சென்னை, மார்ச் 24: போலி-காலாவதியான மருந்துகளை பொது மக்கள் தவிர்ப்பதில் கவனமாக இருக்க வேண்டும் என்று நெஞ்சக நோய் மருத்துவ நிபுணர் செ.நெ. தெய்வநாயகம் கூறினார்.
உடல் நலக் குறைவு ஏற்படும் நிலையில் மருத்துவரின் பரிந்துரையின்றி நேரடியாக மருந்துக் கடைக்காரரிடம் மருந்து வாங்கிச் சாப்பிடாமல் இருத்தல், நோய்க்கான காரணத்தை மருத்துவரிடம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளுதல், சிகிச்சைக்கு டாக்டர் பரிந்துரைக்கும் மாத்திரைகள் குறித்த விவரம், பிரபலமான-தரமான மருந்துக் கடைகளில் மட்டுமே மருந்துகளைத் தொடர்ந்து வாங்குதல், உடனடியாக நிவாரணம் பெற நினைத்து அதிக அளவுக்கு மருந்துகள் சாப்பிடுவதைத் தவிர்த்தல் ஆகியவற்றை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
''வைரஸ், பாக்டீரியா காரணமாக ஜலதோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வைரஸ் காரணமாக மூக்கு, சைனஸ், தொண்டைப் பகுதியில் ஏற்படும் ஜலதோஷம் மருந்துகள் ஏதும் இன்றி இயல்பாக சரியாகி விடும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஆண்டுக்கு ஆறு முறை இத்தகயை ஜலதோஷம் ஏற்படுவது இயல்பானது. ஆனால், பயம்-அறியாமை காரணமாக பல பெற்றோர் ஆன்டிபயாட்டிக் மருந்துகளை குழந்தைக்குக் கொடுத்து குழந்தையின் நோய் எதிர்ப்புச் சக்திக்கு பாதிப்பு ஏற்படுத்துகின்றனர்.
மார்புச் சளி, ஒவ்வாமைச் சளி ஆகியவற்றுக்கு சிகிச்சை தேவைப்படும். இத்தகைய சளி பச்சை அல்லது மஞ்சள் நிறமாக இருக்கும்; துர்நாற்றமும் இருக்கும். சிகிச்சை தேவைப்படும் நிலையில், குடும்ப மருத்துவரின் பரிந்துரையுடன் முதல் கட்டமாக வீரியம் குறைந்த குறைவான எண்ணிக்கையிலான மாத்திரைகளைச் சாப்பிட்டால் போதுமானது.
பிரச்னை தொடர்ந்தால் மட்டுமே ஆன்டிபயாட்டிக் மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிட வேண்டும். மேலும் மாத்திரைகளின் தன்மை குறித்து மருத்துவரிடம் முழுமையாகக் கேட்டுத் தெரிந்து கொள்ளும் உரிமை தங்களுக்கு உள்ளது என்பதை நோயாளிகள் உணர வேண்டும்.
சித்த மருத்துவம் இருக்க கவலை ஏன்? அலோபதி மருத்துவத்தைப் போல் அல்லாமல், பக்க விளைவுகள் எதையும் ஏற்படுத்தாத நல்ல சித்த மருந்துகள் உள்ளன. ஜலதோஷம், சர்க்கரை நோய்,
நரம்புத் தளர்ச்சி, மூட்டு வலி என எல்லாவற்றுக்கும் சித்த மருத்துவத்தில் நல்ல மருந்துகள் உள்ளன.
தாளிசாதி சூரணம் (தூள்), சிவனார் அமுதம் (தூள்), தூதுவளை லேகியம் ஆகிய சித்த மருந்துகள் சளியைப் போக்கும் ஆற்றல் படைத்தவை. ஜலதோஷத்துடன் இருமலும் இருந்தால் ஆடாதொடை மணப்பாகு (சிரப்) உதவும். இதேபோன்று மதுமேக சூரணம் உள்ளிட்ட மருந்துகள் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோயாளிகளுக்கு நிவாரணம் தரும். அமுக்கரா, பிரம்மி, வல்லாரை மாத்திரை ஆகியவை நரம்புத் தளர்ச்சியைப் போக்க உதவும்'' என்றார் டாக்டர் தெய்வநாயகம்.
போலி மருந்துகள்: மக்கள் உஷார் அடைவது எப்படி? மருத்துவ நிபுணர் யோசனை Source ; http://www.tamilsaral.com/
1 comment:
How sure that "Big" medical shops do not sell these drugs.If there is any 'cure' for diabetes in Siddha, they must go ahead and prove it and patent it. They can make millions and it would revoultionise medicine itself.LEt them do it.Amal
Post a Comment