Friday, March 5, 2010

கோடை வெயிலுக்கு இதமளிக்கும் உணவுகள்!

வெப்பக்காலங்களில் உடலிலிருந்து அதிகபட்ச நீர் வியர்வை மூலமாக வெளியேறுவதால் பலருக்கு உடல் தளர்ந்து விடும் நிலை ஏற்படுவதுண்டு. வேண்டாத நோய்கள் உள்ளவர்களுக்கும் முதியோர்களுக்கும் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும்.  
உடலில் ஏற்படும் சின்னச் சின்னப் பிரச்சனைகளிலிருந்து பெரிய பிரச்சனைகள் வரை அனைத்துக்குமே அடிப்படையாக இருப்பது உணவு பழக்க வழக்கமே. சரியான காலங்களில் சரியான உணவுகளை உட்கொண்டோம்  எனில், தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுவதை எளிதில் சமாளிக்க முடியும்.
வெப்பக்காலங்களில் உட்கொள்வதற்குப் பொருத்தமானதும் உட்கொள்ளக் கூடாததுமான உணவு பொருட்களின் சிறு பட்டியல் கீழே. இதனை ஓரளவாவது பேணினால் வெப்பக்காலங்களில் நீரிழப்பினால் ஏற்படும் பலவித பிரச்சனைகளிலிருந்து தற்காத்துக் கொள்ள முடியும். வெப்பக்காலங்களில்,
* உடலுக்குக் குளிர்ச்சி தரும் கீரைகள், நீர்ச் சத்துள்ள காய்கறிகளை அதிகம் உட்கொள்ள வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் முள்ளங்கி, வாழைத்தண்டு சாறு குடிப்பது மிகவும் நல்லது. அது உடலிலுள்ள நீர் நன்கு பிரிய உதவுகிறது.

* மிகுந்த கார உணவுகளையும் எண்ணெயில் வதக்கிய உணவுப் பொருட்களையும் தவிர்ப்பது நல்லது. இவை சருமத்திற்குத் தொல்லை தரும். அதுமட்டுமின்றி அஜீரண கோளாறுகளையும் ஏற்படுத்தும்.

* வெயில் காலத்தில் சூட்டினால் வயிற்று வலி வரும். ஒரு கப் ஜவ்வரிசிக்கு 2 கப் தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்தால் நன்றாக வெந்துவிடும். பிறகு அதில் பால், சர்க்கரையோ உப்போ அல்லது மோரோ ஊற்றி கரைத்து குடிக்கலாம். வயிற்று வலி பறந்து போகும். உடலுக்கும் நல்லது.
* கோடைக் காலத்தில் நீராகாரம் காலையில் சாப்பிடுவது உடலுக்கு நல்லது. ஆனால் இரவில் சாதத்தில் நீர் ஊற்றி வைத்தால் கோடை வெப்பத்திற்கு சாதம் கூழாக மாறிவிடும். இதற்கு இரவில் சாதத்தில் தண்ணீர் ஊற்றும்போது சிறிதளவு உப்பைக் கலந்து வைத்தால் காலையில் கூழாக மாறாது. அதனைக் காலையில் வெறும் வயிற்றில் அருந்துவது உடலைக் குளிர்விக்கும்.

* கோடைக் காலத்திற்கு ஏற்றது எளிய உணவுதான். அதிலும் சைவ உணவு அரை வயிற்றுக்குத்தான் சாப்பிட வேண்டும். கோடையில் அசைவ உணவுகளைச் சாப்பிட்டால் அது சூட்டைக் கிளப்பி விடும். அசைவ உணவுகளில் பாக்டீரியாக்கள் எளிதல் தோன்றி உணவுப் பொருளை விஷத்தன்மை கொண்டதாக மாற்றிவிடுவது உண்டு. இந்த உணவை உண்ணும்போது வாந்தி, மயக்கம் ஏற்படும். சிலருக்கு வயிற்றில் இரைச்சல் ஏற்படும். இதனால் கோடைக் காலங்களில் இம்மாதிரியான உணவு வகைகளை குறைத்துக் கொள்வது நல்லது.
நன்றி: திருப்பட்டினம் என்.ஜரினா பானு (தினமணி-05.06.2009)

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails