Monday, November 21, 2011

கணவன் மனைவி உறவு - சண்டை நடந்தாலும் அழகு, சமாதானம் ஆனாலும் அழகு!


கணவன் மனைவி உறவு - சண்டை நடந்தாலும் அழகு,  சமாதானம் ஆனாலும் அழகு!

கணவன்மார்கள் சண்டை போட்டால் வால், வாலுன்னு கத்திவிட்டு ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி வந்து மன்னிப்பு கேட்பார்கள். அவ்வாறு அவர்கள் மன்னிப்பு கேட்கையில் அவர்கள் செய்யும் சேஷ்டைகளைப் பார்த்தால் சிரிப்பு தான் வரும். ஆனாலும் பெண்கள் சிறிது நேரம் சிரிப்பை அடக்கிக் கொண்டு, கோபமாக இருப்பது போல பாசாங்கு செய்வார்கள். உடனே கணவன் கண்ணே, மணியே என்று கொஞ்சி சமாதானப்படுத்துவார். இதுக்குத் தானே காத்திருந்தேன் என்பது போன்று பெண் மனம் உருகிவிடும்.
அதே சமயம் தொண தொணக்கும் மனைவி....! "இவ வாய் இருக்கே, எப்பப் பார்த்தாலும் தொண தொணன்னு யாரையாவது குறை சொல்லிக்கிட்டே இருக்கும்!" என்று சில பெண்கள் குறித்துச் சொல்வர்கள். அவர்கள் உள்ளுக்குள் பலாப்பழம் போல இருந்தாலும் வெளியில் முள்ளாகத் தெரிபவர்கள்.
குறிப்பாக கணவரிடம் எப்போது பார்த்தாலும் பிலுபிலுவென சண்டை பிடித்தபடி இருப்பார்கள் இந்தப் பெண்கள். வாழ்க்கை முழுவதும் தன்னுடன் வரும் கணவரை குறை சொல்வதில் இதுபோன்ற மனைவிகளுக்கு ஆத்ம சந்தோஷம்.


வாழ்க்கை முழுவதும் நான் உனக்கு, நீ எனக்குத் துணை என்று திருமணம் செய்து கொள்கிறார்கள். அப்பேர்பட்ட வாழ்க்கைத் துணையைப் பற்றி குறை சொல்லி பேசுவதில் பல பெண்களுக்கு மகா திருப்தி.
நம்முடைய பாட்டிகள், அம்மாகள் போல இன்றைய பெண்கள் இல்லை. எதையும் நிதானித்து செய்வது, பொறுத்துப் போவது, அட்ஜெஸ்ட் செய்து கொள்வது என பல விஷயங்களிலும் இவர்கள் பலவீனமாகவே இருக்கிறார்கள்.

பல பெண்களுக்கு திருமண வாழ்க்கை சில மாதங்களில் கசந்துவிடுகிறது. மேலும் கணவன் மனைவிக்கு இடையிலான பல சண்டைகள், பூசல்கள், மோதல்களை பக்கத்து வீட்டு பாப்பாத்தியக்காவிடமும், எதிர்வீட்டு எமிலியிடமும், 3வது வீட்டு மும்தாஜிடமும் போய்ச் சொல்லி அழும் பெண்கள் நிறையவே இருக்கின்றனர்.
கணவன் மனைவி இடையே எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் மூன்றாம் மனிதரைத் தலையிட விடுவது விபரீதத்தில் தான் முடியும் என்பதை பெண்கள் உணர வேண்டும். இந்நிலையில் பல பெண்கள் தங்கள் கணவன்மார்களைப் பற்றி அவர் இப்படி, அவர் அப்படி என்று பக்கத்து வீட்டுப் பெண்களிடம் குறை கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படி செய்வதே தவறு.
அவர்கள் இவ்வாறு அடுத்த பெண்களிடம் குறைபாடினால் அந்த பெண் என்ன தான் அக்கறையாக இருப்பது போல் பேசினாலும் மனதிற்குள் நீ சந்தோஷமா இல்லையா, ஆஹா இது தாண்டி எனக்கு வேண்டும் என்று திருப்திபட்டுக் கொள்வார்கள். ஆனால் வெளியில் அப்படியாம்மா, அழாதேம்மா என்று ஆறுதல் கூறுவது போல நடித்து உங்களுக்கு எதிராக உங்களையே திருப்பி விட முயலலாம்.
இப்படி நீங்கள் அடுத்தவர்களிடம் குறை கூறினால் அவர்கள் இல்லாததும், பொல்லாததும் சொல்லி உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துவிடும் வாய்ப்புண்டு. நம்ம வீடு மட்டும்தான் நாறனுமா, அவ வீடும் நாறட்டுமே என்ற நல்லெண்ணம் படைத்தவர்கள் நம்மிடையே நிறையப் பேர் உள்ளனர் என்பதை உணர வேண்டும்.
வீட்டில் இருக்கும் பெண்கள் தான் வேலையின்றி இவ்வாறு செய்கிறார்கள் என்றால். வேலைக்குப் போகும் பெண்கள் அவர்களுக்கு சற்றும் இளைத்தவர்கள் இல்லை. மதிய உணவு இடைவேளையில், கையில் சாப்பாடும், வாயில் கணவர்களையும் போட்டு பிசைந்து சாப்பிடும் பெண்கள் நிறையப் பேர் உள்ளனர். பிற பெண்களுடன் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டே கணவரைக் குறைபாடுவது, நாத்தனார்களை வறுத்தெடுப்பது, மாமியாரை மகா கடுமையாக பேசுவது என பற்களுக்குள் போட்டு குதறி எடுத்து விடுவார்கள்.
ஒருவர் இப்படி பேச ஆரம்பித்தால் உடனே மற்றவர்களும் சேர்ந்து கொண்டு, ஆமாமா, எங்க ஊட்டுலயும் இப்படித்தான் என்று ஆரம்பித்து வம்பளக்கும் செயல்களை நிறைய இடங்களில் பார்க்கலாம்.
இதுபோன்ற மனைவியிடம் மாட்டிக்கொள்ளும் கணவன்மார்கள் அதிலிருந்து விடுபட வழியா இல்லை?! இருக்கவே இருக்கிறது வெள்ளைக்கொடி!

மனைவியை சமாதானப்படுத்த கோமாளித்தனம் செய்யும் கணவன்மார்களும் உண்டு. கணவன்மார்கள் மனைவியிடம் சண்டை போட்டுவிட்டு சமாதானத்துக்கு வரும்போது அவர்கள் எப்படியெப்படியெல்லாம் தாஜா செய்வார்கள் தெரியுமா?

மயங்காத பெண்ணையும் மயங்க வைக்கும் மல்லிகைப்பூவை வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து சாரி டா செல்லம், ஏதோ கோபத்தில் கத்திவிட்டேன். அதை மனசுல வச்சுகாத சரியா என்று வழிவார்கள்.
நீங்கள் கோபப்பட்டு அந்தப் பக்கமாக திரும்பி உட்கார்ந்திருந்தால் உங்களை சிரிக்க வைப்பதற்காக கோமாளித்தனமான சேட்டைகள் செய்வார்கள். கடைசியில் என்ன தான் முயற்சி செய்தாலும் சிரிக்காமல் இருக்க முடியாது.
ஒரு அறையில் இருந்து கொண்டு பக்கத்து அறையில் இருக்கும் மனைவிக்கு சாரி என்று கூறி எஸ்.எம்.எஸ். அனுப்புவது. அது பலிக்காவிட்டால் அருகில் வந்து அமர்ந்து கண்ணே, மணியே என்று கொஞ்சுவது. நம்ம பெண்களும் லேசில்லை. திட்டிட்டு கொஞ்சவா செய்ற, இன்னும் கொஞ்ச நேரம் கெஞ்ச விடுவோம் என்று ஜம்பமாக இருப்பார்கள்.
சில கணவன்மார்கள் சண்டைபோட்டால் மனைவி அருகில் அமர்ந்து முதலில் கையைத் தொடுவார்கள். உடனே மனைவி கோபம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கையை வெடுக்கென்று எடுத்துவிடுவார்கள். சரி என்ன செய்யவென்று அவர்கள் தோளில் கையைப் போட்டு அணைத்து மன்னித்துக் கொள் என்று மன்னிப்புக் கேட்பார்கள். அப்ப தான் சில பெண்களுக்கு உச்சி குளிரும்.
''இன்னைக்கு வீட்டில் சமைக்க வேண்டாம். வா, வெளியே போய் சாப்பிட்டுட்டு வரலாம்'' என்று அழைத்துச் செல்வார்கள். அங்கு மனைவிக்கு பிடிக்கும் ஐட்டங்கள் வாங்கிக் கொடுத்து அசத்துவார்கள். உடனே மனைவி அசராமல் இருந்துவிடுவாரா என்ன?
''என்னங்க அடுத்த முறை சண்டைபோட்டா இதே மாதிரி வெளியே கூட்டிட்டு வந்து நான் விரும்பியதை வாங்கித் தருவீர்களா?'' என்று சில மனைவிகள் வாய்விட்டுக் கேட்டுவிடுவார்கள். இதென்னடா வம்பா போச்சுன்னு ஆண்கள் திரு திருவென்று முழிப்பார்களே அப்போது அவர்கள் முகத்தைப் பார்க்க வேண்டும்....!
தாம்பத்ய வாழ்க்கையில் எப்போதுமே, எதையுமே பாசிட்டிவாக பார்க்க வேண்டும் என்று சொல்கிறார்கள் மன நல நிபுணர்கள். தாம்பத்ய வாழ்க்கை என்றில்லை, எதையுமே, எதிலுமே பாசிட்டிவான மனோபாவம் இருந்தால்தான் நாம் வாழ்க்கையில் வெல்ல முடியும் என்பது பொன்மொழியாகும்.
கணவரிடம் குறை இருக்கிறதா, அதை அவரிடமே சொல்லித் திருத்த முயற்சிக்கலாம். முடியாவிட்டால் அவரே உணர்ந்து திருந்தும்படி நாம் நடந்து, சரி செய்யலாம். அகிம்சைக்கு இருக்கிற வலிமை எதற்குமே கிடையாது.
கணவர்தான் என்றில்லை, மனைவி சரியில்லாவிட்டாலும் கூட இதேபோல கடைப்பிடித்து அவர்களைத் திருத்த கணவர் முயற்சிக்கலாம். இப்படி இரு தரப்பிலுமே விட்டுக்கொடுத்து, நீக்குப் போக்காக நடந்து கொண்டால்தான் வாழ்க்கை சிறக்கும், உறவுகள் வலுப்பெறும். மாறாக புறம் பேசுவதினாலோ, குறை கூறிக் கொண்டு மட்டும் இருப்பதினாலோ எதுவுமே சாதிக்க முடியாது.
இப்படி பாசிட்டிவ் அப்ரோச்சுக்கு மாறத் தொடங்கினால் விவாகரத்து உள்பட எந்த 'வியாதியுமே' எந்த தம்பதியையும் அண்ட முடியாது. எனவே, புறம் பேசும் மனைவிமார்களே, கணவர்மார்களே, இனியாவது 'பேச்சை'க் குறைத்து செயலில் காட்ட முயற்சியுங்கள்...!
கணவன், மனைவி உறவு என்பது தான் எவ்வளவு மிகவும் அழகானது. சண்டை நடந்தாலும் அழகு, சமாதானம் ஆனாலும் அழகு. திருமண வாழ்க்கையை அழகாக வைத்துக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.
www.nidur.info

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails