகளுடன் ஒப்பிடும் போது உடனடியாக அதிகப் பணம் சம்பாதிக்க முடிவதில்லை என்பதே மாணவர்களின் ஆர்வமின்மைக்கு காரணமாக சொல்லப்படுகிறது. ஒரு புதிய ஆர்க்கிடெக் தன்னை நிலை நிறுத்தும் முன் ஆரம்பமாக சிறு நகரங்களில் சுமார் 15,000 ரூபாயும் பெரு நகரங்களில் சுமார் 25,000 ரூபாயுமே சம்பளமாகப் பெற முடியும். ஓரளவுக்கு தன்னை நிலை நிறுத்தி கொண்ட அனுபவசாலியால் மாதம் 2 இலட்சம் வரை சம்பளமாகப் பெறலாம்.

ஆர்கிடெக்டுகளின் முக்கியத்துவம் அரசாங்கம் மற்றும் தொழில் துறைகளால் முழுமையாய் உணரப்படாததாலேயே அவர்கள் ஒப்பீட்டளவில் ஐ.டி. மற்றும் பிற இஞ்சினியர்களை விட குறைவாக சம்பளம் பெறுகின்றனர். மேலும் பல கல்லூரிகளில் ஆர்க்கிடெக்சர் என்பது தனி துறையாக இல்லாமல் ஒரு பாடமாக மட்டுமே சொல்லி கொடுக்கப்படுகிறது என்பதும் குறைபாடாக உள்ளது.

5 வருட ஆர்க்கிடெக் படிப்புக்கு அரசாங்க கல்லூரிகளில் சுமார் 15,000 ரூபாய் ஒரு வருடத்திற்கும் தனியார் கல்லூரிகளில் கல்லூரிக்கேற்ப சுமார் 1 முதல் 10 இலட்சமும் வசூலிக்கப்படுவதாக சொல்கிறார் பெங்களூரூவில் உள்ள ஆர்.வி. பொறியியல் கல்லூரி முதல்வர் கே.எஸ். அனந்த கிருஷ்னா. மேலும் கல்லூரிகளில் ஆர்கிடெக்ட் சொல்லி கொடுக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை 50 சதவிகிதமாக உள்ளது.

மஹாராஷ்டிராவில் 52 கல்லூரிகளும் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் முறையே 32, 26, 8, 8 கல்லூரிகள் உள்ளன. புதுச்சேரி மற்றும் பிஹாரில் தலா 2 கல்லூரிகளே உள்ளன. ஆனால் சீனாவில் 600 கல்லூரிகளும் அவற்றிலிருந்து வருடத்திற்கு 1,20,000 ஆர்க்கிடெக்டுகளும் உருவாகின்றனர். இந்தியாவில் வெறும் 3,000 நபர்களே வருடந்தோறும் ஆர்க்கிடெக்டுகளாக வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்வருடம் முந்தைய வருடங்களை விட இப்படிப்பில் 10 மடங்கு அதிகமாக மாணவர்கள் சேர்ந்திருப்பது நல்ல முன்னேற்றம் என்று சொல்லும் கல்வியாளர்கள் அதே சமயத்தில் இன்னும் அதிகமாக மாணவர்கள் இப்படிப்பில் சேர வேண்டும் என்று எதிர்பார்க்கின்றனர். மற்ற துறைகளை போல் ஆர்க்கிடெக்டில் இந்தியா விரைவில் குறிப்பிடத்தகுந்த இடத்தை பிடிக்கும் என்று நம்புவோம்.
Source :http://www.inneram.com/2010102311378/india-faces-large-shortage-of-architects?utm_source=feedburner&utm_medium=feed&utm_campaign=Feed:+inneram+%28

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails