Wednesday, November 7, 2018

காது மிஷின் கதை...!

காது மிஷின்  கதை...!

நேற்றைய தினம் கவிஞர் தா.காசிமைப் பற்றி ஒரு செய்தி வெளிட்டிருந்தேன்.
அதன் பின்னூட்டத்தில் நண்பர் கலுங்கு யாஸின் ஒரு செய்தி குறிப்பிட்டிருந்தார்.

கவிஞர் காதில் செவிட்டு மிஷின் மாட்டியிருப்பார் என்பதுதான் அது. அதுவும் மேடையில் அப்படிக் காட்சி தந்தார் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

எனக்கு இது ஆச்சரியச் செய்தி.
கவிஞருக்கு ஒரு செவிட்டு மிஷின் கிடைத்தது உண்மைதான்.
அதை அவர் மாட்டியது குறிப்பிட்ட எங்களைத் தவிர வெளியார் எவரும் பார்த்திருக்கவே  முடியாது.

அந்தக் காது மிஷினில் ஒரு சரித்திரம் மறைந்திருந்தது.

காயிதெ மில்லத் தம்பியார் K.T.M.அஹமது இப்றாஹீம் சாஹிப் காது மிஷின் மாட்டி இருப்பார்கள்.


 இவர்கள்தாம் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீகின் சென்னை ராஜ்யப் பொதுச்செயலாளராகத் தன் வாழ்நாள் முழுக்க இருந்தவர்கள்.

அவர்கள்  மறைந்த பின்னர் தமிழ் மாநிலப் பொதுச் செயலாளராக எங்கள் தந்தையார் ஏ.கே.ரிபாய் சாஹிப் அந்தப் பதவியை வகித்தார்கள்.

K.T.M. தாதாவின் மறைவுக்குப் பின் அவர்கள் காது மிஷினைக் காயிதெ மில்லத் பாத்திரமாக எடுத்து வைத்து
அதைக் கவிஞரிடம் கொடுத்துப் பயன்படுத்திக்கச் சொன்னார்கள்.

அந்த மிஷினைப் பத்திரமாகக் கவிஞர் அவர் கைப் பையில் வைத்திருப்பார்.
மாட்டமாட்டார்.வெட்கப் படுவார்.
காரணம் கேட்டால்  நகைச்சுவையாகப் பதில் சொல்வார்.

மிஷினைக் காதில் மாட்டினால் பார்ப்பவர்கள் சத்தமாகக் கத்திப் பேசுகிறார்களாம். " பிறகெதற்குச் செவிட்டு மிஷின் " என்பார்.

காயிதெ மில்லத் எவருக்குமே கொடுக்காத இன்னொரு பொக்கிஷத்தையும் கவிஞருக்கு ஏற்கனவே கொடுத்திருந்தார்கள்.

முஸ்லிம் சமுதாய மக்களிடம்  கவிஞருக்காக  ஒரு வேண்டுகோள் கடிதம் கொடுத்திருந்தார்கள்.

அது உருக்கமான கடிதம். அதில் காயிதெ மில்லத் இப்படிக் குறிப்பிட்டிருந்தார்கள்.

" நம் புலவருக்கு உதவி புரிபவர்கள் நமக்கே உதவி புரிபவர்கள் ஆவார்கள்"என்று.

இந்தக் கடிதத்தைக் கொடுத்துவிட்டு மேலும் சொன்னார்கள்.

" புலவரே! இந்தக் கடிதத்தில் நான் தேதி குறிப்பிடவில்லை.தேதி குறிப்பிடாத கடிதத்தையும் கையெழுத்திட்டு தொகை குறிப்பிடாத செக்கையும் எப்பவும் எப்படியும் பயன் படுத்தலாம்" எனச் சொல்லிக் கவிஞரிடம் காயிதெ மில்லத் கொடுத்தார்கள்.

கவிஞர் கண்கலங்கினார். பெற்றுக் கொண்டார்.

அதை எல்லோரிடமும் காட்டுவார். அதைக் 
கவிஞர் பயன்படுத்தியதே இல்லை.

K.T.M.தாதா காது மிஷினையும் காயிதெ மில்லத் வேண்டுகோள் கடிதத்தையும் தன் கைப் பையில் வைத்துக் கொண்டே அலைந்தார். ஒரு நாள் ரயில் பயணத்தில்
அவ்விரு பொக்கிஷங்களையும்  கைப் பையோடு  தொலைத்து விட்டார்.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் கவிஞர் சிங்கப்பூரில் இருந்து வரும்போது ஒரு காது மிஷின் வாங்கி வந்தார். அதைத் தன் வாழ்நாள் முழுவதும் வைத்திருந்தார். ஆனால் லேசில் காதில் மாட்ட மாட்டார்.

Hilalmstafa:

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails