Friday, November 4, 2011

விவேகானந்தர் பார்வையில் இஸ்லாம்

சுவாமி விவேகானந்தர் ஒரு உண்மையான ஆன்மீகவாதி. உலகின் அனைத்து மதங்களின் உன்னதங்களையும், போற்றிப் பாராட்டியவர். ஆனால் இன்று மதவெறியைக் கிளறி நாட்டை சுடுகாடாக்க முயலும் இயக்கத்தினர் தனது பிரச்சாரத்திற்கு விவேகானந்தரை பயன்படுத்திக் கொள்கிறது. இது விவேகானந்தரை இழிவுபடுத்துவது ஆகும்.

இஸ்லாம் மதம் குறித்தும், முகலாய மன்னர்களின் ஆட்சி குறித்தும் அவர்கள் பொய்மூட்டைகளை அவிழ்த்து விடுகின்றனர். ஆனால் விவேகானந்தர் இஸ்லாம் மதம் குறித்து மிக உயரிய எண்ணம் கொண்டு இருந்தார்.

''சமத்துவத்தைப் பற்றி ஏதேனும் ஒரு மதம் பாராட்டத்தக்க முறையில் சொல்லியிருந்தால் அது இஸ்லாம் மட்டுமே என்பது தான் எனது அனுபவம்.''

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், கம்யூனிஸ்டுகள் ஆகிய மூவரும் தான் எங்கள் பிரதான எதிரிகள் என்று கூறும் அவர்கள் விவேகானந்தர் பெயரை உச்சரிக்கக் கூட தகுதியற்றவர்கள் என்பதை இதன் மூலம் உணரலாம்.

இஸ்லாமிய மன்னர்கள் இந்துக்களைச் சித்ரவதை செய்து பலவந்தமாக மதம் மாற்றினர் என்ற பொய்யை வாய் வலிக்காமல் சொல்லி வருகின்றார்கள். ஆனால் விவேகானந்தர்..,

''பாமர மக்களுக்கு இஸ்லாம் ஒரு செய்தியாக வந்தது. முதல் செய்தி சமத்தவம், ஒரே மதம் தான் உள்ளது.., அது அன்பு, வம்சம், நிறம்.. அல்லது வேறு எதுபற்றியும் எந்தக் கேள்வியும் கிடையாது'' என்று கூறினார்.

ஜாதியக் கொடுமைகளின் வெப்பம் தாங்காமல் தான் பெரும்பகுதி மக்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினார்கள் என்பதை விவேகானந்தர் இதயப்பூர்வமாக ஒப்புக் கொண்டிருக்கிறார் என்பதையே இது காட்டுகின்றது.

கேரள மாநிலம் மலபார் பகுதியைச் சேர்ந்த ஏராளமாக தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினார்கள். இதைக் கண்ட சனாதனவாதிகள் எதிர்ப்பு கிளப்பிய போது விவேகானந்தர் அவர்களுக்கு அமைதியாகப் பதில் சொன்னார்..,

மலபார் பகுதியில் நடந்தது என்ன? ஏழை, எளிய தாழ்த்தப்பட்டவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் வசிக்கும் தெருக்களின் வழியாக நடக்கக் கூட முடியவில்லை. அவர்களது வீடுகள் அகதிகள் முகாம்களைப் போல ஊரிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. அவர்கள் கோயில்களுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அவர்கள் விழுந்தால் கூட நீங்கள் கவலைப்பட மாட்டீர்கள். இவ்வளவுக்கும் காரணம் உங்களது கேடுகெட்ட ஜாதி முறைதான். அவர்கள் கிறிஸ்தவ மதத்தில் சேர்ந்து ஒரு ஆங்கிலப் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அல்லது இஸ்லாத்தைத் தழுவி ஒரு முஸ்லிம் பெயரைச் சூட்டிக் கொண்டாலோ அவர்களுக்குப் புதிய மரியாதை கிடைக்கிறது. நிலமை இப்படி இருக்கும் போது, நீங்கள் எதிர்த்துப் போராட வேண்டியது உங்கள் மதத்தினுடைய பழமையான பழக்க வழக்கங்களையும், ஜாதி முறையையும் தானே தவிர நிச்சயமாக முஸ்லிம்களை எதிர்த்து அல்ல.''

இதுவல்லவா தெளிவான சிந்தனை! தீர்க்கமான அறிவு..! நோயின் மூலத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று விரும்பியவர் சுவாமி விவேகானந்தர், அவர் மேலும் பேசுகிறார் ..

''இந்தியாவை முகமதியர்கள் வென்றது ஏழை எளியவர்களுக்கு ஒரு விடுதலை வாய்ப்பாக அமைந்தது. எனவே தான் நமது மக்களின் ஐந்தில் ஒரு பகுதியினர் முகமதியர்களானார்கள்'' இன்றுள்ள நிலைகளுக்கு விவேகானந்தர் அன்றைக்கே அளித்துள்ள தெளிவான விடை இது.

இந்துக்கள் புத்தமதத்திற்கு மாறியதற்கும் அடிப்படைக் காரணம் ஜாதிய ஒடுக்குமுறைதான் என்பதையும் விவேகானந்தர் தெளிவாக கூறியுள்ளார். அவர் கேட்கிறார்..

''புத்தப் புரட்சி இல்லாமல் செல்வாக்கு மிகுந்த மேல் ஜாதியினரின் கொடுங்கோன்மையிலிருந்து அவதிக்குள்ளாயிருக்கும் லட்சக் கணக்கான கீழ்ஜாதி மக்களுக்கு வேறு எது விடுதலை அளித்திருக்கும்.''

என்று விவேகானந்தர் வினா தொடுத்தார். ஜாதியக் கொடுமையின் காரணமாக இந்திய அரசியல் சாசனத்தின் சிற்பி பாபா சாகேப் அம்பேத்கரே பின்னாளில் தனது ஆதரவாளர்களுடன் புத்த மதத்தை தழுவினார் என்பது மனங் கொள்ளத்தக்கது.

பசுக்கள் புனிதமானது. ஆனால் இஸ்லாமியர்கள் பசு மாமிசத்தைப் புசிக்கிறார்கள். எனவே அவர்கள் நமது எதிரிகள் என்று கூறினர். அரியானா மாநிலத்தில் இறந்து போன பசுமாட்டின் தோலை உரித்ததற்காக ஐந்து தலித்துக்கள் அடித்துக் கொல்லப்பட்ட கொடுமை நடந்தேறியுள்ளது. ''இறந்து போன பசுமாடு, உயிருள்ள தலித்துகளை விட புனிதமானது..?'' என்று கூறுகிறார் ஒருவர்! ஆனால் விவேகானந்தர் பார்வை வித்தியாசமானது.

ஒருமுறை பசுபாதுகாப்பு சங்கத்தைச் சேர்ந்தவர்கள் சுவாமி விவேகானந்தரைச் சந்திக்க வந்தார்கள். இந்து மதத்தின் புனித சின்னமான பசுக்களை பாதுகாக்க உங்களால் இயன்ற நன்கொடையைத் தாருங்கள்..! என்று வந்தவர்கள் கேட்டார்கள்.

அப்பொழுது நாட்டின் பல பகுதிகளில் பஞ்சம் தலைவிரித்தாடியது. மக்கள் பட்டினியால் சுருண்டு விடுந்து செத்துக் கொண்டிருந்தார்கள். சுவாமிஜி வந்தவர்களைப் பார்த்துக் கேட்டார். 'பட்டினியால் சாகும் மனிதர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்வீர்களா?

வந்தவர்கள் பதில் சொல்லும் போது ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப்பலன். அவர்களை நாங்கள் காப்பாற்ற முடியாது, பசுக்களைக் காப்பாற்றுவது தான் எங்கள் கடமை'' என்றார்கள்.

வெகுண்டெழுந்த விவேகானந்தர் அவர்களைப் பார்த்துச் சொன்னார். ''மனிதர்கள் பட்டினியால் சாவது அவர்களது கர்மப் பலன் என்றால், பசுக்கள் சாவதும் அதன் கர்மப்பலனாகத் தான் இருக்க வேண்டும். மனிதர்களைப் பற்றிக் கவலைப்படாத உங்களுக்கு பசுக்களைப் பற்றிப் பேச என்ன உரிமை இருக்கிறது'' என்று கூறி அவர்களைத் திருப்பி அனுப்பி விட்டார்.

அமெரிக்காவில் நடந்த உலக சமய மாநாட்டில் 'சகோதரர், சகோதரிகளே..!'' என்று அவர் அழைத்தது வெறும் உதட்டு வார்த்தை அல்ல. உள்ளத்தில் இருந்து வந்த உண்மை வார்த்தை ஆகும்.

இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே சொந்தமான நாடு, சிறுபான்மை மக்கள் அவர்களுக்கு அடங்கி நடத்த வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

ஆனால் விவேகானந்தரின் ஆன்ம உள்ளம் கண்ட கனவு வேறு.

''என்னுடைய மனக்கண்ணில் எதிர்காலம் குற்றம் குறையற்ற முழுமையானதாக இருக்கும். கஷ்டங்கள் மற்றும் குழப்பங்களிலிருந்து மீண்டு விடும். வேதாந்த மூளையும் இஸ்லாமிய உடலும் கொண்ட ஒளிமயமான, யாராலும் அடக்க முடியாத இந்தியாவாகத் திகழும்.''

இந்தியா என்ற மதச்சார்பற்ற நாடு அனைத்து மதங்களையும் பண்பாட்டையும், இனங்களையும், மொழிகளையும் கொண்ட பல வண்ண மலர்த்தோட்டமாக இருக்க வேண்டும் என்பதே விவேகானந்தரின் கனா..!

விவேகானந்தரைப் பொறுத்தவரை இஸ்லாம் என்ற மார்க்கம் சமத்துவம் மற்றும் அன்பு மயமானது. அது ஆக்கிரமிப்பு மதம் அல்ல

நன்றி : மதுக்கூர் இராமலிங்கம்
  நேசமுடன் இஸ்லாம்.Source:  http://iniyahaji.blogspot.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails