J Banu Haroon
நான் ரொம்ப சின்னவள் அப்போ .....
என் பாட்டி பாப்பாத்தியம்மா ( ஜூபைதா பேகம் )
கடல்வழி மார்க்கமாக கப்பலில் பிரயாணித்து புனித '' மக்கா '' விற்கு சென்றுவிட்டு பலமாதங்கள் கழித்து ஜனத்திரளுடன் தக்பீர் சொல்லிக்கொண்டு களைப்புடன் கலர் புர்கா அணிந்தவராய் வீடு வந்து இறங்கின நினைவு வருகிறது .....
பெட்டிகளும் வந்திறங்கின .
அப்பா ,சித்தப்பாக்கள் சிங்கப்பூரிலிருந்து கப்பலில் சிலநாட்கள் பயணித்து வந்து நாகப்பட்டினம் துறைமுகத்தில் இறங்கி இருப்பார்கள் . இங்கிருந்து அழைக்கப்போன காரில் வீட்டு ஆண்களுடன் வந்து அமைதியாக வெளியில் தெரியாமல் பெட்டி ,பார்சல்களுடன் இன் பண்ணின சட்டையும்,கழுத்தில் இறுக்கி கட்டின டையும் ,பேண்ட்டும் ,கருப்பு சாக்ஸும் ,ஷூக்களும் அணிந்து ....ஜம்மென்று வாசனை திரவியங்கள் மணக்க வந்திறங்குவார்கள் .வந்தவர்களை வேற்று கிரகவாசியை போல் மற்றவர்களுடன் சேர்ந்து நானும் வேடிக்கை பார்த்திருக்கிறேன் ..இழுத்துப்பிடித்து இறுக அணைத்துக்கொண்டு முத்தமிடுவார்கள் .அச்சத்துடன் திமிறிக்கொண்டு ஓடுவேன் ....
அதன்பின் வீடு அதிக அமைதியுடன் திகழும் ...சத்தமான பேச்சுக்களோ ,சிரிப்பொலிகளோ ...எழாது .ஒரு ஆறு மாதங்கள் விருந்தினர் வருகையும் ,அடிக்கடி விருந்துகளுமாக களைகட்டும் ....டின்னை திறக்கும் போதெல்லாம் ரொட்டி ,மிட்டாய்கள் வாசனைகளும் ,பெட்டிகள் திறக்கப்படும்போதெல்லாம் சென்ட் ,யூடிகோலின் ,புத்தாடைகளின் மணமுமாக வீடு நிறைக்கும் ....
என் பாட்டி பயணம் வந்தது வேறு தினுசில் இருந்தது ...
ஜனங்கள் திரள் திரளாக வந்துகொண்டேயிருந்தார்கள் .தட்டுகளில் பேரித்தம் பழங்களும் ,ஜம் ஜம் நீரும் வைத்து வைத்து பயபக்தியுடன் கொடுக்கப்பட்டது ...நானும் இடையிடையே கையை விட்டு ஜம் ஜம் நீர் கிளாஸை எடுத்து குடித்துவிடுவேன் ...கொஞ்சம் ,கொஞ்சம் தீர்த்தமாக கொடுப்பதினால் எனக்கு தாகம் அடங்கவில்லை ....அந்த புனித நீரின் ருசியும் அப்படி .....எனக்கு ரொம்பவே பிடித்திருந்தது ...
'' ரொம்ப தாகமா இருந்தா அடுப்பங்கரையில் போய் சால்ல மொண்டு குடி ''...என்பார்கள் .சால் என்பது சமையலறையில் குடிநீர் பிடித்து வைத்திருக்கும் மிகப்பெரிய வெண்கல ,அல்லது செப்பு பாத்திரம் .
வருபவருக்கெல்லாம் ...உணவுகள் சமைத்தவண்ணம் பரிமாறப்பட்டவண்ணமிருக்கும் .வாண்டுப்படைகள் எங்களுக்கெல்லாம் கொண்டாட்டமாகவே இருந்தது ....
ஒருநாள் மட்டும் சாப்பிடும்போது அபூர்வமாக புளியங்கொட்டை போன்ற வடிவத்தில் என்னவோ ஒன்றிரண்டு என்னுடைய பீங்கான் தட்டில் பாட்டி கொண்டுவந்து வைத்தார் .
''எனக்கு வேண்டாம் ...என்னது ?...''என்றேன் .
''பிஸ்மி சொல்லி பேசாம தின்னு ...''--- பாட்டியின் கண்கள் உருண்டன .
''என்னன்னு சொல்லு முதல்ல ....
பாட்டியும் விடுவதாக இல்லை .என்மேல் அவருக்கு பாசம் அதிகம் .
''பிஸ்மி சொல்லி எடுத்து வாய்ல வெச்சிக்கோடீ முதல்ல ...சொல்றேன் ...''என்று அதட்டினார் ...
''முதல்ல நீ சொல்லு ..'' - என்றாலும் ,ஒரு புளியங்கொட்டை எடுத்து மூக்கருகே கொண்டுபோனேன் ...நெய்கலந்து வேறு என்னமோ சீண்டை அடித்தது ..தயிரில் பிரட்டி .காய்ந்த சுண்டைக்காய் வற்றலை நெய்யில் வறுத்தெடுத்த நாற்றம் ....குமட்டியது . அமட்டினேன் ..''..உவ்வே !..''...
''என் கண்ணல்ல ...அப்படியெல்லாம் குமட்டப்படாது மக்காவுல குர்பானி கொடுத்த குர்பானி இறைச்சிக்கறி ....இன்னொருநாள் கேட்டாலும் கிடைக்காது ....ஒண்ணே ஒன்னு மட்டும் பிஸ்மி சொல்லி மெண்டு முழுங்கிடு ....தண்ணி குடிச்சிடு ...ஒன்னும் பண்ணாது ....''
எல்லோருமே முகம் சுளிக்காமல் பக்தியுடன் மென்றார்கள் .செம அழுத்தம் ,உப்பு கரித்தது .... உமிழ்நீரை மட்டும் விழுங்கிவிட்டு துப்பிவைத்தேன் மிகப்பெரிய சாம்பார் விரும்பி நான் .....அப்போதெல்லாம் காய்கறிகளுடன் , இறாலும் ,முட்டையும் ,ஆட்டிறைச்சியும் மட்டும்தான் சாப்பிட்டிருக்கிறேன் ...இது எனக்கு அந்நிய உணவு ....
''இது என்ன ,இப்போ சொல்லு ...பூமா !...''
''திங்காதவளுக்கு நா சொல்ல மாட்டேன் ...'' பாட்டி முகம் திருப்பிக்கொண்டார் ...
இன்னொன்றை எடுத்து வலுக்கட்டாயமாக மென்று தின்று விழுங்கினேன் .அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் ....
''இப்போ சொன்னாதான் ஆச்சு .என்னதிது ?....சொல்லு ...''
''ஒட்டக இறைச்சி வத்தல் ....
சர்க்கஸில் பார்த்தோமே அதுவா ?....எனக்கு மலைத்தது ....அதை திங்கலாமா ?....
பாலைவன கப்பல் --- நான் படித்தறிந்தது.ஆனால் அன்று எனக்கு உணர்த்தப்பட்டது,
எங்கெங்கு என்னென்ன கிடைக்குமோ அங்கங்கு அவற்றை தின்றுதான் மக்கள் உயிர் வாழ்வார்கள் ....----அதனால் அவரவர்கள் உணவில் அருவெறுப்பு அடையாதே !...என்பதுதான் ..
நான் பிடிக்காதவற்றை உண்பதுமில்லை .உண்பவர்களை கண்டு அருவெறுப்படைவதுமில்லை ....
எல்லோருக்கும் எல்லாமும் பிடிக்க வேண்டும் என்பதில்லை ....பிடிக்காதவர்கள் பிடித்தவர்களுடன் மல்லுக்கட்டுவதும் தேவையற்றது ....
வருடத்திற்கு ஒருநாள்.... இஸ்லாமியர்களின் மிகப்பெரிய தியாகத்திருநாள் ...
''பக்ரீத் பெருநாள் '' குர்பானிக்கு தடைபோட என்ன காரணம் !....யார் காரணம் ?....
ஒட்டகம் பிடிக்காதவர்கள் ஒரே ஒருநாள் உங்கள் வீட்டு கதவடைத்துக்கொள்ளுங்கள் .ஏன் ஊரார் வீடுகளில் வெளிப்பூட்டு பூட்டுகிறீர் ?.....
பாலும் ,நெய்யும் ,தயிரும் ,வெண்ணையும் இல்லாமல் என்னால் இருக்க முடியாது ...உங்களாலும்தான் ...ஒட்டகமும் ,மாடும் ,ஆடும் குர்பானி கொடுக்காமல் அவர்களால் மட்டும் எப்படி இருக்க முடியும் ...தெரியவில்லை ....
சாவிகளுடன் நக்கலடித்தது போதும் ...அவரவர் வீடுகளின் வெளிப்பூட்டுக்களை திறந்து விடுங்கள் ....எல்லோருக்கும் எல்லா சுதந்திரமும் இங்கு உண்டுதானே ?....காரணமற்று அடைக்கப்பட்ட சில முஸ்லீம் சிறைவாசிகளைப்போல் ...முஸ்லிம்கள் அத்தனைபேரின் உணர்வுகளும் சிறைவைக்கப்படுகிறது .
.இந்தியா சுதந்திரப்பட்டு எழுபது வருடங்களாகியும் இஸ்லாமியர்களின் சுதந்திரம் மட்டும் அவ்வப்போது பறிக்கப்படுவது ஏன் ?.....
No comments:
Post a Comment