Friday, July 20, 2012
நோன்பாளிகளே - 1
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே! (அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்) இறைவனின் சாந்தியும், சமாதானமும் தங்கள் மீது என்றென்றும் நிலவட்டுமாக!)
வல்ல அல்லாஹ்வின் அருளால் நோன்பு மாதத்தை அடைந்து நோன்பு வைத்தவர்களாக நாம் இருக்கிறோம். எல்லாப்புகழும் இறைவனுக்கே! (அல்ஹம்துலில்லாஹ்!) நாம் நோன்பிலும், பொதுவாகவும் கடைபிடிக்கும் காரியங்களைப் பற்றி பார்ப்போம்.
குர்ஆன்:
ரமலானின் தனிச்சிறப்பே இந்த மாதத்தில் குர்ஆன் அருளப்பட்டதுதான். அதனால் தினமும் குர்ஆனை நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம் ஓதி வாருங்கள். ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் அவசியம் ஓதுங்கள்.
முதல் நோன்பு தொழுகை:
முதல் நோன்பு ஆரம்ப தொழுகையில் பள்ளி முழுவதும் நிரம்பி வழிந்த தொழுகையாளிகளை காண்பதற்கு மனதிற்கு நிறைவாக இருந்தது. தினமும் தொடர்ந்து வருபவர்களுக்கு இடம் இல்லாமல் பல சப்கள் கடந்து நிற்கும் அளவுக்கு இஷா தொழுகை, இரவுத்தொழுகை, பஜ்ர் தொழுகைகளுக்கு வந்த மக்களை பார்க்கும்பொழுது ஜூம்ஆவின் ஞாபகம் வந்தது. இத்தனை கூட்டமும் மற்ற நேரங்களில் எங்கு போனார்கள். வல்ல அல்லாஹ் அனைவருக்கும் ஹிதாயத் வழங்கட்டும்.
ஆடை அலங்காரம்:
நம் சகோதரர்கள் ஒரு விருந்துக்கு செல்வதென்றாலும், ஆபிஸ்க்கு செல்வதென்றாலும் வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு நல்ல ஆடைகளை அணிந்து செல்கிறார்கள்.
ஜூம்ஆ தினத்தன்று சாதாரண ஆடைகளையோ, கசங்கி போனதையோ அணிந்து வருகிறார்கள்.
ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் : 7:31)
வல்ல அல்லாஹ் ஆடைகளால் உங்களை அழகாக்கிக் கொள்ளுங்கள் என்று கூறுகிறான். அதனால் வல்ல அல்லாஹ்வின் முன் தொழுகையில் நிற்கும்பொழுது சிறந்த ஆடைகளை அணிந்து நல்ல வாசனை திரவியங்களை பூசிக்கொண்டு வருவது சிறந்தது.
கொட்டாவி :
தொழும்பொழுது சிலர் வாயை பிளந்து ஆவென கொட்டாவி விடுவதை பார்த்திருக்கிறேன். (நீங்கள் தொழும்பொழுது பக்கத்தில் உள்ளவர்களை எப்படி பார்த்தீர்கள் என்று நினைக்கவேண்டாம். நான் தொழுது விட்டு வரும்பொழுது சுன்னத் மற்றும் 2வது ஜமாத் தொழுபவர்களை கவனிக்க நேரிடுகிறது). (தொழுகையில் நம்மை படைத்த வல்ல அல்லாஹ்வுக்கு முன் நிற்கிறோம் என்ற உள்ளச்சம் இருக்க வேண்டும்) சிலர் சத்தத்துடனும் கொட்டாவி விடுவார்கள். இது நல்ல பண்பாக தெரியவில்லை. தொழும்பொழுதும் மற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருக்கும் நேரங்களிலும், தனியாக இருக்கும் நேரங்களிலும் கொட்டாவி வந்தால் வாயை ஆவென பிளக்காமல் சத்தம் இல்லாமல் கொட்டாவி நம்மை விட்டு அகலும்வரை நமது கையை கொண்டு வாயில் மூடிக்கொண்டு இருப்பது நல்ல பண்பாக இருக்கும். (கொட்டாவி நம்மோடு எல்லா காலங்களிலும் இருப்பது, அதனால் நாமும் கவனமாக இருக்க வேண்டும்).
சாக்ஸ் அணிபவர்களுக்கு:
ஊரில் பள்ளிக்கு சாக்ஸ் அணிந்து வருபவர்கள் குறைவாகவே இருப்பார்கள். வளைகுடா நாடுகளில் சாக்ஸ் அணிந்து தொழ வருபவர்கள் அதிகம் பேர். தொழும்பொழுது சுஜூதுக்கு சென்றால் கார்பெட்டில் உள்ள சாக்ஸ் வாடை நம்மை சிரமப்படுத்தும். சாக்ஸ் பயன்படுத்துபவர்கள் வேலை செய்யும் இடங்களில் குறிப்பாக ஆபிஸ்களில் வேலை செய்பவர்கள் ஷூவிலிருந்து காலை வெளியில் எடுத்து வைத்துக்கொள்ளலாம். ஷூவிற்குள் காற்று போக வாய்ப்பு இல்லாத காரணத்தால் காலில் உள்ள வேர்வை சாக்ஸிலிருந்து பள்ளியில் உள்ள கார்பெட்டில் ஈர்த்துவிடுகிறது.
சாக்ஸ் வாடை நம்மால் பள்ளிக்கு செல்வதிலிருந்து தடுப்பதற்கு தினமும் ஒரு சாக்ஸ் அணியலாம். ஒளு எடுத்த பிறகு மீண்டும் வேர்வை சாக்ஸை அணிந்து கொண்டு பள்ளிக்கு வருகிறார்கள். சாக்ஸை பள்ளிக்கு வெளியில் வைத்து விட்டு வருவது நலம் அளிக்கும். நிறைய பேர் சாக்ஸ் வாடையை பற்றி கண்டுகொள்வதில்லை.
பல்துலக்குவது:
நோன்பு வைத்திருக்கும் நேரத்தில் வாயை சுத்தம் செய்வது பற்றி சிலர் சந்தேகத்தில் இருப்பார்கள். மற்ற காலங்களை விட நோன்புக் காலங்களில் அதிகம் வாயை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
நோன்புக் காலங்களில் நாம் சாப்பிடாமல் இருப்பதால் வாயிலிருந்து வாடை அதிகமாக வரும். நம் வாயிலிருந்து வரும் வாடை நம் அருகில் உள்ள மனிதர்களை சிரமமப்படுத்துவதோடு, மலக்குமார்களையும் சிரமமப்படுத்தும். அதனால் ஸஹருக்கு எழுந்திருக்கும்பொழுதும், பின் தூங்கி எழுந்திருக்கும்பொழுதும், அஸருக்குப் பிறகு தூங்கி எழும்பொழுதும் நோன்பு திறப்பதற்கு முன்பாகவும் பல் துலக்குங்கள். தூங்கி எழுந்திருக்கும் நேரத்தில் பேஸ்ட் கொண்டும் மற்ற நேரங்களில் கை விரல் அல்லது மிஸ்வாக் குச்சி கொண்டு பல் துலக்கி வாயை மிகச் சுத்தமாக வைத்திருக்கலாம். (ஒரு சிறு துளி அளவு பேஸ்ட் எடுத்து நேரம் இருந்தால் எல்லா நேரங்களிலும் உபயோகப்படுத்தலாம்).
சில சகோதரர்கள் பஜ்ர் தொழுகைக்கு எழுந்திருக்கும்பொழுது வாயை மட்டும் கொப்பளித்து விட்டு தொழுச் செல்கிறார்கள். காரணம் தூக்கம் போய்விடுமாம். தூங்கி எழுந்தவுடன் வாய் வாடை போகும் அளவுக்கு பல் துலக்குவதுதான் சிறப்பு.
பல்துலக்குவதை பற்றி கீழ்க்கண்ட நபிமொழிகள் விளக்குவதை கவனியுங்கள்
என் சமுதாய மக்களுக்கு சிரமமாக இருக்கும் என நான் பயப்படவில்லையானால், ஒவ்வொரு தொழுகையின் போதும் பல்துலக்கும்படி அவர்களுக்கு நான் கட்டளையிட்டிருப்பேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: (அபூஹுரைரா(ரலி) அவர்கள். நூல்: புகாரி,முஸ்லிம் - ரியாளுஸ்ஸாலிஹீன்).
நபி(ஸல்) அவர்கள் தூக்கத்திலிருந்து எழுந்தால், பல்துலக்கும் குச்சியால் பல் துலக்குவார்கள். (அறிவிப்பவர்: ஹுதைஃபா(ரலி) அவர்கள். நூல்: புகாரி,முஸ்லிம் - ரியாளுஸ்ஸாலிஹீன்).
(நபி(ஸல்) அவர்கள் வீட்டிற்கு வந்தால் முதலில் என்ன செய்வார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் நான் கேட்டேன். ''பல்துலக்குவார்கள்' என்று அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஷுரைஹ் இப்னு ஹானீ(ரஹ்)அவர்கள். நூல்: முஸ்லிம் ரியாளுஸ்ஸாலிஹீன்).
பல் துலக்குவது, வாயை சுத்தப்படுத்தும். இறைவனை திருப்தி படுத்தும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) அவர்கள். நூல்: நஸயீ, ரியாளுஸ்ஸாலிஹீன்).
எச்சில்(உமிழ்நீர்):
எச்சிலை சிலர் துப்பிக்கொண்டே இருப்பார்கள். எச்சிலை விழுங்குவதால் நோன்பு முறியாது. வாயில் உள்ள உமிழ்நீர் காய்ந்துவிட்டால் வாய் வரண்டு போய் நமக்கு சிரமத்தை ஏற்படுத்தும் அதனால் உமிழ்நீரை(எச்சில்) துப்ப வேண்டியதில்லை. சளியைத்தான் துப்ப வேண்டும்.
வாசனை திரவியங்கள்:
நோன்பு வைத்திருக்கும் நேரங்களில் வாசனை திரவியங்கள் சிலர் பயன்படுத்த கூடாது என்று சொல்லி வருகிறார்கள். ஆல்ஹகால் கலக்காத அத்தர் வகைகளை பயன்படுத்தலாம், பவுடர், எண்ணெய், சோப்பு இவைகளை தாரளமாக பயன்படுத்தலாம். தாராளமாக வாசனை சோப்பு போட்டு குளிக்கலாம்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தொடரில் மற்ற விஷயங்களை பார்ப்போம்.
இன்ஷாஅல்லாஹ் வளரும்!
S.அலாவுதீன்
Source : http://adirainirubar.blogspot.in
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment