Thursday, February 28, 2013

அந்தப் பழைய காலுறை!


 அவர் அறிஞர். செல்வந்தரும் கூட. தனக்கு மரணம் நெருங்குவதாக உணர்ந்தார்.
தன் மகனை அருகழைத்தார்
மரண சாசனம் போல ஒன்றைச் சொன்னார்: "என் அருமை மகனே, விரைவில் நான்
உங்களையெல்லாம் விட்டுப் பிரிந்துவிடுவேன். என்னுடலைக் குளிப்பாட்டி
சடலத்துணி (கஃபன்) சுற்றுவீர்கள். அப்போது என்னுடைய ஒரேயொரு வேண்டுகோளை
நிறைவேற்றுவாயா?"

மகன் கேட்டான் : "என்ன, சொல்லுங்கள்?"

அறிஞர் கூறினார் : "என் சடலம் அதற்குரிய துணியால் சுற்றப்பட்டதும்,
என்னுடைய காலுறைகளில் ஒன்றை என் கால்களில் அணிவித்துவிடு. இதுதான் என்
எளிய கோரிக்கை"

என்ன இது விசித்திரம் என்று நினைத்தாலும் எளிய கோரிக்கை தானே என்று
மகனும் ஒப்புக்கொண்டான்.




சிலநாள்களில் அந்த முதிய செல்வந்த அறிஞரும், தன் சொத்துகளையும், மனைவி
மக்களையும் விட்டுவிட்டு மாண்டுப் போனார்.  அவரை உலகிலிருந்து
விடைகொடுத்து அனுப்ப உறவினர்களும் நண்பர்களும் குழுமிவிட்டனர்.  உடல்
குளிப்பாட்டப்பட்டது. பிரேத ஆடை உடலில் சுற்றப்பட்டது. அப்போது மகனுக்கு
தந்தையின் வேண்டுகோள் நினைவுக்கு வந்தது. மெல்ல எழுந்து,
குளிப்பாட்டியவரிடம் சென்று  தந்தையின் ஒரு காலுறையைக் கொடுத்து "இதனை
பிரேதத்தின் கால்களில் அணிவியுங்கள்; இது என் தந்தையின் இறுதி
விருப்பமாகும்" என்று கூறினான்,

"முடியாது; முடியவே முடியாது" மறுத்தார் குளிப்பாட்டும் பணியாளர்.
"இல்லை, இது என் தந்தையின் ஆசை; நீங்கள் செய்துதான் ஆகவேண்டும்" என்று
சொல்லிப் பார்த்தான் மகன்.  ஆனால் அவர் அசைந்துகொடுப்பதாக இல்லை.
"இஸ்லாமில் இதற்கு இடமேயில்லை; விடு"

 மகனும் மீண்டும் மீண்டும் கேட்டுப் பார்த்தான். அந்தப் பணியாளர்
கடைசியாகச் சொன்னார். "நான் சொன்னது, சொன்னது தான். நீ வேண்டுமானால், நீ
மார்க்க அறிஞர்களை; தீர்ப்பளிப்பாளர்களைக் கேட்டுவிட்டு வா; நான்
சொல்வதைத் தான் அவர்களும் சொல்வார்கள்". அதன்படி அங்கு
குழுமியிருந்தவர்களில் அறிஞர்களை, மார்க்க விவகாரத் தீர்ப்பாளர்களை
அணுகிக் கேட்டபோது அவர்களும் அதையே சொன்னார்கள் "ஷரீஅத்தில் அனுமதி
இல்லை"

அச்சமயம், ஒரு வயது முதிர்ந்த மனிதர், இறந்த அறிஞரின் நண்பர், அந்த
மகனைப் பார்த்து "தம்பி, உன் தகப்பனார் அவரது மறைவுக்குப் பின்னர்
உன்னிடம் சேர்ப்பிக்க வேண்டுமென்ற நிபந்தனையோடு ஒரு கடிதம் என்னிடம்
தந்திருந்தார். அதை உன்னிடம் தரும் நேரம் இதுவென்று நினைக்கிறேன்" என்று
கூறி ஒரு கடிதத்தை அவனிடம் கொடுத்தார்.

இறந்துவிட்ட தந்தையின் கடிதத்தை மகன் ஆவலுடன் வாங்கிப் படித்தான் . அதில்
பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.

"என் மகனே! அனைத்து செல்வங்களையும் விட்டுவிட்டு இதோ நான் போகிறேன்.
என்நிலைமையைப் பார்த்தாயா? என்னுடைய சொத்துக்களிலிருந்து ஒரே ஒரு
காலுறையைக் கூட என்னுடன் கொண்டு செல்ல முடியவில்லை;  நாளை இந்த நிலை
உனக்கும் வரலாம்.  இந்தப் பொருட்களும் செல்வங்களும் சொத்துகளும்
இவ்வுலகிற்கு மட்டும் தான். ஆனால், இவற்றை, இந்தப் பொருட்களை  நீ
நேர்வழியில் ஈட்டி, நேர்வழியில் செலவழிப்பதன் மூலம் கிடைக்கிற அருள்வளம்
இருக்கிறதல்லவா; அது, அந்த அருள்வளம் தான் மறு உலகிலும்  உதவும். ஆகவே,
இந்தச் செல்வங்களையும், சொத்துகளையும் இறைவழியில், மற்றவர்களின்
வயிற்றுப் பசிக்கும்,அறிவுப் பசிக்கும் உணவாகும் வகையில் செலவிடு. அப்படி
செய்தால், இரு உலகிலும் ஆதாயம் பெற்றவனாக ஆவாய்"

'(மறுமையில் நன்மையின்) எடை கனத்தவர்களே வெற்றியாளர்கள்.' என்கிறது
(திருக்குர்ஆன் 7:8)

'அல்லாஹ்வின் திருப்திதான் மிகப்பெரியது. அதுதான் மகத்தான வெற்றி.'
(திருக்குர்ஆன் 9:72)

(நண்பர் அனுப்பிய மடலை தமிழாக்கியவர் இப்னு ஹம்துன்)
தகவல் அனுப்பியவர் "Faizur Hadi"

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails