Tuesday, May 10, 2016

வரலாற்றில் ஒரு கருத்துக் கணிப்பு...

Abu Haashima
வரலாற்றில் ஒரு
கருத்துக் கணிப்பு...
முஆவியா ...
அபு சுப்யான்
ஹிந்தாவின் செல்லப் பிள்ளை.
இமாம் அலீ ( ரலி ) அவர்களின் ஷஹாதத்திற்குப் பிறகு தன்னை இஸ்லாமியப் பேரரசின் மன்னராக முடி சூட்டிக் கொண்டவர்.
தனக்குப் பிறகு தனது மகன் யஜீதை
அரசனாக்க அனைத்து அயோக்கியத்தனங்களையும் இவர் அரங்கேற்றினார்.
சதி ,சூழ்ச்சி , மிரட்டல் , பழி வாங்கல் எல்லாவற்றையும் சர்வசாதாரணமாக நடத்தினார்.
முஆவியாவின் மதினா ஆளுநர் மர்வான்
" முஆவியா தனக்குப்பின் தனது மகன் யஜீதை புதிய கலீபாவாக தேர்ந்தெடுத்து விட்டார் " என்று மக்களிடம் அறிவித்தார்.
இதனை ...
அபுபக்கர் ( ரலி ) அவர்களின் மகன் அப்துர் ரஹ்மான்
ஹஸ்ரத் அலீ ( ரலி) அவர்களின் மகன் இமாம் ஹுஸைன்
உமர் ( ரலி ) அவர்களின் மகன் அப்துல் ரஹ்மான்
ஜுபைர் ( ரலி ) அவர்களின் மகன் அப்துல்லாஹ் ஆகியோர் ஏற்றுக் கொள்ளவில்லை.

சிரியாவிலிருந்து ஒருநாள் முஆவியா மதினாவுக்கு வந்தார்.
அங்கே மக்களிடம் ...
" யஜீதை கலீபாவாக ஏற்றுக் கொள்ளுங்கள் " என்றார்.
அப்போதும் அவர்கள் நான்கு பேரும் மறுத்தார்கள். முஆவியா மிரட்டினார்.
மிரட்டலுக்குப் பணியாத இவர்கள் நால்வரும் மக்காவுக்கு சென்று விட்டனர்.
அவர்களை விடாமல் துரத்திய முஆவியா தனது தளபதியிடம் ,
" நான் மக்கா மக்களிடம் உரையாற்றப் போகிறேன். அப்போது இவர்கள் நால்வரும் எனக்கு எதிராகவோ ஆதரவாகவோ வாயைத் திறந்தால் நான்கு பேரையும் உடனே கொன்று விடு " என்று உத்தரவிட்டார்.
பிறகு மக்களிடம்...
" இவர்கள் நால்வரும் உத்தம நபித் தோழர்கள். இவர்கள் அனுமதியில்லாமல் நான் எதையும் செய்வதில்லை. இவர்கள் யஜீதை கலீபாவாக ஏற்றுக் கொண்டு விட்டார்கள். நீங்களும் யஜீதுக்கு பையத் செய்யுங்கள் " என்றார்.
தங்கள் மரியாதைக்குரிய தலைவர்கள்
மறுப்பேதும் கூறாமல் அமைதியாக இருப்பதைக் கண்டு ஏமாந்த மக்கா மக்களும் யஜீதுக்கு பையத் செய்து அவனை கலீபாவாக ஏற்றுக் கொண்டார்கள்.
இன்றைய தேர்தல் கருத்துக் கணிப்புகளும் 100/100 இப்படித்தான் இருக்கின்றன.
மிரட்டல்
ஆசைகாட்டல்
பணம்
இவற்றுக்கு பயந்தே பல சேனல்கள்
ஆளுங்கட்சுக்கு ஆதரவாக மனசாட்சியை நல்ல விலைக்கு விற்று விட்டு
கருத்துக் கணிப்பு என்ற பெயரில்
தாங்கள் விலைபோன அவலத்தை
ஒப்பாரி வைக்கின்றன.
தமிழக மக்களை
ஆளும் கட்சியிடமிருந்தும்
இந்த கேவலமான ஊடகங்களிடமிருந்தும் இறைவன்தான் காப்பாற்றணும்.

Abu Haashima

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails