Monday, November 26, 2012
அடடா.... காரைக்....கால்ல்ல்ல்ல் எங்க ஊரு!
அடடா.... காரைக்....கால்ல்ல்ல்ல் எங்க ஊரு!
எந்த ஊருக்கு சென்றாலும் நாம் ஒவ்வொருவருக்கும் அவங்க அவங்க சொந்த ஊரைப்போல வராது (ஒரு சிலருக்கே தவிர) . அது ஒரு குக்கிர
ாமமே ஆனாலும் தங்கள் ஊரைப் பற்றிக் கேட்டால் சந்தோஷமாக, சுவாரஸ்யமான பல விஷயங்களைச் சொல்வார்கள்
'இந்தியா' என்றாலே (எங்கள்) நினைவில் முன்வந்து நிற்கும் கலகலப்பான, அதேசமயம் அமைதியான, அழகிய ஒரு நகரமான நான் பிறந்து, வளர்ந்து, காரைக்கால் என்ற எங்கள் ஊரைப் பற்றி எழுதுவதில் ஆனந்தமும், பெருமிதமும் கொள்கிறேன் :) :) ஃபிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த, பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தில் அமைந்துள்ள நான்கு மாவட்டங்களான பாண்டிச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனம் ஆகியவற்றில் பாண்டிச்சேரியும் காரைக்காலும் தமிழகத்தின் எல்லையோடும், மாஹே கேரள எல்லையிலும், ஏனம் ஆந்திர எல்லையிலும் அமைந்துள்ளன.
இவற்றில் 2 வது பெரிய பிராந்தியமான காரைக்கால், அந்த மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இது காவிரியின் கழிமுகத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரமாகும். காவிரியின் கிளை ஆறான அரசலாறு இங்குதான் ஓடுகிறது.
காரைக்கால் பீச்சில் குழந்தைகள் விளையாட பலவித விளையாட்டுகளோடு கூடிய 'பார்க்'கும் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரங்களில் இதமாக வருடிக் கொடுக்கும் கடல் காற்றை குழந்தைகளின் விளையாட்டுகளோடு ரசித்தபடி சுவாசிக்க, உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் கடல் இல்லாத பக்கத்து ஊர் மக்களும் 'காரைக்கால் கடற்கரை'க்கு விரும்பி வந்த வண்ணம் இருப்பார்கள்
ஞாயிற்றுக் கிழமை என்றால் அங்கு திருவிழாக் கூட்டம்தான் :) சின்ன மெரீனா பீச் போன்று ஐஸ்கிரீம் வண்டிகள், சுண்டல்/நிலக்கடலை வண்டிகள், நடமாடும் 'பஜ்ஜி/பானி பூரி ஸ்டால்'கள், பஞ்சு மிட்டாய்/முறுக்கு விற்பனை, மாங்காய் சீவல்கள், அந்தந்த சீசன் நேரங்களில் சோளம், பனங்கிழங்கு, அன்னாசி, பலாப்பழம் என எல்லா விற்பனைகளும் மற்றும் குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்கள் விற்பனை என அத்தனையும் அங்கு உண்டு! அத்துடன் காற்றோட்டமான உணவகமும் உள்ளது. காரைக்கால் பீச்சுக்கு போகும்போது மணி பர்ஸ் கொஞ்சம் கனமாக இருந்தால் நன்றாக எஞ்சாய் பண்ணலாம் :)
முன்பெல்லாம் இங்குள்ள இஸ்லாமிய மக்களின் திருமண சம்பந்தங்கள் உள்ளூரிலேயும், மிஞ்சி போனால் நாகூர், T.R. பட்டிணம், நாகை, திட்டச்சேரி என (மிக அருகில்) சுற்றியுள்ள ஊர்களில் மட்டும் நடந்து வந்தன. சில வருடங்களாக தூரத்து ஊர்களிலும் சம்பந்த உறவுகள் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் பெரும்பாலான பெண்கள் தாய்வீட்டிலோ அல்லது சொந்த ஊரிலேயே தனிக் குடித்தனமாகவோ இருப்பார்களே தவிர, மாமியார் வீட்டிற்கு விருந்தாளிகளாக மட்டுமே சென்று வருவார்கள். அதனாலோ என்னவோ இங்கே மாமியார்/மருமகள் பிரச்சனைகள் மிகவும் அரிது :)
o இங்கு எல்லோர் வீட்டு இஸ்லாமியத் திருமணங்களுக்கும் பெண்கள் ஒவ்வொரு வீடாகச்சென்று பெண்களுக்கு அழைப்பு வைப்பார்கள். குறுகிய காலத்தில் ஏற்பாடாகும் திருமணமாகவோ, எல்லா வீடுகளுக்கும் செல்ல இயலாத நிலையிலோ உள்ளவர்கள் பெண்களுக்கென தனி பத்திரிக்கை அனுப்பினால் போதும். ஆண்கள் நெருங்கிய உறவினர்களுக்கு மட்டுமே நேரில் சென்று முதலில் (பத்திரிக்கை வைக்காமல்) அழைப்பு வைப்பார்கள். அப்படி அழைப்பு சொல்லிவிட்டு வந்த பிறகு சொந்தங்களுக்கும், எல்லோர் வீட்டு ஆண்களுக்கும் சேர்த்து பத்திரிக்கை வைப்பது இவ்வளவு பெரிய ஊருக்கும் தனியாக ஒரே ஒரு ஆள்தான்! அவரைப் பற்றி சிறுகுறிப்பு இங்கு சொல்லியாகவேண்டும் :)
எல்லோருக்கும் உடனே தெரிந்துவிடுமளவுக்கு அனைவருக்கும் அறிமுகம். ('ரோக்கா'ன்னா பத்திரிக்கை). கிட்டத்தட்ட 35, 40 வருடங்களாக அவர் பத்திரிக்கை வைக்கும் தொழில் செய்தாலும் அந்த 'ரோக்காக்கார பாய்' யை அடிச்சுக்க ஊரில் யாருமில்லை. அந்தளவுக்கு ஒவ்வொரு வீட்டிலுள்ள ஆண்களின் பெயரும், வீட்டு மருமகன்களின் பெயர்கள் உட்பட அவருக்கு அத்துப்படி! யார் யார் வீட்டுக்கு பத்திரிக்கை என்று சொல்லிவிட்டால் அவரே அத்தனை பெயரையும் அழகாக எழுதி தந்துவிடுவார். வெளிநாட்டிலிருந்து யாரும் வகேஷனில் வந்திருந்தாலும் அவர்களின் பெயர் விடுபடாமல் இருக்க, 'இன்னார் ஊருக்கு வந்துள்ளார்' என நமக்கு உடனே நினைவூட்டுவார்! பத்திரிக்கையே இல்லாமல் 'இன்ன வீட்டில், இன்ன விசேஷம், இன்னாருக்கு அழைப்பு கொடுத்தார்கள்' என வாயால் சொல்லியனுப்பும் செய்திகளையும் (பல வீட்டு தகவல்களை ஒரே சமயத்தில் கூட) சொல்லும் திறனை இறைவன் அவருக்கு கொடுத்துள்ளான். சில நேரங்களில் (பெண்கள் நேரில் சென்று அழைப்பு கொடுக்க முடியாமல்) பெண்களுக்கு வைக்கப்படும் பத்திரிக்கைகளுக்கு (பெண்களின் பெயர் மட்டும் அவருக்கு தெரியாததால்) நாம் பெயர் சொல்ல சொல்ல அவர் எழுதி, எடுத்துச்செல்வார். அவர் மூலமாகவே காரைக்கால் இஸ்லாமிய மக்கள் பத்திரிக்கை அனுப்புவார்கள். நம்முடைய தேவை சமயங்களில் அவருக்கு உடல் சுகவீனம் என்றால் கை முறிந்ததுபோல இருக்கும். அவர் செய்வது ஒரு தொழில் என்பதைவிட ஒரு சேவை என்றே சொல்லலாம்!
இறைவன் அவருக்கு உடல் சுகத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுப்பானாக!
இங்கு ஆடம்பரமில்லாமல், சீர்திருத்தமான முறையில், பெண் வீட்டில் எதையும் பெறாமல் நபிவழிப்படி திருமணங்கள் நடந்தாலும், அப்படிப்பட்ட திருமணங்கள் சுமார் 30% அல்லது 40% என்றுதான் சொல்லமுடியும். மற்றபடி பகட்டான பந்தல்களோடும்/ அலங்கார விளக்குகளோடும் நடக்கக்கூடிய ஆடம்பர திருமணங்களும், கணவன் வீட்டாரால் கட்டாயப்படுத்தப்பட்டு வரதட்சணை வாங்கி முடிக்கும் திருமணங்களும் நடந்த வண்ணமே உள்ளன :( அப்படிப்பட்ட திருமணங்களில் பத்திரிக்கை அடிக்கும் செலவு மட்டும் கணவன் வீட்டார்கள் ஏற்றுக் கொண்டு (?), அவர்களுக்கான விருந்து செலவுகளை பெண் வீட்டாரே செய்யவேண்டும். (இந்த அநியாயம் எப்போ ஒழியுமோ தெரியல!)
o எந்த முறை திருமணமாக இருந்தாலும் (கல்யாண மண்டபத்தில் நடக்காத திருமணத்திற்கு) 'பண்டாரிகள்' (சமையல்காரர்கள்) வைத்து பெரும்பாலும் தெருவிலேயே சாப்பாடு (பிரியாணி) சமைக்கப்படும். எல்லோர் வீட்டிலும் பிரியாணி என்பதால் (பழையபடி) நெய் சோறுக்கு மக்களின் விருப்பம் திரும்பியுள்ளது. முன்பு 'சஹன்' என்று சொல்லப்படும் பெரிய தட்டில் 4 பேர் சேர்ந்து உண்ணும் வழக்கம் இருந்தது. இப்போது மிக சில இடங்களிலே தவிர பெரும்பாலும் தனித்தனி தட்டுகளிலேதான் திருமண விருந்துகள் பரிமாறப்படுகிறது.
அழைப்புக் கொடுத்து வீட்டில் நடத்தப்படும் விருந்துகள் அல்லாமல் ஏதாவது மற்ற தேவைகளை முன்னிட்டோ, நேர்ச்சை/வேண்டுதல் அல்லது இறைவனுக்கு நன்றிக்கடன் செலுத்தும் பொருட்டோ சாப்பாடு தயாரித்து ஏழைகளுக்கும், வேண்டிய மற்ற வீடுகளுக்கும் கொடுத்தனுப்ப பனை ஓலையினால் நேர்த்தியாக செய்யப்பட்ட ('குறப்பெட்டி' என்று சொல்லப்படும்) பெட்டிகளில் 'பொட்டி சோறு' அனுப்புவார்கள். அதில் சூடான நெய் சோற்றினைப் போட்டு, அதன் மேல் தால்ச்சாவும், 'தனி கறி (or) களரி கறி' என்று சொல்லப்படும் கறி குழம்பும் ஊற்றிக் கொடுத்தால் பனை ஓலையின் வாசனையுடன் கூடிய அதன் மணமே தனி மணம்தான் :) அதை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. ஃப்ளைட் ஏறி ஃபிரான்சுக்கு வந்த ஓலைப் பெட்டியில் நாங்கள் போட்ட 'பொட்டி சோறு'
எங்கள் காரைக்காலைப் பற்றிச் சொல்ல இன்னும் எவ்வளவோ உள்ளன. அவ்வளவையும் எழுதினால் இந்த தொடர் பதிவை பல பகுதிகளாக கொடுக்க வேண்டிவரும் :) என்று அஞ்சி இத்துடன் நிறைவு செய்துக் கொள்கிறேன்.
-அஸ்மா
thank u.
தகவல் தந்தவர்கள் Mohamed Arif Maricar MOhamed Riyas
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment