வருடத்திற்குச் சில நாட்களே
வீட்டுக்கு வருகிறோம்
விருந்தாளிகளாக..!
ஆம் - நாங்கள்
அயல் நாட்டிற்கு
வாழ்க்கைப்பட்டவர்கள்.
தாய் நாட்டின் அந்நியர்கள் நாங்கள்!
அனுப்பும் பணத்தைக்கூட
அந்நியச்செலாவணி என்றே
அரசாங்கம் குறிப்பிடும்!
திரவியம் தேடித்தான்
திரைகடல் கடந்தோம்!
கடலைக் கடந்த எங்களால்
கடனைக் கடக்க இயலவில்லை.
வட்டியின் வெள்ளப்பெருக்கு!
தவணைகளில் கழியும் பொழுதுகள்
திருமணங்களையும்
துயரங்களையும்
தொலைபேசிகளில்
விசாரித்துக் கொண்டு..!
குடும்ப வாழ்க்கையோ
குழந்தை உண்ணும் சோறு!
உண்பதை விடவும்
சிந்துவது தான் அதிகம்
தூரத்துப்பச்சைக்காக
தவமிருக்கின்றன கண்கள்
கானல் போலவே வாழ்க்கை.
விடுமுறைகள் தொங்கோட்டங்கள்!
ஊருக்குப் போகும்
ஒவ்வொரு முறையும்
கனக்கும் பெட்டிகளாய்
கடன் சுமை.
திரும்பி வரும்போதோ
இன்னும் கனக்கும் இதயம்
திணிக்கப்பட்ட எதிர்பார்ப்புகளோடும்
தீராத ஏக்கங்களோடும்..!
அயல்நாட்டு பொருட்களுக்கு
ஆசைப்படும் சொந்தங்கள்
அந்தப்பக்கம்!
உள்நாட்டு சொந்தங்களுக்கு
ஏக்கப்படும் இதயங்களோ
இந்தப்பக்கம்!
இடையில் இருப்பதோ கடல்
அது..
கடமைகளாலான சமுத்திரம்
பல்லாயிரம் வியர்வைப்பூக்கள்
பூத்துக்குலுங்கிட…
சோலைகளாயின தேசங்கள்
பாலைகளாயின தேகங்கள்!
வளமையை வாங்குதற்கு
இளமையை செலவழிக்கும்
எங்களுக்கு
வாய்த்தது தான் என்ன..?
வரமா..? சாபமா..?
[17.02.05 அன்று ரியாத் தமிழ்ச்சங்கத் தொடக்க விழாவில் கவிஞர் வைரமுத்து, சவூதி அரேபியாவுக்கான இந்தியத்தூதர் திரு. M.O.H. பாருக் முன்னிலையில் நடைபெற்ற கவியரங்கில் பாராட்டுப்பெற்ற கவிதை]
- பரங்கிப்பேட்டை ஹ.பஃக்ருத்தீன் (fakhrudeen.h@gmail.com)
நன்றி: http://www.keetru.com
No comments:
Post a Comment