நாளை
உன்னைப்
பெண்பார்க்கப் போகிறேன்.
நம்
ஜாதகங்கள்
சில நாட்களுக்கு முன்
சந்தித்து
வருத்தமற்ற பொருத்தமென்று
கைலுக்கிக் கொண்டன.
உன்
சுற்றத்தோடு
என்
தூரத்து சொந்தங்கள்
தொலைவிலிருந்தே
தகவல் திரட்டிய
அத்தனை
ஆய்வு அறிக்கைகளும்
சாதகமாகவே அமைந்தன.
உன்
மத நம்பிக்கைகளையும்
என்
மத நம்பிக்கைகளையும்
மதில் சுவருக்கு வெளியே நின்று
யாரோ
ஒப்பிட்டுச் சொல்லி
சந்தோஷித்தார்கள்.
உன்
பொருளாதார பலமும்,
என்
நிகழ்கால வளமும்
நமக்கு எதிராய்
சதி வலைகள் பின்னவில்லை.
நீ என்னையோ
நான் உன்னையோ
சந்தித்ததில்லை,
எனக்குள்
விரியும் எதிர்பார்ப்பு தான்
உனக்குள்ளும் எரியும் என்பது
புரிகிறது எனக்கு.
நாளை
உன்னிடம் பேசப்போகும்
முதல் வாக்கியம்
என்ன என்பது மட்டும்
சிக்கவேயில்லை இன்னும்.
ஏதேனும்
யோசித்து வைத்திருக்கிறாயோ
நீ
என்னிடம் பேச ?
(கவிதைகள்)
Tags: கவிதை
நன்றி : http://xavi.wordpress.com/2009/02/06/marriage-3/
No comments:
Post a Comment