Thursday, January 13, 2011

காஷ்மீர் விஷயத்தில் முதல் குற்றவாளி நேருவா?




சிபிஐ விசாரனை என்றவுடன் அரசியல்வாதிகளுக்கு நெஞ்சு வலி வருகிறதே. அது ஏன்?- ராஜா
ஒளித்து வைக்க வேண்டிய உண்மைகள் நெஞ்சில் நிறைந்திருப்பதால் விசாரணையில் அவற்றை வெளிக்கொண்டு வந்து விடுவார்களோ என்ற படபடப்பால் நெஞ்சு வலி வருகிறதோ என்னவோ?

விசாரணையை எப்படி எதிர்கொள்வது என்ற திட்டமிடலுக்கும் அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என யோசிப்பதற்கும் தனிமையும் ஓய்வும் தேவை என்பதால் மருத்துவமனைக்குப் போவது வசதி. அங்கு ICU அறையில் இது சாத்,தியமாகலாம்.

மாநாடுகளின் உண்மையான நோக்கம்தான் என்ன? (அல்லது) பொதுக்கூட்டங்களினால் ஏதேனும் மாற்றங்கள் வருமா? -கருத்தான்

பொதுவே அரசியல் கட்சிகள், மத அமைப்புகள், சாதிச் சங்கங்கள் போன்றவை மாநாடு கூட்டுவது தங்கள் பலத்தைப் பிறருக்கு அறிவிக்கவே! சில ஒடுக்கப்பட்ட அல்லது அரசால் வேட்டையாடப்டும் சில சமூகங்கள் நடத்தும் மாநாடுகளால் அச்சமூகத் தவருக்கு, "நாம் மட்டும் தனித்தில்லை; இத்தனை பேர் நம்மோடும் நம் உணர்வோடும் ஒன்றி இருகிறார்கள்" என்ற நம்பிக்கை வரும்.

அங்கு நிகழ்த்தப்படும் உரைகளையோ நிறைவேற்றப்படும் தீர்மானங்களையோ பெரும்பாலோர் கவனிப்பதே இல்லை. உளவுத்துறையினர் மட்டுமே இவற்றில் ஆர்வம் காட்டுவர்.

தெருமுனைக் கூட்டங்கள் இரண்டு அல்லது மூன்று மணிநேரக் காட்சி என்பதால் அவற்றில்
உரைகளை கேட்கும் வாய்ப்பு உள்ளது. பொதுக்கூட்டப் பேச்சுகளால் மாற்றம் வரும் என்பது மிக அரிதானது. இப்போது யாரும் பேச்சாளர்களை நம்புவதில்லை. பொழுது போக்கிற்காகவே கூட்டங்களுக்கு வருகிறார்கள். அது, தி.மு.க. நடத்தும் ஆ.ராசா ஆதரவு ஸ்பெக்ட்ரம் விளக்கப் பொதுக்கூட்டமானாலும் தமிழ்க்குடி தாங்கி ராமதாஸ் நடத்தும் மது ஒழிப்புக் கூட்டமானாலும் சரியே!


அருந்ததி ராய் சொல்வதை பார்த்தால் கஷ்மீர் விஷயத்தில் குற்றவாளிகள் பட்டியலில் முதலில் நேருதானே வருகிறார்?- மார்க்ஸ், சேலம் அப்படி ஒரேயடியாகச் சொல்லிவிட முடியாது. நேரு முழுமனதோடு இன்னும் சற்றுக் கூடுதலாக முயன்றிருக்கலாம்தான். ஆனால் அரசியலோ அல்லது வேறு அழுத்தங்களோ அவரைத் தடுத்து விட்டன.

பலதார மணத்துக்கு எதிராகக் குரலெழுப்புவோர், இருதாரமுடைய கருணாநிதிக்கு எதிராகப் பேசாதது ஏன்? - அமீர் ஹம்ஸா
இந்துத் திருமணச்சட்டப்படி இரு தாரம் குற்றமாம்.

எம் ஜி ஆர் முதல்வராகவும் கருணாநிதி எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்த காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் பலதார மணம் பற்றி ஒரு விவாதம் எழுந்தது. அப்போது அமைச்சர்களாக இருந்த காளிமுத்து, திருநாவுக்கரசு போன்றோர் இரு மனைவிகளுடன் வாழ்ந்து வந்ததும் எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி இருவருடன் வாழ்ந்து வந்ததும் மேலும் பல உறுப்பினர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட பெண்களுடன் வாழ்ந்து வந்ததும் ஒரு உறுப்பினரால் சுட்டிக்காட்டப்பட்டன.

சட்டமன்றத்தில் பேசியதைவிட வேறு என்ன வேண்டும் உங்களுக்கு?

அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கி.வீரமணி யாரை ஆதரித்துக் கொண்டிருப்பார்? - இளமாறன், நாகப்பட்டினம்
ஆளும் கட்சியை...

புதுசு புதுசாய் வந்து கொண்டிருக்கும் ஹைடெக் உபகரணங்கிளில் வ.மு.வைக் கவர்ந்தது எது? - பாபு, சென்னை
மடிக்கணினி!
அதுதான் எனக்கு மிகவும் பயன்படுகிறது. அதைதாண்டிய தேவை இப்போது எனக்கில்லாததால் வேறு கருவிகளில் நாட்டமில்லை; அதனால் நட்டமுமில்லை.

திமுக அரசு வழங்கும் இலவசங்களால் மக்கள் பயன்பெறுகிறார்களா? சோம்பேறியாகின்றார்களா? - வசீகரன், பட்டுக்கோட்டை
பயன்தான்.

அன்றாட உணவுக்கும் இதர தேவைகளுக்கும் குறைந்த அளவாவது உழைத்தாக வேண்டும். கருணாநிதி இலவச டி.வி பெட்டி வழங்கினாலும் "கேபிள் கனெக்ஷன்" இலவசமில்லையே!

"ஏழைகள் நடமாடும் வரை இலவசங்கள் தொடரும்" எனக் கருணாநிதி அறிவித்திருப்பது மக்களைச் சோம்பேறி யாக்குவதற்கில்லை.

ஏனெனில் அரசுக்குக் கோடிக்கணக்கில் வருவாய் ஈட்டித்தரும் டாஸ்மாக் மதுக்கடைக்கு வாரிக்கொடுக்க மக்கள் உழைத்தாக வேண்டுமே?

தமிழகத்தின் அடுத்த முன்னாள் முதல்வர் யார்? - ராஜன் பிள்ளை
அண்மையில் சென்னை வந்த பிரதமர் மன்மோகன்சிங் சொன்னபடி தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்தால்....ஜெயலலிதாவின் இடத்துக்குப் போட்டியில்லை.!

திமுகவிலிருந்து ராசா கழட்டி விடப்படுவாரா?- கனி
வாய்ப்பிருக்கிறது. பதவி மட்டுமே பெரிதாகிப்போன அரசியலில் உறவும் பகையும் நிரந்தரமில்லை. ராசாவைப் பலி கொடுத்தால்தான் பதவி என்றால் அதற்கும் தயக்கமில்லை.

இந்நேரம் தளத்தில் ரஸ்ஸலின் அலசலில் இது சுட்டிக்காட்டப்பட்டிருந்ததே!

நான் கேட்க நினைக்கும் கேள்விகளை வேறொரு நபர் கேட்டு விடுகிறாரே, எப்படி?... - ஜமால்
Great people think alike என நீங்கள் பெருமைப்பட்டுக் கொள்ளத்தான்........

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2011010912936/vanagamudi-answers-09-01-2011

Tuesday, January 11, 2011

சுகமே சுகம் !

சுகமே சுகம் !
எத்தனை வகை சுகம் .
பார்த்து  ,தொட்டு ,தடவி ,அணைத்து இப்படி பல வகை இருப்பினும் அவர் அவர் உள்ளத்தின் மனம் நாடும் வகையில் அது மாறுபடும் .

வேதனையால் வாடுபவர் சொல்பது ; வலி உள்ள இடத்தில் தடவி அதனை குறைக்க செயல் படும் போது

வாலிபன் சொல்பது ; தன் நேசமானவர்களிடம் (காதலியுடன்) தொலைபேசியில் பேசும்பொழுது ஆனால் அது நேரம் ஓட தொலைபேசி கட்டணம் உயரும் என்ற எண்ணம் வர நிறுத்த நேரும் 

சாப்பாடு பிரியர் சாப்பிட ஆரம்பிக்கும்பொழுது -வயறு நிரம்ப பின் அது
குறைந்துவிடும்

பெண்ணுக்கு எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் குழந்தையினை   சுமப்பது சுகம்  
(ஆனால்   இந்த   தலைமுறையினர் தன் தாயினை அவள் வயதாகி விட்டாலும் மனைவி வந்த பின்பும் சிலர் தன் தாயினை சுமையாக கருதுகின்றனர் )

சொல்லாமல் சுகம் காண்பது ,அதனை அனைவரும் நேசிப்பது ,முடிந்தவரை நீடிக்க விரும்புவது ,சோர்வு தந்தாலும் தொடர ஆசைப்படுவது  தாத்தா தன் பேர குழந்தைகளிடம் ஆடும் ஆட்டம் .
அதிகம் சுகம் காண்பவர் தாத்தா தான் .அதுவும் தன் மகள் வழி வந்த பிள்ளைகளிடம் மிகவும் அதிகமாக  இருக்கும்

விழிப்புணர்வின் முதல்'படி'

கனவு மெய்ப்பட வேண்டும் - உயர்
கல்வி வசப்பட வேண்டும்!
கற்க நினைப்ப தெல்லாம் - நாம்
கற்று நிறைவுற வேண்டும்.

கற்றவ ரெல்லாம் வென்றார் - இதை
கருத்தினில் ஏற்றிட வேண்டும்
கல்லாதோரே தோற்றார் -என
கவனத்தில் கொண்டிட வேண்டும்!

பட்டம் படித்திட வேண்டும் - அதில்
பதக்கம் கிடைத்திட வேண்டும்
விட்ட உரிமைக ளெல்லாம் - நாம்
மீட் டெடுத்திட வேண்டும்!

தொழிலுக் கென்று கல்வி - நாம்
தேடிக் கற்றல் வேண்டும்
பதவிக் கென்று படிப்பை - இனி
பார்த்துப் படித்திட வேண்டும்!

ஆட்சி அதிகாரம் வேண்டும் - நமக்கு
அரசாங்க வேலையும் வேண்டும்
அன்றாடங் காய்ச்சியேயாயினும்-நாம்
வென்றாள கல்வியே வேண்டும்.

அதிக மதிப்பெண் வேண்டும் - அதை
அடைய முனைப்பு வேண்டும்
சிகரம் தொடும் வித்தை - நாம்
சேர்ந்து பயில வேண்டும்

கல்லாமை வெளியேறவேண்டும்-உடன்
அறியாமை புறந்தள்ள வேண்டும்
கற்றுத் தெளிந்து நாமும் - எதிர்
காலத்தை வென்றிட வேண்டும்!

மகத்துவம் மிக்க மருத்துவம் - கற்று
மக்களைக் காத்திட வேண்டும்
மடைமை போக்கிடும் அறிவியல் -படித்து
மாட்சிமை பெற்றிட வேண்டும்

சதிகளை எதிர்த்திட சட்டம் - நம்
விதியென படித்திட வேண்டும்
சமூகம் காத்திட அரசியல் - முழு
சாஸனம் கற்றிட வேண்டும்!

கல்வி விழிப்புணர்வு வேண்டும் - அது
பல்கிப் பெருகிடவும் வேண்டும்!
கற்ற மூத்தவ ரெல்லாம் - வந்து
கைதூக்கி கரையேற்ற வேண்டும்!

-- சபீர்
Source : http://adirainirubar.blogspot.com/2011/01/blog-post_11.html

Saturday, January 8, 2011

மனைவியின் அருமை அறிய முதுமை தேவை

 முதுமையின்   காரணமாக    உடல் நலம் குன்றியது .அதனால் உள்ளம் சோர்வு அடைய   சோபாவில் ஓய்வாக அமர்திருந்தேன் .பல கற்பனைகள் ,கடந்த கால நினைவுகள், தனியாக விடப்பட்டு விட்டேனோ ,முதுமை என்னை மற்றவருக்கு சுமையாக்கி விடுமோ ! நாம் மற்றவருக்கு சுமைதாங்கியாக வாழ்ந்தோமே ...இப்படி பல எண்ணங்கள்   எல்லாம் என் மனதில் இழையோடிக்கொண்டே  இருக்க மனம் ஒரு நிலை படாமல் கண் இமைகள்  லேசாக மூடிய நிலையில் இருந்தேன் .
 எனது குளிர்ந்த கை  மீது மற்றவரின் உள்ளங்கை  வைக்கப்படுவதனை உணர்கின்றேன் அது என் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஒத்தடம் கொடுப்பதுபோல் இருக்க உள்ளத்தில் தடவுவது போல் உணர்வு .
அந்த நிலை நீடிக்க விரும்பினேன் , என் கண்களிலிருந்து சூடான நீர் வழிய ஆரம்பித்தது ,எனது கை மேல் வைத்த கை அப்படியே இருக்க அவரின் மற்றொரு கை எனது கன்னம்வழி வளர்ந்த கண்ணீரை துடைத்து விட்டது.
(ஒரு சொட்டு கண்ணீர் ஒரு கேலன் நீரில் ஊட்றினால்  அதன் கிருமிகளை அழித்துவிடும் உயர்ந்த தன்மை கொண்டது .கண்ணீர் நம் கண்களை பாதுகாக்கின்றது .)

காலமெல்லாம்  உடன் இருந்து ஓயாத உழைத்து பணிவிடை செய்த இப்பெண்ணின் அருமைதனை இப்பொழுது   அதிகமாகவே   உணர்கின்றேன்.
"நீ இருக்கும்பொழுதே இறைவன் என்னை முதலில் அழைக்க விரும்புகின்றேன்" என வாய் புலம்ப அந்த மூதாட்டி எனது வாயினை பொத்தி எல்லாம் இறைவன் அறிவான் அவன் நாட்டமின்றி ஒன்றும் நடக்காது என்று என்னை அமைதி படுத்துகிறாள் .
காலமெல்லாம் நான்  அவளுக்கு கொடுத்த ஆறுதல் ....!
அவளின் தூய்மையான எண்ணமும், கடுமையான உழைப்பும். ஆழமான இறை பக்தியும் கொண்ட அந்த மூதாட்டி எனக்கு தந்த ஆறுதல் வார்த்தை... மிக்க சக்தி வாய்ந்ததாக இருந்து  என் மனதில் முதுமை என்ற எண்ணம் போய் மன அமைதியை அடைந்தது .  



Wednesday, January 5, 2011

ரஜினி ஆதரவு பெற்ற கட்சி வெற்றி பெறுமா?




வலது பக்க இமை துடித்தால் நல்ல காரியம் நடைபெறும் என்றும் இடப்பக்க இமை துடித்தால் கெட்ட காரியம் நடைபெறும் என்றும் சிலர் கூறுகின்றனர். பொதுவாக இமைகள் இவ்வாறு துடிப்பதற்கான காரணம் என்ன?- சிவா
கண்ணிமையைச் சுற்றியுள்ள தசைகள் திடீரென இழுக்கப்படுவதால் அனிச்சையாக இமைகள் துடிக்கின்றன. உறக்கம் குறைவதாலும் அதிகப்படியான உடல் தளார்ச்சியாலும் கண்களில் ஏற்படும் அதிகப்படியான சோர்வாலும் உறக்கமின்மையாலும் கூட இது நிகழலாம். இந்த உடலியல் நிகழ்வால் நல்லது கெட்டது நடக்கும் எனச் சிலர் நம்புவது நகைப்புக்குரியது.

இன்னுமா இந்திய மக்களுக்கு ஊழல் ஒரு பிரச்சன்யில்லை? -சுகுமார்

ரேஷன் கடையில் அரிசி கடத்துகிறான், பருப்பைப் பதுக்குகிறான், சர்க்கரை எடை குறைவு, மண்ணெண்ணெய்த் தட்டுப்பாடு என்பவை மட்டுமே ஊழல் எனக்கொதிக்கும் அன்றாடங்காய்ச்சிகள் அதிகம் வாழும் நாட்டில், ஊருக்குள் பஸ் வரவில்லை; வந்தாலும் டிக்கெட் கட்டணம் அதிகம், கேபிள் டி வி யில் படம் தெரியவில்லை என்பன மட்டுமே பிரச்சனையாகக் கருதும் மக்கள் அதிகம் வாழும் நாட்டில், அரசியல்வாதிகள் தரும் அதிக விலைக்கு ஓட்டுகளை விற்கலாம் என்ற எண்ணமே உள்ள பாமரர்கள் அதிகம் வாழும் நாட்டில் 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் அல்லது முறைகேடு போன்ற செய்திகளை அவர்கள் அறிந்து கொண்டாலும் அவை அவர்களுக்குப் பொருட்டில்லை. ஏனெனில் அவை அவர்களை அன்றாடம் பாதிக்கும் பிரச்சனை இல்லை.


கேள்வி பதில் பகுதி தேர்வில் உண்டு. அதனைக் கண்டு பிடித்தவர் யார்? அது தேவையா?- முஹம்மது அலி ஜின்னாபடிப்பதை விடக் கேட்பதன் வாயிலாய் அறிவு விரைவில் வளரும். "செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம்; அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை" என்பது குறள்.

இதனால்தான் 'படிக்காத மேதை'கள் உருவாக முடிகிறது.எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் கூட நாட்டுப்புறப் பாடல்களைப் பாடவும் பழந்தமிழ் இலக்கியங்களை அறியவும் செவிச்செல்வமே துணை புரிந்தது.

இந்து மதத்தின் வேதங்களைச் "ச்ருதி" என்பர். செவியால் கேட்டுக் கேட்டு மற்றவர்களுக்குப் பரவியதால்தான் வேதங்களைச் "ச்ருதி" என்கின்றனர். . முஸ்லிம்களின் வேதமும் செவிவழியாகவே வந்து எழுத்தில் வடிக்கப்பட்டதாகவும் நபியிடம் சீடர்கள் வினாக்கள் தொடுத்தே விளக்கங்கள் பெற்றதாகவும் அவ்வேதம் அருளப்பட்ட வரலாறு கூறுகிறது.

எனவே கேள்வியால் கற்ற அறிவை ஆசான் உறுதிப் படுத்தித் தேர்வு செய்ய வினாத் தொடுப்பது கட்டாயத் தேவையாக இருந்தது. இக்காலத்தில் படிப்பதன் மூலமும் எழுதுவதன் மூலமும் அறிவு பெருகுவதால் தேர்வுகளில் எழுத்தில் வினாக்கள் தொடுக்கப்படுகின்றன. எனவே அதைக் கண்டுபிடித்தவர் யார் என்பது தேவையற்றது; ஆனால் வினாத்தொடுப்பது தேவையானது.

ரஜினி கை காட்டும் கட்சி தமிழ்நாட்டில் ஜெயிக்கும் என்று தாங்கள் நம்புகிறீர்களா? - ராஜேஷ், சென்னை
அரசியலில் நுழையாத அல்லது அரசியலில் இறங்க விரும்பாத ரஜினிக்கு எனத் தமிழ்நாட்டு மக்களிடம் தனி அரசியல் செல்வாக்கு இருந்ததில்லை. ஜெயலலிதாவின் வீடு இருக்கும் போயஸ்தோட்டப் பகுதியில் ஸூப்பர்ஸ்டார் ரஜினியின் வீடும் இருக்கிறது.

முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு விடுதலைப் புலிகளால் ஆபத்து ஏற்படும் என்ற உளவுத் தகவலை அடுத்து போயஸ்தோட்டத்தின் நுழைவாயிலில் ரயில்வேகேட் போல ஒரு செக்போஸ்ட் வைக்கப்பட்டுப் போவோர் வருவோர் காவல்துறையின் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதில் ரஜினியைக் காண வருவோர் பாதிக்கப்பட்டதால் ரஜினி எரிச்சலடைந்து தம் அதிருப்தியை வெளியிட்டார்.

அமைச்சர்கள் உட்பட கட்சியினர் அனைவரையும் தம் காலில் விழ வைத்து ஆண்டு கொண்டிருந்த ஜெயலலிதாவின் தரப்புக்கு இது பிடிக்கவில்லை. யாரையும் மதித்தோ பொருட்படுத்தியோ பழக்கப்பட்டிராத ஜெயலலிதா தரப்பு எதிர்வினையாற்றவே கடுப்படைந்த ரஜினி "ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது" என்று கூறினார்.

இருதரப்புச் செய்திகளையும் ஊடகங்கள் பெரிதாக ஊதி விட்டிருந்தன. அச்சமயத்தில் ஜெயலலிதாவுடன் நரசிம்மராவ் கண்ட தேர்தல் கூட்டணி பிடிக்காமல் மூப்பனார் தலைமையில் சிதம்பரம் உட்பட்டோர் பிரிந்து 1996 ஆம் ஆண்டு தேர்தலில் த.மா.கா. கட்சியைத் துவக்கினர். ரஜினியின் ஆதரவு அறிக்கையும் வந்தது. அத்தேர்தலில் ஜெயலலிதா, நரசிம்மராவ் தரப்பு தோல்வி கண்டது.

இது ரஜினியால் ஏற்பட்டது என ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டது. ரஜினிக்கு எனச் செல்வாக்கு இருந்திருந்தால் அடுத்த தேர்தலில் ஏன் அது செல்லுபடியாகவில்லை முத்து, படையப்பா போன்ற படங்களில் சில அரசியல் சாய்வு வசனங்கள் ரஜினியால் பேசப்பட்டதிலும் ரசிகர்கள் புதுப்புது அர்த்தம் கண்டனர். குசேலன் படத்தில் இதற்கு விளக்கமும் கொடுத்து விட்டார் ரஜினி. 2004 ஆம் ஆண்டில், முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் முகத்துக்கு நேரே அவரைப் புகழோ புகழ் எனப் புகழ்ந்து வாய்ஸ் கொடுத்து மன்னிப்புப் பெற்றுக் கொண்டார் ரஜினி.

பங்கு சந்தைகளின் ஏற்ற இறக்கங்கள் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகினறன? - அப்துல்ஹமீது
நாட்டில் தேர்தல் நடக்கும்போது அல்லது அரசியல் குழப்பங்கள் நிலவி ஆட்சி கவிழும் என அஞ்சப்படும்போது, பட்ஜெட் வெளியிடும் நேரம் அல்லது அரசின் பொருளாதாரக் கொள்கை மாற்ற அறிவிப்புகள் வரும்போது அல்லது உலகச் சந்தை ஏற்ற இறக்கங்கள் போன்றவை நிகழும் சமயங்களில் பங்குச் சந்தை மாற்றங்கள் ஏற்படுகின்றன. பணவீக்க சதவீதம் குறைவாகவும் பொருளாதார நீலை சீராகவும் நாட்டின் உற்பத்தி உயர்ந்தும் இருக்கும்பொழுது பங்குச் சந்தை ஏறுமுமுகமாக இருக்கும்.

முதல்வர் கருணாநிதி, ஸ்டாலின் மற்றும் அழகிரிக்கு தெரியாமலே இவ்வளவு பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாக சொல்லப்படுகிறதே உண்மையா? - முத்துக் கருப்பன்
இப்போது அப்படித்தான் சொல்ல முடியும்.

நீரா ராடியா உரையாடலில் இதுவரை வெளியான டேப்புகளின் அடிப்படையில் பார்த்தால் அழகிரி, ஸ்டாலின் இருவருக்கும் தெரியாமல் இவ்வளவும் நடந்திருக்க வாய்ப்புண்டு என நம்புவதற்கு இடமிருக்கிறது.

விக்கிலீக்ஸிற்கு விஷ(ய)ங்களை லீக் செய்வது யார்? - ராஜா
அவரே ஒரு ஹேக்கர் என்று செய்தி வந்துள்ளது. அமெரிக்க ராணுவப் புலனாய்வுப் பகுப்பாய்வாளர் ஒருவர் இது தொடர்பாகக் கைது செய்யப்பட்டுள்ள செய்தியும் வெளியானதே!

1.76 லட்சம் கோடிக்கு எத்தனை சைபர்? - விஜய்
பல முறை போட்டுப் பார்த்தேன். பன்னிரெண்டு வருகிறது.

சரியா தவறா என நீங்கள்தாம் சொல்ல் வேண்டும்.

வங்கி மைனஸ் வட்டியை பற்றி என்ன நினைக்கிறீர்கள் வணங்காமுடியாரே? இந்தியாவில் இது சாத்தியமாகுமா?- செல்வமணி
இந்தியாவின் பிரதமராக இருக்கும் பொருளாதார நிபுணர் டாக்டர் மன்மோகன்சிங் கூட இதற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறாரே! சாத்தியம் இல்லையெனில் அவர் அப்படி ஆதரவு தெரிவித்திருப்பாரா? மலேசியா சென்றபோது, அங்கு செயல்படுத்தப்பட்டு வரும் வட்டியில்லா வங்கி முறையை இந்தியாவிலும் நடைமுறைப்படுத்த இந்திய ரிசர்வ் வங்கி ஆய்வு செய்ய வேண்டும் என பிரதமர் மன்மோகன்சிங் சொல்லியிருந்தார்.


இந்தியாவின் எல்லாச் சந்திலும் சந்தி சிரித்துப் பலமாதங்களுக்குப் பிறகு 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் தொடர்புடையவர்களின் இடங்களில் ஸீபீஐ "திடீர் சோதனை" நடத்துவது பற்றி ... - வசீகரன், பட்டுக்கோட்டை
உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட பின் தான் சி பி ஐ விசாரிப்பதற்குக் களம் இறங்கியது. அதனால் சி பி ஐ யைக் குற்றம் சொல்ல முடியாது.

(வணங்காமுடி பதில்கள் அனைத்தையும் இங்கு காணலாம்)
கேள்விகளை அனுப்ப விரும்பும் வாசகர்கள் ask@inneram.comஎரிதங்களிலிருந்து இம்மின்மடல் பாதுகாக்கப்பட்டுள்ளது. இதனைப்பார்க்க ஜாவாஸ்கிரிப்ட் இயக்கப்படவேண்டும் என்ற மின் அஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்.
Source : http://www.inneram.com/2011010212819/vanagamudi-answers-02-01-2011

LinkWithin

Related Posts with Thumbnails