தலைவணங்காச்
சாத்தானிய நெருப்பணைக்க
ஆண்டவன் எறிந்த
ஆதி ஆத மண் உருண்டை
மூல ஒளி தேடும்
மாதிரிகளின் சுடர்
மகுட மாணிக்கம்
மறுமையில் நிகழும்
மனிதத் தேர்தலில்
என்றும் ஆள்பவனுக்குக் காட்டும்
அடையாள அட்டை
ஐம்புலத்
தலைநிலத்தில்
மண்விதைத்த
மகரந்த விதை
ஆம்
வீடுபேற்றுக் கனி
விதை
பாவத் தூசுகளைப்
பக்குவமாய் எரிக்கும்
அக்கினி வழி
கேடு ஐயம்
நீக்கும் போரில்
மூளை ஏந்தும்
கேடயம்
இறைமுகவரிக்கு
எழுதப் பெற்ற
எட்டுச் சாண்
கடித உறையில்
ஒட்டப் பெற்ற
அஞ்சல் தலை
இமைகளையும்
உதிர்த்துவிட்டு
யாருக்கான
தரிசனத்திற்குத்
தவம் இருக்கிறது
இந்தப் பாவை?
இருமை நீங்கி
ஒருமையாகும்
அந்த
முதல் இரவுக்காக
ஊற்றி வைத்த
உறைமோர் இருள்
நெற்றிச்சுவடிப்
பட்டோலையில்
மண் எழுதும்
தலையெழுத்து
முதல் ஒளியாம்
முகமதியா நூரின்
நுதல் காம்பு
உள்முகக் கண்ணாடியில்
வேத ரசப் பூச்சு
சொர்க்க மனைப் பட்டாவைச்
சொந்தமாக்கும்
பத்திரப் பதிவின்
முத்திரைக் கீறல்
ஆம்!
ஆறுவேளை
தொழுகையின்
ரேகை
எல்லாம் செல்லாததாகிவிடும்
செல்லும் உலகில்
செல்லும் ஒரேயொரு
ஒற்றை நாணயம்
அதிசய போதை தரும்
ஆன்மீகத் திராட்சை
இதன் ரசத்தில்தான்
இரட்டை தரிசனம்
ஏகமாகிறது
ஆயுள் எல்லாம்
முயன்று முயன்று
பள்ளி கற்றுத் தந்த
புள்ளி எழுத்து இது !
எச்சில் நாவுகளால்
உச்சரிக்கப்படும்போது
சிணுங்கும் இறையும்
இணங்கும்
ஓரெழுத்து
ஒருமொழி இதுதான் !
மனிதனுக்குக் கிட்டிய
மறைமொழிகள்
வேறுவேறு
இருந்தாலும்
அவற்றின்
ஒளிபெயர்ப்பும்
மொழிபெயர்ப்பு
இதுதான் !
வேர்விடா
விளம்பரக் காய்ப்பை விட
உழைத்த
கைகளின் காய்ப்பே
கட்டாயம் உயர்ந்தது
ஏனென்றால்
கைகளின் காய்ப்புதான்
கருணை நபியின்
கனிமுத்தம் பெற்றது !
நன்றி :
நர்கிஸ் மாத இதழ்
டிசம்பர் 2014
தகவல் தந்தவர்
by mail from Muduvai Hidayath
<muduvaihidayath@gmail.com>
No comments:
Post a Comment