Tuesday, September 20, 2016
தொழுகையின் மாண்பை அறிந்து கொள்வோம்!
ரமலான் காலத்தில் தொழுகையை மேலும் மேலும் அதிகப்படுத்துங்கள். தொழுகையின் மாண்பு குறித்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறும் கருத்துக்கள் அளப்பரியன :-
* நீங்கள் அல்லாஹ்வுக்கு அதிகமாக ஸஜ்தா செய்யுங்கள் (தொழுங்கள்), நிச்சயமாக நீங்கள் செய்யும் ஒவ்வொரு ஸஜ்தாவைக் கொண்டும் உங்களுக்கு ஒரு பதவியை அல்லாஹ் உயர்த்துகிறான். உங்களை விட்டும் ஒரு பாவத்தை அழித்துவிடுகிறான்.
* மனிதன் தான் தொழுத பிறகு, அவனுக்காக தொழுகையின் பத்தில் ஒரு பங்கு பதிவு செய்யப்படுகிறது. சிலருக்கு ஒன்பதில் ஒரு பங்கு, சிலருக்கு எட்டில் ஒரு பங்கு, சிலருக்கு ஏழில் ஒரு பங்கு, சிலருக்கு ஆறில் ஒரு பங்கு, சிலருக்கு ஐந்தில் ஒரு பங்கு, சிலருக்கு நான்கில் ஒரு பங்கு, சிலருக்கு மூன்றில் ஒரு பங்கு.. இவ்வாறு பதிவு செய்யப்படுகிறது. நாம் தொழும் தொழுகைக்கு பல ஆயிரத்தில் ஒரு பங்கென்ன... பல லட்சத்தில் ஒரு பங்கும் பதிவு செய்ப்படுமேயானால்... அதுவும் அல்லாஹ்வின் கிருபையாகும்.
* சில தொழுகைகள் பழைய துணியைப் போன்று சுருட்டி தொழுதவருடைய முகத்தில் வீசப்படும். தொழுகையாளிகள் வணக்க வழிபாடுகளில் தமது திறமை முழுவதையும் காட்டுவார்கள். இந்த விஷயத்தில் ஷைத்தான் தோல்வியடைந்துவிட்டான். இருப்பினும் முஸ்லிம்களுக்கிடையே பகைமைத் தீயை மூட்டுவதில் நம்பிக்கை இழக்கவில்லை.
* கியாம நாளில் முதலாவதாக கேட்கப்படும் கேள்வி, தொழுகையை பற்றியதாகும். அல்லாஹ் வானவர்களை நோக்கி,'' என்னுடைய அடியானின் தொழுகை குறைவாக உள்ளதா என்பதைக் கவனியுங்கள்,'' என்று கட்டளையிடுவான். அது முழுமையாக இருந்தால் அது முழுமையென்று பதியப்படும். குறைவாக இருந்தால் குறைவென்று பதியப்படும்.
* "இம்மனிதனிடம் ஏதேனும் நபிலான தொழுகைகள் உள்ளதா?" என்று வானவர்களிடம் இறைவன் கேட்பான். நபிலான தொழுகை இருக்குமானால், அதனைக் கொண்டு பர்ளுகளை நிறைவு செய்யப்படும். இவ்வாறே நபிலான தொழுகைகள், இவ்வாறே மற்ற செயல்களை குறித்து கேள்விகள் கேட்கப்படும்.
* தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டால் வானத்தில் வாசல்கள் திறக்கப்படும். பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். தொழுகையின் முன்வரிசையின் சிறப்பை நீங்கள் அறிந்தால் நிச்சயமாக நீங்கள் (அதற்காக) சீட்டுக்குலுக்கி முந்திக்கொள்ள முனைவீர்கள்.
* "தொழுபவர் அல்லாஹ்விடம் நேரடியாக பேசுகிறார். இகாமத்தை நீங்கள் செவியுற்றால் தொழுவதற்கு நடந்து வாருங்கள். நிதானத்தையும் அமைதியையும் மேற்கொள்ளுங்கள். ஓடிவராதீர்கள். (ஜமா அத்தில்) பெற்றுக் கொண்ட அளவு தொழுது கொள்ளுங்கள்," என்கிறார்கள் நாயகம்.
* ஒரு சமயம் நபிதோழர் ஒருவர், "தக்பீர் தஹ்ரீமா" முதல் தக்பீரை தவறவிட்டு, ஜமா அத் தொழுகையில் கலந்து கொண்டார். தொழுகை முடிந்தபின் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், "பெருமானாரே! நான் தக்பீர் தஹ்ரீமாவை தவற விட்டுவிட்டேன். அதற்கு ஈடாக நான் என்ன செய்ய வேண்டும்? என்னிடம் நான்கு ஓட்டகைகளின் சாமான்களை ஈடாக கொடுப்பதால் தக்பீர் தஹ்ரீமாவின் நன்மை கிடைக்குமா?" என்று வினவிய போது, திருநபி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் ''நான்கு ஒட்டகைகளின் சாமான்கள் என்ன, நாற்பது ஒட்டகைகளின் சாமான்களை நீர்தருமமாகக் கொடுத்தாலும் தக்பீர் தஹ்ரீமாவுக்கு ஈடாகாது'' என்று கூறினார்கள்.
* "தொழுபவரின் குறுக்கே செல்பவர் அதனால் தனக்கு ஏற்படும் பாவத்தைப் பற்றி அறிந்திருந்தால், தொழுபவரின் குறுக்கே செல்வதற்குப்பதிலாக நாற்பது நாட்கள் ஆனாலும் அங்கேயே நின்று கொண்டிருப்பது அவருக்கு சிறந்ததாக தோன்றும்," என்று தொழுகையின் மகிமையை அண்ணல் நபிகள் உயர்த்திப் பேசினார்கள்.
http://kayaltimes.com
---------------------------------------------------------------------------
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment