Monday, March 1, 2010

யோகம், தியானம், மருத்துவம் பற்றி

Dr.Rudhran


மனநல மருத்துவம் மட்டுமல்ல, மருத்துவத்தின் பல்வேறு துறைகளிலும் இன்னும் 'எல்லா' நோய்களுக்கும் தீர்வுகள் காணப்படவில்லை. இது உண்மை. இன்னும் தீர்வுகள் வரவில்லை என்றாலும் அதை நோக்கிய பயணமே அறிவியல்.
என் பதிவில் குறைகண்டு, கோபம் கொண்டு சிலர் பின்னூட்டம் இட்டதன் பின்னணி பற்றி எனக்கு அதிகம் கவலையில்லை. யோகத்யான முறைகளைக் கற்றுக்கொடுக்கும் அரைவேக்காடுகளைப் பற்றியும் அவர்களது வணிகக்குயுக்தியால் பலர் திசைகுழம்புவது குறித்துமே என் அக்கறை, கவலை. வணிகபுத்தி, குயுக்தி என்று சொன்னாலேயே சிலருக்குத் தங்களை நான் தாக்குவதாகத் தோன்றுவது அவர்களது குற்ற உணர்வாகவும் இருக்கலாம். இப்பதிவு அவர்களைப் பற்றியல்ல, யோக, த்யானம் ஆகியவை மனநோய்களுக்கு உதவுமா என்பதே என் கேள்வி, இல்லை என்பதே என் பதில். நோய் என்பதைப் புரிந்துகொண்டால் தான் என் இந்த தீர்மானம் விளங்கும்.

சோர்வு, சோகம்,கவலை, வருத்தம் என்று நாம் எல்லாரும் வாழ்வில் அனுபவித்திருக்கக்கூடிய உணர்ச்சி நிலைகளை DEPRESSION என்னும் நோயோடு ஒன்றாக நினைத்துக்கொண்டு சிலர் குழம்புவதால் தான் இந்தச் சிக்கல் உருவாகிறது. சில அறிகுறிகளோடு ஒரு பாதிப்பு தொடர்ந்து சிலகாலம் நீடித்தால், அதன் விளைவாக வாழ்வின் இயக்கம் சீர்கெட ஆரம்பித்தால், அப்போது அது ஒரு நோய்.
நோய்க்கு சிகிச்சை அவசியம். தானாகச் சரியாகிவிடும் என்றால் அது மிதமான பாதிப்புதான். மழையில் நனைந்தபின் வரக்கூடிய லேசான இருமலைப்போல். ஆனாலும், இருமல் மிதமானதா பின்னால் தாக்கக்கூடிய ஒரு பெருநோயின் அறிகுறியா என்பதை அறிய அறிவியல் சார்ந்த அணுகுமுறை மட்டுமே உதவும். அறிவியல் அடிப்படையில் இயங்குவதே 'நவீன' எனும் அடைமொழியோடு இன்று பரவலாகப் பயனபடும் மருத்துவமுறை.
இது மேல்நாடு சிகிச்சை முறை, எனக்கு நம் நாட்டுப் பாரம்பரியமிக்க மருத்துவ முறைகளில்தான் நம்பிக்கை என்று ஜீன்ஸ் அணிந்து இணையத்தில் கருத்துத் தெரிவிக்கும் நபர்களிடம் விவாதிக்க அல்ல இப்பதிவு. நோய்க்கு ஏன் நிரூபணமான மருந்துகள் அவசியம் என்பதை விளக்கவே இம்முயற்சி.
ஒரு சின்ன உதாரணம்: வலிப்பு நோய்க்கு மிகவும் சரியான முறையில் உதவக்கூடிய ஒரு மருந்து C. இதற்கு சில எதிர்விளைவுகள் உண்டு. கல்லீரலைத்தாக்கி எனும் பாதிப்பை உர்வாக்கலாம், ஒவ்வாமையால் தோலில் தடிமன்களும் அரிப்பும் வரலாம், ரத்த அணுக்கள் அளவு மாறுபடலாம்.இந்த மருந்தைத் தரலாமா? எனும் மருந்திற்குப் பதிலாக V எனும் மருந்து உண்டு. இதன் எதிர்விளைவுகள் C அளவுக்கு மோசமானதாக இல்லை.இப்போது, எல்லாருக்கும் Cயைவிட Vதான் உகந்தது என்று தோன்றும். பள்ளியிலோ கல்லூரியிலோ முக்கியமான பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கும் மாணவருக்கு வலிப்பு நோய் இருப்பதால், மருந்து தர வேண்டும்; V  உட்கொண்டால் நினவுத்திறனில் பாதிப்பு வரலாம், C அப்படிச் செய்யாது. இப்போது இரண்டில் எது தேர்வாகும்?
இங்கே தான் அறிவியல், அனுபவம், விளைவுகளைப்பற்றிய தெளிவு, சிக்கல்களுக்கு மாற்று என்று முழுமையான சிகிச்சை முறையாக மருத்துவத்தை முன்வைக்கிறேன். "யோகா & மெடிடேஷன் டீச் பண்ணும் மாஸ்டர்ஸ்" மீது இதற்குத்தான் விமர்சனங்களை வைக்கிறேன்.
"கோபம்,  அளவுக்குமீறி சட்டென்று வருகிறது, அடக்க முடியவில்லை" என்று ஒருவர் முறையிட்டால், என்ன ஆசனம், என்ன தியான முறை சொல்லித் தரப்படும்? இன்று பிரபலமாகவும் பெரிய தத்துவார்த்த ஞானிகளாகவும் நிழலெழுத்தாளர்கள் உதவியுடன் பாவனை செய்து திரியும் 'குருமார்கள்' கூட இதற்கு ஏதாவது ஒரு "மெடிடேஷன்" வைத்திருப்பார்கள். அவர்களை நேரில் (அருகில்) சென்று பார்த்துப் பேசி கற்றுக்கொள்ள அனுமதியில்லாத நடுத்தரவர்க்கத்தினரிலிருந்து தான் நிறைய "டீச்சர்ஸ், மாஸ்டர்ஸ்" கிளம்புகிறார்கள். "கோபம்.." என்று முறையிடும் நபரிடம் ஏதாவது கேட்கப்படுமேயானால் அது "இந்த வர்க்ஷாப்புக்கு இவ்வளவு ஃபீஸ், இருக்கிறதா?" என்பது தான் பல இடங்களில்!
முறையான தீர்வு வேண்டுமானால், கேட்கப்பட வேண்டிய கேள்விகளில் ஒரு சில: 1.அந்த நபர் பிறந்தது இயல்பானமுறையிலா இல்லை Forceps பயன்படுத்தியா? 2.கண்களில் எப்போதாவது மின்னலடிப்பது போல் தோன்றுகிறதா? 3.உறக்கத்தில் பற்களை நறநற என்று கடிக்கும் பழக்கம் உள்ளதா?..  இது போல் இன்னும் பலகேள்விகளுக்குப்பின் தான் அவருக்கு மூளையில் ஏதாவது சிறிய பாதிப்பு உள்ளதா என்று புரியும். அப்படி இருந்தால், மருந்துகள் மட்டுமே உதவும். இந்த அடிப்படை அணுகுமுறை இல்லாமல் "வா, உடம்பை வளை, மூச்சை இத்தனை முறை இழுத்து விடு" என்றெல்லாம் ஆரம்பித்தால் எப்படி சரியாகும்? இதனால் தான் நோய்களுக்கு யோகத்யான முறைகள் உதவாது என்று கூறுகிறேன்.

மேலும் படிக்க.யோகம், தியானம், மருத்துவம் பற்றி

நன்றிhttp://rudhrantamil.blogspot.com/

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails