Saturday, August 21, 2010

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள் - ரமழான் சிந்தனை

குர்ஆன் ஓதுவதின் சிறப்புகள் - ரமழான் சிந்தனை



1) நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)  
                 
2) குர்ஆனை ஓதி அதன்படி அமல் செய்தவரையும், குர்ஆனையும் நாளை மறுமையில் கொண்டு வரப்படும், குர்ஆனின் இரண்டு சூராக்கள் அல்பகரா, ஆலு இம்ரான் முன் வந்து அந்த இரண்டையும் ஓதியவருக்காக அல்லாஹ்விடத்தில் வாதாடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம்)

3) உங்களில் சிறந்தவர், குர்ஆனைக் கற்று அதை பிறருக்கு கற்றுக் கொடுத்தவர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)

4) குர்ஆனை உரிய முறையில் ஓதி அதன் படி செயல்பட்டவர் நாளை மறுமையில் சங்கையான உயர்ந்த மலக்குகளுடன் இருப்பார். கஷ்டப்பட்டு திக்கித் திக்கி ஓதுபவருக்கு இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

5) அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

6) ""எவருடைய உள்ளத்தில், குர்ஆனில் கொஞ்சம் கூட மனனம் இல்லையோ, அவருடைய உள்ளம் பாழடைந்த வீட்டைப்போல்"" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: திர்மிதி)

விளக்கம்: படித்து, சிந்தித்துச் செயல்பட வேண்டும் என்பதற்காகத்தான், குர்ஆனை அல்லாஹ் நமக்கு அருளினான். ஆனால், முதிய வயதை அடைந்தும் குர்ஆனை ஓதத் தெரியாதவர்கள் நம்மில் பலர் உள்ளனர். இது கவலை தரக்கூடிய ஒன்றாகும். முதிய வயதாகிவிட்டாலும் குர்ஆனைக் கற்றுக் கொள்ள முடியும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். உங்களை மரணம் வந்தடைவதற்கு முன், தெரிந்தவர்களிடம் சென்று, குர்ஆனை கற்றுக் கொள்ளுங்கள். புதிதாக இஸ்லாத்தை ஏற்ற பல சகோதர சகோதரிகள், குர்ஆனை சரளமாக ஓதவும், அதன்படி செயல்படவும் செய்கின்றார்கள். நாமோ பரம்பரை முஸ்லிம் என்று கூறிக்கொண்டு, நமது வழிகாட்டியாகிய குர்ஆனைப் பற்றி, எதுவும் தெரியாதவர்களாக இருக்கின்றோம். முஸ்லிம்களே! தயவு செய்து குர்ஆனைப் படியுங்கள், அதைப்படிப்பது மிகவும் அவசியமானது. அதைப்படிப்பது மிகவும் இலகுவானது. அல்லாஹ் இவ்வாறு கூறுகின்றான்.

திட்டமாக, நாம் குர்ஆனை உபதேசம் பெறுவதற்காக எளிதாக்கி இருக்கின்றோம். ஆகவே, (இதனைக் கொண்டு) படிப்பினை பெறக்கூடியவர் உண்டா? (அல்குர்ஆன் 54:22)

மேலும் அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? அல்லது அவர்கள் இதயங்களின் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? (அல்குர்ஆன் 47:24)

நாம் இந்தக் குர்ஆனைப் படித்து, விளங்கி, அதன்படி செயல்பட வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான். அப்படிச் செயல்படாதவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்பட்டு விட்டனவா? என்று கேட்கின்றான். அப்படி அவர்களின் உள்ளங்கள் மீது பூட்டுக்கள் போடப்படவில்லையே! ஏன் அதைப்படித்து செயல்படாமல் இருக்கின்றார்கள்? என அல்லாஹ் நமது சிந்தனையைத் தூண்டும் கேள்வியை கேட்கின்றான். ஆகவே, அன்புள்ள சகோதர சகோதரிகளே! குர்ஆனை அதிகமதிகம் ஓதுங்கள். அதன் கருத்துக்களை தர்ஜமதுல் குர்ஆனின் மூலம் விளங்கிப் படியுங்கள். அதன் படி செயல்படுங்கள். விஷேசமாக குர்ஆன் இறங்கிய இந்த ரமளான் மாதத்தில் அதிகமாக ஓதுங்கள். ஒரு எழுத்தை ஓதினால் குறைந்தது பத்து நன்மை கிடைக்கின்றது. ஒரு நாளில் எத்தனையோ எழுத்துக்களை படிக்க நமக்கு வாய்ப்பிருக்கின்றது. சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள். குர்ஆனைப் படித்து, அதன்படி நடந்து, ஈருலக வெற்றி பெற அல்லாஹ் நம் அனைவருக்கும் வாய்ப்பளிப்பானாக..!

- K.L.M இப்றாஹீம் மதனி

Courtesy: Readislam.net

இந்த அருமையான கட்டுரையை தொகுத்தளித்த கட்டுரையாளருக்காக துஆ செய்வோமாக.
 

Friday, August 20, 2010

TCN கார்ட்டூன் : காஷ்மிரி லீடர்ஷிப்

கார்ட்டூன் படமானாலும் மனிதன் படும் அவதியினை மற்ற ஒரு மனிதன் ரசிக்கும் வேதனையினை   எவ்வளவு அருமையாக விளக்கம் தருகின்றது .
படமும் பேசும்.
நல்லது நடக்க இந்த நல்ல நாளில் நாம் இறைவனை வேண்டுவோம்.

படம் உதவி
source  ; By Yusuf, TwoCircles.netTCN cartoon: Kashmiri leadership

http://twocircles.net/2010aug16/tcn_cartoon_kashmiri_leadership.html?t=1282358806#comment-162240

ரமழானில் நிதானமும், உடல் ஆரோக்கியமும்

ரமழானில் நிதானமும், உடல் ஆரோக்கியமும்

அன்பானவர்களே, இப்புனித ரமழான் மாதத்தின் முதல் பத்து முடிந்து  இரண்டாம் பத்துக்கு செல்ல உள்ளோம்,                                                                                 எம் மனதில் தோன்றிய முக்கியமான சில செய்திகளை இங்கு பகிர்ந்துக்கொள்வது நல்லது என்று கருதுகிறோம்.

மற்ற நாட்களைவிட ரமழான் மாத்தில் ஒரு பரபரப்பான சூழல் ஏற்படுவது சகஜம் என்றாலும் நம் சகோதரர்கள் ரமழானுடை பண்புகள் தெரிந்திருந்தும் சில நேரங்களில் நிதானம் இழந்துவிடுகிறார்கள்.

நோன்பு மனிதனின் நடத்தைகளைச் சீராக்கி அவனிடம் உருவாகும் மிருக உணர்வுகளை அழித்து மனித மாண்புகளைக் காக்கின்றது.

பசியோடும், தாகத்தோடும் இருப்பது மாத்திரம் நோன்பாகாது. இவைகளைக் கட்டுப்படுத்துவது போல் மற்ற எல்லாப் பாவ செயல்களையும் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். ரமழான் மாதம் இஸ்லாம் கூறக்கூடிய எல்லா நற்செயல்களையும் ஞாபகப்படுத்தக்கூடிய ஒரு மாதமாகும். தொழாதவர்கள் தொழ ஆரம்பித்து விடுகின்றனர். தர்மமே செய்யாதவர்கள் தர்மம் செய்கின்றனர். உம்ராச் செய்யாதவர்கள் உம்ராச் செய்கின்றனர். குர்ஆன் ஓதாதவர்கள் ஓத ஆரம்பித்துவிடுகின்றனர். தவறான செயல்களில் ஈடுபட்டவர்கள் அதை நிறுத்திக் கொள்கின்றனர். இன்னும் இது போன்ற பல நல்ல செயல்களையும் கற்றுத்தருகின்றது இந்த நோன்பு.

இந்த அவசர உலகில் நம் மக்கள் குறிப்பாக வேலைகளுக்கு வாகனங்களில் செல்லும் நம் நோன்பாளிகள் நேரமின்மையை கருத்தில் கொண்டு நிதானம் இழந்து அவசரத்தில் வாகனங்களை ஓட்டி விபத்துக்குள்ளாகிறார்கள். அரபு நாடுகளில் வேலைகளில் இருக்கும் நிறைய சகோதரர்கள் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களாகவும், நான்கு சக்கரம் வாகனம் ஓட்டுபவர்களாகவும் உள்ளார்கள். வருடா வருடம் தினமும் எம் கண்முன்னே சாலை விபத்துக்கள் அதிகம் ரமழான் மாதத்தில் தான் காணமுடிகிறது. விபத்துக்கு காரணமானவர் பாதிக்கப்படுவதைவிட  விபத்துக்கு காரணமில்லாத அப்பாவிகள் தான் அதிகம் பாதிக்கப்பட்டு உயிரிழக்கவும் நேரிடுகிறது. அல்லாஹ் காப்பாத்துவானாக.

குறிப்பாக ரமழான் மாதத்தில்  நேரமின்மை  என்ற  காரணத்தால்   பல சகோதரர்கள் நிதானமிழந்து சாலைகளை முறையில்லாமல் கடக்கும் போதும் அதிகம்  விபத்துக்கள் அன்றாடம் நடைப்பெருகிறது. இது மிகவும் வேதனையான செய்தி. சந்தோசமாக இபாதத்து செய்யக்கூடிய மாதத்தில் சாலை விபத்துக்கள் போன்ற துக்க செய்திகளை கேட்காத நாளே இல்லை. அல்லாஹ் நம்மையும், நம் மக்களையும் காப்பாத்துவானாக.

வாகன ஒட்டிகள் ரமழான் மாதத்தில் மட்டுமல்லாது மற்ற எல்லா நாட்களிலும் நிதானதமாக வாகனங்களை ஓட்டி தங்களின் பாதுகாப்பையும், அடுத்தவர்களின் பாதுகாப்பையும் மனதில் கொள்ளவேண்டும்.

எமது சமூகத்தவர்களில் பலர் புகைப்பிடித்தல் எனும் தீய பழக்கத்திற்குள்ளாகியுள்ளனர். புகைத்தலை விட்டும் விலக ரமழானே சிறந்த வாய்ப்பாகும். சுமார் 14 மணி நேரம் புகைத்தலை விட்டும் விலகியிருக்கும் எமது சகோதரர்கள் நோன்பு திறந்ததும் பகலில் குடிக்காத சிகரட்டுக்களையும் சேர்த்தே குடித்து விடுகின்றனர். நோன்பிருந்தபோது தளர்ந்திருக்கும் சுவாசத் திசுக்கள் புகை பிடித்தலால் நிக்கோட்டினால் தாக்கப்படும்போது புற்று நோய் ஏற்படும் வாய்ப்பு மிக அதிகம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இப்பழக்கத்தைக் கைவிட நோன்பைச் சரியான சந்தர்ப்பமாகப் பயன்படுத்தி அதை அப்படியே விட்டு விட அனைவரும் உறுதி கொள்ள வேண்டும்.

சரியான முறையில் ஸஹர்-நோன்பு துறப்பு உணவுப் பழக்கம் இல்லாவிட்டால் என்னவாகும்?

செரியாமை: நாள்முழுவதும் உணவு இல்லாமல் இருக்கும் இரைப்பை திடீரென்று பல்வகையான உணவுப் பொருட்கள் திணிக்கப்பட்டால் திணறித்தானே போகும்? அளவான, சத்து நிறைந்த உணவே நோன்பு துறக்க மிக உகந்ததாகும்.

மலச்சிக்கல்: சரியான அளவில் நார்ச்சத்து இல்லாத பொறித்த தின்பண்டங்கள், இனிப்பு வகைகள் அதிக அளவில் உட்கொள்வதால் மலச்சிக்கல் வரும்.

சோம்பல்: திடீரென்று உட்கொள்ளப்படும் மாவுச்சத்து நிறைந்த உணவுகள் நாள்முழுவதும் இருந்த பட்டினியால் குறைந்த குருதி அழுத்தத்துடன் இணைந்து சோம்பல் உணர்வைத் தூண்டும்.

தலைவலி: சரியான முறையில் உறக்கச் சுழற்சியை வகுத்துக் கொள்ளாவிட்டால் தலைவலி வருவதைத் தவிர்க்க இயலாது.

தசைப்பிடிப்பு: சரியான அளவில் மெக்னீசியம், கால்சியம், பொட்டாசியம் உள்ள உணவை நோன்பு துறக்கப் பயனபடுத்தாவிட்டல் தசைப்பிடிப்பு ஏற்படும்.

உறக்கமின்மை: ஒவ்வொருவர் உடலுக்கும் தக்கவாறு தேவையான உறக்கத்தை நல்லமுறையில் திட்டமிட்டு நடைமுறைப்படுத்த வேண்டும். (இரவு வணக்கங்கள், அருள்மறை ஓதுதல், அன்றாடப் பணி இவற்றுக்கு நேரம் திட்டமிடுதலைப் போலவே)

நிதானத்துடன் ஆரோக்கியமான வழியில் நோன்பு மேற்கொண்டு மனநலத்தில் மட்டுமின்றி உடல்நலத்திலும் சிறந்தவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்வானாக.

http://adirainirubar.blogspot.com/2010/08/blog-post_20.html
 

புதுவை முஸ்லிம்களுக்கு 2% இடஒதுகீடு!

புதுவை: புதுச்சேரியில் வாழும் இஸ்லாமியர்கள் மற்றும் மீனவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், தலா 2 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் வி.வைத்திலிங்கம், செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மீனவர் மற்றும் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்த அமைச்சரவைக்  கூட்டம், சட்டப்பேரவை வளாகத்தில் புதன்கிழமை நடந்தது. கூட்டத்தின் முடிவு குறித்து முதல்வர் வி.வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசியபோது: மீனவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று சட்டமன்ற மற்றும் மக்களவைத்  தேர்தலில் காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்தது.
இந்நிலையில் அவர்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பது குறித்து அமைச்சர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இதில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கு வழங்கப்பட்டு வரும் 20 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, மீனவர்களுக்கு 2 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் முஸ்லிம்களுக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்புக்கான 12 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் உள் ஒதுக்கீடாக வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான அரசு ஆணை ஒரு வாரத்துக்குள் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
http://www.inneram.com/2010082010168/2-reservation-for-muslims-in-puducherry

இரவுத்தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதை துவக்கியவர் உமர் (ரலி) அவர்களா? – Audio/Video

இரவுத்தொழுகையை ஜமாஅத்தாக தொழுவதை துவக்கியவர் உமர் (ரலி) அவர்களா? – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி
நாள் : 21-08-2008
இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா
ஆடியோ : (Download) {MP3 format -Size : 1.47 MB}
வீடியோ : (Download) {FLV format – Size : 15.25 MB}

http://suvanathendral.com/portal/?p=1553

ஈராக்கிலிருந்து அமெரிக்க துருப்புகள் முழுவதுமாக வெளியேறின!


பாக்தாத்: ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தின் கடைசி பிரிவும் இன்று வெளியேறி  சென்றது. கடந்த 2003 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஈராக் மீது படையெடுத்த அமெரிக்க இராணுவம், சதாம் உசேன் தலைமையிலான அரசை அகற்றிவிட்டு, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் பொம்மை அரசு ஒன்றை அமைத்தது.
இந்நிலையில்,சதாம் உசேனும் மற்றும் அவரின் ஆதவாளார்கள் தூக்கிலிடப்பட்டார்கள். நீண்டகாலமாக அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கில் முகாமிட்டிருப்பது மற்றும் அதற்கு ஆகும் செலவினங்கள், இராணுவ வீரர்களின் உயிரிழப்புகள் குறித்து சொந்த நாட்டிலேயே விமர்சனங்கள் மற்றும் எதிர்ப்புக்கள் கிளம்பியதைத் தொடர்ந்து, ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தை படிப்படியாக வாபஸ் பெற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது.
அதன்படி இம்மாதம் 31 ஆம் தேதிக்குள் அமெரிக்க இராணுவத்தினர் ஈராக்கிலிருந்து முற்றிலும் வெளியேறிவிடுவர் என்றும், பாதுகாப்பு பணிகளில் ஈராக் இராணுவத்தினரே ஈடுபடுவர்கள் என்றும் அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருந்தார்.
அதே சமயம் தார்மீக மனபலத்திற்காக 50,000 வீரர்கள் மட்டும் ஒரு ஆண்டு காலத்திற்கு, ஈராக்கையொட்டிய குவைத் எல்லைப் பகுதியில் முகாமிட்டிருப்பாகள் என்றும், தேவைபடும்பட்சத்தில் ஈராக் இராணுவமே அழைத்தால் மட்டுமே,இவர்கள் ஈராக் சென்று உதவுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி ஈராக்கிலிருந்து அமெரிக்க இராணுவத்தினரின் கடைசி படையணியும் இன்று வெளியேறி, குவைத் எல்லைக்குட்பட்ட பகுதிக்கு புறப்பட்டுச் சென்றது. இதனிடையே அமெரிக்க இராணுவத்தின் உதவி, இன்னும் 10 ஆண்டு காலத்திற்கு தேவை என்று ஈராக் இராணுவ தலைமை தளபதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
http://www.inneram.com/2010081910164/the-last-american-army-come-out-from-iraq

ரமலான் இரவுத்தொழுகைகளில் முழு குர்ஆனையும் ஓதி முடிக்கவேண்டுமா? – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி on 19th August 2010
நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி
நாள் : 21-08-2008
இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா
ஆடியோ : (Download) {MP3 format -Size : 516 KB}
வீடியோ : (Download) {FLV format – Size : 5.14 MB}

http://suvanathendral.com/portal/?p=1555

LinkWithin

Related Posts with Thumbnails