Tuesday, May 9, 2017

அறிவுக்குத்தான் எத்தனை அழகு ! / அபு ஹ்ஷீமா வாவர்

காஜா முஹைதீன் பாகவி
ஒருமுறை கலீபா உமர் ( ரலி ) அவர்கள் நண்பர்களோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள். அங்கே ஹுதைபத்துல் யமான் என்ற நபித் தோழர் வந்தார். அவர் அண்ணல் நபி ( ஸல் ) அவர்களின் அந்தரங்க காரியதரிசியாக இருந்தவர். கலீபாவின் மரியாதைக்கு உரியவர்.
அவரைக் கண்டதும் " வாருங்கள் ஹுதைபத்துல் யமான் அவர்களே ! எப்படி இருக்கிறீர்கள் ?" என்று உமர் ( ரலி ) அவர்கள் நலம் விசாரித்தார்கள்.
" நலமாக இருக்கிறேன் " என்ற ஒரே வார்த்தையில் பதிலை முடிக்காமல்......
" கலீபா அவர்களே...நான் பித்னாவை நேசிக்கிறேன்
ஹக்கை வெறுக்கிறேன்
ஒளுவில்லாமல் இபாதத் செய்கிறேன்
அல்லாஹ்விடம் இல்லாததை பெற்றிருக்கிறேன் "
என்று ஹுதைபத்துல் யமான் சொன்னார்.

இதைக் கேட்டதும் உமர் அவர்களுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.
" என்ன சொல்கிறீர்கள் ? நீங்கள் நபிகளாரிடம் செயலாளராக இருந்தவர். தாங்கள் இப்படி பேசுவது சரியா ?" என்று கேட்டார்கள்.
ஹுதைபா " சரிதான் " என்று சொல்ல.... சபையில் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நேரத்தில் ...
அறிவின் தலைவாசல் அலீ ( ரலி ) அவர்கள் அங்கே வந்து சேர்ந்தார்கள்.
" வாருங்கள் அலீ அவர்களே... இந்த ஹுதைபத்துல் யமான் என்ன சொல்கிறார் என்று கேட்டீர்களா ? என்னால் பொறுக்க முடியவில்லை " என்று பொங்கினார்கள் உமர் அவர்கள்.
நடந்த சம்பவத்தை கேட்டு தெரிந்து கொண்ட அலீ ( ரலி ) அவர்கள் , " ஹுதைபா சரியாகத்தானே சொல்லி இருக்கிறார். அதற்காக கோபப்பட என்ன இருக்கிறது ?" என்று கேட்டார்கள்.
உமருக்குத் திகைப்பு ! " அலீ அவர்களே... தாங்களுமா அவர் சொல்வதை சரி என்று சொல்கிறீர்கள் ?" என்று திகைப்போடு கேட்டார். கலீபாவுக்கு அலீ அவர்கள் சொன்ன விளக்கம் இது !
" ஹுதைபா சொன்னது சரிதான்...
" பித்னா " என்றால் சோதனை ! பித்னாவை விரும்புகிறேன் என்றால் ... நான் என் மக்களை பொருட்களை விரும்புகிறேன் என்பது பொருள். " உங்கள் பொருட்களும் பிள்ளைகளும் உங்களுக்கு சோதனையாகவே இருக்கிறது " என்று அல்லாஹ் சொல்லி இருக்கிறான். அதைத்தான் அவரும் சொல்லி இருக்கிறார்.
அடுத்து ... ஹக்கை வெறுக்கிறேன் என்பது !
ஹக் என்றால் இறைவன் என்றும் மரணம் என்றும் பொருள்படும் . "மரணம் ஹக்கானது " என்று அல்லாஹ் சொல்லியிருக்கிறான். " ஹக்கை வெறுக்கிறேன் " என்றால் இன்னும் கொஞ்சநாள் வாழ ஆசைப்படுகிறேன். மரணத்தை வெறுக்கிறேன் என்று பொருள்.
மூன்றாவதாக... ஒளுவில்லாமல் இபாதத் செய்கிறேன் என்றால்... " "ஸல்லி" என்ற வார்த்தை தொழுகையையும் நபிகளார் பேரில் சலவாத் சொல்வதையும் குறிக்கும். ஒழு இல்லாமல் நபிகளார் பேரில் சலவாத் சொல்வதைத்தான் அவர் அப்படி சொல்லி இருக்கிறார்.
கடைசியாக... அல்லாஹ்விடம் இல்லாதது என்னிடம் இருக்கிறது என்று அவர் சொன்னது... அல்லாஹ் தனித்தவன். இணைதுணை இல்லாதவன். நான் அப்படியல்ல... எனக்கு மனைவி மக்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி இருக்கிறார். அதனால் அவர் சொன்னது எதுவும் தவறில்லை " என்று விளக்கம் கொடுத்தார்கள் செய்யிதினா அலீ ( ரலி ) அவர்கள்.
அலீ அவர்களின் விளக்கத்தைக் கெட்ட கலீபா உமர் அவர்கள் ,
" அலீயே .. உங்கள் அறிவு ஞானம் இல்லையேல் இந்த உமர் சிறுமை பட்டிருப்பார் " என்று கூறி ஆரத்தழுவிக் கொண்டார்கள்.
காஜா முஹைதீன் பாகவி அவர்களின் உரையிலிருந்து நாம் பெற்ற ஞானச் சாறு !
#யாம்_பெற்ற_இன்பம்_பெறுக_இவ்வையகம்!

அபு ஹ்ஷீமா வாவர்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails