கமல்ஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதால் உருவான சர்ச்சையும், கொந்தளிப்பும் தமிழகத்தையே உலுக்கிவிட்டது. அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் அறிக்கைகள், செய்தியாளர் சந்திப்புகள், கமலுடன் நேரடி உரையாடல்கள் என முடுக்கிவிடப்பட்டிருந்த எதிர்ப்பியக்கம் தீவிரத் தன்மை பெற்றுள்ளது.
'துப்பாக்கி' திரைப்படம் வெளியான உடன் இதுபோன்ற சர்ச்சைகளும், எதிர்க்குரல்களும் ஓங்கி ஒலித்ததன் விளைவாக, அப்படக்குழுவினர் முஸ்லிம் கூட்டமைப்பினரைச் சந்தித்து சமரசப்பேச்சுக்கு முன்வந்ததோடு, மன்னிப்பும் கேட்டனர். ‘இனி இதுபோன்ற தவறான சித்தரிப்புகளுடன் படம் எடுக்க மாட்டோம்’ என உறுதியும் அளித்தனர். அந்த வெற்றிதந்த உற்சாகமே, தற்போது விஸ்வரூபத்துக்கு எதிராக முஸ்லிம் கூட்டமைப்பைத் திருப்பியுள்ளது.
கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் அண்மையில் நடிகர் கமல்ஹாசனை இருமுறை சந்தித்துள்ளனர். விஸ்வரூபம் வெளியிடப்படும் முன் தங்களுக்கு திரையிட்டுக் காட்டப்பட வேண்டும் என்று கூட்டமைப்பினர் முன்வைத்த நிபந்தனையை ஏற்றுக்கொண்டு, படம் வெளியாவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பாக திரையிட்டுக் காட்டுகிறேன் என உறுதியளித்தார் கமல். அதன்படி கடந்த 21-01-2013 அன்று மாலை படத்தைப்போட்டுக் காட்டினார். படம் பார்த்த முஸ்லிம் பிரதிநிதிகளுக்குப் பேரதிர்ச்சி ஏற்படும் அளவுக்கு அதன் காட்சி அமைப்பு இருந்தது. உடனே களமிறங்கிய கூட்டமைப்பினர் விஸ்வரூபத்தைத் தடைசெய்ய வேண்டும் என முழங்கினர். சட்டம் ஒழுங்கிற்கும், சமூக அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் வகையில் விஸ்வரூபம் இருப்பதால் தமிழகத்தில் அப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை ஒட்டி பல்வேறு போராட்டங்களும் நடைபெற்றன.
திரைப்படங்களில் முஸ்லிம்களை இழிவாகச் சித்தரிக்கும் போக்குக்கு எதிராக முஸ்லிம்கள் தரப்பிலிருந்து செய்யப்படும் இவ்வாறான எதிர்வினைகள் வரவேற்கத்தக்கதே என்றாலும், பிரச்சனையின் வேரைக் கண்டறிந்து தீர்வைக் காண்பதற்கு யாருமே முயலவில்லை என்பது வேதனைக்குரியதாகும்.
தமிழ் சினிமாவில் முஸ்லிம்களைத் தவறாகச் சித்தரிப்பது என்பது நீண்டகாலமாகத் தொடரும் ஒரு நோய் ஆகும். அதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒன்று, சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கு எதிராக அமெரிக்கா போன்ற நாடுகளால் செய்யப்படும் பரப்புரைகள். இன்னொன்று, முஸ்லிம்கள் குறித்த சரியான புரிதலின்மை. ஊடகங்கள் எதை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடுகின்றனவோ, அதையே உண்மையென நம்பும் பொதுப்புத்தியும் இத்தகைய நிலைக்கு மற்றுமோர் காரணமாகும்.
ஒருமுறை விஜயகாந்தைச் சந்தித்து விரிவான உரையாடலை நிகழ்த்தும் வாய்ப்பு கிடைத்தபோது, ’உங்கள் படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாகவே காட்டுவது ஏன்?’ என்று கேள்வி எழுப்பினோம். அதற்கு அவர் ஒரு நொடி கூட தாமதிக்காமல், ‘பேப்பர்ல அப்படித்தானே வருது’ என்று பதில் கூறினார். எங்களுக்கு விஜயகாந்தின் மீது கோபம் வருவதற்கு பதிலாக சிரிப்புதான் வந்தது.
இதுதான் மணிரத்னம், கமல் போன்றவர்களுக்கும் விஜயகாந்துக்கும் இடையேயான வேறுபாடு.
மணிரத்னம், கமல் போன்றவர்கள் அமெரிக்காவைப் போலவே முஸ்லிம்களுக்கு எதிரான பரப்புரைகளைத் திட்டமிட்டு செய்பவர்கள். விஜயகாந்த் ஊடகங்களில் வரும் செய்திகளை நம்பி அதன் அடிப்படையில் செயல்படுபவர். இதில் விஜயகாந்தைச் சந்தித்துப் பேசுவதன் மூலமும், முஸ்லிம்கள் பற்றிய உண்மை நிலையை அவருக்கு எடுத்துரைப்பதன் மூலமும் நிலைமையை சரிசெய்து விடமுடியும். ஆனால், மணிரத்னத்தையும், கமலையும் அவ்வாறு செய்ய முடியாது. எதிர்ப்புகளுக்கு அஞ்சி நேரடியான காட்சிகளை வைப்பதிலிருந்து அவர்கள் பின்வாங்கினாலும், ஏதோ ஒரு வகையில் முஸ்லிம் வெறுப்பை அவர்கள் ஊடகத்தின் வழியே விதைத்துக் கொண்டேதான் இருப்பர். அவர்கள் போன்ற சிந்தனை உடையவர்கள் பல நூறுபேர் சினிமாவில் உள்ளனர். ஒவ்வொருவருக்கு எதிராகவும் முஸ்லிம்கள் கொடி தூக்கிக் கொண்டே இருக்கவும் முடியாது.
அப்படியெனில் என்னதான் செய்வது? இதற்கு என்னதான் தீர்வு?
ஒரே தீர்வுதான். அது, ஊடகங்களை முஸ்லிம்களும் கையாள்வது. செய்திகளைப் படிக்கும் இடத்திலும், பார்க்கும் இடத்திலும் இருக்கின்றவரை இந்தப் பிரச்சனை தொடரவே செய்யும். செய்திகளை உருவாக்கும் இடத்தை நோக்கி முஸ்லிம்கள் நகரும் போதுதான் உண்மையான தீர்வு கிடைக்கும்.
செய்திகளை உருவாக்கும் இடமெனில் அது வானொலி, பத்திரிகை, தொலைக்காட்சி, இணையம் மட்டுமல்ல, இவை எல்லாவற்றையும்விட வலிமையான செய்தி ஊடகமாக சினிமாவே உள்ளது. பலரும் சினிமாவை ஒரு கலை ஊடகமாகவே பார்க்கின்றனர். ஆனால், கலையின் வழியாக மிகப்பெரும் செய்திகளை பார்வையாளருக்கு சினிமா சென்று சேர்ப்பதை உணர மறுக்கின்றனர். நேரடியான செய்தி சேனலைப் பார்க்க ஆர்வமில்லாத இளைஞர்கள், சினிமாவை தீவிரமாக பார்க்கிறார்கள் என்றால், சினிமா எல்லாவற்றையும் விட பலமிக்கது என்றுதானே பொருள்.