Friday, September 2, 2016

ஹஜ் புனிதக் கடமையினை தன்னகத்தே கொண்ட துல்ஹஜ்ஜு மாதம்....

மூன்று பெரும் மதங்களின் மூலவரான இறைத்தூதர் இபுறாஹீம் (அலை) அவர்களை நினைவுகூரும், ஹஜ் புனிதக் கடமையினை தன்னகத்தே கொண்ட துல்ஹஜ்ஜு மாதம் இனிதே தொடங்குகிறது.

இறையோ இதுவோ இப்பிறையோ?
இல்லை இல்லை தேய்ந்திடுதே!
முறையாய் பெரிய கதிர்கூட
முழுதாய் மறையுது அந்தியிலே
நிறைந்த சிந்தை இபுறாஹீம்
நெஞ்சில் பூத்த தேடலிலே
இறையின் மார்க்கம் விளங்கியதே

இம்மை மறுமை சிறந்திடவே!
கனவில் கண்டார் பலியிடவே
கருணை பரிசாம் இளம்மகனை!
நினைந்தே உறுதி பெற்றிட்டார்
நிச்ச யமிது இறையாணை!
அணைத்தே மகனை கேட்டாரே
அவரும் ஒப்பத் துணிந்தாரே
புனையா உண்மை தேடிடுவோம்
புரிந்தால் நன்மை நமக்கன்றோ
அறுக்கத் துணிந்தார்; அறவில்லை
அல்லாஹ் நாட்டம் அதற்கில்லை
பொறுத்துப் பார்த்தார் இபுறாஹிம்
பேரிறை அளித்தான் ஆடொன்றை.
சிறந்த எண்ணச் சோதனைக்கே
செய்த வழியாம் அக்கனவு
துறப்பீர் பாசம் பற்றெல்லாம்
தூயோன் இறையின் ஆணைக்கே!
உற்ற துணையை, சிறுமகவை
ஒன்றும் இல்லா ஊரொன்றில்
பற்றை அறுத்து விட்டுவிட்டார்
படைத்தோன் இறைவன் சொன்னபடி!
சுற்று முற்றும் ஒன்றுமில்லை
சுகமாய் வாழ ஏதுமில்லை
பெற்ற மகவும் பரிதவிப்பில்
பெண்ணும் பெற்றார் பெருந்துன்பம்
"சற்றே நில்லும் என்கணவா!
சடுதி விரைந்து செல்லுமுன்னே
“பற்றை அறுத்துப் போவதெல்லாம்
படைத்தோன் ஆணை? பண்பிதுவா?”
குற்ற மின்றி கேட்டுவிட்டார்
குமைந்தே சொன்னார் “இறையாணை”
மற்ற விளக்கம் வேண்டாமல்
மாண்பாம் இறையே போதுமென்றார்
தாகத் தவிப்பில் சிறுகுழந்தை
தாயும் செய்ய ஏதுமின்றி
ஏகன் இருக்கப் பயமற்று
எங்கும் நீரைத் தேடிவர
போக வரவும் பொழுதாக
புரண்டு உதைத்து குழந்தையழ
மேகம் கூட உதவாத
மென்மை அறியா பாலைவனம்.
காணக் கிடைத்த மலைகளிடை
கடுகி நடந்தார் தொங்கோட்டம்
கானல் என்று அறியாமல்
கண்ட நீரைக் காணவில்லை
வானம் பார்த்தார் வழியில்லை
வாழ்வில் இதுபோல் துயரில்லை
காண வந்தார் குழந்தையினை
கண்டார் ஊற்றைக் காலடியில்.
பெருகப் பெருகும் நீரன்று
பெரியொன் இறையோன் கருணையது
உருகிப் போனார் உளமாற
உண்மை இறையைப் புகழ்ந்தாரே!
நெருங்கிச் சொன்னார் நீரிடமே
நில்நில்! நீரும் நின்றதுவே
உருக்கும் நிகழ்விது உணர்த்திடுதே
உண்மை இறையை சார்ந்திடென்றே.

எழுதியது

Fakhrudeen Ibnu Hamdun

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails