by Dr.Rudhran
மனவியலும் இலக்கியமும் பரிமாறிப் பயன்பெறும் துறைகள். இரண்டுமே கதைகேட்கும், கதை சொல்லும். இரண்டுமே மனதை உரித்துப்பார்க்கும். ஒன்றின் நோக்கம் பாதித்து யோசிக்க வைப்பது, இன்னொன்றின் நோக்கம் யோசித்து பாதிப்பிலிருந்து மீள்வது. இரண்டையும் நான் நெருக்கமாய் நேசிப்பதால்தான் அன்று பேசவும் இன்று எழுதவும் துணிகிறேன்.
மனவியல் ஓர் அறிவியல். அறிவு பூர்வமாக எதையாவது தெளிய விரும்பினால் அந்த விஷயத்தை முதலில் வரையறுக்க வேண்டும், பிறகு விவரிக்க வேண்டும், பின் விவாதிக்கவேண்டும், முடிவில் வளங்கியதை வடிகாட்ட வேண்டும், இறுதியில் வடிகட்டியவற்றையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். ஓரிடத்தின் முடிவுகள் அதே பரிசோதனையின் போது வேறிடத்திலும் அதே முடிவுகள் தந்தால் அப்போது தான் அது அறிவியல்ரீதியாக ஏற்கக்கூடிய உண்மை.
மனவியல் மேதையாகவும், சிலரால் தந்தையாகவும் வர்ணிக்கப்படும் ஃப்ராய்ட் இலக்கியங்களிலிருந்தே தான் கோட்பாடுகளை உருவாக்கினார். அவரது பிரபலமான மனவியல் நூல்களின் பாதிப்பால் பல எழுத்தாளர்கள் இலக்கியங்களை உருவாக்கினார்கள். மிகவும் பிரபலமான ஈடிபஸ் நாடகமும் அதற்கு ஃப்ராய்ட் உருவாக்கிய மனவியல் விளக்கமும் பலருக்கும் அறிமுகம். ஆனால் அவர் அத்துடன் நிற்கவில்லை. அன்றிருந்த இலக்கியங்கள் பலவும் அவரது பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு கருத்துக்களாக கோட்பாடுகளாக உருவாயின.
ஒரு நாடகம் பார்க்கிறோம் (இதை இன்று திரைப்படமாக, தொலைக்காட்சி நிகழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளலாம்) உடனே அங்கிருக்கும் பாத்திரங்களுடன் ஒரு நெருக்கம், ஓர் அன்னியோனியம் தோன்றுகிறது. அப்படித் தோன்றினால்தான் அங்கே நிகழும் அந்தக் கதையில் மனம் ஒன்றுகிறது. பாத்திரங்களின் உணர்ச்சிகள் நம்முடையதாகின்றன. நாம் அழ முடியாதவற்றுக்கெல்லாம் அங்கே அந்தக் கதையின் மூலம் அழுகிறோம். நம்மை நாம் இந்தக் கதாபாத்திரங்களில்(identification )அடையாளம் காண்கிறோம், நாம் பல நிலைகளை அவர்கள் மீது (projection) பரப்பிப்பார்க்கிறோம், நாம் உள்ளே தேக்கி வைத்திருந்த உணர்ச்சிக்குப்பைகளை அந்தக் கதையில் கொட்டுகிறோம் (catharsis) , வெளி வரும்போது மனம் லேசாகிறது. இது கண்முன் பெரிதாய் விரியும் காட்சியாய் நாடகமாய் திரைப்படமாய் எப்படி அமைகிறதோ அதே போல்தான் படிக்கும்போது அமைகிறது.
களத்தோடும் பாத்திரங்களோடும் நமக்கு அடையாளப் படுத்திக்கொள்ள முடிந்தால்தான் இலக்கியம் ரசிக்கப்படும் என்பது ஒரு கருத்து. இங்கே இரண்டு கதைகளை மிகவும் மலினப்படுத்திச் சொல்கிறேன்.
1.சின்ன வயதில் ஒரு பையன் ஒரு பெண்ணை காதலிக்கிறான். அதற்காக அடித்து விரட்டப்படுகிறான். வேறூர் ஒன்றில் வளர்ந்து, சம்பாதித்து, வயதானபின் தான் பழைய காதலியைப் பார்க்கப் போகிறான். அவளைப்போலவே உருவ ஒற்றுமை உள்ள அவளது மகளைக் கண்டதும் அவள் மீதும் மையல் கொள்கிறான்.
2. அந்தப் பையன் படிக்க தான் தந்தையின் நண்பர் வீட்டில் தங்கியிருக்கிறான். அவர்களும் அவனை ஒரு மகனாகவே நடத்துகின்றனர். ஒரு நாள் உணர்ச்சிவசப்பட்டு தந்தையின் நண்பரின் மனைவியை, தன்னிடம் ஒரு தாயாகப் பழகிய அவளிடம் பாலுணர்வுத்தூண்டுதலால் நெருக்கமாகிறான்.
மேலே சொன்ன இரு கதைகளும் இவ்வளவு கொச்சையானவை அல்ல. அவை அடர்த்தியாக உள் கிளப்பும் அதிர்வுகள் வேறு பல. ஆனால் இவற்றை ரசிப்பவன் இதில் எந்தப் பாத்திரத்தோடு தன்னை அடையாளம் காண்கிறான்? தன்னை, தன் சூழலை அடையாளம் கண்டு கொள்ள முடியாத இவை எப்படி இலக்கியமாகப் போற்றப்படுகின்றன? இவ்விடத்தில் தான் நினைக்கமுடியாததும், பேச முடியாததும், ஆனாலும் நிஜம் என்று தோன்றுவதும் இலக்கியமாக ரசிப்புத்தன்மையைத் தூண்டிவிடும்.
இதன் இன்னொரு நீட்சியாகத்தான் சமுதாய-பகுதிநேரப் பொறுப்புணர்வு! கதை சொல்லப்படுகிறது. அதைக் கேட்க ஆவல் ஏன் வருகிறது? அதில் ஒரு மர்மம் இருப்பதால். இது கொலை, கொள்ளை துப்பறியும் வகைகளில் மட்டுமல்ல எல்லா கதைகளிலும் உள்ளது. மார்க்ஸீய நூலிலும் விவரிக்கப்பட்ட வேதனைகளுக்கு என்ன விடிவு என்றொரு மர்மக் கேள்வி தொக்கி நிற்பதால்தான் விடை கண்டு அதைப் பரிசீலிக்கவும் பயன்படுத்தவும் மனம் தொடர்ந்து படிக்கிறது.
மேலும் படிக்க.மனவியலும் இலக்கியமும்- கடைசியாக
மிக்க நன்றி : http://rudhrantamil.blogspot.com/2010/01/blog-post_06.html
No comments:
Post a Comment