Thursday, March 14, 2013

உம்மத்தில் கருத்து வேறுபாடுகள் களைய என்ன வழி?

உம்மத்தில் கருத்து வேறுபாடுகள் களைய என்ன வழி?
-------------------------------------------------------------------------
“இந்தச் சமுதாயத்தின் அவல நிலையைக் கண்டு மனம் அழுதது. அதற்கானகாரணங்களைத் தேடி என் மனம் அலை பாய்ந்தது. நான் மால்டா சிறையிலிருக்கும் பொழுது இது பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தேன்”. – இப்படிக் கூறியது ஷேகுல் ஹிந்த் மௌலானா மஹ்மூத் உல் ஹஸன். 1920ல் தனது 69 வயதில் இதைக் கூறிய அவர்கள், அக்காலத்தில் சிறந்த மார்க்க அறிஞராக திகழ்ந்தது மட்டுமல்லாமல் ஆங்கிலேய காலணி ஆதிக்கத்தையும் எதிர்த்து போராடியவர்கள்.

ஆலிம்கள் நிறைந்திருந்த அந்தக் கூட்டத்தில் உரை நிகழ்த்தும் பொழுது அவர்கள் இதைக் குறிப்பிட்டார்கள். சமுதாயத்தின் அவல நிலைக்கு என்ன காரணம் கூறப்போகிறார்கள் என்று கூட்டம் அவர்களை ஆவலுடன் நோக்கியது.

அவர்கள் கூறினார்கள் : “நமது பிரச்சனைகளுக்கு இரண்டே இரண்டு காரணங்கள் தாம் உள்ளன. அவை,

1. நாம் குர்ஆனைக் கைவிட்டது.
2. நமக்கிடையே நடக்கும் உள்சண்டைகள்”.

இப்படிக் கூறிய மௌலானா அவர்கள். அதன்பிறகு சொற்ப காலமே உயிர் வாழ்ந்தார்கள். அந்தச் சொற்ப காலமும் இந்த காரணங்களைக் களைந்து, முஸ்லிம்களை ஒருங்கிணைப்பதற்கு கடுமையாக உழைத்தார்கள்.

இந்தக் காரணங்கள் எவ்வளவு உண்மை நிறைந்தவை என்பது நமக்கெல்லாம் புலப்படும். இந்த இரண்டு காரணங்களும் ஒன்றுக் கொன்று சம்பந்தமுடையவை. இரண்டாவது காரணம் முதல் காரணத்தாலேயே உருவாகிறது.

திருக்குர்ஆன் முஸ்லிம்களை சகோதரப் பாசமுள்ள ஒரே சமுதாயம் எனப் பிரகடணப்படுத்துகிறது. உள் சண்டைகளைப் பற்றி அது கடுமையாக எச்சரிக்கிறது. நாம் திருக்குர்ஆன் விடுத்த பிரகடனத்தையும் எச்சரிக்கையையும் மறந்துவிட்டோம். இன்று அகிலமெங்கும் பரவி வாழும் 130 கோடி முஸ்லிம்களும் பல கூறுகளாக பிரிந்து கிடக்கின்றோம். சில குறுகிய மனப்போக்குள்ள சுய நல காரணங்களுக்காகவே நமக்குள் பெரும்பாலான சண்டைகள் நடக்கின்றன.


இஸ்லாத்தைப் பயன்படுத்தி இந்தச் சண்டைகளை நாம் சீர்திருத்திக் கொள்ள இயலும். ஆனால், அந்தோ துரதிஷ்டம்…! இஸ்லாத்தின் பெயராலெயே நாம் பிளவுபடுகிறோம். மேலும் மேலும் பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறோம். சிக்கலுக்குள் சிக்கலை உருவாக்குகிறோம். சின்னச் சின்ன ஃபிக்ஹு பிரச்சனைகளைப் பெரிதாக்குகிறோம்.மார்க்க விஷயங்களை அர்த்தப்படுத்துவதில் சிறு சிறு வேறுபாடுகள் எழுவது இயல்பு. இந்தச் சிறிய வேறுபாடுகளை, சிறிய சட்டப் பிரச்சனைகளைப் பெரிய யுத்தகளமாக மாற்றி விடுகிறோம். ஆனால் இஸ்லாத்தின் மிக முக்கியமான, அடிப்படையான விஷயங்கள் அங்கு கைமீறிப் போவதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.

இன்று இஸ்லாம் எல்லாத் திசைகளிலிருந்தும், எல்லா முனைகளிலிருந்தும் தாக்கப்படுகின்றது. இப்படி இருக்கும் நிலையிலேயே நாம் நமக்குள்ளான சண்டைகளை நடத்துகிறோம். இஸ்லாத்தில் ஹராமாக்கப் பட்டவைகள் இன்று ஹலாலாக்கப் படுகின்றன. பல தெய்வக் கொள்கையுடையோரின் பழக்க வழக்கங்கள் இன்று மார்க்கத்தை அறியாத நம்மவர்களிடையே ஊடுருவுகின்றன.

எல்லாவற்றிற்கும் மேலாக இந்த உலகையே பிரதானமாகக் கொள்ளும் ‘ஹீடனிஸம் எனும் கொள்கை நம்மவர்களை ஆக்கிரமிக்கிறது. வெட்கமின்மை வரவேற்கப்படுகின்றன. ஒழுக்கச் சீர்கேடுகள் நவநாகரீக கலாச்சாரமாக நம்பப்படுகின்றன. நமது சமுதாயம் சினிமாப் படங்களாலும், தொலைக்காட்சிப்பெட்டிகளாலும், ஆபாச இலக்கியங்களாலும் சீரழிக்கப்படுகின்றன. நமது சமுதாயத்தின் அனைத்து அடுக்கு மக்களிடமும் லஞ்சம் புகுந்து விளையாடுகிறது.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வாரிசுகள் தாமே நாம்…..! இவைகளை அவர்கள் அனுமதித்தார்களா? இவைகளுக்கு எதிராக நமது கவனத்தை திருப்ப வேண்டாமா? இத்தனைக் கொடுமைகளும், தீமைகளும் அரங்கேறி வரும் இந்த உலகம் ஒருநாள் அழிந்து விடும். மறுஉலகத்தில் நாம் எழுப்பப்படுவோம். இறைவன் அவன் முன் நிறுத்தி நம்மிடம் கேட்பான். “இந்தக் கொடுமைகளுக்கும், தீமைகளுக்கும் எதிராக நீ என்னப்பா செய்தாய்?”.

பல முஸ்லிம்கள் சில வேறுபாடுகளைக் கண்டு வேறு மாதிரியாக சிந்திக்கின்றனர். ஃபிக்ஹுடைய சட்டங்கள் அனைத்தையும் எடுத்து விட்டு வேறு ஒரு சட்டத்தை உருவாக்க வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர். இது சாத்தியமானதும் அல்ல, விரும்பத்தக்கதும் அல்ல. ஒவ்வொரு விஷயத்திலும் ஒட்டுமொத்தமாக அனைவருக்கும் ஒத்தகருத்து இருக்கும் என்பது சாத்தியமில்லாத ஒன்று. அனைவரும் வாய் பேச முடியாத ஊமைகளாக இருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும். அல்லது அவர்கள் நாணயமற்ற வர்களாக இருக்க வேண்டும், தங்களுக்கு தவறு என்று தெரிவதை ஏற்றுக் கொள்வதில் தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் கூட இருந்த நபித்தோழர்களுக்கே ஃபிக்ஹு விஷயங்களில் நிறைய கருத்து வேறுபாடுகள் இருந்தன. அதே போல் ‘இஜ்திஹாது’ செய்யும் முஜ்தஹிதீன்களிடமும் கருத்து வேறுபாடுகள் நிலவின.

ஆனால் கண்ணியமிக்க நபித்தோழர்களோ, மதிப்புமிக்க முஜ்தஹிதீன்களோ அவைகளைச் சண்டைகளாக மாற்ற வில்லை. அவர்கள் ஒருவருக்கொருவர் கருத்து மாறுபட்டார்கள். ஆனால் அவர்களிடையே நிலவி வந்த அன்பையும், அரவணைப்பையும் அவர்கள் விட்டுவிடவில்லை. அவைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்கள். அவர்களிடையே இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் பொன்னொளி மேல் மின்னியது.

குர்ஆனும் ஹதீஸும் எதனைத் தவறு என்று சொல்கின்றனவோ அவ்விஷயங்களில் அவர்கள் எந்தக் கருத்து வேறுபாடும் கொள்ளவில்லை கொள்ளவும் முடியாது. மார்க்க விஷயங்களை, கொள்கையை, நம்பிக்கையை விட்டுக் கொடுக்க இஸ்லாத்தில் இடமே இல்லை. ஷரீஅத் எவைகளை ஹலால் என்று அனுமதிக்கிறதோ, எவைகளை ஹராம் என்று விலக்குகின்றதோ அவ்விஷயங்களை மாற்றுவதற்கோ, கூட்டுவதற்கோ, குறைப்பதற்கோ நாம் ஒருபோதும் ஒப்புக் கொள்ள முடியாது.

சில சமயம் ஒரு சில கருத்து வேறுபாடுகள் நம்மிடையே ஏற்பட சாத்தியமுண்டு. இது எல்லா காலகட்டத்திலும் நடந்ததுள்ளது. இம்மாதிரியான ஆரோக்கியமான கருத்து வேறுபாடுகளால் இன்னொரு நன்மையும் உண்டு. ஒரு பிரச்சனையின் பல கோணங்கள், தெளிவுகள் இதன் மூலம் வெளிச்சத்திற்கு வரும். இது பல நன்மைகளை விளைவிக்கும். ஆனால் கருத்து வேறுபாடுகளை குர்ஆன் சுன்னாவின் அடிப்படைகளில் அணுகாமல், சில நம்பிக்கைகள் , பாரம்பரிய நடைமுறைகள் என்கிற நோக்கில் சுய நம்பிக்கையின் விளைவால் அடாவடியாக நடந்து கொண்டு , அல்லது அவர்களுக்கென்று ஒரு பிரிவாரைச் சேர்த்துக் கொண்டால்தான் சண்டைகள் ஆரம்பமாகின்றன.

பெரும்பாலான அமைப்பினர் தாங்கள் எந்தத்துறையை சார்ந்திருக்கிறார்களோ,அந்தந்த துறைகளில் சமுதாயத்திற்குப் பலன் தரும் வகையில் தங்களால் முடிந்த நல்ல பணிகளைச் செய்து வருகிறார்கள். இந்த அமைப்பினர் தங்களுக்குள்ளால் குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் ஒரு ஒத்துழைப்பு எனும் உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் ஆதரவுக் கரங்களை நீட்டி கட்டிப் பிடித்துக் கொள்ள வேண்டும்.வேலைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொருவர் இருப்பது இயல்பே என்ற உணர்வு மேலோங்கிட வேண்டும். கருத்து வேறுபாடுகளை களைய இதுவே நல்ல வழி. இது நடந்தால் முஸ்லிம்களாகிய நாம் இந்த உலகில் தவிர்க்க இயலாத சக்தியாக மாறி விடுவோம் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

அடக்கமான நல்ல மனிதர்கள் மறைந்து போய் விடவில்லை. நல்ல மனிதர்களை நானிலதித்தில் மறுமலர்ச்சி செய்ய வேண்டும். குறுகிய வட்டத்திற்குள்ளிருக்கும் இந்தச் சமுதாயத்தை அதிலிருந்து விடுவிக்க வேண்டும். இந்தப் பூமிப் பந்தின் ஒரே மார்க்கம் இஸ்லாம் தான் என்பதை நிரூபிக்க வேண்டும்.

நன்றி : -ஃகாலித் பேக், இம்பேக்ட் இண்டர்நேசனல், தமிழில் : MSAH

என் கருத்து :
-------------------
இந்த கட்டுரையின் முக்கிய குறிக்கோளே குர்ஆன் சுன்னாஹ் அடிப்படையில் நாம் ஒன்றுபட வேண்டும் என்பதுதான். இதற்கு மாற்றமாக நடந்தால் அதை அவர்களுக்கு தொடர்ந்து பல வழிகளிலும் உணர்த்தி கொடுக்க வேண்டுமே தவிர , நாம் பிரிந்து விடக் கூடாது .. ஆக இஸ்லாமிய கொள்கைகளை நாம் விட்டு கொடுக்கவில்லை அதே நேரத்தில் எல்லா முஸ்லிம் சகோதரர்களையும் ஒன்று சேர்த்து முஸ்லிம் சமுதாய முன்னேற்றத்திற்க்காக ஓரணியில் திரண்டு வெற்றி காண வேண்டும் . இன்ஷா அல்லாஹ் ..

யா அல்லாஹ்! உன்னை அதிகம் ஞாபகம் செய்யக்கூடியவராகவும், உனக்கு மிகவும் நன்றி செலுத்தக்கூடியவராகவும், உனக்கு அதிகம் வழிபடுபவராகவும், கட்டுப்படுபவராகவும், அடிபணிபவராகவும் எங்களை ஆக்கியருள்வாயக! எங்கள் தவ்பாவை ஏற்றுக் கொள்வாயாக! எங்கள் பாவத்தைப் போக்கி விடுவாயாக! எங்கள் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்வாயாக! எங்களுக்குரிய ஆதாரத்தை உறுதிப்படுத்துவாயாக! எங்கள் உள்ளத்திற்கு நேர்வழி காட்டுவாயாக! அதில் நிலைத்திருக்க செய்வாயாக , எங்கள் நாவை பலப்படுத்துவாயாக! எங்கள் உள்ளத்தின் கசடுகளை அகற்றிவிடுவாயாக!.

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக. மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!” ஆமீன்.

ஒற்றுமையை விரும்பும்

தக்கலை கவுஸ் முஹம்மது - பஹ்ரைன்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails