Tuesday, April 12, 2011

நீடூரில் மருத்துவக் கல்லூரி: கவனத்தில் கொள்ள வேண்டியவை…!

தமிழக முஸ்லிம் சமுதாயம் கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும்  என்ற வேட்கையுடன் தங்கள் வாழ்நாள் முழுவதும் சுயநலம் இல்லாமல் உழைத்த தியாகிகளின் நிகரில்லா தியாகத்தின் வெளிப்பாடுதான் இன்றைக்கு முஸ்லிம் சமுதாயம் ஓரளவிற்கு விழிப்புணர்வு பெற்று வரும் காட்சி. அடுத்த தலைமுறை இஸ்லாமிய அடிப்படையில் கல்வி பயில வேண்டும் என்பதற்காக தங்களின் சொத்துக்களை எழுதி வைத்து பல கல்வி நிறுவனங்களை உருவாக்கிய வள்ளல் பெருமக்கள் வாழந்த மண் இது.
கருத்தராவுத்தர் அப்பா, காதிர் முகைதீன் அப்பா, ஜஸ்டிஸ் பஷீர் அகமது, பெரியவர் ஜமால் முகம்மது போன்ற பல தன்னலமற்ற தியாகிகள் உருவாக்கிய கல்வி நிறுவனங்களில் தான் இன்றைய தலைமுறை கல்வி பயின்று வருகிறது. இந்த நிறுவனங்கள் சிலவற்றின் இன்றைய செயல்பாட்டில் பலருக்குத் திருப்தி இல்லையென்றாலும் கூட உருவாக்கியவர்களின் உயர்ந்த தியாகத்தை யாராலும் மறுக்க இயலாது. அது இறைவனுடைய பொருத்தத்தைப் பெற்றது என்பதில் சந்தேகமில்லை.
இவையெல்லாம் 1950-1970 வரை வாழ்ந்த வள்ளல் பெருமக்களின் அர்ப்பணிப்பு மற்றும் ஓய்வறியா உழைப்பின் வெளிப்பாடு.
இன்றைக்கு கல்வி வணிகமாகிவிட்ட காலத்தில் நாம் வாழ்ந்து வருகின்றோம். இன்றைய காலத்திலும் அந்த தியாகிகளைப் போன்ற பெருமக்கள் அதிகம் உருவாக வேண்டும் என்று நினைப்பது அறியாமையின் வெளிப்பாடாக அமையும்.
மாறிப்போய் உள்ள இன்றைய காலத்திற்கேற்ப கல்விப் பணியாற்ற வேண்டும். ஓரளவிற்கு வணிக நோக்குடன் செயலாற்றக் கூடிய கல்வி நிறுவனங்களை அதிகம் உருவாக்குவது தான் இன்றைய காலத்திற்கு பொருத்தமானதாக அமையும்.
முஸ்லிம் சமுதாயம் கல்வி ரீதியாக மேம்படுவதற்கு இஸ்லாமிய அடிப்படையிலான உயர்தரமான பள்ளிக்கூடங்கள் ஊர் தோறும் தேவை. அதே போல இஸ்லாமிய கலாச்சாரத்தைப் பேணி கல்வி கற்க ஏதுவான பெண்களுக்கான கல்லூரிகளும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவை. இவை இன்றைய அத்தியாவசிய தேவையாக இருக்கிறது.
அதே போல முஸ்லிம் சமுதாயத்திற்கு மருத்துவக் கல்லூரி தேவை என்பதையும் யாராலும் மறுக்க இயலாது. கடந்த காலங்களில் மருத்துவக் கல்லூரி குறித்து முஸ்லிம் சமுதாயம் கவனம் செலுத்தாமலே இருந்து விட்டது. மருத்துவக் கல்வியை இன்றைய சிறந்த முதலீடாகக் கருதி வசதியுள்ளவர்கள் தங்கள் பிள்ளைகளை சேர்த்து படிக்க வைக்கின்றனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில்
மட்டும்தான் ஏழை மக்கள் போட்டியிட்டு நுழைய இயலும் என்ற நிலை உள்ளது. இந்நிலையில் சிறுபான்மை மருத்துவக் கல்லூரி என்ற அங்கீகாரத்துடன் ஒரு நிறுவனம் தமிழகத்தில் உருவாவதை சமுதாய உணர்வு உள்ள யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்பது உண்மை.
இப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க நிறுவனத்தை உருவாக்கும் போது அது அல்லாஹ்வுடைய அருளைப் பெற்றதாக அமைகின்ற போது, அல்லாஹ்வுடைய தூதர் காட்டிய  வழியில் அதை நடைமுறைப் படுத்தும் போது அது மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சமுதாயத்திற்கு நன்மை பயக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. கவனத்தில் கொள்ள வேண்டியவை.
முதலாவது :
நீடூரில் தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிக்கென்று தனியாக நிலம் வாங்கி அதில் தொடங்குவது தான் சிறந்ததாக இருக்கும். வக்ஃபு வாரியத்தில் பதிவு செய்யப் பட்ட நிலமாக இருந்தால் அதை தவிர்ப்பது தான் இப்போதைய நிலையில் சிறந்ததாக இருக்கும்.
கவிக்கோ அவர்கள் முஸ்லிம் சமுதாயத்தின் கல்விமேம்பாட்டில் தன்னையே அர்ப்பணிக்கக் கூடியவர் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான். ஆனால் 63 ஆண்டுகளாக ஊழலில் நாறிப் போன வக்ஃபு வாரியத்தின் இன்றையத் தலைவர் கவிக்கோ அவர்களால் தான் விரும்புகிற மாற்றத்தை வக்ஃபு வாரியத்தில் ஏற்படுத்திட இயலவில்லை என்று அவர்களே வெளிப்படையாக ஒவ்வொரு மேடையிலும் தொலைக்காட்சியிலும் வலியுறுத்தி வரும் வேளையில் வக்ஃபு சொத்தில் மருத்துவக் கல்லூரி அமைவது தற்கொலைக்குச் சமமாகும்.
வக்ஃபு வாரியத்தின் சார்பில் தொடங்கப்பட்ட மதுரை வக்ஃபு போர்டு கல்லூரியின் நிலை எல்லோருக்கும் தெரிந்த செய்தி தான்.
மருத்துவக் கல்லூரி என்பது பொன் முட்டையிடும் வாத்து என்பது எல்லா அரசியல்வாதிகளுக்கும் தெரியும். 3 மாதத்தில் தேர்தல் வர உள்ளது. ஆட்சி மாறினால் வக்ஃபு வாரியத்தின் தலைவர் மாறக்கூடும். அப்போது கூட வக்ஃபு வாரியத்தின் ஊழல் மாறப்போவதில்லை என்பதுஒருபுறம் இருக்க, மருத்துவக் கல்லூரியில் வக்ஃபு வாரியத்தின் கை இருக்கிறது என்று தெரிந்தால் போதும்; ஆளும் கட்சியில் இருப்பவர்கள் எதையாவது சொல்லி எவ்வளவு ‘கறக்க’ முடியுமோ அவ்வளவையும் ‘கறக்க’ப் பார்ப்பார்கள்.
இரண்டாவது :
மருத்துவக் கல்லூரி தொடங்கிட குறைந்தது 300 – 400 கோடி ரூபாய் தேவைப்படும் என்பது ஏற்கனவே மருத்துவக் கல்லூரி நடத்தி வருபவர்களின் வாக்கு மூலமாக இருக்கிறது. இவ்வளவு பெரிய தொகையைக் கையாள ஒரு வலிமையான பொருளாதார வசதி படைத்த கல்வியில் அக்கறை உள்ள பெரிய தனவந்தர் தலைமையில் முதலீடு செய்பவர்கள் அனைவரும் ஒன்று கூடி முதலீடு செய்தால் போடுகின்ற பணம் பாதுகாப்பாக இருக்கும் என்ற நம்பிக்கை மக்களுக்கு ஏற்படும்.
‘வலிமையான’ தலைமை இல்லாமல்; முதலீடு செய்பவர்களே ஒன்று கூடி அறக்கட்டளை அமைப்பது சிறிய தொகைக்கு சாத்தியமாகலாம். இவ்வளவு பெரிய தொகைக்கு சாத்தியமாகாது. ஒவ்வொருவரும் செல்வந்தர்கள் என்பதால் ஒவ்வொரு திசையை நோக்கிச் செல்வார்கள் என்பதை யாரும் மறுக்க மாட்டார்கள்.
மூன்றாவது :
கல்வியில் முஸ்லிம்களுக்கு என்று சில சட்ட திட்டங்கள் உள்ளது. இந்த சட்ட திட்டங்கள் எல்லோருக்கும் தெரிந்தவை தான். ஆணும் பெண்ணும் சேர்ந்து படிக்கின்ற கல்வி நிறுவனங்களை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. தவிர்க்க வேண்டும் என்று மிஸ்பாஹுல் ஹுதா மதரஸா ஆலிம்கள் உட்பட்ட மார்க்க மேதைகள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பலவிதமான தவறுகளுக்கும் தடம் புரண்டுச் செல்வதற்கும் இருபாலர் படிக்கும் கல்லூரிகள் தான்  அடிப்படையாக இருக்கிறது.
ஆந்திராவில் தற்போது முஸ்லிம்களால் தொடங்கப்பட்டுள்ளது போல பெண்களுக்கான மருத்துவக் கல்லூரியாக இக்கல்லூரியைத் தொடங்கலாம். பெண் மருத்துவர்கள் தான் இன்றைக்கு அதிகம் தேவை. பெண்களுக்கான கல்லூரிகள் அதிகம் தொடங்கப்பட வேண்டும் என்பது தான் பிற சமுதாய மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அது முஸ்லிம்களுக்கு மார்க்கச் சட்டமாகவும் இருக்கிறது.
நான்காவது :
மருத்துவமும் கல்வியும் இஸ்லாமிய அடிப்படையில் இறைவனுடைய அருள் நிறைந்த துறைகள். அவற்றை மக்களுக்கு இலவசமாகத்தான் கொடுக்க வேண்டும் என்று ஆட்சியாளர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் கட்டளையிடுகிறது.
மேலும் அல்லாஹ்வும் பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மருத்துவம், அதன் வழிமுறைகள், நோயாளிகள், மருந்துகள் குறித்து முஸ்லிம் சமுதாயத்திற்கு தெளிவாக வழிகாட்டி இருக்கின்றார்கள். விவரம் அறியாத முஸ்லிம் சமுதாயம் இந்த வழிகாட்டுதலை மீறுவதன் வெளிப்பாடுதான் இன்றைக்கு முஸ்லிம்களின் சொத்துக்கள் எல்லாம் மருத்துவத்திற்காக அழிந்து கொண்டிருக்கிறது.
கடந்த 30-40 ஆண்டுகளாக வலிந்து திணிக்கப்பட்டுள்ள இந்த அலோபதி என்ற ஆங்கில மருந்துகள் மனித குலத்திற்கும் இந்த பூமிக்கும் கடும் தீமையை விளைவித்து வருகின்றன என்பதை ஆங்கில மருத்துவர்கள் கூட மறுக்க மாட்டார்கள். இந்த மருந்துகளை அதிக அளவு பயன்படுத்தியதன் விளைவுகளை இன்றைய உலகச் சமூகம் அனுபவித்து வருகின்றது. இந்த ஆங்கில மருந்துகள் இஸ்லாத்திற்கு உடன் பட்டது அல்ல.
அதற்கு மாற்றாக கேரளாவில் செழித்து வளர்ந்துள்ள இந்திய மருத்துவக் கல்லூரியைப் போல ஆயுர்வேதம், சித்தா, யுனானி போன்ற மருத்துவ முறைகளுக்கான கல்லூரியாக தொடங்குவது தான் அல்லாஹ்வுக்கு பொருத்தமானதாக அமையும். மேலும் கேரளாவில் ஆங்கில வழி மருத்துவம் படித்த ஒரு மருத்துவர் நபி வழி மருத்துவம் கற்றுத் தரும் ஒரு கல்லூரியை தொடங்கி வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அதில் உள்ள ஒரு சில படிப்புகளுக்கு சென்னைப் பல்கலைக் கழகத்தின் அங்கீகாரத்துடன் சான்றிதழ் கிடைக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேற்கத்தியவாதிகள் உருவாக்குகின்ற குப்பைகளை எல்லாம் நம் மக்கள் மீது திணிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. முஸ்லிம்களுக்கு என்று எல்லாவற்றிலும் ஒரு தனி பாதை உண்டு.
எவ்வளவு பெரிய சமூக நெருக்கடி ஏற்பட்டாலும் சரி, கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் சரி இஸ்லாமிய வழிகாட்டுதலில் இருந்து மாறிச் செல்கின்ற எந்தச் சேவையும் வெற்றியைத் தராது. தந்ததாக சரித்திரமும் கிடையாது.
முஸ்லிம்களால் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற கருத்தை முன்வைத்துச் செல்பவர்கள் இந்த வழிமுறைகளையும் கவனத்தில் கொண்டு சென்றால் சமுதாயத்தின் முழு ஆதரவும் அல்லாஹ்வுடைய அருளும் கிடைக்கும் என்பது நிச்சயம்.
- ஆசிரியர்
Source : http://www.samooganeethi.org/?p=814

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails