Saturday, September 3, 2016

நற்செயல்

இஸ்லாமின் வழிகாட்டுதலால் வளர்க்கப்பட்டு அதன் கருத்துக்களையும் கண்ணோட்டங்களையும் நன்கறிந்த முஸ்லிம், சமூகத்தின் அனைத்து மக்களுக்கும் பலனளிப்பவராக இருக்க வேண்டும். அவர்களுக்கு எந்த வகையிலும் துன்பமிழைத்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    சத்தியத்தையும் நன்மையையும் அடிப்படையாகக் கொண்டு அவர் வளர்க்கப்பட்டதால் மக்களுக்கு பலனளிப்பது என்பது இயல்பாகும். மக்களுக்குப் பயனளிப்பதற்கான வாய்ப்பு ஏதேனும் கிட்டினால் அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வார். ஏனெனில் அது வெற்றியின்பால் அழைத்துச் செல்லும் என்பதை அவர் அறிவார்.

    விசுவாசிகளே! நீங்கள் குனிந்து சிரம்பணிந்து உங்கள் இறைவனை வணங்குங்கள். நன்மையே செய்து கொண்டிருங்கள். அதனால் நீங்கள் வெற்றி அடையலாம். (அல்குர்ஆன் 22:77)


பிறருக்கு நன்மை புரியும் நோக்குடன் எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் அல்லாஹவின் மகத்தான நற்கூலியை பெற்றுத் தருகிறது என்ற உறுதியுடன் நற்செயலை நோக்கி விரைந்து செல்வார்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”சூரியன் உதிக்கும் ஒவ்வொரு நாளிலும், இருவருக்கு மத்தியில் நீ சமாதானம் செய்துவைப்பது தர்மமாகும். ஒருவரை அவரது வாகனத்தில் ஏறுவதற்கு அல்லது அவரது பொருளை அதன்மீது ஏற்றுவதற்கு நீ உதவி செய்வதும் தர்மமாகும். நல்ல வார்த்தைகளைக் கூறுவது தர்மமாகும். தொழுகைக்கு செல்ல எடுத்துவைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். இடையூறு அளிப்பவைகளை பாதையிலிருந்து அகற்றுவது தர்மமாகும்.”  (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    முஸ்லிம், சமூகத்திற்கு செய்ய வேண்டிய சேவைகளையும் தொழுகைக்காக நடந்து செல்வதையும் ஒருங்கே இணைத்துக் கூறியிருக்கும் அமைப்புதான் என்னே அற்புதம்! தீன், துன்யா என பிரிக்காமலும், சமூக வாழ்வு ஆன்மீக வாழ்வு என வேறுபடுத்திக் காட்டாமலும் ஒருங்கிணைத்தே நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பது மார்க்கம் என்பது மனிதனின் அனைத்து காரியங்களையும் சீர்படுத்தவே அருளப்பட்டது என்பதை உறுதிப்படுத்துகிறது.

    நேரிய வழியை நன்கு விளங்கிய முஸ்லிமின் பார்வையில், அல்லாஹவின் திருப்பொருத்தத்தை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படும் அனைத்து செயல்களும் இறை வணக்கமாகும். இறையச்சமுள்ள முஸ்லிமுக்கு முன்னால் நன்மையின் அனைத்து வாசல்களும் விரியத் திறந்து வைக்கப்பட்டுள்ளன. அல்லாஹவின் மகத்தான அருட்கொடைகளையும் அல்லாஹவின் விசாலமான கருணையையும் வேண்டி, விரும்பிய போதெல்லாம் நன்மையை அடைந்துகொள்வார்.

    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஜாபிர் (ரழி) அறிவிக்கிறார்கள்: ”அனைத்து நற்செயல்களும் தர்மமாகும்.” (ஸஹீஹுல் புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா (ரழி) அறிவிக்கிறார்கள்: ”நல்ல வார்த்தை(யால் உரையாடுவது) தர்மமாகும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    முற்றிலும் அல்லாஹவுக்கு வழிப்பட்டு தனது எண்ணத்தை தூய்மைப்படுத்திய மனிதன், தீமையிலிருந்து தன்னை விலக்கிக் கொண்டு ஒரு நற்காரியத்தை செய்ய நினைத்தாலே நன்மையுண்டு.

    அபூ மூஸா (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் கடமையாக இருக்கிறது” என நபி (ஸல்) அவர்கள் கூறியபோது நபித்தோழர்கள் வினவினர், ”அவர் வசதியை பெற்றிருக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டுமென கருதுகிறீர்கள்?” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”அவரது இருகரத்தால் உழைத்து தானும் பலனடைந்து பிறருக்கும் தர்மம் செய்ய வேண்டும்.” தோழர்கள் வினவினார்கள் ”அதற்கும் சக்தி பெறவில்லையானால்?” நபி (ஸல்) அவர்கள் ”தேவை உடைய பலவீனமானவருக்கு உதவி செய்யட்டும்” என்று கூறினார்கள். தோழர்கள் கேட்டார்கள் ”அதையும் செய்ய முடியவில்லையென்றால்?” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”நன்மையை ஏவட்டும்.” தோழர்கள் வினவினார்கள் ”அதுவும் செய்ய (முடிய)வில்லையென்றால்?” நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”பிறருக்கு கெடுதி விளைவிப்பதிலிருந்து தன்னை தடுத்துக் கொள்ளட்டும். அது அவருக்கு தர்மமாகும்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    இந்த நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் தர்மம் கடமையாக இருக்கிறது என்று ஆரம்பித்து படிப்படியாக நன்மைகளின் வகைகளை வரிசைப்படுத்தினார்கள். தனது சக்திக்கேற்ப ஒவ்வொரு முஸ்லிமும் தர்மம் செய்யவேண்டியது கடமையாகும். அதாவது தனது சமுதாயத்தில் ஆக்கப்பூர்வமான நற்காரியங்களை செய்துவர வேண்டும். ஏதாவது ஒரு காரணத்தினால் இயலாமல் ஆகிவிட்டாலோ அல்லது செய்யவில்லை என்றாலோ, ஆகக் குறைந்தது தனது நாவாலோ, உறுப்புகளாலோ பிறருக்கு தீங்கு செய்யாமலிருக்க வேண்டும். இதுவும் தர்மம்தான். ஒரு முஸ்லிமின் அசைவும் அமைதியும் சத்திய மார்க்கத்திற்கு பணிசெய்வதாகவே அமைய வேண்டும்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”எவருடைய நாவு, கரத்திலிருந்து முஸ்லிம்கள் நிம்மதி அடைகின்றார்களோ அவரே முஸ்லிமாவார்.” (ஸஹீஹுல் புகாரி)

    ”எவருடைய தீமையிலிருந்து அச்சமற்று அவரது நன்மையின் மீது ஆதரவு வைக்கப்படுகிறதோ அவரே சமூகத்தில் சிறந்தவர்” என நபி (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், அமர்ந்து கொண்டிருந்த சில மனிதர்களருகே நின்று ”நான் உங்களில் தீயவர்களிலிருந்து உங்களில் நல்லவர்களைப் பற்றி அறிவித்துத்தரட்டுமா?” என்றார்கள். கூட்டத்தினர் மெªனமாக இருந்தனர். நபி (ஸல்) அவர்கள் மூன்றுமுறை அவ்வாறு கேட்டார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒருவர் ”அல்லாஹவின் தூதரே! அறிவித்துத் தாருங்கள்” என்றார். நபி (ஸல்) அவர்கள் ”எவரின் நன்மை ஆதரவு வைக்கப்பட்டு அவரது தீமையிலிருந்து மக்கள் அச்சமற்று இருக்கிறார்களோ அவரே உங்களில் சிறந்தவர். உங்களில் எவரிடமிருந்து நன்மை நாடப்பட்டு, ஆனால் தீமையிலிருந்து மக்கள் நிம்மதி அடையவில்லையோ அவரே உங்களில் மிகக் கெட்டவர்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹமத்)

ஒரு முஸ்லிம் தனது சமூகத்தாருக்கு நன்மையை மட்டுமே முன்வைப்பார். அது இயலாதபோது தீமை செய்வதிலிருந்து தன்னை தடுத்துக்கொள்வார். உண்மை முஸ்லிம் எப்போதும் நன்மையை செய்வார் அவரிடமிருந்து தீமை வெளிப்படாது என்பதே நபிமொழியின் கருத்தாகும்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”தனக்கு விரும்புவதையே தனது சகோதரருக்கும் விரும்பாதவரை உங்களில் எவரும் ஈமான் கொண்டவராக மாட்டார்.” (ஸஹீஹுல் புகாரி)

    தான் விரும்புவதையே சகோதர முஸ்லிம்களுக்கும் விரும்ப வேண்டும் என்பதன் பொருள், அவர்களுக்கு உதவுவதிலும் அவர்களது துன்பங்களைத் தடுப்பதிலும் ஆர்வம் கொள்ள வேண்டும் என்பதாகும். அத்துடன் இஸ்லாமிய சமூகத்தின் தனித் தன்மையை வெளிப்படுத்தும் மற்றொரு கடமையும் உண்டு. ஆம்! அது தனது உழைப்பாலும், உற்சாகத் தாலும் தனது முஸ்லிம் சகோதரர்களுக்குப் பணிவிடை செய்வதே.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”ஓர் அடியார் தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றும் காலமெல்லாம் அல்லாஹ அவருடைய தேவையை நிறைவேற்றுகிறான்.” (முஃஜமுத் தப்ரானி)

    மேலும் கூறினார்கள்: ”ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்கு சகோதரர் ஆவார். அவருக்கு அநீதி இழைக்கமாட்டார்; அவரை விரோதியிடம் ஒப்படைக்கவும் மாட்டார். எவர் தனது சகோதரரின் தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபடுகிறாரோ அல்லாஹ அவருடைய தேவையை நிறைவேற்றுவதில் ஈடுபடுகிறான். எவர் முஸ்லிமின் ஒரு துன்பத்தைப் போக்கினால் (அதற்கு கூலியாக) அல்லாஹ அவரது மறுமையின் துன்பங்களில் ஒரு துன்பத்தை அகற்றுகிறான். எவர் ஒரு முஸ்லிமின் குறைகளை மறைக்கிறாரோ அல்லாஹ மறுமைநாளில் அவரது குறைகளை மறைக்கிறான்.” (ஸஹீஹுல் புகாரி, ஸஹீஹ் முஸ்லிம்)

    மேலும் கூறினார்கள்: ”எவர் முஃமினின் ஒரு துன்பத்தைப் போக்கினால் (அதற்கு கூலியாக) அல்லாஹ அவரது மறுமையின் துன்பங்களில் ஒரு துன்பத்தை அகற்றுகிறான். ஒரு வறியவரின் கடன் சுமையை எளிதாக்கினால் அல்லாஹ அவருக்கு இம்மை மறுமையின் காரியங்களை எளிதாக்குகிறான்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

    சமூகத்தில் ஒருவருக்கொருவர் உதவ வேண்டும் என்ற மனப் பான்மையை வளர்க்கும் இஸ்லாம், இஃதிகாஃப் இருப்பதைவிட தனது சகோதரனின் தேவையை நிறைவேற்றுவதற்காக சில எட்டுகள் நடப்பதை சிறந்ததாக்கியுள்ளது.

    நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ”எவர் தனது சகோதரனின் தேவையை நிறைவு செய்வதற்காக நடக்கிறாரோ அது அவர் பத்து ஆண்டுகள் இஃதிகாஃப் இருப்பதைவிட மேலானதாகும். எவர் அல்லாஹவின் திருப் பொருத்தத்தை நாடி ஒருநாள் இஃதிகாஃப் இருக்கிறாரோ அவருக்கும் நரக நெருப்புக்குமிடையே அல்லாஹ் மூன்று குழிகளை ஏற்படுத்துகிறான். அந்த ஒவ்வொரு குழியும் கிழக்கு மற்றும் மேற்குக்கு இடையே உள்ள தூரத்தைவிட அதிக தூரமுடையதாயிருக்கும்.” (முஃஜமுத் தப்ரானி)

    அவ்வாறே மக்களுக்கு உதவி செய்ய வசதி வாய்ப்புகள் இருந்தும் அதில் அலட்சியமாக இருப்பவர்களுக்கு அல்லாஹவின் அருள் நீங்கி விடும் என்று எச்சரித்துள்ளார்கள்.

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ”அல்லாஹ் ஓர் அடியானுக்கு அதிகமாக அருள் செய்கிறான். பின்பு மக்களின் தேவைகளில் சிலவற்றை அவனளவில் சாட்டுகிறான். அப்போது அந்த மனிதன் சலிப்படைந்தால் அவன் அல்லாஹவின் அந்த அருளை நீங்க வைத்து விட்டான்.” (முஃஜமுத் தப்ரானி)

    சுவனவாசிகளைப் பற்றிக் குறிப்பிடுகையில் மனிதர்கள் வந்து போகும் பாதையில் இடையூறளித்த மரமொன்றை அகற்றிய ஒருவனைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்: ”உலகில் முஸ்லிம்களுக்கு இடையூறாகப் பாதை நடுவிலிருந்த மரத்தை வெட்டி அகற்றிய நன்மையின் காரணமாக சொர்க்கத்தில் மிக சந்தோஷமாகப் புரண்டு கொண்டிருந்த ஒரு மனிதனைக் கண்டேன்.” (ஸஹீஹ் முஸ்லிம்)

    மக்களுக்குப் பயனளித்தல் என்பதில் அவர்களுக்கு ஏற்படும் இடையூறுகளைக் களைவதும் சேரும். எவர் மக்களின் சிரமங்களை அகற்றுகிறாரோ அவர் மக்களுக்கு நன்மை செய்தவராவார். இந்த இரு வகையான செயல்களினாலும் அல்லாஹவின் திருப்பொருத்தத்தை அடைய முடியும்.

    இதனால் முஸ்லிம்களுக்கு நபி (ஸல்) அவர்களின் வழிமுறை இரு பக்கங்களையும் எடுத்துக் கொள்கிறது. அவை அவர்களுக்கு பயனளிக்கும் காரியங்களைச் செய்வதும், தீமையளிக்கும் விஷயங்களைத் தடுப்பதுமாகும். இவை இரண்டின் மூலமும் சமூகம் மேன்மை அடைகிறது.

    அபூ பர்ஸா (ரழி) அவர்கள் கூறினார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம், ”அல்லாஹவின் தூதரே! நான் பயன் பெறும்படியான விஷயங்களை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ”முஸ்லிம்கள் நடக்கும் பாதையிலிருந்து இடையூறு தருபவைகளை அகற்றுங்கள்” எனக் கூறினார்கள். (ஸஹீஹ முஸ்லிம்)

    மற்றோர் அறிவிப்பில்: ”என்னை சுவனத்தினுள் நுழைய வைக்கும் அமலை எனக்குக் கற்றுத் தாருங்கள்” என்றபோது, நபி (ஸல்) அவர்கள் ”பாதையிலிருந்து இடையூறு அளிப்பவற்றை நீர் அகற்றிவிடும். அது உமக்கு தர்மமாகும்” என்று கூறினார்கள். (முஸ்னத் அஹமத்)

இஸ்லாம் அமைத்துள்ள சமூகக் கட்டமைப்பு உலகின் மற்றெல்லா சமூக அமைப்பையும்விட மேம்பட்டதாகும். அல்லாஹவின்பால் நெருக்கத்தை உண்டாக்கி சுவனத்தில் சேர்க்கும் நல் அமல்களில், மக்கள் நடக்கும் பாதையிலிருந்து அவர்களுக்கு இடையூறு தருபவற்றை அகற்றுவதும் ஒன்று என ஒவ்வொரு தனி மனிதரின் உணர்விலும் இஸ்லாம் சமூக சேவையை ஆழப்பதிக்கிறது.

    இன்றைய காலத்தில் மனிதர்கள் நடக்கும் பாதைகளில் அருவருப்பான துர்நாற்றமடிக்கும் பொருட்களும், கட்டிட இடிபாடுகளும், கழிவுப் பெருட்களும் குவிந்து கிடக்கின்றன. இதனால் அரசாங்கம் மக்களைக் கண்டிக்கும் விதமாக அபராதங்களை விதிக்கிறது.

    அல்லாஹவின் கட்டளைக்குச் செவிசாய்க்கும் விதமாக பாதையில் மக்களுக்கு இடையூறளிக்கும் பொருட்கள் கிடந்தால் விரைந்து சென்று அதை அகற்றவேண்டுமென நேர்வழி காட்டப்பெற்ற சமூக அமைப்புக்கும் அல்லாஹவின் நேர்வழி அருளப் பெறாத சமூகத்துக்கு மிடையே எவ்வளவு பெரிய வேறுபாடு? அந்தச் சமூக உறுப்பினர்கள் அவர்களது கழிவுப் பொருட்களை வீடுகளின் உச்சியிலிருந்தும் பால்கனியிலிருந்தும் ஜன்னல் வழியாகவும் மிக அலட்சியமாக வீசி எறிகிறார்கள். யார் யார் தலைகளில் அந்தக் குப்பைகள் விழுமோ! நவீன நாகரிகம் கொண்ட மேற்கத்திய நாடுகள் இதுபோன்ற பழக்கவழக்கங்களில் தனது மக்களுக்கு சட்டத்தை மதித்து நடப்பதற்கு பயிற்சி அளித்து ஒரு மேலான நிலையை அடைந்திருக்கின்றன. என்றாலும், அம்மக்கள் இஸ்லாமிய சமூகத்திற்கு ஈடாகமாட்டார்கள்.

    ஏனெனில், தனி மனித ஒழுக்கத்தில் இஸ்லாம் அமைத்துள்ள ஒழுக்கவியல் பண்புகள் சமூகச் சீரமைப்பில் பெரும் பங்கு வகிக்கின்றன. இந்த நேரிய அமைப்பிலிருந்து விலகிச் சென்றால் அல்லாஹவின் கட்டளைக்கு மாறு செய்தவராகி, மறுமை நாளில் அல்லாஹவின் கோபத்துக்குரியவராகி விடுவோம் என்பதை முஸ்லிம் கொள்கையாகக் கொண்டிருக்கிறார்.

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails