Monday, May 1, 2017

உழைப்பைக் கற்றுக் கொடுத்த உத்தம நபி :

நபிகளாரின் சமூகத்தில் அன்ஸாரி ஸஹாபி ஒருவர் தன் தேவையைக் கூறி உதவி தேடினார். தங்களிடம் ஒன்றுமே இல்லையா? என நபியவர்கள் வினவ, முரட்டுக் கம்பளி போர்வையும், ஒரு கோப்பையும் எனது வீட்டில் இருக்கிறது எனக் கூறினார். பாதியை விரித்தும், பாதியைப் போர்த்தியும் கொள்வேன். பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பேன் என்றார். அதைக் கொண்டு வருமாறு நபியவர்கள் கூற, அதை அவர் கொண்டு வந்தார்.
அவ்விரு பொருட்களையும் நபியவர்கள் ஏலம்விட, ஒரு திர்ஹத்திற்கு அதை வாங்கிக்கொள்ள ஒரு ஸஹாபி முன்வந்தார். அதைவிட அதிகமாக வாங்குபவர் உண்டா? என நபியவர்கள் மூன்று முறை கூற, இரண்டு திர்ஹங்களுக்கு வாங்கிக் கொள்கிறேன் எனக் கூறி மற்றொரு ஸஹாபி அதை வாங்கிக் கொண்டார்.
பின்பு அந்த அன்ஸாரி தோழரை அழைத்து இதில் ஒரு திர்ஹத்திற்கு வீட்டிற்கு தேவைப்படும் உணவுப் பொருளையும், மற்றொரு திர்ஹத்திற்கு ஒரு கோடாரியும் வாங்கி என்னிடம் கொண்டு வாருங்கள் எனக் கூறி, அவ்விரு திர்ஹங்களையும் அந்த ஸஹாபியிடம் நபியவர்கள் ஒப்படைத்தார்கள். அவர் அவ்வாறே செய்தார். நபியவர்கள் தங்களின் முபாரக்கான கரத்தால் அந்தக் கோடாரிக்கு கணை போட்டு அவரிடம் அதைக் கொடுத்து, இதை எடுத்துச் சென்று விறகு வெட்டி சம்பாதியுங்கள்; பதினைந்து நாட்களுக்குப்பின் இங்கு வாருங்கள். அதற்கு முன்பு வர வேண்டாம் எனக் கூறியனுப்பினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

சில நாட்களில் அவர் பத்து திர்ஹங்களை சம்பாதித்தார். அதில் அவருக்குத் தேவைப்படும் துணிகளையும், வீட்டிற்குத் தேவையான தானியங்கள் மற்ற பொருட்களையும் வாங்கியிருந்தார். இந்நிலையில் அவரைக் கண்ட நபியவர்கள், நீர் பிறரிடம் தேவையாகி அருவறுப்பான அடையாளங்களோடு மறுமையில் வருவதைவிட தற்போது நீர் இருக்கும் நிலை எவ்வளவு அழகானது எனப்பாராட்டி னார்கள். உழைப்பால் உயர்வும், யாசகத்தால் இம்மை – மறுமையில் இழிவும் ஏற்படும் என்பதை நபியவர்கள் தெளிவாக சுட்டிக் காட்டினார்கள்.

தக்கலை கவுஸ் முஹம்மத்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails