Saturday, February 13, 2010

கிழக்கு திரும்பும் மேற்கின் கதை- மாக்சிம் ரேடின்சன் ஓர் அறிமுகம்

பௌதீக உலகின் வட்டப்பாதையிலான சுழற்சியில் திசைகள் இருப்பை குறிக்கின்றன. அந்த இருப்பின் வடிவமானது நிலப்பகுதி ஒன்றின் வரைவெல்லையாக மாறுகிறது. மேற்கு-கிழக்கு என்ற பிரிவினை இந்த நிலப்பகுதியை சார்ந்தது. அதன் புறச்சூழல், காலநிலை, மக்கட்தொகுதி, குறிப்பிட்ட கலாசாரம் இவற்றை சார்ந்து துருவ இனங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. நாகரீகங்களின் பிறப்பிடமாகவும், கலாசார பரிணாமங்களின் புகலிடமாகவும் வரலாற்றில் கிழக்கத்திய சமூகம் முன்னுக்கு வருகிறது. தனித்த விதி ஒன்றின் இயங்கிடமாக கிழக்கத்திய வரலாறு மற்றும் கலாசாரம் குறித்த பார்வைக்குள் செல்ல வேண்டியதிருக்கிறது. குறிப்பாக வரலாற்று ரீதியாகவே செமிட்டிக் நாகரீகம் மற்றும் அதன் கலாசாரம் குறித்த பார்வை மேற்கத்திய தத்துவ மற்றும் சமூகவியலாளர்களால் ஆய்வுபூர்வமாக பல்வேறு காலகட்டங்களில் முன்னெடுக்கப்பட்டது. இன்னொரு நிலையில் இதன் தொடர்ச்சியில் செமிட்டிக் மதங்களான யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் குறித்த வரலாற்று, சமூகவியல் ரீதியான அணுகுமுறை இவர்களால் முன்வைக்கப்பட்டது. மதங்கள் கற்பிக்கும் புனிதங்களின் எல்லையை தாண்டியும், அதனால் தொட்டுணர முடியாத பல்வேறு உணர்வோட்டங்களின் துடிப்பை அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இவர்களின் நோக்கமாக இருந்தது. இந்த வரிசையில் மாக்சின் ரேடின்சன் முக்கியமானவர். பிரான்சுக்கு புலம் பெயர்ந்த போலந்து வம்சாவளிசிந்தனையாளரான இவர் அறுபது மற்றும் எழுபதுகளில் பிரான்சின் அறிவுத்துறை வட்டாரங்களில் பேசப்பட்ட ஓர் அறிவு ஜீவி. வரலாறு மற்றும் சமூகவியல் துறையின் நுட்பணர். 1915 ஆம் ஆண்டு பிரெஞ்சு கட்டுப்பாட்டு பகுதியான மார்சிலி என்ற புராதன நகரத்தில் மாக்சிம் ரேடின்சன் பிறந்தார். இவரின் பெற்றோர் யூத பின்னணியை கொண்டவர்கள். இவரின் தந்தை மார்க்சிய பின்னணியை கொண்டவர். போலந்தின் நகரமொன்றில் பிரபல ஜவுளி வியபாரியாக இருந்தார். டிராஸ்கி மற்றும் லெனினுடன் தொடர்பு கொண்டவராகவும் அவர்களுடன் உரையாடல் நடத்தியவராகவும் இருந்தார். பின்னர் பிரான்சுக்கு புலம்பெயர்ந்த இவரின் தந்தை அங்கு வணிகத்தில் கவனம் செலுத்தினார். நாற்பதுகளில் ஹிட்லரின் யூத இன அழிப்பிற்கு இவருடைய குடும்பம் பலியானது. ஆஷ்விச் முகாமிற்கு கடத்தப்பட்ட இவருடனான குடும்பம் இவர் மட்டும் தப்பித்தலுடன் மரணத்தை தழுவியது. மாக்சிம் ரேடின்சனுக்கு இளமைகாலத்தில் தன் தந்தையை போன்றே அறிவுதுறை விஷயங்கள் மீதான நாட்டம் ஏற்பட்டது. மார்க்சிய கோட்பாடுகளை ஆர்வத்துடன் ஆழமாக படிக்க தொடங்கினார். ஒரு விதத்தில் அவரின் அப்போதைய நாட்டமும் அதுவாக தான் இருந்தது. 1937 ல் பிரான்சு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து களப்பணியாற்றினார். பின்னர் ஸ்டாலினிய காலகட்டத்தில் ஏற்பட்ட மனமுறிவு காரணமாக அதிலிருந்து விலகி தனிமனிதராக செயல்பட்டார்.இந்த விலகலை பற்றி குறிப்பிட்ட ரேடின்சன் கட்சி அமைப்பு என்பது மத நிறுவனம் மாதிரி இருக்கிறது என்றார். 1958 ல் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து முழுமையாக விலகினார். இதன் பிற்பாடு பிரான்சு பல்கலைகழகத்தின் மொழியியல் பிரிவில் இணைந்து யத்திஷ், ஹிப்ரு, அரபி மொழிகளை படித்தார். பிற்காலத்தில் அங்கு ஓரியண்டல் துறையில் பேராசிரியராக வேலைக்கு சேர்ந்தார். இரண்டாம் உலகப்போர் காலகட்டத்தில் பிரான்சில் யூதர்களுக்கு எதிராக நடந்த ஒடுக்குமுறையிலிருந்து விடுபட சிரியாவிற்கு சென்றார். டமாஸ்கஸ் பிரெஞ்சு நிறுவனத்தில் இயக்குநராக வேலைக்கு சேர்ந்தார். அங்கு தான் ரேடின்சன் இஸ்லாம், அரபுலகம் அதன் வரலாற்று, சமூக ரீதியான பின்னோக்க பார்வையை விரிவுபடுத்திக் கொண்டார். பிரான்சு பல்கலைகழகத்தில் ஓரியண்டல் துறையில் வேலைக்கு சேர்ந்த காலத்தில் அவரின் புகழ்பெற்ற முதல் நூலான "முஹம்மது" வெளிவந்தது. இஸ்லாமிய மத ஸ்தாபகரான முஹம்மது நபியை பற்றிய விரிவான அறிமுகமும், இஸ்லாத்தின் தோற்றத்தை வரலாற்று, சமூக ரீதியில் தத்துவ மற்றும் சமூகவியலின் துணைகொண்டு இந்நூல் ஆராய்ந்தது. வெளிவந்த காலத்தில் மேற்கிலும், மத்திய கிழக்கு பகுதியிலும் மிகுந்த அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால் அரபு பிரதேசத்தின் சில பகுதிகளில் இஸ்லாமிய மதத்திற்கு விரோதமானது என்ற பெயரில் இந்நூல் தடை செய்யப்பட்டது.மாக்சிம் ரேடின்சனின் நபி பற்றிய இந்த நூல் மான்கெமரி வாட்டின் முஹம்மது நபி பற்றிய நூலை ஒட்டி இருந்தது. அதன் பார்வை விசாலமானதாக, ஆழ்ந்த வரலாற்று செறிவை உள்ளடக்கியதாக இருந்தது. இதன் பிறகு ஐந்தாண்டுகள் கடந்த நிலையில் ரேடின்சனின் அடுத்த நூலாக "Islam and Capitalism" வெளிவந்தது. அதுவரை ஐரோப்பிய சமூகம் இஸ்லாமிய மதத்தின் பொருளாதார பார்வை குறித்து கொண்டிருந்த கற்பிதங்களை தகர்த்தது. குறிப்பாக மார்க்ஸ் வெபரின் இஸ்லாமிய கலாசாரம் குறித்த கருத்துகளுக்கு விரிவான விளக்கம் அளித்தது. இஸ்லாமிய நாகரீகம், இஸ்லாமிய நாடுகளின் பொருளாதார கட்டமைப்பு, உள்முரண்பாடுகள், முதலாளித்துவம் ஐரோப்பாவில் வேர்கொண்ட முறை சோசலிசம், மார்க்சின் அந்நியமாதல், நிலப்பிரபுத்துவம் குறித்த பார்வை , ஆசிய உற்பத்தி முறை இவற்றை குறித்து விரிவாக இந்நூல் ஆராய்ந்தது. மார்க்சிய அடிப்படையில் நின்று கொண்டு இஸ்லாத்தை அணுகிய ரேடின்சன் முதலாளித்துவத்தை பொறுத்தவரை இஸ்லாம் எவ்விதமான எதிர்நிலைபாட்டையும் கொண்டிருக்கவில்லை என்ற முடிவிற்கு வந்தடைந்தார்.


மாக்சிம் ரேடின்சனை மற்ற பிரஞ்சு சிந்தனையாளர்களிடமிருந்து வித்தியாசப்படுத்திய ஒன்று அவரின் பாலஸ்தீன் ஆதரவு நிலைபாடாகும் தான் அடிப்ப்டையில் யூத மரபை சார்ந்தவராக இருந்த போதிலும், இஸ்ரேலுக்கு எதிராக நின்றார்.பாலஸ்தீன் உரிமை போராட்டம் குறித்து ரேடின்சன் 1967 ல் சார்த்தரின் ஆய்விதழான les tempes moderne ல் Israel a colonial fact என்ற தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதினார். அதே நேரத்தில் அவரின் போராட்ட ஆதரவு நிலைபாடும் கூட அடிப்படைவாத குழுக்களின் நிலைபாட்டிலிருந்து வித்தியாசப்பட்டிருந்தது. அவரின் பாலஸ்தீன் நிலைபாடு இரு பார்வைகளை கொண்டிருந்தது.1. பாலஸ்தீனியர்களின் போராட்டம் அவர்களின் யூத வெறுப்பின் அடையாளமே. 2. பாலஸ்தீனியர்கள் தங்கள் போராட்டத்தை மதத்திற்கு அப்பாற்பட்ட வடிவத்திற்கு வளர்த்தெடுக்க வேண்டும். இந்த நிலைபாட்டின் மூலம் ரேடின்சன் எட்வர்ட் செய்த் கருத்துடன் ஓரளவு உடன்படுகிறார். இன்னொரு வகையில் அவரின் சியோனிச எதிர்ப்பு கருத்தாக்கம் இரு பார்வைகளை கொண்டிருந்தது. 1. உலகம் முழுவதும் உள்ள யூதர்களையும், யூத சந்ததியினரையும் அவர்களின் அடையாளங்களை துறந்து ஒரே அடையாளத்திற்குள் கொண்டுவருதல் என்பது ஆபத்தானது. 2.பாலஸ்தீன் பகுதிகளை யூத மயப்படுத்தி பாலஸ்தீனியர்களின் பிரதேசங்களை ஆக்கிரமித்து, அவர்களை அங்கிருந்து விரட்டுதல். மேற்கண்ட விஷயங்களுக்காக ரேடின்சன் இஸ்ரேலிய எதிர்ப்பு நிலைபாட்டை மேற்கொண்டிருந்தார். மேலும் பாலஸ்தீனியர்கள் பிரான்சில் பிரஞ்சு மக்களை போன்றும், இங்கிலாந்தில் ஆங்கில மக்களை போன்றும் மீறப்படாத சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றார். அவர்களின் உரிமை போராட்டம் பிளவுபடாத மனநிலையிலிருந்து வெளிப்பட வேண்டும். மேலும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு குற்றங்களை சமரசமற்ற நோக்கோடு எதிர்த்தார். மேலும் அரபு சமூகத்தோடு, அரபு பார்வையாளர்களோடு அவரின் கருத்து தோற்றப்பாடு விமர்சன பூர்வமாக இருந்தது. பாலஸ்தீன் முரண்பாடு பற்றிய அவரின் நிலைபாடு அறிவார்த்தமாக இருந்தது. இஸ்ரேலிய யூதர்களும் பாலஸ்தீனிய அரபுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வை அடைய முடியும். மேலும் இஸ்ரேல் என்பது ரேடின்சனை பொறுத்தவரை வெறுமனே காலனிய குடியேற்ற அமைப்பு அல்ல. மாறாக அது ஒரு தேசிய உண்மை கூட. யூதர்கள் பாலஸ்தீனியர்களின் சுயமரியாதை மீது மிகுந்த கூட்டுரிமைகளை கொண்டுள்ளார்கள். இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட இனக்குழுக்கள் ஒரு நாட்டில் இருந்தால் அவை மற்றொன்றை ஆதிக்கம் , ஒடுக்குமுறைக்கு உள்ளாக்காத நிலையில் அரசியல் மட்டத்தில் அந்த குழுக்கள் வேறுபட்ட சமூகங்களாக இருக்கும் நிலையில், அவர்களின் நலன்களும், உள்ளாசைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். இவ்வாறான அறிவுஜீவி நிலைபாட்டை மேற்கொண்ட ரேடின்சன் அவ்வப்போது யூத அடிப்படைவாதிகளின் கடும் விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறார். அவர்கள் இவரை யூத விரோதியாக பார்த்தனர். 1967 அரபு-இஸ்ரேல் போரை கடுமையாக எதிர்த்த ரேடின்சன் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை வரலாற்று ரீதியாக தொகுத்து Israel and the Arabs என்ற நூலை எழுதினார். இஸ்ரேல் விவகாரத்தின் நதிமூலத்திலிருந்து அதன் பரிணாம கட்டம் வரையான விமர்சன பார்வையும், ஆழ்ந்து அகன்ற அறிவு தேடலும் இந்நூல் முழுவதும் நிரம்பி இருந்தது. அதன் பிறகு Marxism and the Muslim world வெளிவந்தது. இஸ்லாமிய நாடுகளுக்கும் , சோவியத் யூனியனுக்குமான உறவு முறை, முதலாளித்துவத்தை இஸ்லாம் அணுகும் முறை, இஸ்லாமிய நாடுகளின் நிலவியல் அமைப்பு, சோசலிச அமைப்பு முறை ஆகியவற்றை குறித்த பன்முக விமர்சன நோக்காக இது இருந்தது. இதன் நீட்சியில் ரேடின்சன் இஸ்லாம் குறித்த சமூக, பொருளாதார கோட்பாட்டு தரவுகளை முன்வைத்தார். அது மேற்கில் அதிகம் கவனிக்கப்பட்டது.

மாக்சிம் ரேடின்சனை பொறுத்தவரை ஐரோப்பா புரிந்து கொள்ளாத உலகம் பற்றிய இரகசிய கோட்பாடுகளை வெளிக்கொணர்ந்தார். சாத்வீகமான நெகிழ்வு முறையோடு அதன் நகரல் இருந்தது. ஐரோப்பியனாக இருந்து கொண்டு ஓரியண்டல் சிந்தனை தளத்தை நோக்கி அவரின் இளமை கால செயல்பாடுகள் திரும்பின. குறிப்பாக அரபுலகம், இஸ்லாம் பற்றிய அவரின் தேடலானது அவரை நட்சத்திர தகுதி பெற்ற அறிவுஜீவி என்ற நிலைக்கு உயர்த்தியது.பின் நவீனத்துவ சிந்தனையாளர் என்ற கட்டத்துக்கு வந்த ழாக் தெரிதாவின் நண்பராக ரேடின்சன் இருந்தார். அவருடன் பல உரையாடல்கள் நடத்தி இருக்கிறார். பிரபல சோவியத் வரலாற்றாசிரியரான ஐசக் டொயிஸ்டர் இவர்கள் இருவரையும் "யூதமற்ற யூதர்கள்" என்றார். யூதர்களாக இருந்து கொண்டு யூத தேசியத்துவத்தின் அபாயத்தை எதிர்த்தவர்கள் என்ற அர்த்தம் படியாக அந்த வெளிப்பாடு இருந்தது.மத்திய கிழக்கு மற்றும் மேற்கத்திய வரலாற்றில் மார்க்சிய அடிப்படைகளில் இருந்து கொண்டு இஸ்லாம் மற்றும் பிற மதங்களை அணுகிய அவரின் பார்வை தத்துவ வரலாற்றில் புதிய தரிசனமாக இருந்தது. மேலும் மாக்சிம் ரேடின்சனுக்கு பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் புலமை இருந்தது. குறிப்பாக செமிட்டிக் மொழிகள் அனைத்தும் அவரின் மொழிக்கிடங்கில் நிறைந்து இருந்தன. இஸ்லாம் மற்றும் அரபுலகம் குறித்து அறிவதற்கு அவருக்கு இது உதவிகரமாக இருந்தது. தத்துவ வாதிகள் தங்களுக்கான கோட்பாட்டை தானே வடிவமைக்கிறார்கள் என்பதற்கு மாக்சிம் ரேடின்சன் உதாரணமாக இருந்தார். 2004 ஜனவரியில் அவரின் மரணம் ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்திற்கு அதற்குரிய சிந்தனை வெறுமையை விட்டு சென்றிருக்கிறது. மேற்கத்திய யூதராக இருந்து கொண்டு மத்திய கிழக்கை ஆராய்ந்த மாக்சிம் ரேடின்சன் அந்த வரலாற்றின் எல்லையை அதிக தூரம் கடந்த தவிர்க்க முடியாத நிழலாக இருக்கிறார்.
 
- உயிரோசை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails