Sunday, March 27, 2016

பழங்கால இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் புதுப்பிக்கப்பட வேண்டும் – குமரி அபுபக்கர்

குமரி அபுபக்கர்


குமரி அபுபக்கர் – பழங்கால இஸ்லாமிய இலக்கியங்களை, குறிப்பாக சீறாப்புறாணம் உள்ளிட்டவற்றை மேடைகளில் பாடி வருபவர். அவர் அமீரகத்தில் உள்ள தனது மகன்களது குடும்பத்தினரை காண ஷார்ஜா வந்துள்ளார். ஷார்ஜாவில் உள்ள அவரது மகன் இல்லத்தில் சென்று அவரை முதுகுளத்தூர்.காம் ( www.mudukulathur.com ) சார்பில் சந்திக்கப்பட்டது.

http://mudukulathur.com/?p=39410

அவருடன் நடத்திய சந்திப்பில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல் வருமாறு :

குமரி அபுபக்கர் அவர்கள் கடந்த 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பிறந்தார். இவர் பிறந்த இடம் தற்போது கேரள மாநிலத்தில் உள்ள கொல்லங்கோடு பகுதியாகும். இவரது தகப்பனார் களியாக்காவிளை காஞ்சாம்புறம் மலிக் முஹம்மது. இவரது தாயார் பெயர் ஆயிஷா பீவி. 102 வயது வரை வாழ்ந்து கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் வஃபாத்தானார். இவருடன் பிறந்தவர்கள் மொத்தம் 10 பேர். அனைவரும் தற்போது இருந்து வருகின்றனர். இவர்களில் 8 பேர் ஆண்கள். இரண்டு பேர் பெண்கள்.
குமரி அபுபக்கர் கடந்த 1966-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அவர்களது மனைவி கடந்த 2005-ஆம் ஆண்டு வஃபாத்தானார். இவர்களுக்கு 3 ஆண்கள், இரண்டு பெண்கள். இவர்களில் ஒருவர் நசீமா பானு சென்னை முகம்மது சதக் கல்லூரி தமிழ்த் துறையில் பணிபுரிந்து வருகிறார். மேலும் சென்னை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராகவும் இருந்து வருகிறார். மூன்று ஆண் பிள்ளைகளும் அமீரகத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.


இவர் 3-ஆம் வகுப்பு வரை மலையாள மொழியில் படித்தவர். ஆரம்பத்தில் பொதுப்பணித்துறையில் உதவியாளராக 1962-ஆம் ஆண்டு முதல் 1965-ஆம் ஆண்டு வரை பணிபுரிந்தார். பின்பு பயிற்சி எடுத்துக் கொண்டு மத்திய அரசின் நிறுவனத்தில் சர்ஜிகல் இன்ஸ்ட்ரூமெண்ட் பிட்டராக பணிபுரிந்து வந்தார். இவரது சிறப்பான பணிக்காக மத்திய அரசு சிறந்த பணியாளர் ( greatest worker ) என்ற விருதினைப் பெற்றார்.

இஸ்லாமிய தமிழ் இலக்கியங்கள் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக பழங்கால இஸ்லாமிய இலக்கியங்களை மேடைகளில் கலைநயத்துடன் பாடி வருகிறார். தற்போது இந்த பாடல்களை பாடி வரும் பழங்கால பாடகர் இவர் ஒருவரேயாவார்.
இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களை 600-க்கும் மேற்பட்ட பழங்கால புலவர்கள் இயற்றியுள்ளனர். இவர்கள் தமிழகத்தின் நம்புதாளை, கீழக்கரை, காயல்பட்டிணம், எட்டையபுரம், முதுகுளத்தூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து வந்தவர்கள். இப்படி தமிழ் மொழிக்கு அரிய பல இலக்கியங்களை வழங்கிய சமுதாயத்தில் இன்று இத்தகைய இலக்கியங்களை படிக்க ஆளில்லாத சூழ்நிலையே இருந்து வருகிறது. இதனை இளைய தலைமுறைக்கு கொண்டு செல்லப்பட வேண்டும். தொலைக்காட்சி உள்ளிட்ட தற்போதைய நவீன தொழில்நுட்பங்கள் இதற்கு பெரும் தடையாக இருப்பதை உணரமுடிகிறது.

சதாவதானி செய்கு தம்பி பாவலர், இஸ்ஹாக் என்ற பெயர் கொண்ட வண்ணப் பரிமலப் புலவர், மெஹ்ராஜ் மாலை இயற்றிய ஆலிப் புலவர், தக்கலை பீர் முகம்மது அப்பா, கீழக்கரை ஞானக்கடல் அல்ஆலிம் மஹான் பல்லாக்கு வலியுல்லாஹ் (ரஹ்) அவர்கள் அருளிய அல்லாஹ் முனாஜாத்   உள்ளிட்ட பல்வேறு புலவர்களின் ஆக்கங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். ஒரு சில இலக்கியங்கள் அனைத்தும் துஆ போன்றே இருக்கும். இதன் மூலம் இஸ்லாமியர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு குறித்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

இதனை சமுதாய இளைஞர்கள் தற்போது எத்தனை பேர் தெரிந்து வைத்துள்ளனர் என்பது கேள்விக்குறியே ?

சமீபத்தில் இவர் தக்கலையில் பங்கேற்ற சீறாப்புறாணம் சிறப்பு நிகழ்ச்சி குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் கேரள மாநிலத்தில் வெளிவந்து கொண்டிருக்கும் சந்திரிகா மலையாள நாளிதழில் ஒரு பக்க சிறப்புக் கட்டுரை கடந்த 28.02.2016 அன்று வெளியிடப்பட்டது. இது இஸ்லாமிய தமிழ் இலக்கியத்தின் பாரம்பரியம் குறித்து மலையாள மொழி பேசும் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற முக்கிய காரணமாக இருந்தது.

ஆங்காங்கே ஒரு சிலர் இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களை வெளிக்கொண்டு வரும் பணி மேற்கொள்ளப்பட்டாலும், இத்தகைய பணிகள் இன்னும் பரவலாக்கப்பட வேண்டும். வருங்கால இளைஞர்கள் மறக்கப்பட்ட இஸ்லாமிய தமிழ் இலக்கியங்களை தெரிந்து கொள்ள முன்வரவேண்டும். குறைந்தபட்சம் அந்தந்த பகுதியில் வாழ்ந்த புலவர்களின் படைப்புகளை அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அமைப்புகள் வெளிக் கொண்டு வரும் பணியினை செய்ய வேண்டும். இதன் மூலமே இந்த இலக்கியங்களை அழியாத நிலையில் இருந்து காப்பாற்ற முடியும்.

அமீரகத்தில் உள்ள சமுதாய அமைப்புகளும் இத்தகைய இஸ்லாமிய இலக்கிய பணியில் ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் பழங்கால இலக்கியங்கள் அழியும் நிலையில் இருந்து காப்பற்ற முடியும்.

இவரது தற்போதைய அமீரக தொடர்பு எண் : 00971 50 76 77 495

from:
Muduvai Hidayath 
<muduvaihidayath@gmail.com> ----------------------------

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails