Thursday, April 21, 2011

பருவமறிந்து பயிரிடலாமே ! - அனுபவம் பேசுகிறது !

மாணவமணிகள் பள்ளி மேல்நிலை இறுதித் (+2) தேர்வில் மதிப்பெண்கள் எப்படியிருக்குமென்றும் அல்லது இவ்வளவு நிச்சயம் பெற்றிடுவோம் என்றும் முடிவுகளால் முடிச்சுப் போட்டுக் கொண்டிருக்கும் இளசுகளே !

நல்ல கல்லூரியில் இடம் கிடைக்குமா? ஒருவேளை கிடைக்கா விட்டால், என் எதிர் காலம்? சந்தேகங்கள் அலையலையாய் அடிக்கத்தான் செய்யும்!. சரி மறுபக்கம், கட்டுக்கோப்புடனிருந்த பள்ளி வாழ்க்கை நிறைவுக்குள் வந்து விட்டது. இனி, ஜாலியான கல்லூரி வாழ்க்கை என்று அடுத்த சில மாதங்களை உற்சாகக் கொண்டாட்டமாகக் கழிக்கத் திட்டமிட்டிருக்கும் பலர்.

கொஞ்சம் கவனமாக என்ன சிரத்தை எடுத்தால்(மட்டுமே) +2 வுக்குப் பிறகான எதிர் நோக்கும் காலத்துக்கு நீங்களே சிவப்புக் கம்பளம் விரித்துக்கொள்ளலாம்.

இதெல்லாத்தையும் விட மனசுக்குப் பிடித்த பாடப் பிரிவில் விருப்பமான ஒரு கல்லூரியில் சேர்ந்தாகி விட்டது. இனி, கல்லூரிக்குச் செல்லும் முதல் நாள். படபடப்பு, ஆர்வம், பயம், பரவசம், "இனி நான் காலேஜ் ஸ்டூடன்ட்டாக்கும்!" என்று முதல் ஆண்டின் சில மாதங்களும் ஓடிடும். அதிலும் சீனியர்களின் ராகிங் வலையில் சிக்கநேர்ந்தால், கல்லூரி வாழ்க்கையின் அவஸ்தை, அத்தியாயமாகப் பதிவாகும் கலக்கமும் உங்களிடம் இருக்கலாம்.

ஊரோடு கல்லூரி என்றிருந்தால் பரவாயில்லை ஒருவேளை விடுதி வாசம், ஆரோக்கியம் இல்லாத உணவுகள், வீட்டைப் பிரிந்து இருக்கும் தனிமை இவைகளையும் சந்திக்க நேரிடும்.

ராகிங் மூலம் நட்பு பாராட்டுவதுதான் பெரும்பாலான சீனியர்களின் நோக்கமாக இருக்கும். ஆனால், தனி மனித சுதந்திரத்தை மீறும் வகையில், உங்களுக்கு விருப்பம் இல்லாதவற்றை செய்யச்சொல்லும் போது தயங்காமல், இதில் எனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்து விடுவதே நல்லது. அதையும் மீறி கட்டாயப்படுத்தினால், பேராசிரியரிடமோ, கல்லூரி முதல்வரிடமோ புகார் செய்யலாம்.

தமிழ் மீடியத்தில் இருந்து ஆங்கில மீடியத்தில் படிக்க நேரும் மாணவர்களுக்கோ, ஆரம்ப காலங்களில் தவிர்க்க இயலாத சங்கடங்கள் இருக்கலாம். ஆங்கிலம் என்பது தமிழைப் போல ஒரு மொழிதான். அதை மிகச் இயல்பாகக் கற்கலாம். ஆங்கிலம் என்பது அறிவு (knowledge) அல்ல. கூடுதல் தகுதியாக ஒரு மொழிப் புலமை மட்டுமே ! ஆகவே, ஆங்கில அறிவு என்பதற்கு பதிலாக ஆங்கிலப் புலமைதான் சரி. சித்திரமும் கைப் பழக்கம் ஆங்கிலமும் நாப் பழக்கம்!

மாணவர்களுக்கு டிரெஸ்ஸிங் சென்ஸ் காரணமாக தாழ்வு மனப்பான்மை ஏற்படலாம். நவநாகரிக உடைகள் அணியும் மாணவர்களைப் பார்த்து, குற்றவுணர்ச்சியால் குறுகுறுக்கத் தேவை இல்லை. வசதிக்கு ஏற்ப ஆடை அணிவதுதான் அவசியம். நாம் அணியும் உடை எந்த விதத்திலும் நமது கண்ணியத்தைக் குலைப்பதாக இருக்கக் கூடாது.

வசிப்பிடத்தைப் பலருடன் பகிர்ந்துகொள்வது போன்ற பிரச்னைகள் இரண்டொரு வாரங்களில் சரியாகிவிடும். அதனால், பயம் தேவை இல்லை. சிலர் வீட்டில் ஆறு பரோட்டா சாப்பிடுவார்கள். ஆனால், விடுதியில் மூன்று பரோட்டா மேல் சாப்பிட்டால், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்ற கூச்சத்தில், கால் வயிறும் அரை வயிறுமாகச் சாப்பிடுவார்கள். உணவு விஷயத்தில் மட்டும் எங்கேயும் எப்போதும் கூச்சம் வேண்டாம்.

கல்லூரிப் பருவத்தில் பல சமயம் நீங்களே தன்னிச்சையாக பல முடிவுகள் எடுக்க வேண்டி இருக்கும். இரண்டாம் ஆண்டு விருப்பப் பாடம் துவங்கி, மேற்படிப்பு, வேலைவாய்ப்பு என்று பல விஷயங்களைப்பற்றி தீர்மானிக்க வேண்டியிருக்கும். இது பல சமயங்களில் மன உளைச்சலை உண்டாக்கி, தூக்கம் கெடுத்து, குழப்பத்தில் ஆழ்த்தும். அப்படி முடிவெடுக்க முடியாத சமயங்களில் தனிமை தவிர்த்து, பெற்றோர் அல்லது விவரம் தெரிந்த சீனியர், பேராசிரியர்களின் வழிகாட்டுதலின்படி நடந்துகொள்ளுங்கள். நாளை நீங்களே ஒரு வழிகாட்டி ஆகலாம் !

இவைகள் எல்லாவற்றையும் விட சிறகை விரித்துப் பறக்கும் பறவைகளாகிவிட்டோமே என்றில்லாமல் பெற்றோர் சொல் கேட்பதும் அவர்களின் மனங்களை குளிர வைப்பதும் கற்ற கல்வியின் பலனாகத்தான் இருக்க வேண்டும். ஆசிரியர்களை மதிப்பதும் அவர்களுக்கு உரிய மரியாதையைச் செலுத்துவதும் கற்ற கல்வியினால் கண்ட பலனாக இருக்க வேண்டும்.

சரி, இத்தனை போராட்டங்களும் ஏன் ?

கௌரவமான ஒரு வேலையைக் கைக்கொள்ளும் இலக்கை எட்டுவதற்காகத்தானே ! கல்லூரிப் பருவத்திலேயே தங்களின்வேலை வாய்ப்புத் திறனை அதிகரித்துக் கொள்வதும். கல்லூரியில் விருப்பப் பாடங்களைத் தேர்ந்து எடுப்பதில் உள்ள நிதானமும், உத்வேகமும் வேலை குறித்து முடிவு செய்வதிலும் வேண்டும்!

கல்லூரிப் படிப்பின் இரண்டாம் ஆண்டில் இருந்தே எதிர்காலத்துக்கு ஏற்பத் தன்னை மெருகேற்றிக் கொள்வதில், மாணவர்கள் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலம் மட்டும் தெரிந்தால் உலகத்தையே கட்டி ஆளலாம் என்று இதுவரை கற்பனைக் கோட்டை கட்டி இருந்தால், அதனை பக்கவாட்டில் வைத்துவிடுங்கள் ஊறுகாயாக தொட்டுக் கொள்ளலாம். நேர்முகத் தேர்வுகளில் ஆங்கில புலமையைவிட, டெக்னிக்கல் சம்பந்தமான அறிவையும், இண்டஸ்ட்ரி தொடர்பான விழிப்பு உணர்வையும்தான் சோதிக்கிறார்கள்.

இறுதி ஆண்டில் புராஜெக்ட்களைத் தங்கள் கைப்படச் செய்து முடிப்பது, கேம்பஸ் இன்டர்வியூக்களில் உங்களுக்குக் கூடுதல் மதிப்பை அளிக்கும். விலைக்கு வாங்கும் புராஜெக்ட்கள் உங்களின் இயல்பான திறமையைக்கூட மறைத்து, எதிரான எண்ணத்தை உண்டாக்கும்.

அதிமுக்கியமாக எந்த செமஸ்டரிலும் அரியர் (இடைத் தேர்தலுக்காக காத்திருக்கும் வேட்பளாராக) இல்லாமல் இருப்பது நலம். தகுதியுடைய மாணவர்கள் அதிக அளவில் இருந்தால், பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பின் மதிப்பெண் சராசரிகளும் கணக்கில்கொள்ளப்படும். தனித் திறமைத் தகுதிகளுக்கும் அங்கீகாரம் உண்டு. தனித் திறமைகொண்டவர்கள் மற்றவர்களிடம் எளிதில் கலந்து பழகுவார்கள் என்ற எண்ணம் உதிப்பதற்கு கவிக் காக்காவின் வரிகளும் தான் ஞாபகத்திற்கு வருகிறது "கனவு மெய்ப்பட வேண்டும்".

இதற்கு மேலும் (வலுவான அனுபவமிக்க) பயி(ல்வான்)ன்றவகள் நிறைந்திருக்கும் சபையிது ஆதாலால் அவர்களின் ஆலோசனைகளும், ஆர்பரிக்கும் அனுபவங்களும் கருத்தாய்வார்கள் இதனைத் தொடர்ந்தே !

மேற்சொன்னவைகள் (அனுபவப்)பட்டதும், (உணர்வுகளைச்)சுட்டதும், (இனிமையாக)நேசித்ததும் அன்றையச் சூழலில் கற்றவைகளையும் கோர்வையாக்கியிருக்கிறேன்.

- அபுஇபுறாஹிம்
Source : http://adirainirubar.blogspot.com/2011/04/blog-post_21.html

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails