Thursday, March 4, 2010

விதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்?

உலகம் முழுதும் ‘டோஸ்ட் மாஸ்டர்ஸ்’ இயக்கங்கள் வெற்றிநடை போட்டு வருகின்றன. ஆரம்பத்தில் இது ஏதோ சமையல்காரர்கள் ஒன்றிணைந்து நடத்தும் சங்கம் என்று தப்புக்கணக்கு போட்டு வைத்திருந்தேன். பிறகுதான் தெரிந்தது “Personality Development” “Leadership Quality” இவைகளை போதித்து பேச்சாற்றலை வளர்க்கும் மகத்தான இயக்கம் என்று.
மனித ஆற்றலை மேம்படுத்தும் விதத்திலும், இளைஞர்களுக்கு தூண்டுதல் அளிக்கும் விதத்திலும் தமிழில் நூல்கள் எழுதிய, விரல்விட்டு எண்ணக்கூடிய எழுத்தாளர்களுள் அறிஞர் எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம் அவர்கள் முதலிடத்தை வகிக்கிறார்.
ஆங்கிலத்தில் ‘யூ கேன் வின்’ (You can win) எழுதிய ஷிவ் கேரா, ‘தி ஒன் மினிட் மேனேஜர்’ (The One minute Manager), எழுதிய கென் ப்ளான்சார்ட், ‘தி மோன்க் ஹூ ஸோல்ட் ஹிஸ் பெர்ராரி’(The Monk who sold his Ferrari)  எழுதிய ராபின் எஸ்.ஷர்மா, ‘ஹூ மூவ்ட் மை சீஸ்?’ (Who moved my cheese?) மற்றும் ‘பீக்ஸ் அண்டு வேல்லீஸ்’ (Peaks and Valleys) எழுதிய ஸ்பென்சர் ஜான்ஸன், ‘தின்க் அண்டு குரோ ரிச்’ (Think & Grow Rich) எழுதிய நெப்போலியன் ஹில் – இவர்கள் என் மனதில் நிலைத்து நிற்கிறார்கள்.
Master of All Subjects என்று தன்னைத்தானே பிரகடனப் படுத்திக்கொண்ட தமிழ் வாணன் பற்பல தன்முனைப்பு நூல்கள் எழுதியுள்ளார். அவையாவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நுனிப்புல் மேய்வது போல்தான் இருக்கும். 
பெரியார்தாசன் “Personality Development” என்ற பெயரில் பல இடங்களுக்கும் சென்று சொற்பொழிவாற்றுகிறார். பாராட்டப்பட வேண்டிய பணி. பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் பஹ்ரைனுக்கு தன் நண்பரைப் பார்ப்பதற்காக வந்தபோது, நாங்கள் எங்கள் சங்கத்தின் சார்பாக ஒரு சில வார்த்தைகள் வந்து பேசுமாறு அழைத்தபோது, அவர் ஏதோ காரணங்களால் முரண்டு பிடிக்க, அவர் மேலிருந்த மதிப்பும், மரியாதையும் குறையும் அளவுக்கு அவர் நடந்துக் கொண்ட விதம் அவர் தனது “Leadership Quality”-யிலிருந்து சறுக்கி விழுந்ததைக் காண்பித்தது.
நாகூர் ரூமி எழுதிய அடுத்தவிநாடி என்ற தன்முனைப்பைத்தூண்டும் நூல் 25,000 பிரதிகளுக்கு மேல் விற்றிருப்பதாக அவர் சான்று பகர்கிறார். இப்படிப்பட்ட நூல்களுக்கு எப்போதும் வாசகர்களிடையே பெருத்த வரவேற்பு இருப்பதை இது எடுத்துக் காட்டுகிறது.
சிறுவயதில் நாகூர் தர்காவிற்குள் இருந்த நஜீர்/ ஜானிபாய் புத்தகக்கடை எனக்கு புகலிடமாக இருந்தது. தர்காவிற்குள் நுழையும்போது செருப்புக்காலுடன் நுழையக்கூடாது. செருப்பைக் கழற்றி கையில் தூக்கிக்கொண்டு அதை வைக்கின்ற சாக்கில் மணிக்கணக்கில் இந்த கடைகளில் உட்கார்ந்து விடுவேன். வேறு எதற்கு? ஓசியில் புத்தகம் படிப்பதற்காகத்தான். அதில் பெரும்பான்மையான புத்தகங்கள் எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம் அவர்கள் எழுதிய புத்தகங்களாகவே இருக்கும். அவைகள் உறக்கிக் கிடக்கும் மனதை தட்டி எழுப்பக்கூடியவை.
எம்.ஆர்.எம்.எழுதிய வாழ்வியல் நூல்கள் :  ‘முன்னேறுவது எப்படி?’, ‘வாழ்க்கையில் வெற்றி’, ‘எண்ணமே வாழ்வு’, ‘கவலைப்படாதே’, ‘வாழ்வது ஒரு கலை’, ‘வாழ்வின் ஒளிப்பாதை’, ‘வாழ்வின் வழித்துணை’, ‘வாழ்வைத் துவங்கு’, ‘விடாமுயற்சி வெற்றிக்கு வழி’, ‘வியாபாரம் செய்வது எப்படி?’, ‘விளக்கேற்றும் விளக்கு’, ‘வழிகாட்டும் விளக்கு’, ‘வழுக்கலில் ஊன்றுகோல்’, ‘அன்புள்ள தம்பி’, ‘அன்பு வாழ்வோ அருள் வாழ்வோ’, ‘இல்லறம்’, ‘இளமையும் கடமையும்’, ‘உன்னை வெல்க’, ‘எண்ணமே வாழ்வு’, ‘ஒழுக்கம் பேணுவீர்’, ‘சுபீட்சமாய் வாழ்க’, ‘நினைவாற்றல் அறிவிற்கு ஓர் அணி’, ‘நெடுங்காலம் வாழ்க’,  ‘படியுங்கள் சுவையுங்கள்’, ‘மகனே கேள்’, ‘மனஒருமை வெற்றியின் ரகசியம்’, ‘மனத்தை வெல்லுவாய் மனிதனாகுவாய்’.
இவையாவும் சிந்தனையைத்தூண்டி நம்மை முன்னேற்றப் பாதையில் செலுத்துக்கூடிய நூல்கள். சினிமா வாய்ப்பு கிடைக்காமல் தற்கொலை முயற்சி செய்யப்போன ரங்கராஜன் என்ற வாலிபனை கண்ணதாசனின் “மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா” என்ற பாடல் மனதைத் தேற்றி, வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்தி அவ்வாலிபனை கவிஞர் வாலியாக ஆக்கி அவன் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டு பண்ணியது நாமெல்லோரும் அறிந்ததே.
எம்.ஆர்.எம்.அப்துர் ரஹீமின் நூல்கள் எத்தனை ரங்கராஜனை மரணத்து வாயிலிருந்து மீட்டியதோ தெரியாது.
தன்முனைப்பைத் தூண்டும் பல நூல்கள் எழுதியிருக்கும் எம்.எஸ்.உதயமூர்த்திக்கு யாருடைய நூல்கள் உந்துதலாக இருந்திருக்கிறது என்பதை அவரே கூறுவதைக் கேளுங்கள்.
“எம்.ஆர்.எம்.அப்துற் றஹீமின் தன்முனைப்பைத் தூண்டும் நூல்களைப் படித்துத்தான், வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற உந்துதல் எனக்கு ஏற்பட்டது” என்று டாக்டர் எம்.எஸ்.உதயமூர்த்தி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறார்,
1993-ஆம் ஆண்டு நவம்பர் 10-ஆம் நாள் எம்.ஆர்.எம். அப்துற்றஹீம் அவர்கள் மறைந்தபோது
“தன்னம்பிக்கையூட்டிய
அந்த வாழ்க்கையில் வெற்றி
கவலைப்படாதே என்று சொல்லிவிட்டு
தாக்கங்களுக்கு அப்பால்
போய்விட்டதே”
என்று ஆளூர் ஜலால் இரங்கல் கவிதை பாடினார்.
எம்.ஆர்.எம். அப்துற் றஹீமின் மூதாதையர்களில் பலர் பாண்டியன் அரசவையில் அரசவைக் கவிஞர்களாக வீற்றிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆமாம். விதை ஒண்ணு போட்டா சொரை ஒண்ணா மொளைக்கும்?
நன்றி : http://nagoori.wordpress.com
எம்.ஆர்.எம்.அப்துற் றஹீம்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails