Sunday, March 7, 2010

தமிழில் இல்லாத எழுத்துக்கள்


அன்புடன் புகாரி
கேள்வி:
மொழி என்பது ஓசைகளை உள்ளடக்கியது. ஓசைகளே எழுத்துக்களாகின்றன. இப்படி இருக்கையில், சில ஓசைகளுக்கான எழுத்து வடிவங்கள் நமது மொழியில் ஏதோ ஒரு காரணத்திற்காய் இல்லாமல் ஆகிறது எனில், அதை நிரப்புவது தானே முறை? ஜா, ஷா போன்றவை அப்படிபட்ட எழுத்துக்கள் தானே. இவற்றை உபயோகிப்பதில் என்ன தவறு? ழ நமது மொழிக்கே உள்ள ஓர் எழுத்து என்பதில் பெருமை படும் அதே நேரத்தில நமது மொழியில் இல்லாத எழுத்துக்கள் குறித்து கவலையும் பட வேண்டும் இல்லையா... z போன்ற இன்னும் எழுத்து இல்லாத சில ஓசைகளுக்கு எழுத்தை உருவாக்குவது நல்லது. இது எனது கருத்து மட்டுமே. இதன் மறுபக்கம் எனக்கு தெரியாது. இது குறித்த உங்களது பார்வையை எதிர்பார்க்கிறேன்.

என் பதில்:
அருமையான கேள்வி. எனக்கும் பலகாலமாய் இந்தக் கேள்வி உண்டு. இந்தக் கேள்வி அந்தக் காலத்திலேயே எழுந்ததால்தான் கிரந்த எழுத்துக்களான ஹ ஷ ஸ ஜ ஸ்ரீ க்ஷ ஆகியவற்றைத் தமிழுக்குள் இழுத்துவந்தார்கள்.

ஆனால் என்னிடம் வேறு ஒரு கேள்வி உண்டு. நீங்களே கூறி இருக்கிறீர்கள். தமிழின் தனி எழுத்து ழ என்பதை. இந்த ழ வை எப்படி ஆங்கிலத்தில் எழுதுவீர்கள்?

ஆங்கிலத்துக்கு ஒரு புது எழுத்து தேவையில்லையா?

நான் சவூதி அரேபியாவில் வாழ்ந்த காலங்களில் கொஞ்சம் அரபு மொழிப் பரிச்சயம் ஏற்பட்டது. கொஞ்சம் எழுதவும் வாசிக்கவும் பயின்றேன். அதிலுள்ள சில எழுத்துக்களை ஆங்கிலத்தில் எழுதவே முடியாது.

கத்தான் என்ற ஓர் ஊர் உண்டு. அதை ஆங்கிலத்தில் Qatan என்று எழுதுவார்கள். ஆனால் அராபியர்கள் உச்சரிப்பது முற்றிலும் வேறு மாதிரி இருக்கும். அதற்கொரு எழுத்து ஆங்கிலத்தில் வேண்டாமா? இதெல்லாம் இல்லாமல் உலக மொழி அங்கீகாரம் எப்படி ஒரு மொழிக்கு வருகிறது?

முஅஅல்லம் என்று ஒரு பெயர் அரபியில் வரும். அதை ஆங்கிலத்தில் Mu'allam என்று மேலே ஒரு குறியிட்டு எழுதுவார்கள். அராபியர்கள் சொல்லித்தந்தபின்தான் அதன் உச்சரிப்பு நமக்குத் தெரியும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான்.

எப்படிப்பார்த்தாலும், அராபியர்கள் அரபியை உச்சரிப்பதுபோல் நம்மால் உச்சரிக்கமுடியாது.

சைனாக்காரர்கள் பேசக் கேட்டிருக்கிறீர்களா? பல எழுத்துக்களை உங்களால் பிடிக்கவே முடியாது. தமிழில் புதிய எழுத்துக்களைக் கொண்டு வர விரும்பும்போது எந்த மொழியிலிருந்து உள்ள சொல்லை உச்சரிக்க நாம் கொண்டுவரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

இந்தியில் ழ என்ற எழுத்து இருக்கிறதா?

பிரஞ்ச் மொழி வாசகங்களைப் பார்த்திருக்கிறீர்களா? எல்லாம் தெரிந்த எழுத்துக்கள் போலவே இருக்கும். ஏனெனில் பெரும்பாலானவை ஆங்கில எழுத்துக்கள். ஆனால் நாம் உச்சரித்தால் அப்படியே தப்பாய்ப்போய் முடியும். பிரஞ்சுக் காரர்கள் அல்லது பிரஞ்சு அறிந்தவர்கள்தாம் நமக்குச் சரியானதைச் சொல்லித்தரமுடியும்.

சரி எழுத்துக்களை விடுங்கள். மனிதர்கள் எத்தனை வித்தியாசமாய் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு ஒரு ஆங்கிலப் பெண் தமிழ்ப்பெண் சைனா பெண் ஆப்பிரிக்கப் பெண் ஆகிய நால்வரையும் எடுத்துக்கொள்ளுங்கள்.

அவரவர் அவரவர் நிலையில் அழகல்லவா? இவள் அழகு இவள் அழகில்லை என்று சொல்லமுடியுமா? ஆனால் அவர்களுக்குள் எத்தனை வித்தியாசங்கள். அந்த வித்தியாசங்கள்தானே அவர்களைத் தனித்தனியாய் அடையாளம் காட்டுகின்றன.

வெள்ளைக்காரி சற்று உயரமாக இருப்பாள். கால்கள் வலுவாக அழகாக இருக்கும். எனவே அவள் கால்களை வெளிக்காட்டியே உடை உடுத்துவாள். மார்புப்பகுதி பெரும்பாலும் பாலைவனமாய்க் கிடக்கும். முடி சொல்லவே வேண்டாம். கருப்பாய் இருக்காது, குறைவாயும் இருக்கும்.

தமிழ்ப்பெண் சுமாரான உயரமாய் இருப்பாள். கால்கள் நோஞ்சானாய் இருக்கும். ஆனால் இடையும் இடை சுமக்கமுடியாத அழகுமாய் இருப்பாள். கண்கள் பெரியதாய் பேசும் விழிகளாய் இருக்கும். நிறைய கூந்தலோடு கவர்ச்சியாய் இருப்பாள்

சைனாபெண் குள்ளமாக இருப்பாள். பெரும்பாலும் சப்பை மூக்கு. சின்னச் சின்னப் பொருள்களாய்ப் பார்த்துப் பார்த்து தேடி கண்ணாடிப் பெட்டிக்குள் அலங்கரித்து வைத்திருப்பார்கள் பார்த்திருப்பீர்கள். அப்படி ஓர் அழகில் இருப்பாள்.

ஆப்பிரிக்கப்பெண் கறுப்பு. வாட்டசாட்டமான உருவம் அதில் மிகையான பின்புறம். சீப்புக்குச் சிக்காத சுருள் கூந்தல். நல்ல உயரம்.

ஆனால் பாருங்கள் எல்லாப் பெண்களுமே அழகு. இப்படித்தானே ஒவ்வொரு மொழியும் அழகு. எந்த மொழி அழகில்லாதது? சொல்லுங்களேன் பார்க்கலாம்.

தாய்ப்பாலோடு, தாய்மண் வாசனையோடு, மூதாதையர் மரபணுக்களோடு எந்த மொழி மூச்சின் உட்செல்கிறதோ அந்த மொழிதான் அவனவனுக்கு உயிர். இதனால் அடுத்த மொழிகளெல்லாம் அழகல்ல என்று பொருளல்ல.

எனக்குத் தமிழ்த்தாய்தான் மிக மிக இனிப்பானவள். அவள் மடியில்படுத்து பொன்னூஞ்சலாடுவதில்தான் என் ஆன்மாவுக்கு நிறைவு. அடடா தமிழ்த்தாய் எத்தனை அழகு என்று நான் நாளெல்லாம் அதிசயிக்கிறேன்!

சரி மீண்டும் உங்கள் கேள்வியின் மையப்பகுதிக்கு வருவோம்.

முகம் மாசம் சனி சக்கரம் என்றெல்லாம் எழுதுகிறோம். இதில் முகம் என்ற சொல்லில் க வுக்கு என்ன உச்சரிப்பு தருகிறீர்கள்? க என்றா ஹ என்றா? மாசம் என்ற சொல்லில் ச வுக்கு என்ன உச்சரிபு sa வா cha வா? சனி என்பதன் ச வும் சக்கரம் என்பதின் ச வும் உச்சரிப்பில் ஒன்றா?

இது தமிழில் மட்டுமல்ல அனைத்து மொழிகளிலும் உண்டு.

Cut Put இதில் u வுக்கு என்ன ஓசை? இரண்டிலும் ஒன்றா?

Sun Son எப்படி வித்தியாசப்படுத்துகிறீர்கள்?

hire, here, hear, heir, hair நுனுக்கமாக எப்படி உச்சரிக்கிறீர்கள்?

Station இதில் ti க்கு என்ன உச்சரிப்பு? ஏன்?

இன்னும் எனக்கு ஓர் ஒரு லட்சம் கேள்விகளும் சொச்சமும் உண்டு.

நன்றி:http://anbudanbuhari.blogspot.com

Saturday, March 6, 2010

இறையில்லங்களைப் பாழாக்குவோர்


'இன்னும் அல்லாஹ்வுடைய பள்ளிவாசல்களில் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லித் துதிப்பதைத் தடுத்து அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரிய கொடுமைக்காரன் யார் இருக்க முடியும்? இத்தகையோர் அச்சமுடனின்றி பள்ளிவாயில்களில் நுழைவதற்கு தகுதியே இல்லாதவர்கள். இவர்களுக்கு இவ்வுலக வாழ்விலும் இழிவு உண்டு. மறுமையிலும் இவர்களுக்குக் கடுமையான வேதனையுண்டு.' (அல்குர்ஆன் 2:114)
    சராசரி அறிவு படைத்தவருக்கும் புரியும் வகையில் இவ்வசனம் அமைந்துள்ளது. மேலதிகமாக விரிவுரையோ விளக்கமோ தேவையில்லாத அளவுக்கு மிகவும் தெளிவாக அமைந்துள்ளது இவ்வசனம். ஆயினும் இவ்வசனம் தமிழக முஸ்லிம்களால் புரிந்து கொள்ளப்படவில்லை. எனவே இவ்வசனத்திற்குக் கூட விளக்கம் தரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    ஏழாண்டுக் காலம் மதரஸாக்களில் படித்த மவ்லவிகளில் பலர் மார்க்கத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைப் பற்றித் தாங்களே பறைசாற்றிக் கொள்வோர் தமிழகத்துப் பள்ளிகள் தோறும் 'நான்கு மத்ஹபைப் பின்பற்றாதவர்கள் பள்ளியில் தொழவோ, தொழ வைக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்' என்று அறிவிப்புப் பலகையைத் தொங்கவிட்டு தீன்(?) பணி செய்து வருகின்றனர்.
    அல்லாஹ்வுடைய தெளிவான இந்த ஒரு வசனத்தைக் கூட புரிந்து கொள்ளாதவர்கள் மார்க்க அறிஞர்களாம்! புரிந்தாலும் இறைவனைப் பற்றிச் சிறிதும் அச்சமின்றி அவனது பள்ளியைப் பாழாக்குவோர் மார்க்கத்தின் காவலர்களாம்!
    மனிதர்கள் செய்யும் கொடுமைகளில் மிகப் பெரும் கொடுமை அல்லாஹ்வுக்குச் சொந்தமான இல்லத்தில் அவனைத் துதிப்பதற்குத் தடை விதிப்பதாகும்.
    அல்லாஹ்வின் பள்ளிவாசலில் எவருக்கும் கூடுதலான உரிமை கிடையாது. எந்த நாட்டைச் சேர்ந்தவனும் அதில் தொழலாம். இறைவனைத் துதிக்கலாம். எந்த மொழி பேசுபவனும் தொழலாம். துதிக்கலாம். உலகம் முழுவதும் இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகின்றது. தமிழகத்தில் மட்டும் தான் அல்லாஹ்வின் பள்ளியில் தொழுவதற்குத் தடை விதிக்கப்படும் கொடுமை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
    மக்களைத் தொழுகைக்கு அழைக்கும் பணியைச் செய்து வரும் தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபட்டுள்ள தமிழகத்து மவ்லவிகளும் இந்தக் கொடுமைக்குத் துணை போகின்ற காட்சியையும் பார்க்கின்றோம்.
    இத்தகைய கொடுமைக்காரர்களுக்கு இந்த வசனம் கடுமையான எச்சரிக்கை விடுகின்றது! ஒரு எச்சரிக்கை அல்ல! நான்கு எச்சரிக்கைகள்!
    1. உலகிலேயே மிகவும் கொடுமைக்காரர்களாக அவர்கள் இறைவனால் கருதப்படுவார்கள்.
    2. இப்படித் தடுப்பவர்கள் பள்ளிக்குப் பயந்து பயந்து செல்லும் நிலை உருவாகும்.
    3. இந்த உலகத்திலேயே இழிவை அவர்கள் அடைவார்கள்.
    4. மறுமையில் கடுமையான வேதனையைச் சந்திப்பார்கள்.
    மறுமையின் மீது நம்பிக்கை உள்ளவர்களுக்கும், இறைவனைப் பற்றி அச்சம் உள்ளவர்களுக்கும், இந்த எச்சரிக்கை மிகப் பெரிய விஷயமாகும்.
    தொழுகையாளியைத் தடுப்பவர்கள் அல்லாஹ்வுக்குச் சொந்தமான அவனது இல்லத்தை தங்கள் சொந்த உடைமை போன்று கருதுவதால் அவர்களுக்கு எதிராக இறைவனே போர்ப் பிரகடனம் செய்கிறான். மற்றோர் இடத்தில் இதைத் தெளிவாக இறைவன் அறிவிக்கிறான். அதுவும் இறைவன் அருளிய முதலாவது அத்தியாயத்திலேயே இவ்வாறு பிரகடனம் செய்கிறான்.
    'தொழுது கொண்டிருக்கும் ஒரு அடியாரைத் தடுப்பவனைப் பார்த்தீரா? அவர் நேர்வழியில் இருந்து கொண்டும் இறையச்சத்தை ஏவியவாறு இருந்தும் அவரைப் பொய்யாக்கிப் புறக்கணிக்கின்றான் என்பதை பார்த்தீரா? அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பதை அறியவில்லையா? அவ்வாறல்ல. அவன் (இதிலிருந்து) விலகிக் கொள்ளவில்லையானால் அவனது தலைமயிரைப் பிடித்து நாம் இழுப்போம். தவறிழைத்துப் பொய்யுரைக்கும் (அவனது) தலைமயிரை(ப் பிடித்து) இழுப்போம். ஆகவே அவன் தனது சபையோரை அழைக்கட்டும், நாமும் நரகக் காவலர்களை அழைப்போம்.' (அல் குர்ஆன் 96: 9-18)
    பள்ளிவாசலில் இறைவனைத் தொழுவதற்குத் தடை விதிக்கும் கொடுமைக்காரர்களுக்கு எவ்வளவு கடுமையான எச்சரிக்கை இது!
நீ உன் சபையினரை - உனது ரவுடிப் பட்டாளத்தை உனக்குத் தலையாட்டும் மூடர் கூட்டத்தை அழைத்து வா! நானும் எனது நரகக் காவலாளிகளை அழைக்கிறேன் என்ற எச்சரிக்கையையும் கூடப் பொருட்படுத்தாத கொடுமைக்காரர்கள் இவர்கள்.
    தொழுபனுக்கு தடை விதிக்கின்றார்களே! தடுக்கப்பட்டவன் குடிக்கிறான் என்பதற்காகவா? சாராயக் கடை ஏலம் எடுத்திருக்கிறான் என்பதற்காகவா? சினிமாக் கொட்டகை நடத்துகிறான் என்பதற்காகவா? வட்டிக் கடை வைத்திருக்கிறான் என்பதற்காகவா? ஊர்ப்பணத்தைச் சுரண்டி வாழ்கிறான் என்பதற்காகவா? பள்ளிவாசல் சொத்துக்களை தன் பெயருக்குப் பட்டா போட்டுக் கொண்டான் என்பதற்காகவா? நிச்சயமாக இல்லை.
    யாரைத் தடுக்கிறார்கள்? இந்தக் கொடுமைகளை எதிர்த்துக் குரல் கொடுப்பவனை - வரதட்சணை கூடாது என்பவனை - வீண் விரயமும், ஆடம்பரமும் கூடாது என்று கூறுபவனை - குர்ஆன் போதனைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்பவனை - இறைவனைத் தவிர எவருக்கும் அஞ்சக் கூடாது என்பவனைத் தடுக்கிறார்கள்.
    இப்போது மேலே உள்ள வசனத்தை மீண்டும் ஒரு முறை படியுங்கள்! இன்றைய சூழ்நிலைக்காக இறங்கியது போல் தோன்றவில்லையா?
    'பள்ளிகள் யாவும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. எனவே அல்லாஹ்வுடன் வேறு எவரையும் அழைக்காதீர்கள்' (அல் குர்ஆன் 72:18)
    அல்லாஹ்வுக்குச் சொந்தமான பள்ளிகளில் இறைவனல்லாத பெரியார்களுக்கு மவ்லூது ஓதி அவர்கள் அழைக்கப்படுகின்றனர். இந்த வசனத்தின் கட்டளை அப்பட்டமாக மீறப்படுகின்றது. இவர்களுக்கு எந்தத் தடையும் இல்லை.
    'நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள் பள்ளிக்கு வரக்கூடாது' என்று எழுதி வைக்கும் மூடர்கள், அவர்களே எந்த மத்ஹபையும் பின்பற்றவில்லை. நான்கு மத்ஹபுகளில் எந்த மத்ஹபும் பள்ளிக்குத் தொழ வருபவர்களைத் தடுக்குமாறு கூறவில்லை. தடுக்கக் கூடாது என்றே நான்கு மத்ஹபுகளும் கூறுகின்றன.
    இவ்வாறு எழுதி வைத்ததன் மூலம் நான்கு மத்ஹபுகளையும் ஒரு சேரப் புறக்கணித்தவர்கள் இவர்கள். இந்தத் தடை முதன் முதலாகத் தடுப்பவர்களையே கட்டுப்படுத்தும். ஏனென்றால் நான்கு மத்ஹபுகளுக்கும் மாற்றமாக தொழுபவர்களைத் தடுக்கின்றனர்.
    இவ்வாறு எழுதி வைக்கிறோமே! நாம் வக்காலத்து வாங்கும் மத்ஹபுகளில் இதற்கு அனுமதி உண்டா? என்ற ஞானமும் அற்ற ஞான சூன்யங்கள் இவர்கள். நான்கு இமாம்களில் எந்த இமாமாவது இவ்வாறு கூறியதாக அவர்களால் காட்ட முடியாது. மத்ஹபைப் பின்பற்றுவதும் இவர்களின் நோக்கமல்ல என்பதற்கு இதை விட சான்று தேவையில்லை.
    கத்தம், பாத்தியா, தாயத்து, தட்டு என்று மக்களைச் சுரண்டிப் பிழைப்பதற்கு ஆபத்து என்பதனால் தான் இந்தக் கூப்பாடு! நேரடியாக இதைக் கூறமுடியாதவர்கள் மத்ஹபின் காவலர்கள் என்ற போர்வையைப் போர்த்திக் கொள்கிறார்கள். அவ்வளவு தான்!
    உண்மையில் மத்ஹபைப் பின்பற்றுவது இவர்களின் நோக்கமென்றால், மத்ஹபைக் காப்பது இவர்களின் இலட்சியம் என்றால் மத்ஹபின் தீர்ப்புக்கு எதிராக இவ்வாறு எழுதி வைக்கத் துணிந்தது ஏன்? சமுதாயம் சிந்திக்க வேண்டும்.
    தமிழகத்தின் தாய்க்கல்லூரி என்று இந்த மவ்லவிகள் மதிக்கின்ற பாக்கியாத் அரபிக் கல்லூரியின் பத்வாவை - தமிழக ஜமாஅதுல் உலமா சபைத் தலைவராகவும் செயலாளராகவும் பணிபுரிந்த கலீலுர் ரஹ்மான் ரியாஜி அவர்கள் தமது 'ரஹ்மத்' ஜூன் 88 மாத இதழில் வெளியிட்ட ஒரு பத்வாவை - அப்படியே இவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
    வேலூர் அஃலா ஹஜரத் அவர்களின் ஃபத்வா
    சவால்: ஒருவர் தன்னை அஹ்லே ஹதீஸ் என்று கூறிக் கொள்கிறார். நான்கு மத்ஹபுகளில் எதனையும் தக்லீத் செய்வதில்லை. ஆனால் அப்துல் வஹ்ஹாப் நஜ்தியைப் பின்பற்றுபவர் என்றோ வஹ்ஹாபி என்றோ அவரை யாரும் கூறினால் அதிருப்திப்படுகிறார். எனவே இவரை காபிர் என்பதா? முஸ்லிம் என்பதா? அவர் ஹனஃபிகளின் நிர்வாகத்திலிருக்கும் மஸ்ஜிதில் வந்து தொழுக விரும்புகிறார். ஹனஃபி இமாமைப் பின் தொடர்ந்து தொழுவதிலும் அவருக்கு விருப்பமே. ஆனால் ஆமின் இரைந்து கூறுகிறார். ரஃப்வுல்யதைன் (தொழுகையில் கைகளை உயர்த்துதல்) செய்கிறார். ஹனபிகள் அவர் மஸ்ஜிதிற்கு வந்து பின் தொடர்ந்து தொழுவதை ஆட்சேபிக்கிறார்கள். எனவே அவர் மஸ்ஜிதிற்கு வந்து தொழுவதைத் தடுப்பது கூடுமா? கூடாதா? அவர் இரைந்து ஆமீன் கூறுவதால் ஹனபி இமாமின் தொழுகை அல்லது ஜமாஅத் ஃபஸாதாகி விடுமா? அல்லவா?
    ஜவாப்:அக்கீதா கிதாபுகளில் எழுதப் பட்டிருப்பது போல் தீனின் முக்கிய அம்சங்களை நம்பியிருப்பவர் முஸ்லிம் ஆவார். சுன்னத் வல்ஜமாஅத் கொள்கையின் படி நம்பிக்கை கொண்டிருப்பவர் ஸன்னி முஸ்லிம் ஆவார். நான்கு மத்ஹபுகளில் ஒன்றை பின்பற்றியிருப்பவர் முஸ்லிமும் சுன்னத் வல்ஜமாஅத்தைச் சேர்ந்தவருமாவார். தீனின் முக்கிய அம்சங்களை நம்புவதுடன் சுன்னத்து வல்ஜமாஅத்தின் கொள்கைகளையும் நம்பியிருக்கும் ஒருவர் நான்கு மத்ஹபுகளில் ஒன்றைப் பின்பற்றாதவராயிருப்பின் அவரும் சுன்னத் வல்ஜமாஅத்தில் சேர்ந்தவராக கருதப்படுகிறார். ஆயினும் அவர் முஸ்லிமாகவும் அஹ்லே கிப்லாவாகவும் இருப்பதால் அவர் மஸ்ஜிதிற்கு வருவதையும் சுன்னத்து ஜமாஅத்தினரைப் பின் தொடர்ந்து தொழுவதையும் தடுப்பது ஜாயிஸாயில்லை. இத்தகையோர்களை எழுபத்தி இரண்டு பிரிவோரில் எவருமே பின் தொடர்வதால் இமாம் முக்கதியின் தொழுகை முறிந்து விடுவதில்லை. வல்லாஹு அஃலமு பிஸ்ஸவாப்.
எழுதியவர்: அப்துல் வஹ்ஹாப் கானல்லா ஹுலஹு
    இந்த ஃபத்வா மத்ஹபை நம்பியவர்கள் வழங்கிய - தமிழகத்தின் தாய்க்கல்லூரி என இவர்களே போற்றுகின்ற பாக்கியாத் வழங்கிய - ஃபத்வாவாகும். இதைக் கூட இன்றைய மவ்லவிமார்கள் புறக்கணிக்கிறார்கள் என்றால் சமுதாயம் இவர்களை இனம் கண்டு கொள்ள வேண்டும்.
    தங்களின் புரோகிதத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காக இந்த மவ்லவிமார்கள் தவறான வழிகாட்டும் போதும், தொழுகையாளிகளைத் தடுக்குமாறு தூண்டும் போதும் அவர்களுக்கு ஆதரவாகவும் உறுதுணையாகவும் நிற்கின்ற நிர்வாகிகளும் ஜமாஅத்தார்களும் இறைவனது இந்த எச்சரிக்கை;கு உரியவர்கள் தாம். இவர்களின் துணையின்றி மவ்லவிமார்கள் இத்தகைய அக்கிரமத்தை அரங்கேற்ற முடியாது என்பதால் முதல் குற்றவாளிகளே இவர்கள் தாம்.
    சவூதி அரேபியா போன்ற நாடுகளில் எந்த மத்ஹபையும் பின்பற்றுவதில்லை. அவர்களின் நிர்வாகத்தின் கீழ்தான் கஃபா ஆலயம் உள்ளது. சவூதி அரசாங்கம் 'மத்ஹப்வாதிகள் கஃபாவுக்கு வரக்கூடாது, ஹஜ் செய்ய அவர்களுக்கு அனுமதி இல்லை' என்று உத்தரவு போடுவதாக வைத்துக் கொள்வோம். அப்போது இந்த மவ்லவிமார்கள் என்ன செய்வார்கள். 96:9, 2:114 ஆகிய வசனங்களை மேற்கோள் காட்டி சவூதி ஆட்சியாளரை நார்நாராகக் கிழித்திருப்பார்கள். இப்போது மட்டும் இந்த இருவசனங்களும் இவர்களுக்கு நினைவுக்கு வரும். அவர்களே இந்த அக்கிரமத்தை அரங்கேற்றும் போது மட்டும் இந்த வசனங்களை மறந்து விடுகின்றனர்.
    இறையச்சமுள்ள மவ்லவிகள் இந்த அக்கிரமத்தைச் செய்யமாட்டார்கள். இறையச்சமுள்ள மக்கள் இந்த அக்கிரமத்துக்குத் துணை போக மாட்டார்கள் என்று நம்புகிறோம்
இறையில்லங்களைப் பாழாக்குவோர்

நன்றி : http://www.islamiyadawa.com/thafsir/2_114.htm

Friday, March 5, 2010

தகிடு தத்தம்

Offerings
“கை ஒன்று கொடு”
“கால் என்ன விலை?”
“தொடை இருக்கா?”
“என்ன! கிட்னி கிடையாதா?”
இங்கு
கூறு போட்டு
கூவி விற்பதோ
உடற் கூறு !
மனித உறுப்புகள்
மலிவான விலையில்
மகத்தான விற்பனை !
கண், காது, மூக்கு
கண்ட துண்டமாய்
காசுக்கு கிடைக்கும்
காட்சிகள் இங்கு !
பள்ளியில் வழிபாடு விடுத்து
வெள்ளியில் எதற்கு வழிபாடு?
நிவாரணம் ..
நேர்ச்சை செய்தவருக்கு
கிடைக்குதோ இல்லையோ
நிதி சேருவதோ
தகடு சுத்தம் என
தகிடு தத்தம் செய்பவருக்கு !
இதற்கு வெள்ளி என்று
பெயர் வைத்தால்
வெள்ளிக்கு என்ன பெயர் வைப்பது?
தங்கம் என்றா?
மனுவை மனதால்
போட்டால் போதாதா?
உறுப்புகளை
உண்டியலில் போட்டால்தான்
உடன் பரிசீலனை என்று
உரைத்தது யாரோ?
தகிடு தத்தம் 
நன்றி : http://nagoori.wordpress.com

கோடை வெயிலுக்கு இதமளிக்கும் உணவுகள்!

வெப்பக்காலங்களில் உடலிலிருந்து அதிகபட்ச நீர் வியர்வை மூலமாக வெளியேறுவதால் பலருக்கு உடல் தளர்ந்து விடும் நிலை ஏற்படுவதுண்டு. வேண்டாத நோய்கள் உள்ளவர்களுக்கும் முதியோர்களுக்கும் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.  
உடலில் ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்சனைகளிலிருந்து பெரிய பிரச்சனைகள் வரை அனைத்துக்குமே அடிப்படையாக இருப்பது உணவு பழக்க வழக்கமே. சரியான காலங்களில் சரியான உணவுகளை உட்கொண்டோம்  எனில், தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுவதை எளிதில் சமாளிக்க முடியும்.
வெப்பக்காலங்களில் உட்கொள்வதற்குப் பொருத்தமானதும் உட்கொள்ளக் கூடாததுமான உணவு பொருட்களின் சிறு பட்டியல் கீழே. இதனை ஓரளவாவது பேணினால் வெப்பக்காலங்களில் நீரிழப்பினால் ஏற்படும் பலவித பிரச்சனைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். வெப்பக்காலங்களில்,
* உடலுக்குக் குளிர்ச்சி தரும் கீரைகள், நீர்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி, வாழைத்தண்டு சாறு குடிப்பது மிகவும் நல்லது. அது உடலிலுள்ள நீர் நன்கு பிரிய உதவுகிறது.

* மிகுந்த கார உணவுகளையும் எண்ணெயில் வதக்கிய உணவுப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. இவை சருமத்திற்குத் தொல்லை தரும். அதுமட்டுமின்றி அஜீரண கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

* வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்று வலி வரும். ஒரு கப் ஜவ்வரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்தால் நன்றாக வெந்துவிடும். பிறகு அதில் பால், சர்க்கரையோ உப்போ அல்லது மோரோ ஊற்றி கரைத்து குடிக்கலாம். வயிற்று வலி பறந்து போகும். உடலுக்கும் நல்லது.
* கோடைக் காலத்தில் நீராகாரம் காலையில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் இரவில் சாதத்தில் நீர் ஊற்றி வைத்தால் கோடை வெப்பத்திற்கு சாதம் கூழாக மாறிவிடும். இதற்கு இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது. அதனைக் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உடலைக் குளிர்விக்கும்.

* கோடைக் காலத்திற்கு ஏற்றது எளிய உணவுதான். அதிலும் சைவ உணவு அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும். கோடையில் அசைவ உணவுகளைச் சாப்பிட்டால் அது சூட்டைக் கிளப்பி விடும். அசைவ உணவுகளில் பாக்டீரியாக்கள் எளிதல் தோன்றி உணவுப் பொருளை விஷத்தன்மை கொண்டதாக மாற்றிவிடுவது உண்டு. இந்த உணவை உண்ணும்போது வாந்தி, மயக்கம் ஏற்படும். சிலருக்கு வயிற்றில் இரைச்சல் ஏற்படும். இதனால் கோடைக் காலங்களில் இம்மாதிரியான உணவு வகைகளை குறைத்துக் கொள்வது நல்லது.
நன்றி: திருப்பட்டினம் என்.ஜரினா பானு (தினமணி-05.06.2009)

சமாதி வழிபாடு

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை முஸ்லிம்களாகவே படைத்து முஸ்லிம்களாக வாழவைத்துள்ளான். நாம் இறக்கும்பொழுது ஒவ்வொருவரும் உண்மையான முஸ்லிம்களாகவே இறக்க வேண்டுமென்பது இறைவனுடைய கட்டளை.  அந்த கட்டளையை நிறைவேற்றுவதற்கு தவ்ஹீத் விஷயத்தை தெளிவாக சந்தேகமற அறிந்து கொவது அவசியமாகிறது.  தவ்ஹீத் என்பதை ஏகத்துவம் அல்லது ஓறிரைக் கொள்கை என்று கூறலாம்.

    ஓரிறைவன் என்று பொதுவாக சொல்லும்பொழுது உலகத்தில் இருக்கக்கூடிய எல்லா ஆஸ்திகர்களும் அதாவது எல்லா மதத்தவர்களும் இறைவன் ஒருவன் தான் என்பதனை ஒத்துக்கொள்வார்கள். ஒரே இறைவன்தான் உலகத்தில் இரண்டு இறைவன் இல்லை என்று யாருக்குமே மாற்று கருத்து இருக்காது. ஆனால் அந்த ஓரிறைக் கொள்கையில் எவ்வாறு மதவாதிகள் வேறுபடுகிறார்கள் என்று சொன்னால் இறைவனுக்கு அவதாரம் உண்டு என்ற அடிப்படையிலே ஒரு சாராரும் இறைவனுக்கு குமாரனுண்டு என்ற அடிப்படியிலே ஒரு சாராரும் இறைவனை நேரடியாக நாம் நெருங்க முடியாது அந்த இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை கடவுள்களை உருவாக்கிக் கொண்டு அவற்றை வணங்கி வருகிறார்கள்.

    ஆனால் முஸ்லிம்களை பொருத்த மட்டில் இது போன்ற நம்பிக்கைகள் கிடையாது. அவதார நம்பிக்கையோ அல்லது இறைவனுக்கு குமாரன் இருக்கிறான் என்ற நம்பிக்கையோ அல்லது இறைவனை நெருங்குவதற்கு குட்டி குட்டி தெய்வங்களை சிலைகளாக படங்களாகவோ படைத்து அவற்றை வைத்துத்தான் அந்த ஓர் இறைவனை நெருங்க முடியும் என்ற நம்பிக்கையும் முஸ்லிம்களிடம் இல்லை. ஆனால் ஓரே இறைவனை ஏற்றுக்கொண்டிருக்கிறோம் என்று சொல்லக்கூடிய முஸ்லிம்கள் மத்தியில் அந்த ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமாக எப்படிப்பட்ட சிந்தனைகள் எப்படிப்பட்ட கருத்தோட்டங்கள் இருக்கின்றன என்பதை முஸ்லிம்கள் அறிந்து கொள்வது அவசியமாக இருக்கின்றது. அதாவது சிலைகள் மீதோ அல்லது அவதாரங்கள் மீதோ நம்பிக்கை இல்லாத முஸ்லிமகள் இறந்துபோன பெரியார்களை அதாவது அவ்லியாக்களை இறைவனுடைய நல்லடியார்கள் என்ற அடிப்படையிலே இறைவனை அவர்கள் நெருங்கச் செய்வார்கள் இறைவனிடம் தங்களுக்காக சிபாரிசு செய்வார்கள், எனவே அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதும் அவர்களுக்குறிய சடங்குகள் செய்வதும் இஸ்லாத்தில் உள்ளவைதான் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடம் இருக்கிறது. அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய வேண்டிய வழிபாட்டை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு தர்ஹாக்களை கட்டி வைத்துக்கொண்டு சமாதி வழிபாடு செய்கின்றனர். ஆனால் அல்குர்ஆன் இறைவனுடய இறுதி வேதம் இதனை தெளிவாக மறுக்கிறது.

    தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், ''இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை" என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; ''வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்" என்று கூறும். அல்குர்ஆன் 10:18.

    அறிந்து கொள்வீராக! களங்கமற்ற மார்க்க (வழபாடு யாவு)ம் அல்லாஹ்வுக்கே உரியது இன்னும், அவனையன்றிப் பாதுகாப்பாளர்களை எடுத்துக் கொண்டிருப்பவர்கள், ''அவர்கள் எங்களை அல்லாஹ்வின் அருகே சமீபமாகக் கொண்டு செல்வார்கள் என்பதற்காகவே யன்றி நாங்கள் அவர்களi வணங்கவில்லை"" (என்கின்றனர்). அவர்கள் எதில் வேறுபட்டுக் கொண்டிருக்கிறார்களோ அதைப்பற்றி நிச்சயமாக அல்லாஹ் அவர்களுக்கிடையே தீர்ப்பளிப்பான்; பொய்யனாக நிராகரித்துக் கொண்டிருப்பவனை நிச்சயமாக அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான். அல்குர்ஆன் 39:3

    குர்ஆனில் அல்லாஹ் மிகத்தெளிவாக இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு சிபாரிசு செய்யக்கூடியவர்களாக தங்களை அல்லாஹ்வின்பால் நெருங்கக் செய்யக்கூடியவர்களாக யார் நம்புகிறார்களே அவர்களை அல்லாஹ் காஃபிர் எனக் கூறுகிறான். அதுமட்டுமல்ல

   நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களை(த் தம்) பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளலாம் என்று எண்ணுகிறார்களா? நிச்சயமாக இக்காஃபிர்கள் (விருந்துக்கு) இறங்குமிடமாக நரகத்தையே சித்தப்படுத்தி வைத்திருக்கின்றோம்.

    (தம்) செயல்களில் மிகப் பெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக.
    யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் தான். அல்குர்ஆன் 18:102-104

    நன்றாக நாம் புரிந்துகொள்ள வேண்டும் எந்த ஒரு கஷ்டத்திலும் பிரச்னையிலும் நாம் அல்லாஹ்விடம் தான் நாம் பிரார்த்தனை செய்ய வேண்டும் இறைவனும் அவனிடமே மட்டுமே உதவி தேடச் சொல்கிறான்.

    மேலும் நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம் அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம்; அன்றியும் (அவன்) பிடரி(யிலுள்ள உயிர்) நரம்பை விட நாம் அவனுக்கு சமீபமாகவே இருக்கின்றோம்.

    அவன்தான் தன் அடியார்களின் தவ்பாவை பாவ மன்னிப்புக் கோறுதலை ஏற்றுக் கொள்கிறான்; (அவர்களின்) குற்றங்களை மன்னிக்கிறான். இன்னும் நீங்கள் செய்வதை அவன் நன்கறிகிறான்.

    இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவென்றால் இறைவனுடைய அடியார்களை தங்களுக்கு இறைவனிடம் பரிந்துரை செய்யக்கூடியவர்களாக அல்லாஹ்விடம் நெருங்கச்செய்வார்கள் என்ற அடிப்படையில் இறந்து போனவர்களை அவ்லியாக்களாக எடுத்துக்கொண்டு அவர்களுக்கு சடங்கு சம்பிரதாயங்கள் செய்வது அவர்களுடைய அடக்கஸ்தலங்களுக்குச் சென்று எங்களுக்கு குழந்தை பேற்றைத் தாருங்கள், நோய்களை குணமாக்குங்கள் என்று வேண்டுவது அல்லது அவர்களை அல்லாஹ்விடம் எங்களுக்கு கேட்டுப் பெற்றுத்தாருங்கள் எங்களுக்காக முறையிடுங்கள் அல்லது அவர்களுடைய பொருட்டால் அல்லாஹ் எங்களுக்கு அதனை நிரைவேற்றித்தா என்று கேட்பது, கப்ருகளை சுற்றி வலம் வருவது, அங்குள்ள படிக்கட்டுகளை முத்தமிடுவது இன்னும் கூடு, கொடியேற்றம், சந்தனம் பூசுதல், மேளதாளமங்கள் இன்னும் ஏராளமான இணைவைப்பு காரியங்கள் செய்து வழிகேட்டின்பால் சென்று மன்னிக்கப்படாத பாவத்திற்கு ஆளாக நேரிடும் என்பதை நினைவில் கொள்வோமாகா!

நன்றி :http://www.readislam.net/index.shtml  சமாதி வழிபாடு 

Thursday, March 4, 2010

விதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்?

உலகம் முழுதும் ‘டோஸ்ட் மாஸ்டர்ஸ்’ இயக்கங்கள் வெற்றிநடை போட்டு வருகின்றன. ஆரம்பத்தில் இது ஏதோ சமையல்காரர்கள் ஒன்றிணைந்து நடத்தும் சங்கம் என்று தப்புக்கணக்கு போட்டு வைத்திருந்தேன். பிறகுதான் தெரிந்தது “Personality Development” “Leadership Quality” இவைகளை போதித்து பேச்சாற்றலை வளர்க்கும் மகத்தான இயக்கம் என்று.
மனித ஆற்றலை மேம்படுத்தும் விதத்திலும், இளைஞர்களுக்கு தூண்டுதல் அளிக்கும் விதத்திலும் தமிழில் நூல்கள் எழுதிய, விரல்விட்டு எண்ணக்கூடிய எழுத்தாளர்களுள் அறிஞர் எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம் அவர்கள் முதலிடத்தை வகிக்கிறார்.
ஆங்கிலத்தில் ‘யூ கேன் வின்’ (You can win) எழுதிய ஷிவ் கேரா, ‘தி ஒன் மினிட் மேனேஜர்’ (The One minute Manager), எழுதிய கென் ப்ளான்சார்ட், ‘தி மோன்க் ஹூ ஸோல்ட் ஹிஸ் பெர்ராரி’(The Monk who sold his Ferrari)  எழுதிய ராபின் எஸ்.ஷர்மா, ‘ஹூ மூவ்ட் மை சீஸ்?’ (Who moved my cheese?) மற்றும் ‘பீக்ஸ் அண்டு வேல்லீஸ்’ (Peaks and Valleys) எழுதிய ஸ்பென்சர் ஜான்ஸன், ‘தின்க் அண்டு குரோ ரிச்’ (Think & Grow Rich) எழுதிய நெப்போலியன் ஹில் – இவர்கள் என் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.
Master of All Subjects என்று தன்னைத்தானே பிரகடனப் படுத்திக்கொண்ட தமிழ் வாணன் பற்பல தன்முனைப்பு நூல்கள் எழுதியுள்ளார். அவையாவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நுனிப்புல் மேய்வது போல்தான் இருக்கும். 
பெரியார்தாசன் “Personality Development” என்ற பெயரில் பல இடங்களுக்கும் சென்று சொற்பொழிவாற்றுகிறார். பாராட்டப்பட வேண்டிய பணி. பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் பஹ்ரைனுக்கு தன் நண்பரைப் பார்ப்பதற்காக வந்தபோது, நாங்கள் எங்கள் சங்கத்தின் சார்பாக ஒரு சில வார்த்தைகள் வந்து பேசுமாறு அழைத்தபோது, அவர் ஏதோ காரணங்களால் முரண்டு பிடிக்க, அவர் மேலிருந்த மதிப்பும், மரியாதையும் குறையும் அளவுக்கு அவர் நடந்துக் கொண்ட விதம் அவர் தனது “Leadership Quality”-யிலிருந்து சறுக்கி விழுந்ததைக் காண்பித்தது.
நாகூர் ரூமி எழுதிய அடுத்தவிநாடி என்ற தன்முனைப்பைத்தூண்டும் நூல் 25,000 பிரதிகளுக்கு மேல் விற்றிருப்பதாக அவர் சான்று பகர்கிறார். இப்படிப்பட்ட நூல்களுக்கு எப்போதும் வாசகர்களிடையே பெருத்த வரவேற்பு இருப்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
சிறுவயதில் நாகூர் தர்காவிற்குள் இருந்த நஜீர்/ ஜானிபாய் புத்தகக்கடை எனக்கு புகலிடமாக இருந்தது. தர்காவிற்குள் நுழையும்போது செருப்புக்காலுடன் நுழையக்கூடாது. செருப்பைக் கழற்றி கையில் தூக்கிக்கொண்டு அதை வைக்கின்ற சாக்கில் மணிக்கணக்கில் இந்த கடைகளில் உட்கார்ந்து விடுவேன். வேறு எதற்கு? ஓசியில் புத்தகம் படிப்பதற்காகத்தான். அதில் பெரும்பான்மையான புத்தகங்கள் எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம் அவர்கள் எழுதிய புத்தகங்களாகவே இருக்கும். அவைகள் உறக்கிக் கிடக்கும் மனதை தட்டி எழுப்பக்கூடியவை.
எம்.ஆர்.எம்.எழுதிய வாழ்வியல் நூல்கள் :  ‘முன்னேறுவது எப்படி?’, ‘வாழ்க்கையில் வெற்றி’, ‘எண்ணமே வாழ்வு’, ‘கவலைப்படாதே’, ‘வாழ்வது ஒரு கலை’, ‘வாழ்வின் ஒளிப்பாதை’, ‘வாழ்வின் வழித்துணை’, ‘வாழ்வைத் துவங்கு’, ‘விடாமுயற்சி வெற்றிக்கு வழி’, ‘வியாபாரம் செய்வது எப்படி?’, ‘விளக்கேற்றும் விளக்கு’, ‘வழிகாட்டும் விளக்கு’, ‘வழுக்கலில் ஊன்றுகோல்’, ‘அன்புள்ள தம்பி’, ‘அன்பு வாழ்வோ அருள் வாழ்வோ’, ‘இல்லறம்’, ‘இளமையும் கடமையும்’, ‘உன்னை வெல்க’, ‘எண்ணமே வாழ்வு’, ‘ஒழுக்கம் பேணுவீர்’, ‘சுபீட்சமாய் வாழ்க’, ‘நினைவாற்றல் அறிவிற்கு ஓர் அணி’, ‘நெடுங்காலம் வாழ்க’,  ‘படியுங்கள் சுவையுங்கள்’, ‘மகனே கேள்’, ‘மனஒருமை வெற்றியின் ரகசியம்’, ‘மனத்தை வெல்லுவாய் மனிதனாகுவாய்’.
இவையாவும் சிந்தனையைத்தூண்டி நம்மை முன்னேற்றப் பாதையில் செலுத்துக்கூடிய நூல்கள். சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தற்கொலை முயற்சி செய்யப்போன ரங்கராஜன் என்ற வாலிபனை கண்ணதாசனின் “மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா” என்ற பாடல் மனதைத் தேற்றி, வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தி அவ்வாலிபனை கவிஞர் வாலியாக ஆக்கி அவன் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டு பண்ணியது நாமெல்லோரும் அறிந்ததே.
எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீமின் நூல்கள் எத்தனை ரங்கராஜனை மரணத்து வாயிலிருந்து மீட்டியதோ தெரியாது.
தன்முனைப்பைத் தூண்டும் பல நூல்கள் எழுதியிருக்கும் எம்.எஸ்.உதயமூர்த்திக்கு யாருடைய நூல்கள் உந்துதலாக இருந்திருக்கிறது என்பதை அவரே கூறுவதைக் கேளுங்கள்.
“எம்.ஆர்.எம்.அப்துற் றஹீமின் தன்முனைப்பைத் தூண்டும் நூல்களைப் படித்துத்தான், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது” என்று டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்,
1993-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் நாள் எம்.ஆர்.எம். அப்துற்றஹீம் அவர்கள் மறைந்தபோது
“தன்னம்பிக்கையூட்டிய
அந்த வாழ்க்கையில் வெற்றி
கவலைப்படாதே என்று சொல்லிவிட்டு
தாக்கங்களுக்கு அப்பால்
போய்விட்டதே”
என்று ஆளூர் ஜலால் இரங்கல் கவிதை பாடினார்.
எம்.ஆர்.எம். அப்துற் றஹீமின் மூதாதையர்களில் பலர் பாண்டியன் அரசவையில் அரசவைக் கவிஞர்களாக வீற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆமாம். விதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்?
நன்றி : http://nagoori.wordpress.com
எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம்

Wednesday, March 3, 2010

காதல் ஜனநாயகமானால்...- லோப முத்ரா




தலித்துகள் கல்வி கற்காதவரை
விழிக்காதவரை
உரிமை கேட்காதவரை
அடங்கிப் போகும் வரை
அந்த ஊரில்
"அமைதி" இருந்தது!!
பெண்கள் கல்விகற்காதவரை
விழிக்காத வரை
உரிமை கேட்காதவரை
அடங்கிப் போகும் வரை
அந்தக் குடும்பத்தில்
"நிம்மதி" இருந்தது!!
அந்த ‘அமைதி' ஒழிக!
அந்த ‘நிம்மதி' ஒழிக!
ஒருவர் "பொறை" இருவர் நட்பு
சரிதான்;
எப்போதும் "பொறை" யாருக்கு?

சமூகத்தின் ஒரு பகுதியை
முடமாக்கிவிட்டு
சமத்துவம் பேசுவது அர்த்தமற்றது
குடும்பத்தின் செம்பாதியை
ஊமையாக்கி விட்டு
ஜனநாயகம் என்பது
சாத்திய மற்றது.
‘குடும்ப தினம்' எதற்கு?
போற்றுவதற்கா
காப்பதற்கா?

போற்றுவதெனில் எதைப்
போற்ற விளைகிறாய்?
காப்பதெனில் எதைக்
காக்க விளைகிறாய்?
கணவன், குழந்தை
குடும்ப கவுரவம் இவற்றுக்காய்
உணர்ச்சிகளைக் கொன்று
தன்னைச் சிதைத்து
பிணமாய் வாழும்
பெண்மையைப் போற்றவோ!!

தன்னை இழந்து
தன்நாமம் கெட்டு
சம்சார சாஹரத்தில்
தீர்க்க சுமங்கலியாய்
என்றும் சுமைதாங்கியாய்
பெண்கள்
இருத்தலைக் காக்கவோ!!
சரி! சரி!

குடும்பம் என்பது யாது?
விதியே என வாய்த்ததுவோ!
பேய்க்கு வாழ்க்கைப்பட்டதால்
புளியமரம் ஏறுவதோ?
குடும்பம் என்பது யாது?
நாகரீக சமூகத்தின்
அடிப்படை அலகு.
இந்த அடித்தளம் தகர்ந்தால்
சகலமும் நொறுங்கும்
விலங்கினும் கீழாய்
வாழ்க்கை இழியும்.

குடும்பம் என்பது யாது?
முர்டோக் என்றோரு
மானிடவியலார் கூறுகிறார்:
"கூடி ஒரு இல்லத்தில் வாழ்ந்து
பொருளாதாரத்தில் ஒத்துழைத்து
வம்சவிருத்தியில் ஈடுபடும் குழு."
மேலும் விரிக்கிறார்:
"சமூகம் அங்கீகரித்த
சட்டம் வரையறுத்த
ஒத்த வயதுடைய
ஒருவனும் ஒருத்தியும்
பாலியல் உறவு கொண்டு
பிள்ளைகள் பெற்று
(அ) தத்தெடுத்து
வாழ்வதன்னியில்
உடலாலும்
உணர்வாலும்
பொருளாதாரத்தாலும்
ஒன்றி வாழ்வது."

குடும்பம் என்பது
தனிநபர்த் தேவையின்
விளைவு மட்டுமா?
அல்ல அல்ல.
சங்கிலிக் கண்ணிகள்
அறுந்திடாமல்
கூடிவாழும் சமூகப் பண்பாட்டின்
கூறுகளை
தலைமுறை தலைமுறையாக
கைமாற்றி கைமாற்றி
வளப்படுத்தி பலப்படுத்திட
கடமையும் பொறுப்பும் கொண்ட
அடித்தளமாகும்.

‘இன்பம் துய்க்கவும்'
‘இன்னல் எதிர்கொள்ளவும்'
கூடிவாழ வேர்கொள்வதுவே
குடும்பம் என்பதை
வரலாறு சொல்லும்.
சொத்தின் மீது
ஆசை வந்ததும்
சொந்தம் என்பதில்
மேல் கீழ் வந்தது
ஆணின் தலைமை
திணிக்கப்பட்டது.
ஆஸ்திக்கு ஆணென
அர்த்தம் புகுத்தப்பட்டது

பெண்ணின் நிலைமை
அடிமையானது
சிரிப்புக்குக் கூட
வரம்புகள் போடப்பட்டது
சமூக வேரில்
வெந்நீர் ஊற்றப்பட்டது
‘குடும்பம்' இங்கே
சுமையாய்ப் போனது.
‘கூட்டுக் குடும்பமோ'
‘தனிக் குடும்பமோ'
அததற்கு ஆயிரம் பிரச்சனைகள்!
"பெண்ணே சுமை தாங்கி"
இரண்டுக்கும் பொதுவானது.

விவசாய வாழ்க்கையில்
உழைப்பில் இருந்த பங்கையும்
பின் இழக்க நேர்ந்தது
போராட்டங்கள் ஊடாகவும்
பொருளாதாரத் தேடலாகவும்
உழைக்கும் வாய்ப்பு
பெண்களுக்கு பெறப்பட்டது
இன்று, வீடு வேலைத்தளம்
இரண்டு ‘ஷிப்டு'
பெண்ணின் இடுப்பொடிகிறது
கூட்டை உடைத்தெறி என
கேட்பதில் வியப்பில்லை

கட்டுத் தளைகளை வெட்டியெறிய
முட்டி மோதுவதில் தவறே
இல்லை
கூடு சிதைந்தால் நாடு சிதையும்
கூடு தகர்ந்தால் அராஜகம் ஓங்கும்
கூட்டைக் காப்பது எப்படி?
இனி அது
பெண்ணின் பொறுப்பு அல்ல
ஆணின் பொறுப்பு
‘வாழ்க்கைத் துணை' என
ஏனையோரை விஞ்சி
ஒரடி முன்வைத்த
வள்ளுவன்
கணக்கும் மாறியது
வாழ்க்கை ‘துணை' அல்ல
வாழ்க்கை ‘இணை' என்போம்.

சுகம், துக்கம்,
சுமை, சுதந்திரம்
எல்லாமே இருவருக்கும்
அடுக்களை முதல்
குழந்தை வளர்ப்பு வரை
எல்லாவற்றிலும்
‘புரிதலும், பகிர்தலும்'
குடும்ப ஜனநாயகத்தின்
அச்சாணி ஆகும்.
இனி தொடங்குவதையாவது
ஜனநாயகத்தில்
கால்பதித்து தொடங்கலாமே!

ஜனநாயகம்
அரசியலுக்கு மட்டுமல்ல
வாழ்வுக்கும் தான்.
காதலில் அதைத் துவங்கு
காதல் ஜனநாயகமானால்
குடும்ப ஜனநாயகம்
தானே பூக்கும்...
காதல் ஜனநாயகம்!
அதெப்படி?

ஈழப்பெண் கவிஞர்
நளாயினி தாமரைச் செல்வன்
கூறுகிறார்:
"காதல் என்றால்
என்னவென்று தெரியுமா?
உனக்கு
எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நீயும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பது தான்."
நீங்கள் தயாரா? 
நன்றி
- லோப முத்ரா
http://www.keetru.com/literature/poems/lopamuthra.php
நன்றி http://kayalmakizhnan.blogspot.com/

காதல் ஜனநாயகமானால்...- லோப முத்ரா

LinkWithin

Related Posts with Thumbnails