அத்தியின் மீதாணை!
(மூலம்: அல் குர்ஆன் / சூரா 95 : அத்தீன்)
இனிக்கும் இயல்பும் இயற்கை மணமும்
கனிந்தப் பழத்துள் கனிம ஊட்டமும்
வாய்க்குச் சுவையும் நோய்க்குப் பகையும்
விதைத்துப் படைத்த அத்தியின் மீதாணை!
உவர்ப்பும் கசப்பும் ருசிக்கும் பதத்தில்
கருப்பும் பழுப்பும் காய்க்கும் விதத்தில்
உழைக்கும் உடலுக் குகந்த ஆற்றல்
மிகைக்கப் பொதிந்த ஒலிவம் மீதாணை!
பொருளும் படையும் பெரிதும் பெற்று
மிரளும் மக்களை அடக்கி ஆண்ட
கொடியவனை எதிர்த்த கோமான் மூஸா
வேதம் பெற்ற சினாயின் மீதாணை!
அறியாமைக் காலத்து அரபியர் குலத்தில்
புரியாமல் துதித்தச் சிலைகளைத் தகர்த்து
இறைநாமம் முழங்கிட முறையாக மீட்ட
அபயம் தரும் மக்க நகர் மீதாணை!
உயர்திணை அஃறிணை யாவையும் படைத்து
உயிரினை உணர்வினை ஊணிலே விதைத்து
எல்லாப் படைப்பினும் எழில்மிகுப் படைப்பாய்
மனிதனையன்றோ மாண்புறப் படைத்தோம்!
இச்சையில் இலயித்து இழிந்தே போனதால்
இன்பம் என்றெண்ணி இன்னா செய்ததால்
பின்னர் மனிதனைப் பிடித்துக் கொண்டு
தாழ்ந்தவர்க் கெல்லாம் தாழ்ந்தவ ராக்கினோம்
நம்பிக்கைக் கொண்டு நேர்வழி கண்டோர்
நண்மையை நாடி நற்செயல் கொண்டோர்
நிலையினிற் றாழ்ந்தோர்க் கிடையிலே இன்றி
நித்தமும் நிறைவாய் நற்கூலி பெறுவர் !
இத்துணைத் தெளிவாக இயம்பிய பின்னும்
இத்தரை மீதும் இதற்குப் பின்னரும்
புத்தியில் கூர்மையும் பக்தியில் தெளிவுமின்றி
முத்திரை மார்க்கத்தை மறுப்ப தெங்ஙனம்?
நல்லவர் கெட்டவர் பகுத்து அறிந்து
நன்மையோ தீமையோ கணித்து விகித்து
தீர்ப்புகள் வழங்கிடும் நீதிபதிக் கெல்லாம்
நீதிபதி யன்றோ யாவையும் படைத்தவன்!
oOo
-சபீர் அஹ்மது அபுஷாஹ்ருக்
http://www.satyamargam.com
No comments:
Post a Comment