உரிமை கேட்காதவரை
அடங்கிப் போகும் வரை
அந்த ஊரில்
"அமைதி" இருந்தது!!
பெண்கள் கல்விகற்காதவரை
விழிக்காத வரை
உரிமை கேட்காதவரை
அடங்கிப் போகும் வரை
அந்தக் குடும்பத்தில்
"நிம்மதி" இருந்தது!!
அந்த ‘அமைதி' ஒழிக!
அந்த ‘நிம்மதி' ஒழிக!
ஒருவர் "பொறை" இருவர் நட்பு
சரிதான்;
எப்போதும் "பொறை" யாருக்கு?
சமூகத்தின் ஒரு பகுதியை
முடமாக்கிவிட்டு
சமத்துவம் பேசுவது அர்த்தமற்றது
குடும்பத்தின் செம்பாதியை
ஊமையாக்கி விட்டு
ஜனநாயகம் என்பது
சாத்திய மற்றது.
‘குடும்ப தினம்' எதற்கு?
போற்றுவதற்கா
காப்பதற்கா?
போற்றுவதெனில் எதைப்
போற்ற விளைகிறாய்?
காப்பதெனில் எதைக்
காக்க விளைகிறாய்?
கணவன், குழந்தை
குடும்ப கவுரவம் இவற்றுக்காய்
உணர்ச்சிகளைக் கொன்று
தன்னைச் சிதைத்து
பிணமாய் வாழும்
பெண்மையைப் போற்றவோ!!
தன்னை இழந்து
தன்நாமம் கெட்டு
சம்சார சாஹரத்தில்
தீர்க்க சுமங்கலியாய்
என்றும் சுமைதாங்கியாய்
பெண்கள்
இருத்தலைக் காக்கவோ!!
சரி! சரி!
குடும்பம் என்பது யாது?
விதியே என வாய்த்ததுவோ!
பேய்க்கு வாழ்க்கைப்பட்டதால்
புளியமரம் ஏறுவதோ?
குடும்பம் என்பது யாது?
நாகரீக சமூகத்தின்
அடிப்படை அலகு.
இந்த அடித்தளம் தகர்ந்தால்
சகலமும் நொறுங்கும்
விலங்கினும் கீழாய்
வாழ்க்கை இழியும்.
குடும்பம் என்பது யாது?
முர்டோக் என்றோரு
மானிடவியலார் கூறுகிறார்:
"கூடி ஒரு இல்லத்தில் வாழ்ந்து
பொருளாதாரத்தில் ஒத்துழைத்து
வம்சவிருத்தியில் ஈடுபடும் குழு."
மேலும் விரிக்கிறார்:
"சமூகம் அங்கீகரித்த
சட்டம் வரையறுத்த
ஒத்த வயதுடைய
ஒருவனும் ஒருத்தியும்
பாலியல் உறவு கொண்டு
பிள்ளைகள் பெற்று
(அ) தத்தெடுத்து
வாழ்வதன்னியில்
உடலாலும்
உணர்வாலும்
பொருளாதாரத்தாலும்
ஒன்றி வாழ்வது."
குடும்பம் என்பது
தனிநபர்த் தேவையின்
விளைவு மட்டுமா?
அல்ல அல்ல.
சங்கிலிக் கண்ணிகள்
அறுந்திடாமல்
கூடிவாழும் சமூகப் பண்பாட்டின்
கூறுகளை
தலைமுறை தலைமுறையாக
கைமாற்றி கைமாற்றி
வளப்படுத்தி பலப்படுத்திட
கடமையும் பொறுப்பும் கொண்ட
அடித்தளமாகும்.
‘இன்பம் துய்க்கவும்'
‘இன்னல் எதிர்கொள்ளவும்'
கூடிவாழ வேர்கொள்வதுவே
குடும்பம் என்பதை
வரலாறு சொல்லும்.
சொத்தின் மீது
ஆசை வந்ததும்
சொந்தம் என்பதில்
மேல் கீழ் வந்தது
ஆணின் தலைமை
திணிக்கப்பட்டது.
ஆஸ்திக்கு ஆணென
அர்த்தம் புகுத்தப்பட்டது
பெண்ணின் நிலைமை
அடிமையானது
சிரிப்புக்குக் கூட
வரம்புகள் போடப்பட்டது
சமூக வேரில்
வெந்நீர் ஊற்றப்பட்டது
‘குடும்பம்' இங்கே
சுமையாய்ப் போனது.
‘கூட்டுக் குடும்பமோ'
‘தனிக் குடும்பமோ'
அததற்கு ஆயிரம் பிரச்சனைகள்!
"பெண்ணே சுமை தாங்கி"
இரண்டுக்கும் பொதுவானது.
விவசாய வாழ்க்கையில்
உழைப்பில் இருந்த பங்கையும்
பின் இழக்க நேர்ந்தது
போராட்டங்கள் ஊடாகவும்
பொருளாதாரத் தேடலாகவும்
உழைக்கும் வாய்ப்பு
பெண்களுக்கு பெறப்பட்டது
இன்று, வீடு வேலைத்தளம்
இரண்டு ‘ஷிப்டு'
பெண்ணின் இடுப்பொடிகிறது
கூட்டை உடைத்தெறி என
கேட்பதில் வியப்பில்லை
கட்டுத் தளைகளை வெட்டியெறிய
முட்டி மோதுவதில் தவறே
இல்லை
கூடு சிதைந்தால் நாடு சிதையும்
கூடு தகர்ந்தால் அராஜகம் ஓங்கும்
கூட்டைக் காப்பது எப்படி?
இனி அது
பெண்ணின் பொறுப்பு அல்ல
ஆணின் பொறுப்பு
‘வாழ்க்கைத் துணை' என
ஏனையோரை விஞ்சி
ஒரடி முன்வைத்த
வள்ளுவன்
கணக்கும் மாறியது
வாழ்க்கை ‘துணை' அல்ல
வாழ்க்கை ‘இணை' என்போம்.
சுகம், துக்கம்,
சுமை, சுதந்திரம்
எல்லாமே இருவருக்கும்
அடுக்களை முதல்
குழந்தை வளர்ப்பு வரை
எல்லாவற்றிலும்
‘புரிதலும், பகிர்தலும்'
குடும்ப ஜனநாயகத்தின்
அச்சாணி ஆகும்.
இனி தொடங்குவதையாவது
ஜனநாயகத்தில்
கால்பதித்து தொடங்கலாமே!
ஜனநாயகம்
அரசியலுக்கு மட்டுமல்ல
வாழ்வுக்கும் தான்.
காதலில் அதைத் துவங்கு
காதல் ஜனநாயகமானால்
குடும்ப ஜனநாயகம்
தானே பூக்கும்...
காதல் ஜனநாயகம்!
அதெப்படி?
ஈழப்பெண் கவிஞர்
நளாயினி தாமரைச் செல்வன்
கூறுகிறார்:
"காதல் என்றால்
என்னவென்று தெரியுமா?
உனக்கு
எனக்கே எனக்கான வாழ்வையும்
உனக்கே உனக்கான வாழ்வையும்
நீயும் நானும்
மனம் கோர்த்து
வாழ்ந்து பார்ப்பது தான்."
நீங்கள் தயாரா?
நன்றி
- லோப முத்ராhttp://www.keetru.com/literature/poems/lopamuthra.phpநன்றி http://kayalmakizhnan.blogspot.com/
No comments:
Post a Comment