Saturday, February 6, 2010

இஸ்லாம் இந்த மண்ணுக்கேற்ற மார்க்கம் பாகம் 1



இஸ்லாம் - ஒரு நாடு கடந்து வந்த நதி:

நதி ஒரு நாட்டிற்குள்ளேயே வளைய வருவதைவிட நாடு கடந்து, செல்லுகிற இடத்திற்கெல்லாம் செழிப்பைத் தருவதுதான் சிறப்பு.இஸ்லாம் அந்த நாளில் அரபு மக்களுக்கு மத்தியில் இறக்கப்பட்டதாக இருந்தாலும், இந்த நாளிலும் உலகம் எங்கிலும் உள்ள மக்களை நல்வழிப் படுத்துவதற்கான சத்திய ஆவேசம் அதில் தகித்துக் கொண்டிருக்கிறது. இஸ்லாமியச் செய்தி குறிப்பிட்ட வகுப்பாருக்கு உரியதில்லை. இஸ்லாமியச் செய்தி உலகம் முழுவதற்கும் உரியது. காரணம் இறைவன் 'ஆதமின் மக்களே!' என்று அழைத்து அந்தச் செய்தியைப் பொதுமைப் படுத்துகிறான். இஸ்லாத்தில் வருகிற அல்லாஹ், ஆண்டவனுக்கான அரபுப் பெயரே தவிர, அவன் அரேபியர்களின் ஆண்டவன் மாத்திரம் அல்லன்.

அவன் எல்லா உலகங்களின் இறைவன் (திருகுர்ஆன் 1:1)
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் மனித குலம் அனைத்திற்கான இறைத்தூதர் ஆவார்.
ஓ மக்களே! நான் உங்கள் எல்லோருக்குமான இறைத்தூதன்: (திருக்குர்ஆன் 8:158)
சகல நாடுகளுக்குமான அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறவர் (திருகுர்ஆன் 25:1)
எல்லா நாடுகளுக்கும் உம்மை இரக்கத்தின்படியே அனுப்பியிருக்கிறோம். (திருகுர்ஆன் 21:102)

இஸ்லாத்தைப் போல பிற எந்தச் சமயமும் உலக சகோதரத்துவத்தை வற்புறுத்தவில்லை. இஸ்லாம் ஒரு குறுகிய பிரிவினைச் சபை அல்ல. இது இஸ்லாத்தின் உள்ளொளியும், ஆற்றல் களமும் ஆகும், இஸ்லாம் மனித குலத்தின் மனச்சாட்சிக்கு ஒட்டுமொத்தமாக அறைகூவல் விடுக்கிறது. எல்லாப் படைப்புகளும் இறைவனைச் சார்ந்தவையே, அவனது படைப்புகளைச் சிறப்பாக நேசிக்கிறவனே, அவனால் அதிகமாக அன்பு செய்யப்படுகிறவன் ஆவான் என்கிறார். இறைத்தூதர் நபிகள் நாயகம் (ஸல்)

மேலும் அவரே குறிப்பிட்டதாவது: ~என் அருமை எஜமானே! என் உயிரின் மற்றும் எனது எல்லாவற்றிற்குமான கர்த்தாவே! உலகத்தில் உள்ளோர் அனைவரும் ஒருவருக்கொருவர் சகோதரர்களே என்று உறுதி கூறுகிறேன்.

கடவுளின் வழிகளைக் கனம் பண்ணுங்கள், கடவுளுக்குச் சொந்தமான உலகப் படைப்பினிடம் அன்பு பாராட்டுங்கள். ஆகவே செயற்கைப் பிரிவுகளால் உருவாகிற வேறுபாடுகள், தடைகள் ஆகியவற்றை இஸ்லாம் ஏற்பது இல்லை.

இஸ்லாம் அரேபியர்களுக்காக இறக்கப் பட்டதைப்போல் தோற்றமளிக்கிறது. ஆனால் உலகத்திற்காக, அனைத்து மக்களுக்குமாக அது இறக்கப்பட்டது என்பதை ஏற்காமலிருந்தால் அது மனித குலத்திற்கு தான் மாபெரும் இழப்பாகிப் போகும்.

இஸ்லாம், சர்வதேச வாழ்க்கை முறையை எவ்வாறு அங்கீகரிக்கிறது, என்று பார்ப்பது நலம். ஒரு இஸ்லாமிய குடியரசிற்கும் அல்லது அரசாங்கத்திற்கும் மற்ற நாடுகளுக்குமான உறவு முறைகளை இது குறித்துக் காட்டுகிறது. இம்மாதிரியான உறவுமுறைகளும் இறைவனின் கட்டளைப்படியே அமைந்திடல் வேண்டும். இதற்கான அடிப்படைகளை இப்போது பார்க்கலாம்.


வலம்புரிஜான்

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails