Wednesday, March 27, 2013

கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களுக்கு 'காயிதே மில்லத் பிறை' விருது!


                                  ஆளூர் ஷாநவாஸ்— with Thalaivar Thiruma and Thol.thirumaavalavan.
கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களுக்கு 'காயிதே மில்லத் பிறை' விருது!
எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அறிவிப்பு!

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14 அம்பேத்கர் பிறந்தநாள் அன்று
விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.

அம்பேத்கர் சுடர், பெரியார் ஒளி, அயோத்திதாசர் ஆதவன், காமராசர் கதிர், காயிதே மில்லத் பிறை, செம்மொழி ஞாயிறு ஆகிய ஆறு விருதுகள், தமிழகத்தின் அரசியல், சமூக, கலை, இலக்கியத் தளத்தில் சேவையாற்றி வரும் சான்றோர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

காயிதே மில்லத் பிறை விருது 2008 ஆம் ஆண்டு முதல் வழங்கப்படுகிறது. 2008 இல் கோவை சிறையில் வாடிக் கொண்டிருந்த அப்துல் நாசர் மதானி அவர்களுக்கும்,
2009 இல் சென்னை சிறையில் வாடிக் கொண்டிருந்த குணங்குடி ஹனீபா அவர்களுக்கும்,
2010 இல் கவிக்கோ அப்துல் ரஹ்மான் அவர்களுக்கும்,
2011 இல் பேராசிரியர் காதர் மொகிதீன் அவர்களுக்கும்,
2012 இல் பேராசிரியர் தி.மு.அப்துல் காதர் அவர்களுக்கும் வழங்கப்பட்டது.

அந்த வரிசையில் இந்த ஆண்டு கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
60 ஆண்டுகால பொதுவாழ்வு சேவைக்கு உரியவர் கொடிக்கால். தெற்கெல்லை விடுதலைப் போராட்டம், பொதுவுடைமை இயக்கம், தலித் விடுதலை, அரசியல் களப்பணி, இதழியல், இஸ்லாமிய அழைப்பியல் என
பல்வேறு தளங்களில் பயணப்பட்டவர்.



இந்துத்துவ சாதிய ஒடுக்குமுறைகளில் இருந்து விடுதலை பெறுவதற்காக 1989இல் இஸ்லாத்தை தழுவியவர். 1992 இல் பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டபோது
சென்னையிலிருந்து நூற்றுக்கணக்கானோரை திரட்டி அயோத்திப் பயணம் மேற்கொண்டு முஸ்லிம்களின் உரிமை மீட்பு போராட்டத்தை நடத்திக் காட்டியவர்.
உங்கள் தூதுவன் எனும் பத்திரிகையை தொடங்கி இந்துத்துவ எதிர்ப்புக் கருத்தியலை மிகத் தீவிரமாக முன்னெடுத்தவர். ஒவ்வொரு தலித் கிராமங்களுக்கும் பயணித்து இஸ்லாமிய அழைப்புப் பணியை மேற்கொண்டு வருபவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏராளமான முஸ்லிம் கல்வி நிறுவனங்களை உருவாக்கிய பெருமைக்குரியவர். இந்த நிமிடம் வரை ஒடுக்கப்பட்ட சமூகங்களின் எழுச்சிக்காக உழைத்துக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட சிறப்புகளுக்கு உரியவருக்கு காயிதே மில்லத் பிறை விருது வழங்கப்படுகிறது.

தகுதியான ஒருவரை தக்க நேரத்தில் தேர்வு செய்து
கண்ணியப்படுத்தும் எழுச்சித் தமிழர் அவர்களுக்கு
நெஞ்சார்ந்த நன்றி!

ஆளூர் ஷாநவாஸ்
தகவல் தந்த  ஆளூர் ஷாநவாஸ் அவர்களுக்கு நன்றி

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails