Thursday, July 24, 2014

ரமளான் தூது

(முதுவைக் கவிஞர் மௌலவி ஏ. உமர் ஜஹ்பர் மன்பயீ )


அல்ஹம்து லில்லாஹி அகிலத்துப் புகழெல்லாம்

  அன்பாளும் அருளாளும் ஈருலகை அரசாளும் !

அல்லாஹு வல்லவனே ! உன்பாதம் காணிக்கை !

  அருள் தா என் நல்லவனே ! அதுதான் என்கோரிக்கை !

சொல்லாலும் செயலாலும் பேருலகைக் காப்பதற்கு

  சன்மார்க்க நெறிதந்த சாந்தி நபி நாதருக்கு –

ஸல்லல்லாஹு என்ற ஸலவாத்து மலர் தூவி

  சங்கையினை சமர்பித்து கவிதையினைப் பாடுகிறேன் !



அங்காச புரியினிலே அழகுமலர்ச் சோலையிலே,

  அருள் மணக்கும் நிலையினிலே வானொலியாம் ஆறினிலே

மங்காத புகழ்படைக்கும் ரமளானின் பெருமையினை

  மனமகிழ்ந்து பாடிடவே கவிக்குயில்கள் வந்திடவே

சங்கை மிகுஹாஜி கவிசுல்த்தான் தலைமையிலே

  சாந்தமிகு ஹாஜி ஊகா சபையுடனே ஹாஜா முஹைதீன்

அங்கமர்ந்த வேலையிலே, அரும் நாச்சியார் நற்படைப்பில்

  அருமை மிகு கவியரங்கம் ! பெருமையுடன் அது துவங்கும் !



வேதங்கள் தந்து நிற்கும் மாதங்களின் மன்னவனே !

  வேதனைகள் வேரறுத்துச் சாதனைகள் தந்தவனே !

மாதங்கள் பன்னிரண்டில் மலைபோன்ற மனத்தவனே !

  மனதுகளின் கறைகழுவ மகிமையுடன் வந்தவனே !

வேதனையாம் நரகத்தைத் தாழிட்டு வைத்தவனே !

  விந்தை மிகு சொர்க்கத்தை திறந்து விட்டு வந்தவனே !

ஆதியிறை அல்லாஹ்வின் பேரருளே ரமளானே !

  அன்புடனே வரவேற்போம் அகமகிழ வாழ்த்துரைப்போம் !



கற்கண்டில் எப்பக்கம் இனிப்பாகும்? எனக்கேட்டால்

  கடிக்கின்ற பக்கமெலாம் இனிப்பே தான் எனவுரைப்போம் !

அற்புதமாய் இறையளித்த ரமளானே … உன் அமலில்

  அத்தனையும் கற்கண்டுச் சுவையான அமலென்போம் !

துற்குணங்கள் நீக்குகிற தொழுகையுடன் தருமங்கள்,

  தூய பசி நோன்புடனே தவ்பாவும் தராவீஹும்

பொற்புடைய இங்திகாபும் புனித குர்ஆன் திலாவத்தும்

  பேணி நின்ற அமல்களிலே பெருமை கொண்டோம் ரமளானே !



பதினான்கு மணிநேரம் புசியாமல் பசித்திருந்தோம் !

  பச்சைநீர் அருந்தாமல் தாகத்தை சகித்திருந்தோம் !

சதிபதிகள் சல்லாபம் கொள்ளாமல் தனித்திருந்தோம் !

  சங்கை மிகு ரமளானே … கண்ணியத்தைக் காத்திருந்தோம் !

பதி புகழும் ரமளானின் ஒரு மாத வாழ்க்கையிலே,

  பக்தியுடன் அஞ்சியிருந்த முப்பசியை முழுவதுமாய்

மதியுடனே கணக்கிட்டால் நானூற்று இருபத்து

  மணிநேரம் ரமளானே உனக்காக வாழ்ந்திருந்தோம் !



நற்குணத்துப் பெண்ணுக்கும் நாயனுக்கும் தெரிந்த பண்பு

  நானிலத்து வாழ்வினிலே நல்லொழுக்கக் கற்பாகும் !

பொற்புடைய கற்பென்னும் இரகசியத்தை யாரறிவார்?

  பேணி நிற்கும் பெண்மணியும் பேரிறையும் தானறிவார் !

கற்பொன்றே ஒழுக்கங்களில் மறைவான ஒழுக்கம் போல் –

  கடமை மிகு நோன்பதுவும் மறைவான அமலாகும் !

கற்பென்னும் புனிதத்தைப் பேணுகிற பெண் போல –

  கண்ணியமாம் ரமளானே… உனைக்காத்து வைத்திட்டோம் !



சிக்கனத்தை அறிவுறுத்திச் சொல்லாத போத மில்லை !

  சீரழிவை அச்சுறுத்திக் கூறாத வேத மில்லை !

சிக்கனத்தின் சிறப்பினையும், சீரழிவின் படிப்பினையும்

  சிந்தையிலே விதைக்க வந்த ரமளானே சோபனங்கள் !

சிக்கனத்தை நோன்பின் வழி சொல்லிவிட்ட ரமளானே…

  சீர்திருத்த ஆசானே ! சோபனங்கள் ! சோபனங்கள் !

பக்தியெனும் பெயர் தாங்கிப் பண்புகளைப் பாருலகில்

  பதியமிட வந்து செல்லும் ரமளானே ! சோபனங்கள் !



உலகமெலாம் ஒருசேர ஒருமாதம் நோன்பிருந்தால்

  உலகத்துக் கடனையெல்லாம் உடனடியாய் அடைத்திடலாம் !

நிலைகுலைக்கும் காமத்தை நிதானமுடன் வென்று விட்டால்

  நிலவுலகில் பெண்ணினத்தைக் கண்ணியமாய் காத்திடலாம் !

பலவுணவு படைத்திருந்தும் அளவுடனே உண்டு வந்தால்

  பல்லாயிரம் நோயைப் பாரினிலே விரட்டிடலாம் !

அளவிடவே முடியாத தத்துவங்கள் தந்து விட்ட

  அற்புதமே ரமளானே ! அருமருந்தே வாழியவே !



அல்லாஹ்வின் அருளாக எங்களிடம் வந்து செல்லும்

  அன்பான ரமளானே ! அல்லாஹ்விடம் சென்று

நில்லாது புகழ்பாடும் நானிலத்து முஸ்லிம்களின்

  நிலைகளையும் நினைவினையும் நெஞ்சார நீ சொல்லு

நல்ல அடக்க நாடுகளை நஞ்சுவெனக் கூறுகிறார் !

  நலிந்திருக்கும் மக்களையே நசுக்குகிறார் பொசுக்குகிறார் !

சொல்லுகிற ‘தீவிரத்துச்’ சொற்களுக்கா நாம் சொந்தம்?

  சோதனைகள் வேதனைகள் கொஞ்சமல்ல நஞ்சமல்ல !



எம்மினத்து மக்களெல்லாம் ஆளுகிற தேசங்களில்

  ஏனெதற்கோ நெருக்கடிகள் கூட்டுகிறார் ! வாட்டுகிறார் !

நிம்மதியாய் வாழ்வதற்கு நீதியில்லை பாரினிலே

  நின்றாலும் நிமிர்ந்தாலும் பழிச்சொல்லே வாழ்வினிலே !

உம் வரவால் இழந்துவிட்ட நிம்மதியை மீட்டு வர

  இறைவனிடம் சொல்ரமளான் ! எம்மிதயம் குளிர்ச்சி பெற !

எம்மண்ணில் எவரேனும் காழ்ப்புணர்வைக் கக்கிவிட

  இயலாது செய்துவிடு ! ஏற்றங்கள் தந்துவிடு !



இல்லாத நிலைகளெல்லாம் இல்லாமல் ஆக்கிவிடு !

  இயலாமை எனும் சொல்லை எம்நாட்டில் எடுத்துவிடு !

செல்வாக்கும் சொல்லாக்கும் எல்லோர்க்கும் கொடுத்துவிடு !

  செறுக்கோடு எமைநோக்கும் சிறுமைகளைத் தடுத்துவிடு !

வல்லரசு போக்குகளில் நியாயத்தை நிலைத்து விடு !

   வலியவந்து வம்பிழுக்கும் போக்குகளை நிறுத்தி விடு !

அல்லாஹ்வின் அருட்கொடையே சென்று மீண்டும் வந்து விடு !

  அனுதினமும் உன் நினைவே ! சொர்க்கத்தைத் தந்து விடு !

        வஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி

                        வ பரக்காத்துஹு


அஞ்சல் வழி தகவல் from: 
 Muduvai Hidayath 
<muduvaihidayath@gmail.com>


No comments:

LinkWithin

Related Posts with Thumbnails