Monday, February 1, 2010

மக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில்

மக்கா 
மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில்

அஸ்ஸலாமு அலைக்கும்,
           அல்லாஹ்வினுடைய தீனுல் இஸ்லாம் உலக வாழ்கையில் மனிதன் சந்திக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை சொல்லியிருக்கின்றது. அது தனி மனிதருகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், சமுதாய கூட்டு வாழ்கையில் உண்டாகும் பிரச்சனையாக இருந்தாலும் எந்த ஒன்றிற்கும் தீர்வு சொல்லாமல் இல்லை.  ஆனால் இன்று முஸ்லிம்கள் அல்லாஹ் சொல்லக்கூடிய தீர்வை பற்றி அறிந்துகொள்ளாமல் தங்களுடைய சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் வழக்கு, நீதிமன்றம் என்று அலைவதினால் தங்களுடைய பணம், நேரம், அமல்கள், மானம், நிம்மதி போன்ற அனைத்தையும் விரயமாக்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இருந்து முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாத்து அல்லாஹ் சொல்லக்கூடிய தீர்வை தங்களுடைய வாழ்கை நெறியாக ஏற்று செயல் பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் மக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில்.

நோக்கமும், சிறப்பம்சமும்
  •  கோர்ட், கேஸ் என்று அலைந்து நேரமும், பொருளும் வீண் விரயமாவது தடுக்கப்பட வேண்டும்.
  • ரகசியம் காக்கப்படுவதின் மூலம் தனிமனித கண்ணியமும், குடும்ப கௌரவமும் பாதுகாக்கப்படுகிறது.
  • வழக்கறிஞரின் துணையோ, குறுக்கீடோ இன்றி ஒவ்வொருவரும் தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக வெளிப்படுத்தும் முறை.
  • கட்டப்பஞ்சாயத்து போலன்றி இரு தரப்பு கருத்துகளையும் நிதானமாக உள்வாங்கி 100 சதவிகித நியாயம் கிடைப்பதற்கான ஏற்பாடு.
  • முழுக்க முழுக்க குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஷரீஅத் ரீதியான தீர்வுகள்.
  • எத்தகைய ஊதியமின்றி முழுமையான இக்லாஸோடும், சமுதாய அக்கறையுடனும் பணியாற்றும் நீதிபதிகள் (ஆலோசகர்கள்).
  • வழக்குகள் இழுத்தடிக்கப்படாமல் துரிதமான தீர்வு (சராசரியாக ஒரு வழக்கு 3 அல்லது 4 அமர்வுகளில் தீர்க்கப்படுகிறது).
  • போதை, சந்தேகம், மன அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டு அதன் மூலம் குடும்பப்பிரச்சனைகள் தீர்க்கப்படுகின்றன.

துவக்கம்
           2003 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வாழ் இஸ்லாமிய முக்கியஸ்தர்கள், உலமாக்கள், முஸ்லிம் வழக்கறிஞர்கள் எல்லோரும் சுமார் 200 பேர் சென்னை மக்கா மஸ்ஜிதில் ஒன்று சேர்ந்து சமுதாய அக்கறையுடன் ஆலோசனை செய்யப்பட்டது. இந்த கூட்டத்திற்கு மக்கா மஸ்ஜிதின் நிர்வாக கமிட்டி தலைவர் மெஜஸ்டிக் K.V.M. அப்துல் கரீம் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார்கள். அக்கூட்டத்தில் மக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில் என்ற பெயரில் ஷரீஅத் கோர்ட் நிர்மாணிக்கப்பட்டு முஸ்லிம் மக்களிடையே ஏற்படும் பிரச்சனைகளில் குறிப்பாக திருமண, தலாக் விவகாரங்கள், சொத்து விவகாரங்கள் போன்ற சிவில் விஷயங்களில் முஸ்லிம் சமுதாயத்தை கோர்ட், கேஸ் என்று அலைய விடாமல் நமக்குள்ளேயே கவுன்சிலிங் (ஆலோசனைகளும், அறிவுரைகளும்) செய்து தீர்க்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அக்கூட்டதிலேயே மெஜஸ்டிக் அப்துல் கரீம் அவர்களை நிறுவனராகவும், தமிழ் நாடு வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் அல்ஹாஜ் A.J. அப்துர்ரசாக் அவர்களை தலைவராகவும், மௌலானா S. சம்சுதீன் காசிமி அவர்களை பொதுச்செயலாளராகவும், அல்ஹாஜ் P.S.M. அப்துல் காதர் அவர்களை பொருளாளராகவும் நிர்வாகிகளாக தீர்மானிக்கப்பட்டது. பிறகு 20 உலமாக்கள், 20 முஸ்லிம் வழக்கறிஞர்கள், 20 சமுதாயப்பிரமுகர்கள் ஆகியோரைக்கொண்டு ஒரு கவுன்சில் துவங்கப்பட்டது.
    ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று(டிசம்பர் 2009)வரை முறைப்படி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இதுவரை சுமார் 600 வழக்குகள் தீர்க்கப்பட்டுள்ளன. அல்ஹம்துலில்லாஹ்!

வழக்கு பதிவு செய்யும் முறை
           தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை மக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில் அலுவலகம் செயல்படும். மக்கள் தொடர்பு அலுவலரான மக்கா மஸ்ஜிதின் துணை இமாம் ஹாபிழ் முஹைதீன் அப்துல் காதர் அவர்களிடம் மனு அளிக்க வேண்டும். அதற்கான பதிவு கட்டணமாக மனுதாரர் ரூ 200/- செலுத்தவேண்டும் (வேறு எந்த கட்டணமும் கிடையாது). 
           வழக்கு பதிவு செய்யப்பட்டவுடன் எதிர் மனுதாரர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கப்படும். அவரது எழுத்துப்பூர்வமான விளக்கம் கிடைத்தவுடன் வாய்தா தேதி முடிவு செய்யப்பட்டு இருதரப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். ஒன்றிற்கு மேற்ப்பட்ட வாய்தா தேவைப்படும் பட்சத்தில் ஒவ்வொரு வாய்தாவிர்க்கும் இரு தரப்பிற்கும் நோட்டீஸ் அனுப்பப்படும். ஒரு தரப்பு புகாரை மறு தரப்பு படிப்பதற்கு மட்டுமே அனுமதிக்கப்படும், ரகசியம் மற்றும் கண்ணியம் காக்கும் நோக்கத்தில் ஒரு தரப்பு புகார் மனுவின் நகல் மறு தரப்பிற்கு வழங்கப்பட மாட்டாது. 

விசாரணை நடைமுறை
            ஒவ்வொரு வாரமும் பிரதி சனிக்கிழமை காலை 10 மணிக்கு கவுன்சில் துவங்கும். ஒவ்வொரு கவுன்சில் கூட்டத்திலும் பொதுச்செயலாளர் தலைமையில் ஒரு ஆலிம், ஒரு முஸ்லிம் வழக்கறிஞர், ஒரு சமுதாயப்பிரமுகர் மற்றும் மனநல நிபுணர் ஆகியோர் கொண்ட ஒரு பெஞ்ச் கவுன்சிலிங் நடத்தும். மன நல நிபுணரான சகோதரி குர்ஷித் பேகம் அவர்கள் பெண்களுக்கு அவர்களது தாம்பத்யம் போன்ற அந்தரங்க விஷயங்களை தனி அறையில் மனோதத்துவ ரீதியில் விசாரணை செய்து ஆலோசனை வழங்கி சுமூக தீர்வு ஏற்பட முயற்சி செய்வார்கள். குடும்ப வழக்குகளில் சேர்ந்து வாழ்வதாக இருந்தாலும், பிரிவதாக இருந்தாலும் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் சுமூகமான தீர்வு கண்டு இரு தரப்பிலும் ஒப்புதல் பெற்று எடுக்கப்படும் முடிவுகள் ஷரீஅத் தீர்வு என்ற பெயரில் ஆர்டர் ஆக வழங்கப்படும்.
           தீர்ப்பை ஏற்காமல் ஒரு தரப்பு நீதிமன்றத்திற்கு சென்றால் மறு தரப்பிற்கு ஷரீஅத் கவுன்சில் சார்பாக இலவச வழக்கறிஞர் ஏற்பாடு செய்யப்படும். 

சான்றிதழ்
           புதிதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் சகோதர சகோதரிகளுக்கு பெயர் மாற்றம், அரசு gazette பதிவு போன்ற சட்ட ரீதியான செயல்பாடுகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது. 

தொடர்புக்கு
பொதுசெயலாளர்,
மக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில்,
822 அண்ணா சாலை,
சென்னை – 600 002.
Ph. +91 (44) 4214 1333
Email : sc@makkamasjid.comThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it
அலுவலக நேரம் – தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை. (ஞாயிறு விடுமுறை) 
நன்றி   :http://makkamasjid.com

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails