Wednesday, November 16, 2011

தௌர் குகை - சிலந்தி

ஒரு அரசியல் கூட்டம் நடக்கிறது. அரசியல் தலைவர் பேசுகிறார். அங்கே திடீரென்று கூச்சல், குழப்பம்,  வெட்டு, குத்து. இதை தொடர்ந்து அந்த கூட்டத்திலிருந்து முதல் ஆளாக பாதுகாப்பாக அனுப்பி வைக்கப் படுவது அந்த தலைவர் தான். இது தான் இன்றைய தலைவர்களின் முன்மாதிரி.

ஆனால் மக்காவில் சத்திய மார்க்கத்தை பிரச்சாரம் செய்த அகிலத்தின் தலைவரான முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கும் அன்னாரை பின்பற்றியவர்களுக்கும் உயிருக்கு ஆபத்து என்று வந்த போது பெருமானார் அவர்கள் மக்காவிலேயே இருந்து கொண்டு பின்பற்றியவர்களை அபிசினியாவிற்கும், யத்ரிபுக்கும் (பெருமானார் காலடி எடுத்து வைக்கும் வரை மதினாவின் (மதினத்துந் நபி - நபியின் பட்டணம்) முந்தைய பெயர் தான் யத்ரிப்) அனுப்பி வைத்தார்கள்.

இந்த சமய்த்தில் தான் மக்கத்து குறைஷிகள் ஊர்மன்றமாகிய தாருன்னத்வாவில் அமர்ந்து பெருமானாரை கொல்ல சதித்திட்டம் தீட்டினர். வீட்டுக்கு ஒருவர் என வேங்கை போல் புறப்பட்டு கொலை வெறியோடு ஆயுதமேந்தி புறப்பட்டனர்.

அதே நேரத்தில் பெருமானார் அவர்கள் அவர்களது தோழரான அபுபக்கர் சித்திக் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து மதினா செல்லும் வழியில் மக்காவிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவிலுள்ள தௌர் எனும் குகைக்கு வந்து சேர்கிறார்கள்.

மூன்று நாட்கள் அந்த தௌர் குகையிலேயே தங்கியிருக்க நேர்ந்தது. இதற்கிடையில் கொலை வெறியோடு புறப்பட்டவர்கள் ஆளுக்கொரு திசையாக முஹம்மது நபியவர்களை காணாது தேடி அலைந்தனர்.

அவர்களில் ஒரு சிலர் பெருமானாரும் தோழரும் மறைந்திருந்த தௌர் குகையை நெருங்கினர். அந்த சிலர் அங்கே எதிர்பட்ட ஒரு இடையனை பார்த்து, 'இந்த குகையில் யாரேனும் ஒளிந்திருப்பதை பார்த்தாயா?" என்று கேட்டனர்

அதற்கு அந்த இடையன், "நான் அப்படி யாரையும் பார்க்கவில்லை, நீங்களே நுழைந்து பாருங்கள்! யாரேனும் அங்கே இருந்தாலும் இருக்கலாம்" என்று கூறினான்

இப்படி இவர்கள் பேசிக் கொண்டிருப்பது பெருமானார் அவர்களுக்கும்  தோழர்அவர்களுக்கும் தெளிவாக கேட்டது.

ஈரக் குலையைக் கையில் பிடித்துக் கொண்டிருந்த தோழர் அவர்கள் ,
".. குனிந்து தன் கால் பெரு விரலை பார்த்தால் கூட நாம் உள்ளே இருப்பது தெரிந்து விடுமே.. நிறைய பேர் வந்திருப்பது போல் தெரிகிறதே . நாம் இருவர் தாமே இருக்கிறோம்" என்று ஏக்கத்திலும் பயத்திலும் கூறினார்கள்

இத்தகைய பயம் நியாயமானது தான், அந்த நேரம் சாமானிய நேரமில்லை. கையில் வாளுடன் தலையை சீவுவதற்கு காத்திருக்கும் கொலை வெறி கூட்டம் வெளியே. இரண்டே இரண்டு பேர் மட்டும் அதுவும் நிராயுதபாணியாக யாருக்கும் தெரியாமல் பதுங்கி ஒளிந்து கொண்டு உள்ளே. என்ன செய்வது? வயிற்றுக்குள் பிரளயமே வெடித்துக் கொண்டிருந்தது.

பெருமானார் அவர்கள் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தான் இப்படி பதில் மொழி பகர்ந்தார்கள், "இல்லை, இல்லை, நாம் மூவர் இங்கு இருக்கின்றோம், அல்லாஹ்வும் நம்முடன் இருக்கிறான்.."

யா அல்லாஹ்.! என்ன உறுதி! என்ன நம்பிக்கை! என்ன தெளிவு!

இனி இந்த பிரச்சினை பெருமானாரின் சம்மந்தப்பட்டது அல்ல, இறைவனின் சம்மந்தப்பட்டது.

இறைவன் தன் தூதரை, தன் மீது முழுமையாக பொறுப்பை ஒப்படைத்தவரை எப்படி காப்பாற்ற போகிறான்? எந்த படையை அனுப்ப போகிறான்?  என்பதே படிக்கும் அனைவரும் எதிர்நோக்கும் அடுத்த விநா.

அவன் யானைப் படையையோ அல்லது குதிர்ரைப் படையையோ அனுப்பவில்லை. அவன் அனுப்பியது ஒரே ஒரு சிலந்தி பூச்சி. ஆம், அவன் அனுப்பிய அந்த சிலந்திப் பூச்சி திடீரென்று நுழைவாயிலில் ஒரு வலை பின்னியது. அல்லது இறைவன் அவ்வாறு பின்ன சொல்லி அதற்கு செய்தியை அனுப்பினான். பின்னிய அந்த வலை நுழைவாயிலையே மூடியிருந்தது.

அந்த இடையன் சொன்னதை கேட்டு குகையின் உள்ளே சென்று பார்க்கலாம் என்று குனிந்த ஒருவன், "வீணாக உள்ளே போய் ஏன் பார்க்க வேண்டும்?, இந்த வலையை பார்த்தாலே முஹம்மது பிறப்பதற்கு முன்னாலேயே பின்னப்பட்ட வலை
மாதிரியல்லவா இருக்கிறது.." என்று கூறி விட்டு "வாருங்கள் போகலாம்.." என்று கூறி விட்டு ஊர் திரும்புகிற வழியை பார்த்தான்.

பெருமானார் அவர்கள், "எல்லா புகழும் இறைவனுக்கே!" என்று நன்றி பெருக்குடன் கூறினார்கள்.

------------------------------------------------------------------------------

தன் தூதரை காப்பாற்ற இறைவனுக்கு பெரும் படை எதுவும் தேவையாக இருக்கவில்லை, ஒரு சிலந்தி வலை போதுமானதாக இருந்தது. அதுவும் இறைவனின் பேச்சான குரான் ஷரீபிலே இத்தகைய சிலந்தி வலையை தான் மிகவும் பலஹீனமான வீடு என்று குறிப்பிடுகிறான். இத்தகைய பலஹீனமான ஒன்றை கொண்டே தன் தூதரை காப்பாற்றி விட்டான் இறைவன்.

அல்ஹம்து லில்லாஹ்

------------------------------------------------------------------

சிலந்தி வலை பற்றிய குரான் ஷரீபின் வசனம் கீழே தரப்பட்டுள்ளது

அல்குரான் ஷரீப்:

அத்தியாயம் 29 - அல்-அன்கபூத் -

வசனம் 41:

அல்லாஹ் அல்லதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலவீனமானது சிலந்திப்பூச்சியின் வீடேயாகும் - இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின் (தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலவீனத்தை அறிவார்கள்)
Source : http://ismailnagoori.blogspot.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails