மானிட சேவையே இறைவனுக்கான சேவை (இறைவன் தேவைகளற்றவனாதலால் அவனுக்கு யாரும் சேவை செய்ய முடியாது) என்பதை உணர்த்தும் ஒரு அழகான நபிமொழி. நான் சமீபத்தில் முழுமையாகப் படித்து முடித்த ஆதாரப்பூர்வமான நபிமொழித்தொகுப்பான ஸஹீஹ் முஸ்லிம் என்ற தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டது (ரஹ்மத் அறக்கட்டளை வெளியீடு, மின் நூல்).
நபிமொழி எண் 5021
அறிவிப்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர் அபூ ஹுரைரா அவர்கள் (இறைவன் அவரைப் பொருந்திக்கொள்வானாக)
மறுமை நாளில் அல்லாஹ் ஒரு மனிதனிடம் இப்படிக் கேட்பான்:
நான் நோயுற்றிருந்தேன், நீ ஏன் என்னைப் பார்க்க வரவில்லை?
அகிலத்தின் அதிபதியாகிய நீ எப்படி நோயுற்றிருப்பாய்? உன்னை நான் வந்து எப்படிப் பார்ப்பேன்?
என் இன்ன அடியான் உடல் நலமில்லாமல் இருந்தபோது நீ போய் அவனை உடல் நலம் விசாரித்திருந்தால் அவனில் என்னைக் கண்டிருப்பாய்.
நான் உணவு கேட்டேன், நீ கொடுக்கவில்லையே ஏன்?
உனக்கு நான் எப்படி உணவளிக்க முடியும்?
இன்ன மனிதன் உன்னிடம் உணவு கேட்டான். நீ கொடுக்கவில்லை. கொடுத்திருந்தால் அவனிடம் என்னை நீ கண்டிருப்பாய்.
நான் தண்ணீர் கேட்டேன், நீ கொடுக்கவில்லை, ஏன்?
உனக்கு நான் எப்படி தண்ணீர் கொடுக்க முடியும்?
இன்ன மனிதன் உன்னிடம் தண்ணீர் கேட்டான். நீ கொடுத்திருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்.
மனித சேவை செய்தவர்களெல்லாம் இறைவனைக் கண்டவர்கள்தான் என்று இந்த நபிமொழி கூறாமல் கூறுகிறது. மனிதர்களுக்கு மனிதர்கள் சேவை செய்ய வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகிறது. பசி, தாகம் இவற்றைப் போக்க முடியாவிட்டாலும், ஒருவரின் உடல் நலத்தைப் பற்றி விசாரிப்பதே இறைவனை விசாரிக்கச் சென்ற மாதிரி என்று கூறுகிறான் இறைவன்! இதில் முக்கியமான இன்னொரு செய்தி அந்த மனிதரின் மார்க்கம் பற்றி எதுவும் கூறப்படவில்லை என்பதுதான். சேவைக்கு மார்க்கமில்லை. நமது மார்க்கமே சேவை செய்வதுதான் என்றும் புரிந்துகொள்ளலாம்.
Nagore Rumi
Global Spiritual Garden shared Nagore Rumi's post.
No comments:
Post a Comment